தினமணி கதிர்

இரண்டு துருவங்களுடன் பயணித்த ஆரூர்தாஸ்!

பிஸ்மி பரிணாமன்


அண்ணா, கருணாநிதி, இளங்கோவன், கொத்தமங்கலம் சுப்பு, ஏ.பி.நாகராஜன், சி.வி.ஸ்ரீதர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் என்ற மிகப் பெரிய ஆளுமைகள் திரைக்கதை வசன உலகில் ஆட்சி செய்தபோது திரையுலகை எட்டிப் பார்த்தவர் ஆரூர்தாஸ். இலகு தமிழில் பேசும் படம் உருவான 1931-ஆம் ஆண்டுதான் ஆரூர்தாஸ் திருவாரூரில் பிறந்தார்.

ஆயிரம் படங்களுக்கு வசனம் எழுதியவர் என்று பெயரெடுத்தவர்; ஒரே நேரத்தில் சிவாஜிக்கும் எம்ஜிஆருக்கும் வசனம் எழுதிய பெருமையும் உண்டு.
"அந்திவானச் சிவப்பு உன் அதரங்களில் பிரதிபலிப்பதை , நீலக்கடலாம். உன் நீள விழிகளில் உன் உருவம் நிழலாடுவதை...வாலிபத்தின் வனப்பை நான் வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்' என்ற வசனத்தை ஜெமினி கணேசனுக்காக ஆரூர்தாஸ் எழுதினார். இது ஜெமினிக்குப் பிடித்துப் போய் ஆரூர்தாûஸப் பார்க்கும்போதெல்லாம் இந்த வசனத்தை நினைவு கூர்வார்.

காதலியாக இருந்த முறைப்பெண் மனைவியான சந்தோஷத்தில் ஆரூர்தாஸ் இந்த வசனத்தை எழுத, சாவித்திரியின் மீது காதல் துளிர்விட்டிருந்த காலகட்டத்தில் ஜெமினிக்காக எழுதிய வசனம் சாவித்திரியின் நினைவாக ஜெமினியின் இதயத்தில் தங்கியது.

ஆரூர்தாஸின் துவக்கம் நாடகத்தில்தான் துவங்கியது. பள்ளிப் படிப்பு முடிந்ததும், கருணாநிதியின் "சாந்தா' அல்லது " பழனியப்பன்' , "தூக்குமேடை', "மந்திரிகுமாரி' தாக்கத்தின் காரணமாக, முதன் முதலாக நண்பர்களுடன் இணைந்து "ஜென்ம தண்டனை' என்ற நாடகத்தை எழுதி மேடை ஏற்றினார். அப்போது, அவர் ஜேசுதாஸ் என்று பெற்றோர் இட்ட பெயரை "ஜேசு' என்று சுருக்கிக் கொண்டார்.

திருவாரூர் திரை அரங்குகளில் நாடகத்தின் விளம்பர சிலைடுகளில் "கதை வசனம் : ஜேசு' என்பதைக் கண்ட புளகாங்கிதத்தில், ஒரு கையில் தகர டப்பாவில் நீர் கலந்த சுண்ணாம்பு. தென்னை மட்டையில் செய்த பிரஷ் இன்னொரு கையில் என எடுத்துக் கொண்டு திருவாரூர் கமலாலயம் திருக்குளத்தைச் சுற்றியுள்ள நான்கு கரையிலும் மண்டபங்களின் சுவர்களில், தன் பெயரை பெரிதாக எழுதி நாடகத்துக்கும் தனக்கும் விளம்பரம் செய்து கொண்டார்.

அடுத்த நாடகமான "திரிசூலம்' ஜேசுவுக்கு திருவாரூர் வட்டாரத்தில் பெயர் வாங்கிக் கொடுத்தது. வசனம் எழுதும் திறமையுள்ள ஜேசுவுக்கு உதவ வேண்டும் என்பதற்காக நாடக ஆசிரியர் "சோமு அண்ணன்' திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த "அயன் ராஜபார்ட்' என். பி.முருகப்பா என்பவரிடம் ஜேசுவை அறிமுகம் செய்து வைத்து திரைப்படங்களுக்கு வசனம் எழுத வாய்ப்புகள் பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டார்.

முருகப்பா தனது பங்குக்கு சென்னையில் அப்போது திரைப்பட உலகில் பிரபலமாக இருந்த தஞ்சை ராமையாதாஸிடம் ஜேசுவை அறிமுகம் செய்து வைத்தார்கள். ஆனால் அவரோ தேவைப்படும்போது அழைத்துக் கொள்கிறேன் என்று ஜேசுவை அனுப்பிவைத்தார்.

அதற்குள் ஜேசுவிற்கு தான் காதலித்து வந்த அத்தைப் பெண்ணான லூர்துமேரி என்ற பேபியை 1954 -ஆம் ஆண்டு ஏப்ரல் 27-இல் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு ஆனது. ஜேசுவின் கையில் அப்போது பணம் இல்லை. ஜேசுவின் வாடகை வீட்டு உரிமையாளரான ஜி. சங்கரமூர்த்தியிடம் ஜேசு கையைப் பிசைந்து கொண்டே விஷயத்தைச் சொல்ல , " என் கையிலும் பணம் இல்லை. ஆனா நகை இருக்கு. அதை தர்றேன். பேங்க்குல அடகு வச்சு பணம் வாங்கி கல்யாணத்தை நடத்து' என்று சொல்லி வீட்டிலிருந்த நகைகளை ஜேசுவிடம் ஒப்படைத்தார். ஜேசு இம்பீரியல் பேங்க்கில் (ஸ்டேட் பேங்க்கின் அந்தக் காலத்துப் பெயர்) நகையை அடகு வைத்து பணம் பெற்று திருமணத்தை நடத்தினார்.

திருமணம் ஆன பிறகு விஷயம் தெரிந்ததும் "என்னைக் கட்டிக்கணுங்கிறதுக்குத்தானே நீங்க இன்னொருத்தர் நகையை அடகு வச்சீங்க... அதான் நான் உங்க மனைவியாயிட்டேனே.. நகை கொடுத்தவர் நகையைக் கேட்கிறதுக்கு முந்தி நாம கொடுத்துட்டா நல்லாயிருக்கும்' என்று போட்டிருந்த நகைகளைக் கழற்றிக் கொடுக்க... அவற்றை அடகு வைத்து ... சங்கரமூர்த்தியின் நகைகளை ஜேசு திரும்ப ஒப்படைத்தார்.

பேபிக்கு உள்ளூரில் ஆசிரியை வேலை அறுபது ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைக்க தாஸின் குடும்பமே அதில்தான் கழிந்தது. இதுபோன்ற சம்பவங்கள்தான் அவரது திரைக்கதைக்கு, அழுத்தமான வசனங்களுக்கு அடித்தளமாக அமைந்தன.

பேபி முதல் குழந்தைக்கு கருவுற்றபோது தஞ்சை ராமையாதாஸிடமிருந்து "உடனே சென்னைக்குப் புறப்பட்டு வா' என்ற கடிதம் வந்தது. சென்னை சென்ற ஜேசுவை ராமையாதாஸ் "ரேச்சுகா' தெலுங்குப் படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து கொண்டிருந்த கல்யாணராமய்யர் என்பவரிடம் சாப்பாட்டுடன் மாதம் ஐம்பது ரூபாய் சம்பளத்தில் சேர்த்துவிட்டார். டப்பிங் வசனங்களை ராமையாதாஸ் எழுத... அதன் சூட்சுமத்தை ஜேசு கச்சிதமாகப் பிடித்துக் கொண்டார்.

"ரேச்சுகா' தமிழில் தயாரிக்கப்பட்ட படம் போல அத்தனை நேர்த்தியுடன் "நாட்டியதாரா' என்ற பெயருடன் வெளியானாலும், ஜேசுவுக்கு " சினிமா அரிச்சுவடிப் பாடமாக' அமைந்தது. சீக்கிரமே தமிழில் மொழிமாற்றம் செய்யப்படும் படங்களுக்கு ராமையாதாஸ் ஆசியுடன் வசனங்களை எழுத ஆரம்பித்தார்.

ஒருநாள் "தாஸூ. எனக்கு சுவாமி சங்கரதாஸ்தான் மானசீக குரு. அதனாலதான் ராமையா பேரோட "தாஸ்'சுங்குற ரெண்டு எழுத்தை சேர்த்துக்கிட்டேன். எனக்கு தஞ்சாவூரு. ஒனக்கு திருவாரூரு. அதனால ஆரூர்தாஸூன்னு பேரை மாத்தி வச்சுக்கோ. நல்லா வருவே' என்று "தொழில் குரு' ராமையாதாஸ் சொல்ல, தாஸ்,ஆரூர்தாஸ் ஆனார்.

டப்பிங் தொழிலில் வருமானம் இருந்தாலும், ஆரூர்தாஸ் மனம் அந்த மொழிமாற்றத் தொழிலில் ஈடுபாடில்லை. சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர்தான் ஆரூர்தாûஸ திரைக்கதை ஆசிரியர்- வசனகர்த்தாவாக "வாழ வைத்த தெய்வம்' படம் மூலம் அறிமுகம் செய்துவைத்தவர்.

இடையில் "படித்த பெண்' படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பும் வந்தது. அதற்குச் சன்மானமாக கிடைத்தது வெறும் ஐந்து ரூபாய். அந்த காலகட்டடத்தில் ஒரு பாடல் எழுத 300 ரூபாய் கொடுப்பார்கள். தனக்கு 100 ரூவாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்த ஆரூர்தாஸ் உள்ளுக்குள் நொறுங்கிப் போனார்.

திரைக்கதை - வசனகர்த்தா என்ற பெயரில் ஆரூர்தாஸூக்கு ஜெமினி கணேசனின் அறிமுகம் கிடைத்தது. ஜெமினி "பாசமலர்' படத்திற்கு வசனம் எழுத ஆரூர்தாûஸ பரிந்துரை செய்ய, அண்ணன் - தங்கை பாச இறுக்கத்தை தனது வசனங்களில் ஆரூர் உணர்ச்சிபூர்வமாக வார்த்திருந்தார் .

அந்தக் காட்சியில் சிவாஜி , ராதா... ஒனக்கு அப்போ அஞ்சு வயசு... எப்போ பார்த்தாலும் அம்மாவை நினைச்சி அழுதுகிட்டு இருப்பே... ஒன்ன மடியிலே வச்சிக்கிட்டு நான் பாடுவேன்.

""கை வீசம்மா கை வீசு...
கடைக்குப் போகலாம் கைவீசு...
மிட்டாய் வாங்கலாம் கை வீசு...
மெதுவா... '

அதுக்கு மேல பேச முடியாமல் சிவாஜி குமுறி குமுறி அழுவார். இந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது, படப்பிடிப்பில் இருந்த அனைவருமே அழுதனர். வசனம் எழுதிய ஆரூரும் அழுகையில் உடைந்தார். இயக்குநர் பீம்சிங்கோ பொங்கிப் பொங்கி அழுதார். ஒருவர் அழுவதை பார்த்து இன்னொருவர் அழுதபடி உறைந்து நிற்க, அந்த சோக இறுக்கம் குறைய தளர.. அனைவருக்கும் வெகு நேரம் பிடித்தது.

இந்தக் காட்சியில் எல்லா தமிழர்களையும் ஆரூர்தாஸ் அழவைத்தவர். நெகிழ வைத்தவர். இன்றைக்கும் அந்தக் காட்சியைப் பார்ப்பவர்கள் கண் கலங்கவே செய்வர்.

ஜெமினி கணேசனின் பரிந்துரை தாஸூக்கு சிவாஜி கணேசனின் , இயக்குநர் பீம்சிங்கின் அன்பையும் அரவணைப்பையும் பெற்றுத் தந்தது. தொடர்ந்து 28 சிவாஜி படங்கள் , 14 எம்ஜிஆர் படங்கள் உட்பட ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதி இரண்டு துருவங்களுடன் பயணித்தவர், ஆரூர்தாஸ். கண்ணாம்பா தொடங்கி பானுமதி, சாவித்திரி, செளகார் ஜானகி, விஜயநிர்மலா, கே.ஆர்.விஜயா சொந்தமாகத் தயாரித்த படங்களுக்கும் அரூர் கதை வசனம் எழுதியிருக்கிறார்.

ஆரூர்தாசுக்குப் பிடித்த அவரது வசனங்கள் "வீரத் திருமகன்' படத்தில் இடம் பெற்றுள்ளன:

""தேவையில்லாத கேள்விகளை நீ கேட்காமல் இருந்தால் , அநாவசியமான பொய்களை நான் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது.''

""ஊமையன் வளர்த்த கிளி , பேசத் தெரிந்தவனிடம் ஓடிவிட்டது.''

ஒரே ஒரு பாடல் எழுதிய ஆரூர்தாஸ் "பெண் என்றால் பெண்' என்ற படத்தை எழுதி இயக்கினார். படம் தோல்வியடைந்தது.

வசனம் எழுத தினமும் இருபது மணி நேரம் ஒதுக்கிய ஆரூர் பல சமயங்களில் தயாரிப்பாளர்கள் ஏற்பாடு செய்யும் இடத்தில் பல நாள்கள் தங்கி எழுதிக் கொடுப்பார். நடிகர் பாலாஜியிடம் கிட்டத்தட்ட அன்பான வீட்டுக் கைதியாக ஆஸ்தான வசனகர்த்தாவாக பாலாஜி வீட்டில் பல நாள்கள் எல்லா வசதிகளுடன் வாழ்ந்தார்.

ஒருமுறை ஆரூரின் மனைவி பேபி தொலைபேசியில் அழைத்து " வீடு, வாசல், பொண்டாட்டி, புள்ளைங்கள மறந்திட்டு பாலாஜிக்கிட்டே கெடக்குறீங்களே..." என்ற விசனப்பட, இதைக் கேட்ட பாலாஜி "இங்கே இன்னொரு பொண்டாட்டி இருக்கிறா? அவளை விட்டுட்டு வர முடியாதுன்னு சொல்லுங்க '' என்ற பாலாஜி கேலி செய்தார்.

திரைப்படங்களைத் தாண்டி ஆரூர்தாஸ் குறள் அகராதி ஒன்றினையும், தனது அனுபவங்களை பல நூல்கள் மூலம் எழுதி வைத்திருக்கிறார்.

"திருவாரூர் முதல் சென்னை வரை' பயணத்தில் தனக்கு உதவிய அனைவரையும் மறக்காமல் தனது சுயசரிதையான "ஒரு கதை வசனகர்த்தாவின் கதை'யில் மறக்காமல் குறிப்பிட்டு தனது நன்றிகளை அழுத்தமாகப் பதிவு செய்தவர் ஆரூர்தாஸ்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

SCROLL FOR NEXT