தினமணி கதிர்

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 115

வரவேற்பறையிலும், வாசலில் உள்ள புல்வெளியிலும், அதையொட்டி அமைந்த அலுவலக அறையிலும் அவரைச் சந்திக்க  வந்திருந்தவர்களைப்  பார்க்க நகர்ந்து விட்டார் ஆர்.கே. தவாண்.

தில்லியில் தலைவர்களை சந்திக்க வரும் தொண்டர்களையும், பார்வையாளர்களையும் அவர்களது அணுகுமுறைகளையும் வேடிக்கை பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

அவர்கள் கலைந்து செல்வதற்குள் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நகர்ந்துவிட்டது. தவாண்ஜி சற்று சாவகாசமாக உள்ளே வந்து வரவேற்பறையில் அமர்ந்தார். அங்கே அவருக்காகக் காத்துக் கொண்டிருந்த நான் உள்ளிட்ட ஒருசிலரை அமரச் சொன்னார். சற்று நேரம் தலைநகர் அரசியலும், காங்கிரஸ் கட்சி அரசியலும் பேசினார்கள். பிறகு என்னிடம் திரும்பினார் ஆர்.கே. தவாண்.

"ரஜினிகாந்தை மட்டுமே நம்பி காங்கிரஸ் தமிழகத்தில் தனித்து போட்டியிட்டால் ஆட்சியைப் பிடிக்க முடியுமா?''

இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. நான் சற்று திகைத்துத்தான் போனேன்.

"எம்.ஜி.ஆர்.போல அவர் தனிக்கட்சி தொடங்கி, அந்தக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்து போட்டியிட்டால், வெற்றிபெற வாய்ப்புண்டு. அந்தக் கூட்டணியில் எம்.ஜி.ஆருடன் சேர்ந்ததுபோல இப்போது ரஜினிகாந்துடன் இடதுசாரிக் கட்சிகள் சேருமா என்பது எனக்கு சந்தேகம்தான்.''

"ஏன் அப்படி நினைக்கிறாய்?''

"உலகமயம், பொருளாதார சீர்திருத்தம் போன்றவற்றை எதிர்க்கும் இடதுசாரிக் கட்சிகள், காங்கிரஸ் உள்ள கூட்டணியில் எப்படி சேர முடியும்?''

"அப்படியானால் அது யாருக்கு சாதகமாக அமையும்?''

"ஜெயலலிதா மீதும், அதிமுக ஆட்சி மீதும் பரவலாக அதிருப்தி இருப்பது என்னவோ உண்மை. ஆனால், அதிமுக பலவீனமாக இருக்கிறது என்று நான் நினைக்கவில்லை. திமுகவும் சரி, திவாரி காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளை இணைத்துக் கூட்டணி அமைத்திருக்கிறது. அந்தக் கூட்டணிக்கும் வலுவான கட்டமைப்பு உண்டு. ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் எழுச்சி ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. அந்த எழுச்சியை காங்கிரஸ், அதிமுக அதிருப்தியாளர்கள் துணையோடு வாக்குகளாக அவரால் மாற்ற முடியுமா என்பதை இப்போதே சொல்ல முடியாது.''

நான் சொல்வதை எல்லாம் என்னைக் கூர்ந்து கவனித்தபடி அவர் கவனமாகக் கேட்டுக் கொண்டார்.

"உனக்கு ரஜினிகாந்திடம் நெருக்கமான நட்போ, பழக்கமோ உண்டா?''

"இல்லை. நடிகர் என்கிற முறையில் பார்த்திருக்கிறேன். ஓரிருமுறை சந்தித்திருக்கிறேன். அதற்கு மேல் அவருடன் எனக்கு எந்த நெருக்கமும் கிடையாது.''

"அவருக்கு மக்கள் செல்வாக்கு உண்டு என்று நீ நம்புகிறாயா?''

"அதில் என்ன சந்தேகம்? மக்கள் செல்வாக்கு இருக்கிறதோ இல்லையோ, எம்.ஜி.ஆருக்கு நிகரான ரசிகர் செல்வாக்கு அவருக்கு உண்டு. அவருக்கு மிகவும் நெருங்கிய இரண்டு இயக்குநர்கள் ராஜசேகரும், மகேந்திரனும். அவர்கள் இருவருமே எனக்கு நெருங்கிய நண்பர்கள். ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றுதான் நான் நினைக்கிறேன்.''

சற்று நேரம் அமைதியாக இருந்த ஆர்.கே. தவாண் மிகவும் தெளிவாகத் தனது கருத்தைச் சொன்னார் - "எனக்கென்னவோ அவர் மீது நம்பிக்கை வரவில்லை. பிரதமருக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்.''

அப்போது ஆர்.கே. தவாண், நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறையின் இணையமைச்சராக தனிப்பொறுப்பு ஏற்றிருந்தார். பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் இடையில் பாலமாக செயல்பட்டது மட்டுமல்ல, பிரதமரின் அந்தரங்க ஆலோசகர்களில் ஒருவராகவும் வலம் வந்து கொண்டிருந்தார்.

"பிரதமர் என்னதான் சொல்கிறார்?''

"அதையெல்லாம் நான் உன்னிடம் பகிர்ந்து கொள்ள முடியாது. மூப்பனார்ஜிக்கு ரஜினிகாந்திடம் இருக்கும் நம்பிக்கை,  எங்களுக்கு ஏற்படவில்லை.''

அதற்கு மேல் அவர் எதுவும் சொல்லாமல் எழுந்துவிட்டார். நானும் வேறு வழியில்லாமல் விடைபெற்று நகர்ந்தேன்.

அருகிலுள்ள அம்பாசிடர் ஹோட்டலில் உள்ள தென்னிந்திய உணவகத்தில் சாப்பிடலாம் என்று போனபோது அங்கே சில அதிமுக எம்.பி.க்களுடன் அமர்ந்திருந்தார் ம. நடராஜன். 

சாதாரணமாக, ம. நடராஜன் தில்லி வரும் விவரம் எனக்கு முன்கூட்டியே தெரிந்துவிடும். எங்கள் இருவருக்கும் பொதுவான சில நண்பர்கள் உண்டு. அவர்கள்தான், அவர் தில்லி வரும்போது விமான நிலையத்திலிருந்து வரவேற்று அழைத்து வருவதும், தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்வதும் வழக்கம். அவர் வந்த விவரம் எனக்குத் தெரியவில்லை என்பது மட்டுமல்ல, அவரும் என்னைத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை.

பார்த்ததும் "வாங்க... வாங்க...' என்கிற அழைப்போ, முகமலர்ச்சியோ அவரிடம் இருக்கவில்லை. வழக்கத்துக்கு மாறாக, என்னைப் பார்த்தும் பார்க்காததுபோல இருந்ததும், உடனிருந்தவர்களுடன் பேசிக் கொண்டிருந்ததும், அந்த இடத்தில் அவர் என்னை சந்திக்க விரும்பவில்லை என்பதை எனக்கு உணர்த்தியது. நான் சற்று தள்ளி அவரது பார்வை படாத இடத்தில் சென்று அமர்ந்து கொண்டேன்.

அப்போது இன்னொரு எதிர்பாராத ஆச்சரியம் நடந்தது. தனியாக அமர்ந்து உணவு அருந்தத் தொடங்கிய என்னை நோக்கி இருவர் வந்தனர். எனது மேஜையில் எதிர்புறமாக அவர்கள் அமர்ந்து கொண்டனர். அவர்கள் இருவருமே தமிழர்கள் என்பது பார்த்ததும் தெரிந்தது.

என்னைப் பார்த்துப் புன்னகைத்தபடி, அவர்கள் எழுப்பிய முதல் கேள்வி - 
"உங்களுக்கு நடராஜன் சாரைத் தெரியாதா? அவரை சந்திக்காமல் நீங்கள் ஏன் தனியாக வந்து உட்கார்ந்து விட்டீர்கள்?''

"எந்த நடராஜன் சார்? நான் தனியாகத்தான் சாப்பிட வந்திருக்கிறேன்...''

"உங்களை எங்களுக்குத் தெரியும். அந்தப் பக்கம் அதிமுக எம்.பி.க்கள் சிலருடன் ம. நடராஜன் உணவருந்திக் கொண்டிருக்கிறார். நீங்கள் அவரையும், அவர் உங்களையும் பார்த்ததை நாங்கள் கவனித்துக் கொண்டுதான் இருந்தோம். ஒருவரை ஒருவர் பார்த்தும் பார்க்காததுபோல நீங்கள் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது...''

அவர்களது பேச்சு எனக்கு எரிச்சலூட்டியது. யாரோ சிலர் நம்மைக் கண்காணிக்கிறார்கள், வேவு பார்க்கிறார்கள் என்கிற உணர்வுபோல எரிச்சலூட்டும் உணர்வு வேறு எதுவும் இருக்க முடியாது.

"நீங்கள் யார்?  உங்களுக்கு என்ன வேண்டும்?'' - நான் சற்று கோபமாகவே கேட்டேன்.

"கோபித்துக் கொள்ளாதீர்கள். நாங்கள் தமிழக காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்கிற உண்மையை உங்களிடம் மறைக்க விரும்பவில்லை. ரஜினிகாந்த் - பிரதமர் சந்திப்பு பற்றியும், காங்கிரஸூடன் ரஜினிகாந்த் கூட்டு வைத்துக் கொள்வாரா என்பது குறித்தும் தெரிந்து கொள்ளத்தான் உங்களை அணுகி இருக்கிறோம்.''

"நீங்கள் என்னைப் பின்தொடர்ந்து வந்தீர்களா இல்லை நடராஜனைக் கண்
காணிக்க வந்தீர்களா, அதை முதலில் சொல்லுங்கள்.''

"நடராஜன் சார் யார் யாரை சந்திக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டால், அவர்கள் மூலம் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். அதனால்தான் அவரைப் பின் தொடர்கிறோம். வந்த இடத்தில் நீங்கள் கண்ணில் பட்டீர்கள், அவ்வளவுதான்.''

"நானும் உங்களைப் போலத்தான். ரஜினிகாந்த் - பிரதமர் சந்திப்பு குறித்துத் தெரிந்து கொள்ளத்தான் அங்கே இங்கே அலைந்து கொண்டிருக்கிறேன். பலரைச் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.''

"உங்களுக்குக் கிடைத்த தகவல்களை எங்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாதா?''

"இதுவரை எதுவும் திட்டவட்டமாகத் தெரியவில்லை. இரண்டு தரப்பும் எந்த முடிவுக்கும் வரவில்லை என்பதுதான் எனக்குத் தெரிந்த தகவல்.''

சாப்பிட்டு விட்டுக் கைகழுவ நான் நகர்ந்தபோது, ம. நடராஜன் குழுவினர் இருந்த மேஜையை நோட்டம் விட்டேன். அவர்கள் அங்கிருந்து போயிருந்தனர்.

நான் எனது மேஜைக்குத் திரும்பி வந்தபோது, அந்த உளவுத்துறை அதிகாரிகள் இருவரும் என்னிடம் முன்வைத்த வேண்டுகோள் - "நாங்கள் உங்களுடன் தொடர்பில் இருக்க அனுமதியுங்கள். உங்களுக்குத் தெரிந்த தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.''

எனது அலுவலக முகவரியையும், தொலைபேசி எண்ணையும் அவர்களிடம் தந்துவிட்டு நகர்ந்தேன்.

பிரதமருக்கும் ரஜினிகாந்துக்கும் இடையே தனிப்பட்ட முறையில் நடந்த உரையாடல் என்ன என்பது குறித்துப் பிறர் சொல்லித் தெரிந்து கொண்டதிலிருந்து, நான் ஊகித்ததை பலரிடம் பேசி மறு ஊர்ஜிதம் செய்து கொண்டேன்.

முக்கியமாக, ரஜினிகாந்த் நேரடியாகக் கட்சியில் இணைய வேண்டும் அல்லது காங்கிரஸூக்கு ஆதரவாக நேரடிப் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்கிற பிரதமர் நரசிம்ம ராவின் கோரிக்கையை அவர் ஏற்பதாக இல்லை. காங்கிரஸூக்கு ஆதரவாக அறிக்கை அளிப்பதாகத் தெரிவித்ததில் பிரதமருக்குக் கடும் அதிருப்தி.

பாபர் மசூதி பிரச்னையிலேயே, பெரும்பான்மை பலம் பெற்றிருந்த கல்யாண் சிங் தலைமையிலான உத்தர பிரதேச பாஜக அரசைக் கலைக்காத நிலையில், ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அதிமுக அரசைக் கலைக்கப் பிரதமர் நரசிம்ம ராவ் தயாராக இல்லை. அது ரஜினிகாந்துக்கு அதிருப்தி.

"மீண்டும் சந்திப்போம்' என்று கூறி அவர்கள் பிரிந்தனர் என்பதுதான் நான் தெரிந்து கொண்ட தகவல். ஆனால், ரஜினிகாந்தை நம்பி எந்த முடிவையும் எடுத்துவிட வேண்டாம் என்று பிரதமர் நரசிம்ம ராவைப் பலர் எச்சரித்திருந்தனர். 

அதிமுக சார்பில் பிரதமருக்கு அழுத்தம் கொடுக்க மத்திய அமைச்சரவையிலும், நாடாளுமன்றத்திலும் பலர் இருந்தனர். சமூக நலத்துறை அமைச்சரான சீதாராம் கேசரி, முதல்வர் ஜெயலலிதாவுடன் நேரடித் தொடர்பில் இருந்தார். பிரதமருக்கு அழுத்தம் கொடுத்தவர்களில் அவர் முக்கியமானவர்.

திமுக தரப்பில், அதிமுக அளவுக்கு செல்வாக்கு செலுத்தும் நிலையில் யாரும் இருக்கவில்லை. முரசொலி மாறனின் மாநிலங்களவை பதவிக்காலம் முடிந்திருந்தது. வை. கோபால்சாமி கட்சியிலிருந்து விலகி மறுமலர்ச்சி திமுக தொடங்கி இருந்தார். மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த மிசா கணேசன் உள்ளிட்டவர்களுக்கு, பிரதமரிடமோ, மூத்த அமைச்சர்களிடமோ செல்வாக்கு செலுத்தும் வகையிலான தொடர்பு கிடையாது. 

ஜி.கே. மூப்பனாருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தாலும், திமுக தலைவர் மு. கருணாநிதியிடம் நட்பும் தொடர்பும் வைத்துக் கொண்டிருந்தவர் புதுவையின் முன்னாள் முதல்வராக இருந்து, அப்போது மக்களவை உறுப்பினராக இருந்த எம்.ஓ.ஹெச். ஃபாரூக். அவர் ரயில்வே அமைச்சர் ஜாபர் ஷெரீஃப், உள்துறை இணையமைச்சர் பி.எம். சயீத் இருவருக்கும் மிகவும் நெருங்கிய நண்பர்.

ரஜினிகாந்தின் ஆதரவை நம்பி காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது தற்கொலை முயற்சியாக இருக்கும் என்று பிரதமரை ஜாபர் ஷெரீஃப், பி.எம். சயீத் இருவர் மூலமும், தான் திமுகவுக்காக எச்சரித்ததாக எம்.ஓ.ஹெச். ஃபாருக் என்னிடம் இரண்டாண்டுகளுக்குப் பிறகு தெரிவித்தார். காங்கிரஸ் - திமுக கூட்டணி அமைய அவர் ரகசியமாக எடுத்த முன்னெடுப்புகள் எடுபடவில்லை.

"பிரதமரின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. ராஜீவ்ஜி படுகொலையில் தொடர்புடைய திமுகவுடன் எந்தக் காரணத்துக்காகவும் கூட்டணி வைத்துக்கொள்ள முடியாது. அதை சோனியாஜியும் குடும்பமும் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்'' என்று முகத்தில் அடித்தாற்போல தன்னிடம் ஜாபர் ஷெரீஃப் தெரிவித்ததாகவும் எம்.ஓ.ஹெச். ஃபாருக் என்னிடம் சொன்னார்.

ரிஷிகேசத்திலிருந்து தெளிவான முடிவுடன் ரஜினிகாந்த் சென்னை திரும்பி இருந்தார். அரசியல் பிரவேசம் குறித்தும், கூட்டணி குறித்தும் அவரிடம் எந்தவிதக் குழப்பமும் இருக்கவில்லை. சென்னை திரும்பியதும், அவர் நேராகச் சென்று சந்தித்த நபர் யார் தெரியுமா?

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT