தினமணி கதிர்

பிறந்த நாள்

2nd Oct 2022 06:00 AM | ரமாமணி சுந்தர்

ADVERTISEMENT

 

""அம்மா! நம்ம வீட்டுல மட்டும் ஏன் அப்பா இல்லை? என்னோட ஸ்கூல்ல எல்லார் வீட்டிலேயும் அப்பா இருக்காங்க. நம்ம வீட்டிலே மட்டும் தான் அப்பா இல்லை!'' என்று இளைய மகன் சுரேஷ் மிகுந்த ஏக்கத்துடன் வழக்கமாகக் கேட்கும் கேள்வியை தனது தாய் வர்ஷாவிடம் கேட்டான்.
ஏழு வயதான அந்த பிஞ்சு உள்ளத்தில்தான் எப்படிப்பட்ட சோகம்! அவனது தாய் அவனுக்கு என்ன பதில் சொல்வாள். அப்படியே அவள் எடுத்துரைத்தாலும் அதை சுரேஷால் புரிந்து கொள்ள முடியுமா? இவனுடன் ஒப்பிடுகையில் பத்து வயதைத் தாண்டிவிட்ட மூத்த மகன் ரமேஷ் எவ்வளவோ தேவலை. அவனுக்கு புரிந்ததோ புரியவில்லையோ. இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்டு அவன் அம்மாவை தர்மச் சங்கடத்தில் ஆழ்த்துவதில்லை. "உங்கள் தந்தை நம்மையெல்லாம் தவிக்க விட்டு விட்டு இன்னொருத்தியுடன் போய் விட்டார்' என்று அந்தத் தாய் பெற்ற பிள்ளைகளிடம் எப்படிச் சொல்வாள் ?
ஏற்கெனவே அப்படி ஒன்றும் வசதியான குடும்பம் இல்லை. அதிலும் சம்பாதித்துக் கெயாண்டிருந்த அந்த ஒரே நபரும் வீட்டை விட்டுப் போய்விட்டால் குடும்பம் என்ன கதிக்கு ஆவது. கடந்த ஒரு மாதமாக "அப்பா ஏன் இல்லை' என்ற கேள்வியுடன், "அடுத்த மாதம் என் பர்த் டே வருதே! என் ப்ரெண்ட்ஸ் வீட்டிலே வாங்குவது போல் நம்ம வீட்டிலும் கேக், பிட்சா எல்லாம் வாங்கிக் கொண்டாடணும்?' என்று புதிதாக கோரிக்கை வேறு வைக்க ஆரம்பித்துள்ளான் சுரேஷ்.
கணவர் போன பிறகு வர்ஷாவின் சம்பாத்தியத்தில் தான் வீடு நடக்கிறது. வருகிற சம்பளம் வாய்க்கும் வயிற்றுக்கும் காணும் காணாது என்றிருக்கும்பொழுது ஆயிரம் ரூபாய் செலவழித்து கேக்குக்கும், பிட்சாவுக்கும் எங்கே போவாள் வர்ஷா.
சிறு வயதிலேயே தந்தையை இழந்து விட்ட வர்ஷாவையும் அவள் சகோதரியையும் அவள் தாய் தான் நாலு வீடுகளில் வேலை செய்து ஓரளவு படிக்க வைத்து கஷ்டப்பட்டு வளர்த்தார். பள்ளி இறுதி வகுப்பு வரையில் படித்திருந்த வர்ஷாவுக்கு , அடுத்த தெருவில் கடை வைத்திருந்த ராஜுவுடன் ஏற்பட்ட காதல். சொல்லாமல் கொள்ளாமல் அவனுடன் வீட்டை விட்டு ஓடிப் போகும் அளவுக்கு முற்றிப் போய்விட்டது.
ஜாதி விட்டு ஜாதியில் காதலிக்கத் தெரிந்த இருவராலும் பெற்றோர்களையும், கிராமத்து ஆள்களையும் மீறி ஒன்றும் செய்ய முடியவில்லை. கிராமத்தைவிட்டு கண் காணாத தூரத்துக்குச் செல்வதே ஒரே வழி என்று எண்ணிய இருவரும் ,தில்லியை நோக்கி குடிபெயர்ந்தனர். ஒரு சில நண்பர்களின் உதவியுடன் தில்லியில் ஒரு பெட்டிக் கடை வைக்கும் அளவுக்கு ராஜுவிடம் கொஞ்சம் பணம் இருந்தது.
வர்ஷாவும் ராஜுவும் தில்லிக்கு வந்து பத்து வருடங்கள் ஆகியும் இருவரின் குடும்பத்தினரும் பிடிவாதமாக இவர்களுடன் தொடர்பு கொள்ள எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இவர்கள் எடுத்த முயற்சிகளுக்கும் பலன்
ஒன்றும் இல்லை. இரண்டு ஆண் பிள்ளைகளுக்குப் பெற்றோராகி விட்டனர். அதிகம் சம்பாதிக்காவிட்டாலும், ராஜுவின் சம்பாத்தியம் அவர்கள் நான்கு பேருக்கு போதுமானதாக இருந்தது. அவர்கள் குடும்பம் ஓரளவு சரியாகவே போய்க் கொண்டிருந்தது. யார் பட்ட கண்ணோ எங்கிருந்தோ வந்து ராஜுவின் கடைக்கு அருகிலேயே கடை போட்டுத் தொலைத்தாள் ஷகீலா.
இருவருக்குமிடையே எப்படித்தான் நட்பு உண்டாயிற்றோ, அது காதலாக மலர்ந்ததோ அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம். வர்ஷாவின் கணவன் ஷகீலாவின் மோகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வர்ஷாவையும் பிள்ளைகளையும் புறக்கணிக்க ஆரம்பித்தான். அப்படியே குடும்பத்தை தவிக்க விட்டு விட்டு அவளுடனே குடி போய்விட்டான். வீட்டுச் செலவுக்கென்று பணம் கொடுத்துக் கொண்டிருந்தவன் ஓராண்டுக்குப் பிறகு அதையும் நிறுத்தி விட்டான். நிலைகுலைந்து போன வர்ஷா யாரிடம் முறையிடுவாள்?, யாரிடம் நியாயம் கேட்பாள்?
குடும்பத்தைக் காப்பாற்ற வீட்டுக்கு அருகே இருந்த ஒரு பெரிய ஆஸ்பத்திரியில் ஆயா வேலை தேடிக்கொண்டாள் வர்ஷா. பன்னிரெண்டாம் வகுப்பு வரையில் படித்திருந்தாலும் வேறு ஒரு வேலையும் கிடைக்கவில்லை. மேலும் இந்த ஆஸ்பத்திரி வீட்டுக்கு அருகே இருந்ததால் அவளால். வீட்டையும் கவனித்துக் கொள்ள முடிந்தது. மாத வருமானம் ரூ.5 ஆயிரம். அதைத் தவிர நோயாளிகள் அவ்வப்பொழுது கொடுக்கும் இனாம் என்று காலம் தள்ள பழகிக் கொண்டு விட்டாள் வர்ஷா.
இரண்டு பிள்ளைகளுக்கும் வீட்டுக்கு அருகே உள்ள பிரபல தனியார் பள்ளியில், பொருளாதார அடிப்படையில் பின்தங்கியுள்ளவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் சாமர்த்தியமாக அட்மிஷன் வாங்கி விட்டாள் வர்ஷா.
ஆனால் பணக்காரப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்த்தது எவ்வளவு பெரிய தப்பு என்பது அவளுக்கு போகப் போகத்தான் புரிய ஆரம்பித்தது. மற்ற குழந்தைகளைப் போல் தங்களுக்கும் "பாக்கெட் மணி' வேண்டும் , பள்ளிக்கு எடுத்துச் செல்ல தண்ணீர் பாட்டில், பை எல்லாம் உசத்தியாக இருக்க வேண்டும் என்று பிள்ளைகள் அடம்பிடிக்க ஆரம்பித்தனர். இப்பொழுது கொஞ்சம் நாள்களாகப் பிறந்த நாள் பரிசாக பிட்சாவும், கேக்கும் வேண்டும் என்று இளைய மகன் சுரேஷ் நச்சரித்துக் கொண்டிருக்கிறான். "ஆஸ்பத்திரியில் எக்ஸ்ட்ரா வேலை பண்ணினால் ஆயிரம் ரூபாய் வரையில் கிடைக்கும். அப்படி கிடைத்தால் உன்னுடைய பிறந்த நாளை ஜாம் ஜாமென்று கொண்டாடி விடலாம்' என்று பிள்ளையிடம் சொல்லி வைத்திருந்தாள் வர்ஷா. அந்த எக்ஸ்ட்ரா வேலை என்ன என்று பிள்ளைகளுக்குத் தெரிய வாய்ப்பில்லை, தெரியவும் வேண்டாம் என்று நினைத்தாள் வர்ஷா.
அப்படி அம்மா என்னதான் எக்ஸ்ட்ரா வேலை செய்வாள் என்று பிள்ளைகளுக்குப் புரியவில்லை. ஏற்கெனவே ஒரு மாதம் முன்பு ஒருநாள் ரமேஷும் சுரேஷும் அம்மாவிடம் அவசரமாக ஏதோ கேட்க வேண்டும் என்று வர்ஷா வேலை செய்யும் ஆஸ்பத்திரி வார்டுக்கே வந்து விட்டார்கள். அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை அருவருப்படைய வைத்தது. அவர்களின் தாய் ஒவ்வொரு நோயாளியின் நிரம்பி வழியும் சிறுநீர் பையையும் எடுத்து சுத்தம் செய்து கொண்டிருந்தாள். மல, ஜலம் கழிக்க வேண்டிய நோயாளிகளுக்கு அதற்கான பாத்திரத்தை வைத்துக் கொண்டிருந்தாள். இதையெல்லாம் கண்ணுற்ற பிள்ளைகள் திடுக்கிட்டுப் போய் அம்மாவிடம் ""சீ! ஆஸ்பத்திரியில் நீங்க இந்த அசிங்கம் பிடித்த வேலையெல்லாமா செய்கிறேள்? எங்களுக்கு பார்த்தாலே குமட்டிண்டு வருது'' என்று தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியதோடல்லாமல் அங்கு இருக்கப் பிடிக்காமல் வீட்டுக்கு ஓட்டம் பிடித்தார்கள்.
இந்த வேலையையும் யாராவது ஒருவர் செய்து தானே ஆக வேண்டும், நோயாளிகளுக்கு பணிவிடை செய்வது புண்ணியக் காரியம் என்றெல்லாம் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லி அவர்களை சமாதானப்படுத்துவதற்குள் வர்ஷாவுக்குப் போதும் போதுமென்றாகி விட்டது. வீட்டுக்கு வந்த பிறகு வர்ஷா என்னதான் குளித்து உடை மாற்றிக் கொண்டாலும் அம்மாவிடம் "சிறுநீர் ,மலஜலம்' நாற்றம் வருவதாகவே பிள்ளைகளுக்குத் தோன்ற ஆரம்பித்தது.
சுரேஷ் ஆவலுடன் காத்திருந்த அவனது பிறந்த நாளும் வந்தது. காலையிலேயே கேக்கும், பிட்சாவும் வேண்டும் என்று அம்மாவை ஞாபகமூட்டத் தவறவில்லை சுரேஷ் . பணத்துக்கு என்ன பண்ணுவது என்று யோசித்தவாறு ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தாள் வர்ஷா. அன்று வர்ஷாவுக்கு "அதிர்ஷ்டம்' காத்திருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் பத்தாம் எண் படுக்கையில் இருந்த கங்கா இறந்து போயிருந்தாள்.
"எக்ஸ்ட்ரா வரும்படிக்கு வழிகிடைத்து விட்டது' என்று அவள் எண்ண ஆரம்பித்தாள். இறந்து போன உடல்களை நன்றாகத் "தயார்' செய்வதில் கை தேர்ந்தவர் என்று பெயர் எடுத்திருந்த வர்ஷாவின் வருகைக்காகக் காத்திருந்தனர் டாக்டர்கள் .
இந்த வேலையைச் செய்ய சிலர் தயங்கிக் கொண்டிருக்கும்பொழுது, வர்ஷா விரும்பிக் கேட்டு செய்து கொண்டிருந்தாள். எக்ஸ்ட்ரா வரும்படி ஆயிரம் ரூபாய் அவளுக்குத் தேவையாக இருந்தது. இன்று கிடைக்கப்போகும் ஆயிரம் ரூபாயில் மகன் சுரேஷின் பிறந்த நாளை கேக் , பீட்சாவுடன் ஜாம் ஜம்மென்று கொண்டாடி விடலாமே என்று அவள் மனம் கணக்குப் போட்டது.
மாலை அம்மா திரும்பி வரும் வரையில் காத்திருக்க பொறுமையில்லாத சுரேஷ் அம்மாவுக்குத் தெரியாமல் அவளைப் பின்தொடர்ந்து ஆஸ்பத்திரிக்கே சென்று விட்டான். அங்கு அவன் கண்ட கட்சியோ அவனை குலைநடுங்க வைத்தது. அவன் தாய் வர்ஷா இறந்து போன பெண்மணியின் உடலில் சொருகியிருந்த குழாய்களை அகற்றி, உடலை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். பிணத்தைச் சுற்றி இறந்தவரின் பிள்ளைகளும், கணவரும், மற்ற உறவினர்களும் நின்று கொண்டு வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறிக் கொண்டிருந்தனர். இப்படிப்பட்ட காட்சிகளை டி.வி.யில் மட்டுமே பார்த்திருந்த, சுரேஷ், அரண்டு தான் போய்விட்டான்.
சுரேஷின் வயிற்றைக் கலக்கியது. கடைசியில் அந்தக் குடும்பத்தினர் வர்ஷாவின் கைகளில் ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்து விட்டு அழுதுகொண்டே நன்றி தெரிவித்தனர். ஒருவித பீதியுடன் சுவருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு அந்த கோரக் காட்சியை கண்டு கொண்டிருந்த சுரேஷ், தன்னை அம்மா பார்த்து விடுவதற்குள் அங்கிருந்து வீட்டை நோக்கி ஓட்டம் பிடித்தான்.
அன்று சீக்கிரமே வீடு திரும்பிய வர்ஷா படு உற்சாகமாக , "" சுரேஷ்! கடைக்குப் போகலாம் வா! உன் பர்த் டேக்கு கேக் பிட்சா வெல்லாம் வாங்கிண்டு வரலாம். அம்மாகிட்ட ஆயிரம் ரூபாய் பணம் இருக்கு பார்'' என்று ஓடிப்போய் மகனை அணைத்துக் கொண்டு அவனை கடைக்கு அழைத்தாள்.
இன்னமும் பீதியில் நடுங்கிக் கொண்டு ஒரு மூலையில் உட்கார்ந்திருந்த சுரேஷ் வர்ஷாவின் பிடியிலிருந்து மீண்டு, ""அம்மா எனக்கு கேக் பிட்சா எல்லாம் வேண்டாம்மா'' என்று அலறினான்.

ADVERTISEMENT
ADVERTISEMENT