தினமணி கதிர்

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 116

ரஜினிகாந்த் சென்னை திரும்பிவிட்டார் என்றதும் எனக்கு தில்லியில் இருப்புக் கொள்ளaவில்லை. அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் இனிமேல் தமிழகத்தில்தான் எனும்போது நான் தில்லியில் தங்கி இருப்பதில் அர்த்தமில்லை என்று முடிவெடுத்தேன்.

நள்ளிரவுக்கு மேல் சென்னை வழியாகக் கொழும்பு செல்லும் ஏர் இந்தியாவின் விமானம் ஒன்று, வாரம் இருமுறை தில்லி யிலிருந்து கிளம்பும். அதில் சென்னைக்கானகட்டணம் மிகவும்   குறைவாக இருக்கும்அன்று இரவே அந்த விமானத்தில் சென்னை கிளம்பி விட்டேன்.

ஏற்கெனவே சென்னை திரும்பி இருந்த நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமியை சந்தித்துத் தனது நரசிம்ம ராவ் சந்திப்பு குறித்து விவாதித்ததாகச் சொன்னார்கள். ஆனால், சோ சார் மட்டுமல்லாமல் அவர் இன்னொரு முக்கியமான நபரையும் சந்தித்தார் என்கிற விவரத்தை என்னிடம் தெரிவித்தார் எனது நண்பர் இயக்குநர் மகேந்திரன். 

ரஜினிகாந்த் சந்தித்த அந்த பிரமுகர் வேறு யாருமல்ல, அவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ராஜா அண்ணாமலைபுரத்தில் இருந்த செ. மாதவனை சந்திக்கச் சென்றபோது, அருகிலிருந்த இயக்குநர் மகேந்திரனைப் பார்த்து விட்டு வரலாம் என்று சென்றேன். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவர் நிறையவே ஆசைப்பட்டார். அதனால் தான், ரஜினி - சிவாஜி சந்திப்பு அவருக்குக் கோபத்தை ஏற்படுத்தியது.

சொந்தமாகக் கட்சி தொடங்க வேண்டாம் என்றும், காங்கிரஸிலும் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் முடிவெடுக்கக் காரணமாக அமைந்தது ரஜினிகாந்த் - சிவாஜி சந்திப்பு. 

சிவாஜியிடம் ரஜினி ஆலோசனை கேட்கவும் இல்லை. ஆனால், அவர் இவருக்கு ஆலோசனை வழங்கவும் இல்லை. அவர் தனது காங்கிரஸ் அனுபவத்தையும், "தமிழக முன்னேற்ற முன்னணி' என்கிற கட்சியைத் தொடங்கி அதனால் எதிர்கொண்ட இழப்புகளையும், அவமானங்களையும் தெரிவித்தபோது, ரஜினி ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட்டார் என்று சொல்லலாம். ரஜினிகாந்த் முடிவெடுத்ததற்கு முக்கியமான காரணம் சிவாஜி கணேசன் என்று ஆர். வெங்கட்ராமனும் பின்னர் ஒருமுறை என்னிடம் தெரிவித்தபோது, அதை நான் உறுதி செய்து கொண்டேன்.

நேரடி அரசியல் இல்லை என்று ரஜினிகாந்த் முடிவு செய்ததற்கு இன்னொரு காரணமும் இருந்தது. தனது அரசியல் முயற்சி திரையுலக வாழ்க்கைக்குப் பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்கிற அச்சம்தான் அது. 

சோ சாரும், மூப்பனாரும் ரஜினிகாந்த் காங்கிரûஸ நேரடியாக ஆதரித்தால் வெற்றிபெற முடியும் என்று நினைத்தார்கள். ஆனால், ரஜினிகாந்த் அப்படி நினைக்கவில்லை. தனிக்கட்சி தொடங்கி ஆர்.எம். வீரப்பன், திருநாவுக்கரசு உள்ளிட்ட அதிமுக அதிருப்தியாளர்கள், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாம் என்கிற ஆலோசனையும் ரஜினிக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கவில்லை.

லாயிட்ஸ் சாலை அரசினர் குடியிருப்பில் இருந்தது மக்களவை உறுப்பினராக இருந்த திண்டிவனம் ராமமூர்த்தியின் வீடு. மூப்பனாரின் மனசாட்சிக் காவலர் என்று சொல்லும் அளவுக்கு அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களில் திண்டிவனம் ராமமூர்த்தியும் ஒருவர். பிள்ளையார் அம்மையப்பனைச் சுற்றி ஞானப்பழம் பெற்றதுபோல, மூப்பனாரிடமும், ரஜினிகாந்திடமும், சோவிடமும் போவதைவிட, திண்டிவனம் ராமமூர்த்தியிடம் போனால் என்னதான்நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம் என்று சென்றேன்.

அந்த நேரம்வரை, நடிகர் ரஜினிகாந்த் எந்தவொரு முடிவும் எடுத்திருக்கவில்லை. அதே நேரத்தில், தனிக்கட்சி தொடங்குவதில்லை என்கிற தீர்மானத்தை மனதளவில் எடுத்திருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். தொடர்ந்து  "துக்ளக்' அலுவலகத்தில் சோ சாரை அவர் சந்தித்துக் கொண்டிருந்தார், அவருடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார், அவ்வளவுதான்.

""மூப்பனார் என்னதான் நினைக்கிறார்? ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா?'' என்கிற கேள்விக்கு வழக்கம்போல, ""அதை நீங்கள் ரஜினிகாந்திடம்தான் கேட்க வேண்டும். என்னிடம் வந்து கேட்டால் எப்படி?'' என்கிற மழுப்பலான பதில்தான் திண்டிவனத்தாரிடமிருந்து கிடைத்தது. 

அரசியல் நிகழ்வுகள் எப்படி இருக்கக்கூடும் என்று எங்கள் பேச்சு நகர்ந்தது. அதிமுக, திமுகவின் பலம், பலவீனம் குறித்துப் பொதுப்படையாகப் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சுவாக்கில் அவர் சொன்ன ஒரு கருத்து என்னை நிமிர்ந்து உட்கார வைத்தது. ஜெயலலிதாவை வலுவான கூட்டணியின் மூலம் எதிர்க்க வேண்டும் என்கிற கருத்தை ரஜினிகாந்த் மூப்பனாரிடம் தெரிவித்ததாக திண்டிவனம் ராமமூர்த்தி தெரிவித்தார்.

""வலுவான கூட்டணி என்றால் எப்படி? காங்கிரஸால் திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள முடியாது. இடதுசாரிக் கட்சிகள், திமுகவிலிருந்து பிரிந்த மதிமுக, காங்கிரஸிலிருந்து பிரிந்த திவாரி காங்கிரஸ் போன்றவையும் அந்தக் கூட்டணியில் சேர முடியாது. மூன்றாவது அணி என்றால் அது மூன்றாவதாக வரும் அணி என்று சோ சார் கூறுவார். ரஜினிகாந்த் குறிப்பிடும் வலுவான கூட்டணி அமைய வாய்ப்பே இல்லையே...'' என்றேன் நான்.

திண்டிவனம் ராமமூர்த்தியும் அதை ஆமோதித்தார். நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது. சென்று பேசினார். அவரது பேச்சிலிருந்து, தில்லியிலிருந்து வந்த அழைப்பு என்பது எனக்குப் புரிந்தது. பேசி முடித்ததும் சிரித்தபடியே வந்து அமர்ந்தார் திண்டிவனம் ராமமூர்த்தி.

""இங்கே நாங்கள் ஜெயலலிதாவை எதிர்க்க வியூகம் அமைத்துக் கொண்டிருக்கிறோம். அங்கே நண்பர் நடராஜன் காங்கிரஸ் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். பூட்டா சிங்கின் உதவியுடன் பிரதமருடன் நடராஜன் ரகசிய சந்திப்பு நடத்தியதாக என்னிடம் தெரிவிக்கிறார் முக்கியமான ஒருவர். அது உண்மையாக இருக்குமானால், இங்கே நாங்கள் நடத்தும் பேச்சுவார்த்தைகள் எல்லாமே அர்த்தமற்றவை.''

""நடராஜன் தில்லியில் இருக்கிறார் என்பது எனக்குத் தெரியும், நான் அவரை அம்பாசிடர் ஹோட்டலில் பார்த்தேன், பேசவில்லை. முதல்வர் ஜெயலலிதாவுடன் மத்திய அமைச்சர் சீதாராம் கேசரி தொடர்பில் இருக்கிறார் என்பதும் எனக்குத் தெரியும்.''

""என்னைவிட நீங்கள்தான் தில்லியைத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்...'' என்று சொல்லிச் சிரித்தார் திண்டிவனம் ராமமூர்த்தி. பிறகு தொடர்ந்தார்- ""இதெல்லாம் தலைவருக்கு (மூப்பனாருக்கு) தெரியாமல் இருக்காது. நடராஜன் என்னதான் முயன்றாலும், இனிமேல் அதிமுக - காங்கிரஸ் இணைந்து செயல்படுவது நடக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. அப்படியே சேர்ந்தாலும் சுமுகமாக இருக்காது...''

""பிரதமர் அழுத்தம் கொடுத்தால், முதல்வர் ஜெயலலிதா இறங்கி வரக்கூடும். டி.டி.வி. தினகரன் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளும், அவர் மீதே மறைமுகமாக நடத்தப்படும் புலன்விசாரணைகளும் ஜெயலலிதாவுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகக்கூட முடுக்கி விடப்பட்டிருக்கலாம்.''

என்னுடைய கருத்தை திண்டிவனத்தார் மறுக்கவில்லை. அவரிடமிருந்து விடைபெற்று லாயிட்ஸ் சாலை அரசினர் குடியிருப்பிலிருந்து நான் வெளியேறி சற்றுநேரம் மெரினா கடற்கரையில் சென்றமர்ந்து அமைதியாகக் காற்று வாங்கிக் கொண்டிருந்தேன். தமிழ்நாடு அரசியல் நகர்வுகள் குறித்துக் கட்டுரை எழுதுவதற்கு எந்தவித செய்தியும் இல்லாத குழப்பத்துடன்  திரும்பினேன்.

அடுத்த நாள் காலையில் தினசரிகளைப் புரட்டிக் கொண்டிருந்தபோது, அதில் ஆளுநர் சென்னா ரெட்டி -முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு குறித்த படமும் செய்தியும் வெளிவந்திருந்தது. அதுவரையில் கீரியும் பாம்புமாக இருந்த ஆளுநரும் முதல்வரும் சகஜமாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் அந்தப் புகைப்படம் எனக்குப் பல செய்திகளைத் தெரிவித்தது. 

ஆளுநர் இறங்கி வந்திருப்பதற்கு மத்திய அரசின் ஆலோசனை காரணமாக இருக்கலாம்; முதல்வர் தனது மனமாச்சரியங்களைக் களைந்து ஆளுநரை சந்தித்திருப்பதற்கு அவருக்குத் தரப்பட்டிருக்கும் அழுத்தங்கள் காரணமாக இருக்கலாம் என்று எனது உள்ளுணர்வு கூறியது. தில்லியில் நடராஜன் மேற்கொண்ட சமரச முயற்சிகளின் வெளிப்பாடாகத்தான் நான் அந்த சந்திப்பைப் பார்த்தேன்.

ஒருபுறம் தமிழக காங்கிரஸில் மட்டுமல்லாமல். அகில இந்திய காங்கிரஸிலும் முக்கிய பங்கு வகிக்கும் ஜி.கே.மூப்பனார், சோ சாருடன் இணைந்து ரஜினிகாந்துடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். இன்னொருபுறம் முதல்வர் ஜெயலலிதா ஆளுநருடன் மோதல் போக்கைக் கைவிட்டு சுமுகமான உறவுக்குத் தயாராகிறார். இந்த முரண் வியப்பாக இருந்தது.

சோ சாரை சந்திக்க துக்ளக் அலுவலகம் சென்றேன். என்னை சந்திப்பதை அவர் தவிர்க்கக்கூடும்  என்று நான் நினைத்தேன். அவர் எந்தவிதப் பரபரப்பும் இல்லாமல் இருந்தது என்னை ஆச்சரியப்படுத்தியது. சோ சார் ஜாலியான கலகலப்பு மூடில் இருந்தார்.

""என்ன சார், தில்லியிலேர்ந்து ஏதாவது ஹாட் நியூஸ் கொண்டு வந்திருக்கேளா?'' என்றபடி அவர் என்னை வரவேற்றார்.

""இந்தியாவே துக்ளக் ஆபீசைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. நீங்க என்னிடம் நியூஸ் கேட்கிறீர்கள்?'' 

""துக்ளக்கில் நோ நியூஸ்... ஒன்லி வ்யூஸ்!'' என்று சொல்லிச் சிரித்தார். ""சொல்லுங்கோ சார், கவர்னர் - ஜெயலலிதா சமரசமாயிட்டாளா?''

""சார், நீங்கதான் சென்னா ரெட்டி, ஜெயலலிதா இரண்டு பேருக்குமே ஃபிரண்ட். உங்களுக்குத் தெரியாதது எனக்கு எப்படி சார் தெரியும்? ரஜினிகாந்த் காங்கிரஸ் கூட்டணி வருமா, வராதா?''

""நிஜமாவே எனக்கு எதுவும் தெரியாது சார். நரசிம்மராவ் கிட்ட ரஜினிகாந்தைப் பிரயோஜனப் படுத்திக்கச் சொன்னேன். ஜெயலலிதாவை எதிர்க்க காங்கிரûஸச் சேர்த்துக்க ரஜினிகாந்திடம்  சொன்னேன். இது ரெண்டுமே அவா கேட்டதால சொன்னேன். நானா போய் யாருக்கும் எந்த ஆலோசனையும் சொல்றது கிடையாது.''

""அது சரி சார், காங்கிரஸ் - ரஜினிகாந்த் அலையன்ஸ் வருமா?''

""தெரியாது சார். பிரைம் மினிஸ்டர் நரசிம்ம ராவ் என்ன நினைக்கிறார்னு  எனக்குத் தெரியாது. யாருக்குமே தெரியாது. அவர்மேல எனக்கு என்னவோ நம்பிக்கையே வரமாட்டேங்கிறது. ஜெயலலிதாகூட அவர் அலையன்ஸ் வைச்சுக்க மாட்டார்னு என்னால சொல்ல முடியலை. திமுகவோட அவரால் அலையன்ஸ் வைச்சுக்க முடியாது. அதை ஒருநாளும் சோனியா காந்தி அனுமதிக்க மாட்டா. அது மட்டும் நிச்சயம்.''

""காங்கிரஸ் - ஜெயலலிதா அலையன்ஸ் வந்தா ரஜினிகாந்த் என்ன பண்ணுவார்?''

"'என்ன சார் கேள்வி இது, அவர் என்ன அரசியல் கட்சியா நடத்தறார் அதைப்பற்றி கவலைப்பட? வழக்கம்போல நடிக்கப் போவார் சார் அவர். அவருக்கு என்ன சார் தலையெழுத்து அரசியலுக்கு வரணும்னு...''

""அப்ப ரஜினி அரசியலுக்கு வரமாட்டாரா?''

""நான் அப்படிச் சொன்னேனா, நீங்களாகவே ஏன் சார் கற்பனை பண்ணிக்கறேள்? எந்த முடிவெடுத்தாலும் ரஜினி தெளிவா முடிவெடுப்பார்ங்கறது என்னோட அபிப்பிராயம். அவர் மனதில் ஏதோ திட்டம் வைத்திருக்கிறார். ஜெயலலிதா, காங்கிரஸ், திமுக எல்லாம் என்ன பண்றதுன்னு அவர் வாட்ச் பன்றார்.''

""உங்ககிட்ட எதுவும் சொல்லலியா?''

""சொன்னார், ஆனால் அதை நான் உங்ககிட்ட சொல்ல மாட்டேன். ஏன் சொல்லணும்? நான் சொல்ல மாட்டேங்கிறதுனாலேதானே அவர் எங்கிட்ட சொன்னார். உங்ககிட்ட மட்டும் அதை ரகசியமாகச் சொல்றேன்.''

""என்ன சார் அது?''

""அவர் எங்கிட்ட ஒண்ணுமே சொல்லலை.''

என்னை வேண்டுமென்றே கிண்டலடித்து டபாய்க்கிறார் அவர் என்பது எனக்குப் புரிந்தது.

சிரித்தபடி நகைச்சுவையாக சோ சார் என்னிடம் எதுவும் சொல்லாமல் தட்டிக் கழித்தார் என்றாலும், ரஜினிகாந்த் ஒரு தீர்மானத்துக்கு வந்திருந்தார் என்பதை அடுத்தடுத்த நிகழ்வுகள் வெளிப்படுத்தின.

(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தொண்டர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்த ராகுல்!

வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் செய்தியில் உண்மையில்லை: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பஅலை வீசும்!

பிட்காயின் மோசடி: ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

SCROLL FOR NEXT