தினமணி கதிர்

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 106

நமது காவல்துறையின் சிபிசிஐடி உள்ளிட்ட புலன் விசாரணை அமைப்புகளைக் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. அரசியல் அழுத்தங்களுக்காக விசாரணை முடிவுகளை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டாலும், விசாரணையைப் பொருத்தவரை அதில் எந்தவித சிறு விடுபடலோ, குறைபாடோ இல்லாமல் இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

வந்திருந்த சிபிசிஐடி அதிகாரியுடன் எனது அறைக்குள் நுழைந்தேன். வழக்கத்துக்கு விரோதமாக, இடையில் தொந்தரவு கூடாது என்பதற்காகத் கதவைத் தாளிட்டேன். நாங்கள் அமர்ந்தோம். அவர் பேசத் தொடங்கினர்.

""நீங்கள் சந்திராசுவாமியின் ஆசிரமத்துக்குச் சென்று அங்கே தங்கி இருந்தீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அதுமட்டுமல்ல, அமைச்சர் ராஜேஷ் பைலட்ஜியின் வழிகாட்டுதலில்தான் நீங்கள் அங்கே போனீர்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும். உங்களைப் பற்றி நன்றாக விசாரித்து விட்டுத்தான் வந்திருக்கிறேன்.''

அவர் என்ன சொல்ல வருகிறார் என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. சந்திராசுவாமி விவகாரத்தால், ராஜேஷ் பைலட்டின் துறை மாற்றப்பட்டது என்று பரவலாகப் பேசப்பட்டது. ஒருவேளை பிரதமர் அலுவலகத்தின் தலையீடு இருக்குமோ என்கிற சந்தேகம் எனக்குள் எழுந்தது. அவரே மேலும் தொடர்ந்தார்.

""நீங்கள் சந்திராசுவாமி ஆசிரமத்தில் இரண்டு நாள்கள் இருந்திருக்கிறீர்கள். அங்கே என்னவெல்லாம் பார்த்தீர்கள், யாரையெல்லாம் சந்தித்தீர்கள், சந்திராசுவாமியும் நீங்களும் என்ன பேசினீர்கள் என்கிற முழு விவரமும் எனக்குத் தர முடியுமா?''

அது கோரிக்கையாக இருந்ததே தவிர, அதிகார தோரணையிலான கட்டளையாக இருக்கவில்லை. அதனால் நான் சற்று இறுக்கம் தளர்ந்து, சகஜ நிலைக்கு வந்தேன். விசாரிக்க வந்திருக்கிறார் அவ்வளவுதான் என்கிற ஆறுதல் ஏற்பட்டது.

நான் ஆசிரமத்தின் உள்ளே நுழைந்தது முதல் வெளியே வந்தது வரை, எனக்குக் கார் பரிசளிக்கிறேன் என்று சொன்னது உள்பட, எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் சொன்னேன். அமைதியாகப் புன்னகையுடன் கேட்டுக் கொண்டார்.

""அங்கே நீங்கள் வெளிநாட்டவர்கள் யாரையாவது பார்த்தீர்களா? சந்தித்தீர்களா?''

""இல்லை. ஒரு ஜோதிடக் கருத்தரங்கு நடந்தது என்று சொன்னேனே, அதில் சிலர் இருந்தனர். நான் அவர்களிடம் பேசவில்லை.''

""ராஜீவ் காந்தி படுகொலை குறித்து அவர் என்ன சொன்னார்?''

நான் எங்கள் உரையாடலை அப்படியே சொன்னேன். எனது கட்டுரையையும் எடுத்து நீட்டினேன். "ஏற்கெனவே படித்தாகிவிட்டது...' என்பதுபோல அதைத் திருப்பித் தந்தார்.

""சாதாரணமாக எந்தப் பத்திரிகையாளரையும் அவர் சந்திப்பதில்லை. தனது ஆசிரமத்துக்கு அழைப்பதில்லை. உங்களைத் தனது விருந்தினராக இரண்டு நாள்கள் தங்க வைத்திருக்கிறார் என்பதால்தான் எங்கள் சந்தேகம் அதிகமாகிறது. உங்கள் மூலம் அவர் எதையோ சாதித்துக்கொள்ள விரும்புகிறார். யாரையோ தொடர்பு கொள்ள உங்களை பயன்படுத்த நினைக்கிறார். சற்று கவனமாக இருங்கள். அதே நேரத்தில் அவருடன் தொடர்பிலும் இருங்கள்.''

""நான் எதற்காக அவருடன் தொடர்பில் இருக்க வேண்டும்? கவனமாக இருக்கிறேன். இதுபோன்ற பிரச்னைக்குரியவர்களுடன் நான் தொடர்பில் இருக்க விரும்பவில்லை.''

""நீங்கள் அப்படி சுலபமாக அந்த வலையிலிருந்து விடுபட்டுவிட முடியாது. அவருக்கு நெருக்கமானவர்கள் பலர் உங்களுக்கு நெருக்கமானவர்கள். அவருக்கு மதராஸில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நீங்கள் பயப்பட வேண்டாம். நாங்கள் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருப்போம். அதனால் உங்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டுவிடாது...''

உளவுத் துறையின் தொடர்ந்த கண்காணிப்பில் இருப்போம் என்கிற செய்தி என்னை நிலைகுலைய வைத்தது. எங்கே போனாலும், யாரிடம் பேசினாலும் யாரோ பின் தொடர்கிறார்களோ, கண்காணிக்கிறார்களோ என்கிற அச்சத்துடன் வாழ்வது போன்ற கொடுமை வேறெதுவும் இருக்க முடியாது.

சற்று நேரம் பேசிவிட்டு அந்த அதிகாரி விடைபெற்றுச் சென்றுவிட்டார். எனக்கிருந்த பதற்றத்திலும், படபடப்பிலும் அவரது தொடர்பு எண்ணைக்கூட நான் வாங்கிக்கொள்ள மறந்துவிட்டேன்.

அரை மணி நேரம்கூடக் கடக்கவில்லை. அலுவலகத் தொலைபேசி, ஒலி எழுப்பியது. எதிர்முனையில் பேசியவர் ராமாச்சாரி. அந்த அழைப்பை நான் எதிர்பார்க்கவே இல்லை.

""போலீஸ்காரர்கள் உங்களிடம் விசாரணை நடத்தினார்களாமே.. நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று குருஜி உங்களுக்கு தைரியம் சொல்லச் சொன்னார். காவல்துறையில் ஒரு குருப் குருஜிக்கு எதிராக இருக்கிறார்கள். உங்களை பயமுறுத்த அவர் அனுப்பப்பட்டிருக்கிறார். இதற்கெல்லாம் நீங்கள் பயப்பட வேண்டாம். குருஜி இருக்கிறார், பார்த்துக் கொள்வார்...''

எனக்கு ஒரு விஷயம் நன்றாகப் புரிந்தது. சந்திராசுவாமி, காவல்துறையினர் இருவரின் கண்காணிப்பு வளையத்திலும் நான் சிக்கிக் கொண்டிருக்கிறேன் என்பதுதான் அது..!

சந்திராசுவாமி குறித்த சில பின்னணிச் செய்திகளை வாசகர்களுக்காக இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். அவர் மீது சுமத்தப்பட்ட முக்கியமான குற்றச்சாட்டுகள் இரண்டு. முதலாவது குற்றச்சாட்டு, லண்டன் ஊறுகாய் வியாபாரி லக்குபாய் பதக் மோசடி வழக்கு.  இரண்டாவது குற்றச்சாட்டு ராஜீவ் காந்தி படுகொலையுடனான தொடர்பு.

இந்திரா காந்தி அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பி.வி. நரசிம்ம ராவ், அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். அவர் ஹோட்டல் ஹோலோரம் என்கிற நியூயார்க்கிலுள்ள விடுதியில் தங்கி இருந்தார். அவரை லண்டன் ஊறுகாய் வியாபாரி லக்குபாய் பதக்கிற்கு சந்திராசுவாமி அறிமுகம் செய்து வைக்கிறார். இது நடந்தது 1983 டிசம்பர் மாதம்.

