தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: முகம், கன்னங்களில் சிவப்பு மச்சங்கள் குணமாக?

18th Sep 2022 06:00 AM | பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

ADVERTISEMENT

 

எனக்கு கடந்த இரண்டு வருடங்களாக சிறுநீரில் சர்க்கரை இருக்கிறது. இன்சுலின் இன்ஜக்ஷன் போட்டு வருகிறேன். மேலும், முகத்திலும், காதுகள் பக்கம் கன்னங்களிலும் சிவப்பு மச்சங்கள் ஏற்பட்டு சிறிது சிறிதாக வளர்கிறது. இவை குணமாக மருந்து உள்ளதா?

-சங்கர்,
திண்டுக்கல்.

நீரிழிவிற்கு சிறுகுறிஞ்சான் இலையைக் காயவைத்து, பொடி செய்து சலித்து சாப்பிட்டு வந்தால் குணமாகும், தினமும் காலையிலும் மாலையிலும் வெறும் வயிற்றில் மூன்று முதல் நான்கு சிட்டிகை இம்மருந்தை எடுத்து, சுமார் ஐம்பது முதல் அறுபது மில்லி லிட்டர் வெதுவெதுப்பான தண்ணீருடன் கலந்து சாப்பிடவும். 

ADVERTISEMENT

பதினைந்து முதல் இருபத்தியோரு நாள்கள் வரை தொடர்ந்து சாப்பிட்ட பிறகு, சிறுநீரில் சர்க்கரையின் வெளியேற்றம் எப்படியுள்ளது என்பதை பரிசோதிக்கவும். உணவில் கோதுமையை முக்கிய உணவாக ஏற்று, அரிசியின் அளவைப் பெருமளவு குறைக்கவும். கொடிக்காய்களை அதிகம் உணவில் சேர்க்கவும்.

தொடர்ந்து சாப்பிடுவதால் சிலருக்கு இம்மருந்தால் லேசான தலைச்சுற்றல் ஏற்படலாம். அதனால் பயமேதும் பட வேண்டாம். ஏனென்றால் சர்க்கரை குறைந்து கொண்டே வரும்போது,  மருந்தின் அளவையும் இரண்டு அல்லது ஒரு சிட்டிகை என்று குறைத்துக் கொள்ள வேண்டும்.

"சியவனப் பிராசம்' என்ற லேஹிய மருந்தை சுமார் ஐந்து முதல் பத்து கிராம் வரை சில நாள்கள் சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல் நிற்கும். இந்த லேஹியத்தில் நெல்லிக்காய்தான் அதிகம் சேரும் சரக்கு. சர்க்கரை உபாதைக்கு நல்லது செய்யக் கூடிய 3-4 சரக்குகளில் இது முக்கியமானது. மேலும், பலத்தையுமளிக்கும்.

நீங்கள் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமென்பதால், அதையும் இந்த லேஹியம் பார்த்துக் கொள்ளும்.

தலைக்கு திரிபலாதி தைலத்தையோ, பிருங்காமல தைலத்தையோ உச்சியில் தடவி ஊறவிடுவதும் நல்லது. சிறுநீரில் சர்க்கரை மறுபடியும் தலைகாட்டத் தொடங்கினால் ஒன்றிரண்டு நாள்கள் சிறுகுறிஞ்சாணை மறுபடியும் சாப்பிட்டு, பிறகு சியவனபிராசத்திற்கே திரும்புவது நல்லது.

ஆறு மாதத்துக்கு அடிக்கடி சிறுநீரை பரீட்சித்துப் பார்ப்பதும், அதற்கேற்ப சிறுகுறிஞ்சானை சாப்பிடுவதும் அவசியமாகும்.

முகத்திலுள்ள சிவப்பு மச்சங்கள் குறைய மாம்பருப்பை உரசி விழுதை எடுத்து மச்சங்கள் மீது பூசவும். மேலும், மாலை வெயிலிலிருந்து கொண்டு, மாந்தளிருகளால் சிவப்பு மச்சங்களை மறைத்துக் கொண்டு இந்தத் தளிருகளைத் தாண்டி சூரிய கதிருகள் நிற மாற்றம் ஏற்பட்டுள்ள இடங்களில் படும்படி தினமும் பதினைந்து முதல் முப்பது நிமிடங்கள் வரை இருப்பதும் நல்லது.

கற்பூர சிலாஜித் எனும் மருந்து சிறுநீரில் வரும் சர்க்கரையின் அளவை நன்கு குறைக்கும். தற்சமயம் கேப்ஸ்யூல் வடிவத்தில் ஆயுர்வேத கம்பெனிகளே தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். ஒன்றிரண்டு கேப்ஸ்யூல் இரவு படுக்கும் முன் வென்னீருடன் சாப்பிட்டு வரலாம்.

(தொடரும்)

ADVERTISEMENT
ADVERTISEMENT