தினமணி கதிர்

இறுதி வரை 'இவர்'

சா. ஜெயப்பிரகாஷ்

மருத்துவர் என்றால் நோய்க்குச் சிகிச்சை அளிப்பார்; ஆனால் அநாதையாக இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் மருத்துவரும் உள்ளார் என்றால் ஆச்சரியம்தானே! 500-க்கும் மேற்பட்ட சடலங்களை அடக்கம் செய்து, மகத்தான தொண்டாற்றியுள்ளார் புதுக்கோட்டையைச் சேர்ந்த டாக்டர் ச.ராம்தாஸ்.

உயிரிழந்தோரின் இறுதிச் சடங்குகளை மேற்கொள்வது ஆகப் பெரும் கடமையாகவும்,  உரிமையாகவும் கொண்டிருப்பது தமிழ்ச் சமூகம்.  தாய்க்குத் தலைமகன், தந்தைக்குக் கடைக்குட்டி என்ற முதுமொழிகளும் உண்டு. நீண்டகாலம் வாழ்ந்து முடித்தோரை, பட்டாசு வெடித்து, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்துடன் எடுத்துச் செல்வது கிராம வழக்கு.

இறுதிச் சடங்கில் அத்தனை நெருக்கம் இருக்கிறது! ஆனால்,  ஆதரவற்றோருக்கு?

வீதிகளில் இறந்து கிடக்கும் ஆதரவற்ற சடலங்களைப் பொறுப்புடன் எடுத்துச் சென்று, நல்லடக்கம் செய்து வைக்க, ஓர் மருத்துவர் இருக்கிறார். அவர் வெறுமனே ஊசி போடும் மருத்துவர் மட்டுமல்ல, சமூக மருத்துவரும் கூட!

டாக்டர் ச. ராம்தாஸ்  எனும் அவர் 72 வயதை நிறைவு செய்திருக்கிறார். புதுக்கோட்டை மண்ணின் கடந்த 30 ஆண்டு காலப் பிரபலங்கள் குழந்தைகளாக இருக்கும்போது இவர் கைபடாமல் வளர்ந்ததில்லை. அத்தனைக் கைராசிக்காரர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 ஆண்டுகள் அரசு மருத்துவராக பணி நிறைவு செய்து, வைத்தீஸ்வரா மருத்துவமனையை நடத்தி வருகிறார்.

ஆதரவற்ற சிறார்களுக்கான வள்ளலார் இல்லத் தலைவராக 15 ஆண்டுகளுக்கும் மேலாக, ரோட்டரி உயிரொளித் திட்டத்தின் தலைவராக 8 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கிறது இந்த சமூக மருத்துவரின் பணிகள்.
இவற்றின் உச்சமாகத்தான் "சர்வஜித் சேவை அறக்கட்டளை'.

2007-ஆம் ஆண்டில் அறக்கட்டளைகள் பதிவுச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டு, 2008 ஜனவரி முதல் செயல்படத் தொடங்கியிருக்கிறது. இதுவரை 500 ஆதரவற்ற சடலங்களை, சட்டமுறைப்படி பெற்றுக் கொண்டு முறையான நல்லடக்கத்தை நேரில் சென்று செய்து வந்திருக்கிறார்  ராம்தாஸ். பச்சிளம் குழந்தைகளுடன் இந்தப் பட்டியலில் அடக்கம். கரோனா பொது முடக்கக் காலத்தில், சுமார் 15 சடலங்களை அடக்கம் செய்திருக்கிறார்ய திருக்கட்டளைச் சாலையிலுள்ள நகராட்சியின் மயானத்தில் ஓவ்வோர் அடக்கக் காரியத்துக்கும் சராசரியாக ரூபாய் ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநூறு வரை செலவாகியிருக்கிறது.

தனது நற்கடன் தொடக்கம் குறித்து அவர் கூறியதாவது:

""சென்னையில் ஆதரவற்ற சடலங்களுக்கு இறுதிச் சடங்கு மேற்கொண்ட பெண் குறித்த வார இதழ் கட்டுரையை,  என்னிடம் எடுத்து வந்து புதுக்கோட்டையில் இப்படிச் செல்ல வேண்டும் என்னைத் தூண்டியவர் மாற்றுத் திறனாளி சரவணன், இப்பணிக்கான தொடக்கப் புள்ளி. சாதி, மதம் கடந்த அனைவருக்கும், எந்தவித எதிர்பார்ப்புகளுமில்லாத சேவைகளை மேற்கொள்ள "சர்வஜித் சேவை அறக்கட்டளை' உருவானது.

ஏழை மாணவர்களின் கல்வி உதவிகளையும் அவ்வப்போது செய்திருக்கிறோம். ஆயினும் ஆதரவற்றோரின் நல்லடக்கம்தான் எங்களின் பிரதான பணி. புதுக்கோட்டையில் இதுவரை செய்து வந்த எல்லாப் பணிகளையும் விட ஆத்மார்த்தமான பணியாக இது இருப்பதில் பெருமை'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலை மீண்டும் எச்சரிக்கும் ஈரான்!

பாஜகவின் 100 கேள்விகளும் பித்தலாட்டம்: திமுக

அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த ருதுராஜ் கெய்க்வாட்!

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறாது: மம்தா

ஹே.. பொன்னி!

SCROLL FOR NEXT