1984 ஜனவரி மாதம் இரண்டு காசோலைகளாக ஒரு லட்சம் அமெரிக்க டாலர் லக்குபாய் பதக்கால் சந்திராசுவாமிக்குத் தரப்படுகிறது. இந்தியாவுக்கு நியூஸ் பிரிண்ட் காகிதம் வழங்குவதற்கான ஒப்பந்தம் பெற்றுத் தருவதற்காக அந்தக் கையூட்டு வழங்கப்பட்டது என்பது லக்குபாய் பதக்கின் குற்றச்சாட்டு. ஜோசியம் பார்ப்பதற்காகவும், அவருக்காக யாகங்களும் பூஜைகளும் நடத்தப்பட்டதற்காகவும் அந்தத் தொகை தனக்கு தரப்பட்டது என்பது சந்திராசுவாமியின் வாதம். மூன்றாண்டுகள் கழித்து 1989-இல், சந்திராசுவாமியால் தான் மோசடி செய்யப்பட்டதாக லக்குபாய் பதக் புகார் அளிக்கிறார். 

அப்போது ராஜீவ் காந்தி அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கிறார் பி.வி. நரசிம்ம ராவ். அயோத்தி பிரச்னை தொடர்பாக பிரதமர் ராஜீவ் காந்தியைப் பலமுறை சந்தித்தவர்களில் சந்திராசுவாமியும் ஒருவர். அப்படி இருந்தும்கூட, ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ இருவரின் ஒப்புதலுடன் அல்லது அவர்களுக்குத் தெரிந்து, சிபிஐ சந்திராசுவாமி மீது வழக்குப் பதிவு செய்கிறது. 

1996 ஏப்ரல் 12-ஆம் தேதி, நரசிம்ம ராவ் பிரதமராக இருக்கும்போது, லக்குபாய் பதக் மோசடி வழக்கில் சந்திராசுவாமி மீதும், அவரது கூட்டாளியான "மாமாஜி' என்று அழைக்கப்படும் அகர்வால் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது. 1996 தேர்தல் தோல்விக்குப் பிறகு, முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் தனக்கு அளித்த நம்பிக்கையில்தான் சந்திராசுவாமிக்குப் பணம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டுகிறார் பதக். 

நீதிமன்றத்தில் நரசிம்ம ராவும் குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டபோது வழக்கு சூடு பிடிக்கிறது. 1997-இல் 73 வயது லக்குபாய் பதக் காலமான பிறகும், கிரிமினல் வழக்கு என்பதால் தொடர்கிறது. 2002-இல் லக்குபாய் பதக்கின் குற்றச்சாட்டுக்குப் போதிய ஆதாரம் எதுவும் இல்லாத நிலையில் நரசிம்ம ராவ், சந்திராசுவாமி, மாமாஜி மூவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். 

சந்திராசுவாமி மீதான இரண்டாவது முக்கியக் குற்றச்சாட்டு, ராஜீவ் காந்தி படுகொலைக்காக அவர் விடுதலைப் புலிகளுக்குப் பண உதவி செய்தார் என்பது. அது குறித்து ஜெயின் கமிஷன் அறிக்கையில், சந்திராசுவாமியின் பங்கு குறித்துத் தீர விசாரிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், விசாரிக்கப்படவும் இல்லை, நிரூபிக்கப்படவும் இல்லை.

சந்திராசுவாமியின் இறுதிக் காலம்தான் சோக மயமானது. தனது 66-ஆவது வயதில் சிறுநீரகம் செயலிழந்து, அதனால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு தில்லி அப்பல்லோ மருத்துவமனையில் 2017-இல் அவர் உயிரிழந்தபோது, உடனிருந்தவர்கள் ஒருசிலர் மட்டுமே.

தில்லியில் இருக்கப் பிடிக்காமல் நான் அங்கிருந்து கிளம்பி விட்டேன். ஒடிஸாவில் "நியூஸ்கிரைப்' செய்தி நிறுவனத்தின் சந்தாதாரர்களாக இருந்த சம்பாத், தாரித்ரி , ஈஸ்டர்ன் டைம்ஸ் பத்திரிகை ஆசிரியர்களை சந்திக்க வேண்டிய வேலை இருந்தது. அப்போது ஒடிஸாவில் பிஜு பட்நாயக்கின் ஆட்சி அகன்று, ஜே.பி. பட்நாயக் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கப்பட்டிருந்தது.

பிஜு பட்நாயக், ஜானகி பல்லவ் பட்நாயக் இருவருடனும் எனக்கு மிகவும் நெருக்கமான தொடர்பு இருந்து வந்தது. சொல்லப்போனால், பிஜு பட்நாயக் முதல்வராக இருந்தபோது, முன் அனுமதி பெறாமல் அவரை எப்போது வேண்டுமானாலும் சென்று சந்திக்கும் அளவுக்கு எனக்கு நெருக்கம் இருந்தது.
பிஜு பட்நாயக், ஜே.பி. பட்நாயக் மட்டுமல்லாமல், ஒடிஸாவின் முன்னாள் முதல்வர்களான 

நந்தினி சத்பதி, கிரிதர் கமாங் ஆகியோரும் என்மீது அன்பு பாராட்டியவர்கள். குறிப்பாக, கிரிதர் கமாங் அரசியல்வாதி என்பதைவிட நல்ல நண்பராக இன்று வரை தொடர்பவர். பழங்குடியினரான அவர், வாஜ்பாயி அரசு 1999-இல் கவிழ்பதற்கு காரணமாக இருந்ததை நினைத்து இப்போது வருத்தப்படுபவர். 

புவனேசுவரம் ரயில் நிலையத்தில் இறங்கி வழக்கம்போல, அரசு விருந்தினர் தங்கும் விடுதிக்குச் சென்றேன். முன்கூட்டியே தெரிவித்திருந்ததால், எங்களது புவனேசுவரம் நிருபர் சங்க்ராம் பாண்டா முன்னேற்பாடுகளை செய்து வைத்திருந்தார்.

குளித்துத் தயாராகி, நான் முதலில் சந்திக்கப் போனது முன்னாள் முதல்வரும், அப்போது ஜனதா தளத்தின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பிஜு பட்நாயக்கின் வீட்டிற்குத்தான். தமிழகத்தில் எம்.ஜி.ஆர். போலத் தனிப்பட்ட செல்வாக்குடன் திகழ்ந்தவர் பிஜு பட்நாயக். ஒடிஸாவுக்கு வெளியே அவரைப்பற்றி அதிகம் தெரியவில்லை.

இந்திய அரசியலுக்கு வந்த முதல் விமான ஒட்டி பிஜு பட்நாயக். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே அவர் சொந்தமாக கலிங்கா ஏர்லைன்ஸ் என்கிற விமான சேவை நடத்தி வந்தார். இந்தோனேசியா விடுதலைப் போராட்ட வீரர்களை மீட்டுக் கொண்டுவர, பிரதமர் ஜவாஹர்லால் நேரு அவரது உதவியை நாடியபோது, தனது உயிரையும் தன்னுடைய விமானத்தையும் பொருட்படுத்தாமல் ஜகார்தாவுக்கு உடனே விமானத்தை ஓட்டிச் சென்று அவர்களை மீட்டுக் கொண்டு வந்த துணிச்சல்காரர்.

காஷ்மீர் ஆக்கிரமிப்பின்போதும், இந்திய வீரர்களை எல்லைக்குக் கொண்டு செல்லத் தனது விமானத்தை ஓட்டிச் சென்றவர். இந்தோனேசிய விமானத்துக்கு "கருடா' என்று பெயர் சூட்டியவரும் பிஜு பட்நாயக்தான். இந்தோனேசிய அரசு அவருக்கு நமது பாரத ரத்னாவுக்கு நிகரான "பூமி புத்ரா' விருதளித்து கெளரவித்திருக்கிறது. நாம்தான் இன்னும் "பாரத ரத்னா' விருது வழங்கவில்லை. 

பிஜு பட்நாயக்கின் வீட்டு வரவேற்பறைக்குள் நுழையும்போதே அவரது உதவியாளர் என்னையும், எங்கள் நிருபர் சங்க்ராம் பாண்டாவையும் தடுத்து நிறுத்தினார். 

""பிஜுபாபு உங்களை சந்திக்க விரும்பவில்லை. உங்கள்மீது ஏதோ கோபமாக இருக்கிறார். பார்க்க விரும்பவில்லை என்று சொல்லச் சொன்னார்'' என்று தெரிவித்தார் உதவியாளர்.

என்மீது அபரிமிதமான அன்பும், அக்கறையும் கொண்ட பிஜுபாபு, ஏன் என்னை சந்திக்க மறுக்க வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. எதிர்பாராத அதிர்ச்சியுடன் செய்வதறியாமல் திகைத்து நின்றேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT