தினமணி கதிர்

பேல்பூரி

18th Sep 2022 06:00 AM | அ.சர்ப்ராஸ்

ADVERTISEMENT

 


கண்டது


(ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர் )

" " குண்டாகுடை ''

- கா.முத்துச்சாமி,
ராமநாதபுரம்.

ADVERTISEMENT

 

(தருமபுரியில் ஆட்டோ ஒன்றில் எழுதியிருந்தது)

விரிக்காத வரை சிறகுகள் பாரம்தான்; விரித்து விட்டால் வானம்கூட தொட்டுவிடும் தூரம்தான்!

-எல்.மோகனசுந்தரி,
கிருஷ்ணகிரி.

 

(திருச்சி அருகேயுள்ள ஓர் ஊரின் பெயர்)


சுனைபுகநல்லூர்


-சம்பத்குமாரி,
பொன்மலை.

 

கேட்டது


(தஞ்சாவூர் பழைய பஸ் நிலையத்தில் இருவர்)

"" அண்ணே,"நம்மூர் பஸ் எத்தனை மணிக்கு?''
""எலே.. நான் பொறந்தது கீழக்காடு; "வளர்ந்தது வடகாடு; "இப்போ, போறது குடிகாடு.... "நீ கேக்குறது எந்த காடு?''
""ஆங்...'சுடுகாடு''

-மதுரை முருகேசன்,
தஞ்சாவூர்.


(சிதம்பரத்தில் ஜவுளிக்கடை ஒன்றில் தம்பதி பேசிக் கொண்டது)

""சரி.. நீ துணி எடுத்துட்டு போன் பண்ணு.. நைட் வந்து நான் கூட்டிட்டு போறேன்''
""நக்கலா.. நான் எடுக்கப் போவது உங்க அம்மாவுக்குதான். ரெண்டு நிமிஷத்துல எடுத்துடுவேன்''

-பி.கவிதா,
சிதம்பரம்.

(மன்னார்குடி, தள்ளுவண்டி டிபன் கடையில்.. )

" "சிங்கிளா, டபுளா தம்பி?''
""ரொம்ப நாளா சிங்கிளாத் தான் இருக்கேன் மாஸ்டர் . எவ்வளவோ ட்ரை பண்றேன் ஒன்னும் செட்டாக மாட்டேங்குது!''
"ஏம்பா... நான் கேட்டது ஆம்லெட், சிங்கிளா டபுளான்னு...'

-ப.இராஜகோபால்,
மன்னார்குடி.

 

யோசிக்கிறாங்கப்பா!

உலகிலேயே செய்கூலி, சேதாரமின்றி கிடைக்கும் ஒரே நகை புன்னகை மட்டுமே!

- மு.சுகாரா,
திருவாடானை.


 

மைக்ரோ கதை


""நாளைக்கு என்ன நாள் தெரியுமா கலா!''
வேகமாக வந்த கணவன் கோவிந்தனை முறைத்தாள் கலா. ""உங்களுக்கு தெரிஞ்சா சரி..'' என்றபடி மிக்ஸியை துடைக்க ஆரம்பித்தாள்.
""அட்சய திரிதியை.. நகை எடுப்போமா?''
""நானா மறுக்கப் போறேன்? இல்லை எடுத்துக் கொடுத்தா தான் போட்டுக்கத்தான் மாட்டேனா!''
""நல்ல நாளாச்சே..!'' பரிதவிப்புடன் வேக, வேகமாக யோசித்தான்.
""சரி ஏழு மணிக்கு தயாரா இரு. நான் பணத்தோட வர்றேன்.. நகை எடுக்கறோம்''
""முதல்ல ஏழு மணிக்கு வாங்க அப்புறம் பார்க்கலாம்!''
ஆனால் சொன்னபடியே சரியாக ஏழு மணிக்கு கோவிந்தன் வந்ததும், "" ரெடியா இருக்கியா..கிளம்பு'' என்று குதித்தார்.
சட்டென போய் வேறு நல்ல புடவை
மாற்றிக் கொண்டு வந்தாள் கலா. வீட்டைப் பூட்டிவிட்டு வாசல் தாண்டி வண்டி ஏறினபோது சிரித்தபடியே வந்தாள் அடுத்த வீட்டு அகல்யா.
""என்ன கலா.. அட்சய திரிதியைக்கு புது நகையா..? அசத்து அசத்து''
""நீங்க வேற அக்கா. அடகு வெச்ச பழைய செயினை மீட்கத் தான் இந்தப் பாடு! பாருங்க ஊரே புது நகை போடப் போகுது. நான் பழைய நகையை மீட்க அல்லாடறேன்'' என்றாள் கலா.
சொன்னவளைப் பரிதாபமாகப் பார்க்கிறாள் அகல்யா.

- கா.நாகராஜ்,
கோவை.

 

எஸ்எம்எஸ்

 

ஊட்டிய பாலுக்கும் ஊற்றும் பாலுக்கும்
இடைப்பட்டது தான் வாழ்க்கை.

-ஜி.அர்ஜுனன்,
செங்கல்பட்டு.

 

அப்படீங்களா!

 

பாதுகாப்புத் துறைக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த ஆளில்லா விமானங்களின் (ட்ரோன்) உற்பத்தி செலவு குறையத் தொடங்கியதும், பல்வேறு பயன்பாட்டுக்கு உதவி வருகிறது.

திரைத்துறையினருக்கும், ஊடகத் துறையினருக்கும் கழுகுப் பார்வைப் படங்களைப் பதிவு செய்வதற்கும், நிகழ்ச்சிகளில் பறந்து பறந்து விடியோ பதிவு செய்யும் சாதனங்களாகவும் தற்போது ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
வேளாண் துறை பயன்பாட்டுக்கும், அவசர காலத் தேவைக்கும் ட்ரோன்களை பயன்படுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. இவை எல்லாம் ஆளில்லா விமானங்களாகும். ஆனால் புணேவில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனம், ஒரு ஆளையே ஏற்றிச்செல்லும் இந்தியாவின் முதல் ட்ரோனை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளது.
"வருணா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ட்ரோன் பார்ப்பதற்கு சாதாரண ட்ரோனைப் போன்று பெரிய அளவில் உள்ளது. ஒரு நபர் அமரும் வகையில் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. 130 கிலோ வரையில் இந்த ட்ரோன் சுமந்து செல்லும். 25 கி.மீ. தூரத்தை 25-33 நிமிஷங்கள் கடக்கிறது.
ரிமோட் மூலமும், ரிமோட் இல்லாமலும் இயக்கியும் இதை செயல்படுத்தலாம். பறக்கும் போது வானில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் தானாக கீழே இறங்கவும், பாராசூட் வசதியும் இதில் உள்ளது.
இதை ஏர் ஆம்புலன்ஸாகவும், கிராமப்புறங்களில் அவசரத் தேவைகளுக்கும் பயன்படுத்தலாம். இந்த ராட்சத ட்ரோனின் செயல்பாட்டை நேரில் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்திய கடற்படையில் இணைக்க உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT