தினமணி கதிர்

மகா பெரியவரின் மகிமை..!

செளமியா சுப்ரமணியன்

காஞ்சியில் வசித்து வந்த அபீத் என்ற சிறுவன்,  மகா பெரியவர் மீது அளவு கடந்த அன்பு இருந்தது.  மடத்தில் நடைபெறும் சந்திர மெளலீச்வர பூஜைக்காக சிறுவன் ஆர்வத்துடன் கொன்றை மலர்கள் பறித்து வந்து கொடுப்பான். இதனால் மடத்தைச் சேர்ந்த அன்பர்கள் அவனை "கொன்னை அபீத்' என்றே அழைப்பர்.

மகா பெரியவரும் அவ்வப்போது சிறுவனுக்குப் பழங்களும் கல்கண்டும் தந்து ஆசீர்வதிப்பார். 

இந்த நிலையில் கொன்னை அபீத்தின் தந்தைக்கு பணியிட மாறுதல் உத்தரவு வந்ததால்,  அவர்கள் குடும்பம் காஞ்சியைவிட்டு இடம் பெயர வேண்டிய சூழ்நிலை. "இனி மடத்துப் பூஜைக்குப் பூக்கள் பறித்துத் தர முடியாது' என்ற வருத்தம் அபீத்தை வாட்டியது.

ஊரைவிட்டுக் கிளம்ப வேண்டிய நாளும் வந்தது.  வழக்கம்போல அன்றைய தினமும் மலர்களைப் பறித்துப் பூக்குடலையில் எடுத்துக் கொண்டு மடத்துக்கு வந்தான் அபீத். எப்படியாவது மகா பெரியவரை நேரில் பார்த்து, ஊரை விட்டுக் கிளம்பும் செய்தியை அவருக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பது அவனது ஆசை. ஆனால் அன்று மடத்துக்குள் நுழைய முடியவில்லை. காரணம், மடத்தில் ஒரு வித்வத் ஸதஸ் நடைபெற்றது.  பெரியவரைத் தூரத்தில் இருந்தாவது பார்த்துவிட்டுச் செல்லலாம் என்றால் அதற்கும் வழியில்லை. சின்னஞ்சிறுவனான அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

இப்படியே சில நிமிடங்கள் நகர்ந்தன.

ஸதஸில் அமர்ந்திருந்த பெரியவா திடீரென மடத்து ஊழியர் ஒருவரை அழைத்து,  ""ஸதஸில் பங்குபெறும் அனைவரையும் வழிவிட்டு உட்காரச் சொல்லு. வாசலில் பூக்குடலையுடன் ஒரு பையன் நின்றுகொண்டிருக்கிறான். அவனை உள்ளே வரச்சொல்லு'' என்று உத்தரவிட்டார்.

ஸதஸில் அமர்ந்திருந்தவர்கள் நகர்ந்து அமர, சபையின் நடுவே நடைபாதை உருவானது. வெளியே பூக்குடலையுடன் நின்று கொண்டிருந்த அபீத்திடம் வந்த ஊழியர் அவனைப் பெரியவர் அழைப்பதாகத் தெரிவித்தார். மிகுந்த கூச்சத்துடன் மடத்தின் உள்ளே நுழைந்த அபீத், பூக்குடலையைப் பெரியவரின் பக்கத்தில் வைத்துவிட்டு ஓரமாக ஒதுங்கி நின்றான்.

கருணையே வடிவெடுத்த பெரியவரின் கண்கள் கொன்னை அபீத்தின்மீது பதிந்தன. மெதுவாக,  பூக்குடலைக்குள் கையை விட்ட பெரியவர் கைநிறையப் பூக்களை அள்ளினார். அபீத்தைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே,

""எனக்கோசரம்தானே கொண்டு வந்தே (எனக்காகத்தானே கொண்டுவந்தாய்)!'' என்று சொல்லியவாறே அந்தப் பூக்களைத் தனது தலைமீது அபிஷேகம் செய்துகொண்டார்.  ஸதஸில் இருந்த அனைவரும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க, மகா பெரியவரோ மீண்டும் மீண்டும் "எனக்கோசரம்தானே கொண்டு வந்தே' என்று சொல்லிப் பூக்களை அள்ளி அள்ளி, தலையில் சொரிந்து கொண்டார்.

மிதமிஞ்சிய உணர்ச்சிப் பெருக்கில் இருந்த அபீத்தின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. சபையெங்கும் "ஹரஹர சங்கர ஜயஜய சங்கர' கோஷம் ஒலித்தது.

நடமாடும் தெய்வமான மகா பெரியவர்  தனது நூறாண்டு ஜீவிதத்தில், அன்பர்களுக்கு எத்தனை எத்தனையோ விதங்களில் அனுக்கிரகம் செய்திருக்கிறார்.  ஆனாலும், மகா பெரியவர் கொன்றை மலர்களைத் தனது தலை வழியே அபிஷேகம் செய்துகொண்ட இந்தச் சம்பவம் மிகவும் விதிவிலக்கான ஒன்று.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT