தினமணி கதிர்

வானுக்கும் எல்லை உண்டு

சரசுராம்

சென்னையின் டிசம்பர் மாத மழைக்கு பின்பு ஓர் இரவில்தான் தேவிகா தனது வீட்டைவிட்டு வந்தாள். வந்து மூன்று நாள்களாகிறது.

""போடீ.. போ.. எங்க போவே வயிறு காய்ச்சுதுன்னா இங்கதானே வந்தாகணும்..'' என்கிற கணவனின் குரல் பின்னால் தேயத் தேயத்தான் நடந்து வந்தாள். கையில் ஒரு சின்ன பேக் மட்டும் இருந்தது. வாசலைத் தாண்டினாள். அப்போது காற்றில் நிறைய பனி இருந்தது. கடந்த ஆகஸ்டில்தான் தேவிகா அறுபது வயதைக் கடந்திருந்தாள். அவள் வீட்டை விட்டு வெளியேறும்போது "இந்த வயதுக்கு மேல் இது தேவையா..' என ஊர் கேலியாய் பார்க்கத்தான் செய்தது. அந்த பார்வைகளின் மீது அவள் கவனம் செலுத்தவில்லை. மனதில் "இது என் பிரச்னை இது எனக்கானது' என்ற ஒரு தெளிவு மட்டும் இருந்தது. வேகமாக நடக்கத் தொடங்கினாள்.

வெளியே வந்ததும் முதலில் ஞாபகத்தில் வந்தது ரேவதிதான். சக வயது. ஐம்பது ஆண்டு தோழி. அதுதவிர இருவரும் ஒரே ஊர் வேறு. ரேவதி வீடு என்பது அதிக தூரத்தில் இல்லை. அடுத்த தெருவில்தான் இருந்தது. தேவிகா வீட்டுக்கு வந்ததும் ரேவதி எதுவும் கேட்கவில்லை. உடனே குடிக்க தண்ணீர் தந்தாள். சூடாக டீ போட்டுக் கொடுத்தாள். பிறகுதான் நடந்ததை விசாரித்தாள்.

வந்த முதல் நாள். தேவிகாவுக்கு அது எப்பொழுதும் போல்தான் விடிந்தது. இதமான காலை வெயில் எப்பொழுதும் போல்தான் அடித்தது. பறவைகள் எப்பொழுதும் போல்தான் சப்தமிட்டு பறந்தன. ஜன்னலில் வந்த காற்றும் ஈரத்துடன் அப்படித்தான் இருந்தது. தேவிகா சாவகாசமாகத்தான் படுக்கையை விட்டு எழுந்தாள். நிமிர்ந்து சுவர் கடிகாரத்தில் மணியைப் பார்த்தாள். எட்டு ஆகியிருந்தது. தலையை முடிந்து கொண்டாள். பெட்ஷீட்டை உதறி மடிக்கும்போது, ரேவதி அடுப்படியிலிருந்து குரல் கொடுத்தாள்.

""தூங்கு தேவிகா.. அதுக்குள்ள ஏன் எந்திரிச்சுட்டே..''
""டயம் எட்டாயிடுச்சே.. தெரியவேயில்ல..'' என்றபடி படுக்கையை மடித்தாள்.
""காப்பி ரெடியாயிருக்கு.. தரட்டா..?''
""இரு.. அஞ்சு நிமிசத்தில பல்லு விளக்கிட்டு வந்தர்றேன்.''
தேவிகா பாத்ரூம் கண்ணாடியில் முகம் பார்த்துக் கொண்டாள். வலது கன்னத்தின் மேல் நேற்று கணவன் அடித்ததன் வீக்கம் அழுத்தமான சிவந்து தெரிந்தது, மிக நிதானமாய் பல் விளக்கினாள். லேசான சுடுதண்ணியில் முகம் கழுவிக் கொண்டாள். முகத்தை துடைத்தபடி வந்து சேரில் அமர்ந்தாள். ரிமோட்டை எடுத்து டி.வி.யைப் போட ஒரு மியூசிக் சேனலில் பாடல் ஒலித்தது.
"கண்ணிலே அன்பிருந்தால்.. கல்லிலே தெய்வம் வரும்..'- பழைய பாடல். விஜயகுமாரி
எஸ்.எஸ்.ஆரை சுற்றிச் சுற்றி வந்து பாடிக் கொண்டிருந்தார். அவர் அந்தப் பாடலையோ அவரையோ புரிந்து கொண்ட மாதிரி தெரியவில்லை. தேவிகா அந்தப் பாட்டில் லயித்துப் போனாள். ரேவதி காப்பியுடன் வந்தாள். அருகில் இருந்த
இன்னொரு சேரில் அமர்ந்து கொண்டாள்.
""ம்.. காப்பி ஆறுது.. எடுத்துக் குடி..'' என்றாள். தேவிகா காப்பி எடுத்து குடித்தபடியே அந்தப் பாடலை மேலும் ரசிக்க ஆரம்பித்தாள்.
""நெல்லிலே.. மணியிருக்கும். நெய்யிலே மணமிருக்கும்.''
""சுசிலாம்மா என்னம்மா பாடறாங்க.. என்னவொரு குரல்.. இவங்க பாட்டை மட்டும் கேட்டுட்டே இருக்கலாம்.. இந்தப் பிறவிக்கும் இது போதும்.'' என்றாள்.
""இவ்வளவு ரசித்து கேட்கறயே!''
""இதுவரைக்கும் இப்படி ரசித்துக் கேட்க வீட்ல யார் விட்டா?''
தேவிகா மீண்டும் காப்பியை குடித்தாள். சுசிலாம்மா தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.
""சரி.. வெளியில போலாமா?'' என்றாள் ரேவதி.
""நீ துணி தைக்கிற வேலையெல்லாம் முடி.. ஏதாவது கோயிலுக்கு வேணும்னா போலாம். ஆனா கூட்டமில்லாத கோயிலா இருக்கணும்.. ஓ.கே.''
""உங்க அம்மா வீட்டை விட்டு போயிட்டாடா.. '' என்றார் தட்சணாமூர்த்தி போனில் சற்று கோபமாக.
""என்னப்பா சொல்றீங்க..? எப்ப போனாங்க..?'' என்றான் பிரபு அதிர்ச்சியாய்.
""மூணு நாளாச்சுடா.''
""மூணு நாளாச்சா..? ஏன் அப்பவே போன்
பண்ணல?''
""திரும்பி வந்துடுவான்னு பார்த்தேன்.. ஆனா வரல.. அதான் போன் பண்ணிச் சொன்னேன்.''
""என்னப்பா நடந்துச்சு..? இந்த வயசில என்னப்பா உங்க ரெண்டு பேருக்குள்ள பிரச்னை?''
""நிறைய பிரச்னைகள்.. இப்ப அவங்க வீடு.. அவங்க தம்பிதான் பிரச்னை.. நகைப்பெட்டியில ரெண்டு வளையலைக் காணோம்.. எங்கன்னு கேட்டேன்.. தம்பி குடும்பம் கஷ்டப்படுதுன்னு எடுத்து கொடுத்துட்டேன்னு அசால்டா பதில் சொல்றா?''
""அதுக்கு அம்மாவ அடிச்சீங்களா?''
""ஆமா அடிச்சேன்.. நான் அவள அடிக்கறதென்ன புதுசாடா? அதுக்கு கிளம்பிட்டா?''
""அவங்க கிளம்பிட்டாங்களா..? நீங்க கிளம்பச் சொன்னீங்களா?''
""ஆமாண்டா. நான்தான் வீட்டைவிட்டு கிளம்பச் சொன்னேன்.. பின்ன.. அடிச்சதும் என்னையே முறைச்சிட்டு நின்னா.. நான் பண்ணினதுல என்ன தப்பிருக்குன்னா..? சர்ன்னு எனக்கு ஆத்திரம் வந்துச்சு.. முகத்துல மறுபடியும் ரெண்டு விட்டேன்.. வெளியில போடீன்னேன். சட்டுனு உள்ள போனா? துணியெல்லாம் எடுத்து வச்சா.. பேக்க எடுத்துட்டு கிளம்பிட்டா! போகட்டும் கழுதை. எங்க போகும். என்ன பண்ணும். அதுக்கு என்ன தெரியும்.. தானா வருவா.. விடுடா?''
பிரபு ஒரு நிமிசம் அமைதியாக இருந்தான். பிறகு பேசினான்.
""ஏன்ப்பா.. ஆ.. ஊன்னா கை வச்சர்றீங்க..? சரி.. இப்ப அம்மா எங்க போனாங்க.? மாமா வீட்டுக்கா..?''
""அவ அங்க போகல.. அவ ப்ரண்ட் ரேவதி இருக்கா இல்ல.. அவங்க வீட்டிலதான் இருக்கா.. அதுவும் தனியாத்தான இருக்கு.. கூட்டணி போட்டிருப்பாங்க!''
""ரேவதிம்மா வீடா..? ஓ.கே. அப்பா நானும் சங்கீதாவும் உடனே கிளம்பி வர்றோம். அம்மாகிட்ட பேசறோம்.. சமாதானம் பண்ணறோம். நீங்களும் கோபத்த விட்டுட்டு.. அம்மா வந்தா எதுவும் பேசாம ஏத்துக்கங்க.. பாவம்ப்பா.. அம்மாவுக்கு ஒண்ணும் தெரியாதுப்பா..''
தட்சணாமூர்த்தி பதில் சொல்லாமலே இருந்தார்.
""என்னப்பா அமைதியா இருக்கீங்க..? அம்மா வந்தா பேசாம ஏத்துக்குவீங்கதானே?''
""நடந்ததுக்கு அவ எங்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு வர்றேன்னு சொன்னா நான் ஏத்துக்கறேன்.''
""மன்னிப்புதானே..? அம்மாவைக் கேட்கச் சொல்றேன்.. நடந்ததையெல்லாம் மறந்துட்டு நல்லபடியா இருக்கப் பாருங்க.. இந்த வயதுக்கு மேலதான் ஒருத்தருக்கொருத்தர் துணை வேணும். சரிப்பா எங்க சாப்பிடற நீ?''
""கடையிலதான்.. இல்லன்னா ஆர்டர் பண்ணினா சாப்பாடு வீட்டுக்கே வருது.''
தி.நகரில் உள்ள சிருங்கேரி மடம். தேவிகா விரும்பியபடியே கோயிலில் கூட்டம் இல்லை. லேசான பறவைகள் சப்தம் மட்டும் கேட்டபடி இருந்தது. கூடியிருந்த அமைதியில் தேவிகாவால் உடனே லயிக்க முடிந்தது. நிதானமாய் கோயிலைச் சுற்றி வந்தாள். அதன் உச்சி பார்த்து கும்பிட்டுக் கொண்டாள். அலங்கரித்த அம்மனை நோக்கி ரேவதியும் கண்களை மூடி வேண்டிக் கொண்டிருந்தாள். தேவிகா தனியாய் ஒரு இடத்தில் போய் அமர்ந்து கொண்டாள். அமர்ந்த தரை குளிர்ச்சியாக இருந்தது. காற்றும் சில்லென வீசிக் கொண்டிருந்தது. ஒலித்த மந்திரம் மேலும் இதம் தர அவளும் கண்களை மூடிக் கொண்டாள். ஒரு பேரமைதியின் நிழல் மனம் முழுவதும் படர்வதாய் உணர்ந்தாள். கண்களைத் திறக்க உலகை புதியதாய் உணர்ந்தாள். ரேவதி வந்து பக்கத்தில் அமர்ந்திருந்தாள்.
