தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கண்களை வலுப்படுத்தும் பசுவின் நெய்!

எஸ். சுவாமிநாதன்


நான் மிகச் சிறிய எழுத்துகளில் அச்சு அடிக்கப்பட்டுள்ளதை நெடுநேரமாகப் படித்து, திருத்தி அதன் பிறகு சரியாக அச்சுக் கோர்பது போன்ற வேலையைச் செய்து வருகிறேன். திடீரென யாராவது கூப்பிட்டால், தலைநிமிர்ந்துப் பார்த்தால் சில நொடிகள் ஒன்றும் தெரிவதில்லை. பிறகுதான் தெரியத் தொடங்குகின்றன. பல வருடங்களாக இத் தொழில் செய்ததால், இப்படி ஏற்படுகிறது என்று மருத்துவர் கூறுகிறார். கண் வலுப்பெற நான் என்ன செய்ய வேண்டும்.

-தட்சிணாமூர்த்தி,
கோவை.

கண் சார்ந்த கடுமையான வேலை, வயதின் மூப்பு, உணவில் நாம் செய்யும் தவறுகள் என்று பலவிதக் காரணங்களால்  நீங்கள் குறிப்பிடும் கண் சார்ந்த திறமைக் குறைவு என்பது யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். கண்களை வலுப்படுத்தக் கூடிய சில விஷயங்களில் முதன்மையானது பசுவின் நெய்யாகும். அதை பத்து மில்லி வீதம் நீராவியில் உருக்கி காலை, மாலை என இரு வேளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு, சிறிது வென்னீர் அருந்திவர, கண்களுக்கு பலவீனம் ஏற்படாமல் தமது செயலை ஆற்றிவட பேருதவியாக 
இருக்கும்.

கொலஸ்ட்ரால் ஏறிவிடுமோ என்ற அச்சத்தில் , பசு நெய்யைச் சாப்பிடாமல் இருப்பவர்களுக்கு, கண் சார்ந்த உபாதை, தோல் சுருக்கம், உடல் உட்புற வழுவழுப்புத் தன்மை குறைவு, குடலில் வாத- பித்தங்களின் சீற்றம் போன்ற தொல்லைகள் ஏற்படுவதைக் காணலாம். 

கோவைவாசியாக தங்களுக்கு, வெளிப்புறக் குளிர்ச்சி அதிகமிருப்பதால், தோலில் வரண்ட நிலையும், கண்களில் ஊறும் ஈரப்பசையும் குறைவாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.கலப்படமில்லாத தூய தேன் கிடைத்தால் கண்ணில் ஒன்றிரண்டு சொட்டுவிட்டால் கண்ணைச் சுத்தம் செய்வதில் மிகவும் பெயர் பெற்றது.

கண் சார்ந்த உபாதைகளான காட்ராக்ட் எனும் கண்புரை உபாதை, சாளேசுரம் ஆகியவற்றில் வேண்டாத மலம் சேர்ந்து அல்லது படர்ந்து பார்வையை மறைக்கிறது. இவற்றை வரவிடாமல் தடுக்க ஒரு சொட்டு தேனை கண்ணில் விட்டு வருவது எத்தனையோ நல்லது.

ஒரு சில ஆயுர்வேத மூலிகைத் தைலங்களாகிய திரிபலாதி தைலம், சந்தனாதி தைலம், ஹிமசாகர தைலம் போன்றவை மருத்துவர் ஆலோசனைப்படி, நீங்கள் தேர்ந்தெடுத்துத் தலைக்குத் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தினால், கண் சம்பந்தப்பட்ட பலதர நரம்புக் கோளாறுகளைத் தவிர்க்கும்.  இளம் வயதிலேயே பலருக்கும் ஏற்படும் முதுமைத் தனத்தின் குறிகள் தவிர்க்கவும் இவை உதவிடும்.

நயனாமிருதம், நேத்ராமிருதம், இளநீர் குழம்பு என்ற பெயர்களில் விற்கக் கூடிய ஆயுர்வேத கண் சொட்டு மருந்துகளில் ஒன்றை மருத்துவர் ஆலோசனையின்பேரில் கண்ணில் ஓரிரு சொட்டுகள் இரவில் படுக்கும் முன்விட்டு வர நல்லதாகும்.

மூக்கின் அருகாமையிலுள்ள கண் நுனிக்கு அருகில் கண் சொட்டு மருந்தை விட்டு, அது கண் முழுவதும் பரவி, மற்றொரு நுனி பகுதி வழியாக வெளியேறச் செய்தல் நல்லதாகும்.

திரிபலா கஷாயத்தைச் சுத்தமாக வடிகட்டி எடுத்து ஆறிய பிறகு அதில் சிறிது தேனும் கூட்டி மேற்குறிப்பிட்ட விதத்திலும் கண்களைக் கழுவி விட உபயோகிக்கலாம். 

ஐந்து கிராம் திரிபலாசூரணத்தில் இருநூற்றி ஐம்பது மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றி, அறுபது மில்லி லிட்டராகக் காய்ச்சி வடிகட்டிக் கொள்வது , திரிபலா கஷாயத்திற்கான முறையாகும்.

த்ரைபலக்ரிதம் எனும் நெய் மருந்து பத்து மில்லி லிட்டர் உருக்கி எடுத்து, அதில் ஐந்து கிராம் திரிபலா சூரணத்தைக் கலந்து, ஐந்து மில்லி லிட்டர் தேனும் விட்டு குழைத்து, இரவில் படுக்கும் முன் நக்கிச் சாப்பிட்டு, அதன் மூலம் சிறிது பசும்பால் அருந்திய பிறகு உறங்குவதால் கண்களுக்கு வலுவைக் கூட்டுவதுடன் கண்களில் எந்த ஒரு உபாதையும் வராமல் பாதுகாக்கவும் செய்யும்.

உணவில் காரசாரமான வகைகளைத் தவிர்த்து, பால், வெண்ணெய், நெய், பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கைக் கீரை, தேங்காய், கேரட், பச்சைக்கறிக் காய்கள் ஆகியவைஅதிகம் சேர்க்கவும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

SCROLL FOR NEXT