தினமணி கதிர்

மரங்களிலும் கலைவண்ணம்...!

2nd Oct 2022 06:00 AM | எஸ்.சபேஷ்

ADVERTISEMENT


மரங்களிலும் கலைவண்ணத்தை தங்களது கைகளாலேயே இளைஞர்கள் செய்து வியப்படைய வைத்துள்ளனர்.

மரங்களில் பல்வேறு கைவண்ணங்களைக்  கண்டிருக்கிறோம். இருந்தாலும்,  பல இயந்திரங்களின் உதவியைக் கொண்டு செய்யப்பட்டவையாக இருந்தன. கணினியில் படத்துக்கேற்ற உத்தரவுகளைப் பிறப்பித்து அந்த மரத்தை கணினியுடன் இணைக்கப்பட்ட இயந்திரத்தில் பொருத்தினால் அந்த மரத்தில் கணினியில் ஏற்றப்பட்ட உருவம் செதுக்கப்பட்டு விடும்.

ஆனால் அரக்கோணத்தில் இளைஞர்கள் பலர் கண்களால் கண்ட உருவத்தை மரத்தில் கையினால் செதுக்கி நம்மை வியக்க வைக்கிறார்கள். 

சுவால்பேட்டை பாரதி தெருவில் 6 இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மரத்தில் உருவம் செய்து தரும் தொழிலைச் செய்து வருகிறார்கள். 

ADVERTISEMENT

கோணலம் கிராமத்தைச் சேர்ந்த எம்.பார்த்தீபன், எம்.ஹரிஹரன், ஆர்.சுக்கலான், எஸ்.ராஜி, எஸ்.கண்ணன், ஆர்.சீனிவாசன் ஆகிய ஆறு இளைஞர்கள் பத்தாம் வகுப்பை முடித்தவுடன் இந்த தொழிலுக்கு வந்துள்ளனர்.

இவர்கள் தங்களது கைவண்ணத்தில் மரத்தில் பல்வேறு உருவங்களை கதவுகளில் செதுக்குதல், மயில், விநாயகர், பெருமாள், ஏசு, பல்வேறு பூக்களின் உருவங்களை பல்வேறு மரபொருள்களில் செதுக்குதல்,  மனிதர்களின் படங்களை வரைந்து தருதல் ஆகிய வேலைகளை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு வெளிமாநில பகுதிகளிலும் இருந்து ஆர்டர்கள் குவிகின்றன.

இதுகுறித்து எம்.பார்த்தீபனை கேட்டபோது அவர் கூறியதாவது:

""பத்தாவது முடித்தவுடன் மேலே படிக்க வசதியில்லை.  எனது மாமா காளப்பன் கிராமத்தில் மரத் தச்சராக இருந்தார். அவரிடம் உதவியாளராக சேர்ந்தேன். மரத்தில் உருவத்தைச் செதுக்கும் வேலையை தெரிந்துக்கொண்டு,  பல உருவங்களை வரைந்தேன்.  ஆர்டர்கள் குவிந்ததால்,  மரச் சிற்பங்களை செதுக்கும் பணியில் ஈடுபட்டேன். 

இதையடுத்து,  பல இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து மரச் சிற்பத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.  

எத்தனை பேர் வந்தாலும் இந்த தொழிலை கற்றுக்கொடுக்க தயாராக இருக்கிறேன். 

மரத்தினால் தயாரித்த கட்டில்கள், வாயிற்படிகள்,  கதவுகள், டைனிங் டேபிள், டிரஸ்ஸிங் டேபிள், பார்டீசன்கள், பூஜைஅறை கதவுகள், மர பூஜை பீரோக்கள் ஆகியவற்றை கையினால் தயாரித்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்காக அனுப்பிவைக்கிறோம். தொடர்ந்து எங்களுக்கு ஆர்டர்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

கற்களில் என்னென்ன சிற்பங்களை உளியால் செதுக்க முடியுமோ அதே சிற்பங்களை நாங்கள் சிற்பமாகவும் கதவுகளிலும், வாயிற்படிகளிலும் வாடிக்கையாளர்கள் விரும்பும் அனைத்து மரப் பொருள்களிலும் செய்து தருகிறோம். இந்தக் கலையை பொருத்தவரை இதை படித்து கற்கத் தேவையில்லை.  முயற்சி இருந்தால் அதன் மூலம் அனுபவம் பெற்று இதனை கொண்டு இத்தொழிலில் மேன்மேலும் புதுமைகளை செய்ய இயலும்''

ADVERTISEMENT
ADVERTISEMENT