""என்ன வேண்டுதல் பலமா இருக்கு.. வீட்டு ஞாபகமா..?'' என்றாள் ரேவதி.
""சத்தியமா வீட்டு ஞாபகமும் இல்ல. எந்த வேண்டுதலும் இல்ல. கோயிலுக்கு வந்ததால மனசில அமைதி இருக்கு. சந்தோசம் இருக்கு. அவ்வளவுதான்.''
நிறைய திரி கொண்ட விளக்கில் சாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. வட்டமாக அலைந்த வெளிச்சத்தில் அழகான அம்மன் புன்னகை. அந்த அழகை தேவிகா ரசித்துப் பார்த்தாள்.
சேலத்தில் பிரபு காரை எடுத்துக் கொண்டான். மனைவியிடம் சென்னை போய் பேசி முடிந்ததும் உடனே கிளம்பி விடுவேன் என்றான். வரும் வழியில் விழுப்புரத்தில் தங்கையை சந்தித்தான். அவள் கணவனிடம் நடந்த விஷயத்தைச் சொன்னான். அவரும் பதற்றமாகி, "" குழந்தைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் நீங்க உடனே கிளம்புங்கள்'' என்றார்.
சங்கீதா காரின் பின் சீட்டில் டென்ஷனாய் பேசியபடியே வந்தாள்.
""அம்மா சண்டை போட்டா நம்மகிட்ட வரவேண்டியதுதானே. ரேவதிம்மா வீட்டில போய் ஏன் இருக்கணும்?''
""பொம்பளங்க என்ன நினைக்கறாங்கன்னு யாருக்கு தெரியும்''
""கொஞ்சம் சும்மா வர்றயா பிரபு..? ஏற்கெனவே கடுப்பா இருக்கேன்.''
""எப்பப் பார்த்தாலும் சண்டை. ரெண்டு பேருக்கும் அறுபது வயசுக்கும் மேலாச்சு. இன்னும் எதுக்கு இவ்வளவு வீராப்பு. அம்மாவுக்கு என்ன தெரியும்? ஊருக்கு ரயில் ஏத்தி விட்டாளே தனியா போகத் தெரியாது.. போனாலும் சரியான இடத்தில இறங்கத் தெரியாது.. அங்க போய் என்ன பண்றாங்களோ.. தெரியல.''
சங்கீதா வழியெல்லாம் புலம்பியபடியே வந்தாள். பிறகு அம்மாவின் நம்பருக்கு போன் செய்துப் பார்த்தாள். அது ஸ்விட்ச் ஆஃப் என்றே வந்தது. அவளுக்கு எரிச்சல் இன்னும் அதிகமானது.
""அம்மா போனாவது எடுத்துட்டு போனாங்களா இல்லையா?''
""நானும் ட்ரை பண்ணிடேன் சங்கீதா.. அது ஸ்விட்ச் ஆஃப்லதான் இருக்கு.''
""அது ஆன்ல இருந்தா மட்டும் அம்மா சரியா பேசிருமா?''
இரண்டாம் நாள். தேவிகா அன்றும் நிதானமாய் எழுந்தாள். ரேவதியுடன் சேர்ந்து வீட்டு வேலைகளைச் செய்தாள். காலை உணவை சமைத்தார்கள். வீட்டில் இருந்த ஒரு வார இதழைப் புரட்டினாள். இருவரும் சேர்ந்து அதிலிருந்த குறுக்கெழுத்துப் போட்டியில் கட்டங்களை விடைகளால் நிரப்பினார்கள். பிறகு ரேவதி மிஷினில் ஜாக்கெட்டுகள் தைக்க ஆரம்பித்தாள். அதற்கு ஊக்குகள் வைக்க தேவிகா உதவினாள்.
""இந்தத் தொழிலை எவ்வளவு நாள்ல கத்துக்க முடியும் ரேவதி.''
""ஆர்வம் இருந்தா சீக்கிரம் கத்துக்கலாம்.. நீ சரின்னு சொல்லு நான் கத்துத் தர்றேன். ஒ.கே.''
""டபுள் ஒ.கே..'' என்றபடி ஊக்கில் இருந்த நூலை தேவிகா பற்களால் கடித்துக் கொண்டாள்.

""ரேவதி.. இன்னைக்கு மீன் வாங்கி சமைக்கலாமா?''

உடனே இருவரும் ஆட்டோ பிடித்து மார்க்கெட் போனார்கள். தேவையானதை வாங்கினார்கள். வீட்டுக்கு வந்து தேவிகாவே சமைத்தாள். மதியம் இருவரும் அமர்ந்து சாப்பிட்டார்கள். ரேவதி ருசித்து சாப்பிட்டாள். அவள் கண்கள் கலங்கியது.

""எங்க அம்மா சமையல் ஞாபகத்தில வந்திருச்சு, அவ்வளவு ருசியா இருக்கு தேவிகா..'' என்று மனம் விட்டு பாராட்டினாள். தேவிகா ரேவதியை மகிழ்ச்சியோடுப் பார்த்தாள். வீட்டில் யாராவது இப்படி பாராட்டியிருக்கிறார்களா என ஒரு நொடி யோசனை வந்தது.

சத்யம் தியேட்டர். மதியம் நாலு மணி காட்சிக்கு படத்துக்குப் பேனாôர்கள். சந்தானம் நடித்தது. ஒவ்வொரு காமெடிக்கும் தேவிகா வாய்விட்டு சிரித்ததை தியேட்டரில் மூன்று வரிசை வரை திரும்பிப் பார்த்தார்கள். ரேவதி ஆச்சர்யமாய் தேவிகாவைப் பார்த்தாள்.

""இப்படி மனசுவிட்டு சிரிப்பையா.. தேவிகா?''

""ம்.. சிரிப்பேன். அது கல்யாணத்துக்கு முன்னாடி.. அதுக்கப்றம் இன்னைக்குத்தான்.'' என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரிப்பில் மூழ்கிப் போனாள்.
சென்னை. பிரபுவும் சங்கீதாவும் வீட்டுக்கு வந்திருந்தார்கள். முதலில் அப்பாவுடன் விரிவாய் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

""அதான் நான் எதுவுமே பேசலன்னு சொல்லிட்டனே. வந்து நான் வாயே திறக்க மாட்டேன்.. ஓ.கே. வா..'' என்றார் தட்சணாமூர்த்தி.

""வந்து அந்த நகையைப் பத்தி எந்த கேள்வியும் கேட்காதீங்கப்பா.. ஓ.கே.வா?'' என்றாள் சங்கீதா.

""என்னப்பா ஒண்ணும் சொல்ல மாட்டீறீங்க?'' என்றான் பிரபு.

""நடந்ததுக்கு அவள மன்னிப்பு கேட்கச் சொல்லு. அது போதும்.. வேற எதுவும் நான் கேட்க மாட்டேன்.''

மூன்றாம் நாள். பெசன்ட் நகர் கடற்கரை. உப்புக் காற்றின் இறுக்கமான அணைப்பு. தேவிகா புடவையை சற்றே உயர்த்திக் கொண்டாள். வேகமாய் வந்த அலை அவளது கால்களை தழுவ ஜிவ்வென ஓரு உணர்வு உடம்பெல்லாம் ஏறியதை மகிழ்ச்சியோடு உணர்ந்தாள். உற்சாகத்தின் அளவு மேலும் உயர்ந்தது. மீண்டும் அலைகளோடு விளையாட ஆரம்பித்தாள். அதுவும் தேவிகாவை விடுவதாய் இல்லை. குழந்தை போல் பின்னர் தொடர்ந்து முழுவதுமாய் அவளை நனைத்து மகிழ்ந்தது. மணலில் அமர்ந்தபடி ரேவதி எல்லாம் ரசித்தபடி இருந்தாள். பேப்பரில் மடித்திருந்த பஜ்ஜி சூடாக காத்திருந்தது.

தேவிகா ரேவதியின் பக்கத்தில் வந்து அமர்ந்தாள். முழுவதுமாய் நனைந்திருந்தாள். அலைகளின் குதூகலமான குரல் மனதுக்குள் வந்து இன்னும் அடித்தபடி இருந்தது. அடித்த பலத்த காற்றும் அவளது தலை முடிகளை கலைத்து விளையாடியது. இருவரும் பஜ்ஜியை ருசித்து சாப்பிட்டனர்.

""என்ன.. வீட்டுக்கு வர்றதுக்கு மனசே இல்லயா?'' என்றாள் ரேவதி.

""நிஜம்மா ரேவதி. இவ்வளவு பெரிய பிரமாண்டத்துக்கு முன்னாடி நாமெல்லாம் ஒண்ணுமே இல்லைன்னு தோணுது இல்லையா?''

""என்னம்மா என்னென்னவோ பேசற..''

""நான் பேசல.. இந்தக் கடல் என்னை பேச வைக்குது.. அவ்வளவுதான்.''

""சரி கிளம்பலாமா..?''

""இல்ல ரேவதி.. நீ கிளம்பு.. நான் இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு வர்றேன்.''
""தனியா எப்படி?''

ரேவதி அப்படி சொன்னதும் தேவிகாவுக்கு கோபம் வந்தது. ஆனால் சட்டென அமைதியானாள்.

""நீ கிளம்பு.. நான் வந்தர்றேன்.. பஸ் கிடைக்குமான்னு பார்க்கிறேன்.. இல்லைன்னா ஆட்டோ பிடிச்சு வந்தர்றேன்.. இல்லன்னா நடந்தே வந்தர்றேன் ஓ.கே.வா..?''

ரேவதி கிளம்பிக் கொண்டாள். தேவிகா மீண்டும் கடலையே பார்க்க ஆரம்பித்தாள். ஒரு பெரிய அலையொன்று வேகமாய் எழும்பி தரையில் மோதி அதே வேகத்தில் வந்து தேவிகாவின் காலைத் தொட்டது. முகத்தில் மீண்டும் அதே மகிழ்ச்சி வந்தது.

ரேவதி வீடு. பிரபுவையும் சங்கீதாவையும் தேவிகா மிக அமைதியாகப் பார்த்தாள். தட்சணாமூர்த்தி பக்கம் திரும்பக் கூட இல்லை. சங்கீதாவுக்குத்தான் அம்மாவைப் பார்த்ததும் கண்ணீர் வந்தது. ரேவதி சமையலறையில் டீ போட்டுக் கொண்டிருந்தாள். பிரபு பேச ஆரம்பித்தான்.
""அம்மா. எல்லாம் பேசிட்டோம். அப்பாகிட்ட ஒரு சாரி மட்டும் சொல்லிரு.. வேற எந்த கோபமும் யாருக்கும் இல்ல உங்க மேல.. உடனே கிளம்புங்க. வீட்டுக்கு போலாம்.'' என்றான்.

தேவிகா ஒன்றும் பேசவில்லை. அமைதியாக இருந்தாள். ரேவதி எல்லோர்க்கும் டீ தந்துவிட்டுப் போனாள்.

""என்னம்மா யோசிக்கறீங்க? நாங்க இருக்கோம்மா.. வாங்க வீட்ல போய் பேசிக்கலாம்.. அப்பா சொல்லுங்கப்பா'' என்றாள் சங்கீதா. தட்சணாமூர்த்தி கடுப்புடன் தலையை குனிந்து கொண்டார்.

தேவிகாவுக்கு சட்டென சிரிப்பு வந்தது. பிரபுவும் சங்கீதாவும் புரியாமல் அம்மாவைப் பார்த்தார்கள். தேவிகா சற்றும் பதற்றப்படாமல் பேச ஆரம்பித்தாள்.

""நான் பேசறத ஒரு நிமிசம் கேளுங்க.. நான் என்ன தப்பு செஞ்சேன். கூட பிறந்த தம்பிக்கு உதவினது தப்பா? நானா.. அந்த வீட்டில எதுவும் செய்யக்கூடாதா? ஏன் எனக்கு அந்த உரிமை இல்லையா? உரிமையில்லாத இடத்தில எப்படி அன்பு இருக்கும்? ஆம்பளைங்க அடிச்சிட்டே இருப்பீங்க.. நாங்க வாங்கிட்டே இருக்கணுமா,? இது எந்த வகையில நியாயம்? எந்த உரிமையும் இல்லாம அடிமையா இருக்கிற அந்த வீட்டில எனக்கென்ன வேலை? அதுதான் நான் வெளியே வந்துட்டேன்.. பிரபு இங்க பாரு. நடந்த பிரச்னையில தப்பு யாரு மேலங்கறதப் பத்திகூட இனி பேச வேண்டாம். அவரு அவரா இருக்கட்டும்.. நான் நானா இருந்துட்டு போறேன்.. இந்த மூணு நாள் எனக்கு எவ்வளவோ சொல்லிக் கொடுத்துருச்சு..''
அந்த மூன்று நாள்களில் கிடைத்த அழகிய வாழ்வின் ஒரு சுருக்கத்தைச் சொன்னாள். சொன்ன குரலில் அத்தனை உற்சாகம். மலர்ந்த பூவின் வாசனை போல் அதன் தொனி. பிரபுவும் சங்கீதாவும் வியப்புடன் பார்த்தார்கள். தட்சணாமூர்த்தி புரியாமல் நிமிர்ந்து பார்த்தார்.

""இப்பத்தான் சங்கீதா நான் நினைச்சப்ப தூங்கறேன். நினைச்சப்ப எழுந்திருக்கேன். பிடிச்சத செய்து சாப்பிடறேன். பிடிச்ச இடத்துக்கு போயிட்டு வர்றேன். சுதந்திரம்னா என்னன்னு எனக்கே இப்பத்தான் புரியுது. நிஜமா நான் நானா இருக்கேன் சங்கீதா.. இப்பத்தான் எனக்காக வாழ்ற மாதிரியே இருக்கு. இதையும் கொஞ்சம் வாழ்ந்து பார்க்கறன்னே. ரேவதிய பாரு. அவ வாழலையா? புருஷன இழந்திருக்கா.. குழந்தைக இல்ல.. ஆனா தன்னம்பிக்கையா வாழறா..! வாழ நினைச்சா எப்படியும் வாழலாம்தானே! அதுவும் பொம்பளைகளால நிச்சயமா தனியா பொழைச்சுக்க முடியும்.. ரேவதிக்குகூட எந்த சிரமமும் இல்லாம ஒரு வீடு பார்த்து நானும் தனியா வாழ்ந்து பார்க்கறனே! இது சரியா தப்பான்னு தெரியாது.. இப்போதைக்கு சரின்னு தோணுது.. நீங்க ஊருக்கு கிளம்புங்க.. யாரும் என்னைப் பத்தி கவலப்படாதீங்க..'' என்றாள்.

பிரபுவும் சங்கீதாவும் என்ன பேசுவதென தெரியாமல் தேவிகாவையேப் பார்த்தார்கள். "மாலை பொழுதின் மயக்கத்திலே..' வெளியில் எங்கோ அந்தப்பாடல் ஒலித்தது.

""ஆஹா..! எனக்கு ரொம்ப பிடிச்ச சுசிலாம்மா பாட்டு.'' என்றபடி தேவிகா சுற்றிலும் இருப்பவர்களை மறந்து கண்களை மூடி அந்தப் பாட்டை ரசிக்கத் தொடங்கினாள்.

தட்சணாமூர்த்தி நிமிர்ந்து தேவிகாவையே பார்த்தார். அவளை சரியாக புரிந்து கொள்ளாமல் போன வருத்தம் சட்டென மனதை கனக்கச் செய்தது. மனதில் யோசனைகள் ஓடியது. கடைசியில் அவருக்கு ஒன்று மட்டும் மிக தெளிவாய்
புரிந்தது.

""தேவிகாவிடம் நான்தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.''

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT