தினமணி கதிர்

பொன் விழா ஆண்டில் உலகம் சுற்றும் வாலிபன்

ஜி. அசோக்


1973-ஆம் ஆண்டு மே 11-இல் வெளிவந்த எம்.ஜி. ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் கடந்த 11-ஆம் தேதி 49 ஆண்டுகளை முடித்து,  பொன்விழாவில் அடியெடுத்து வைக்கிறது.   50 ஆண்டுகளான போதிலும் எம்.ஜி.ஆர். ரசிகர்களால் இந்தப் படத்தை அவ்வளவு எளிதாக கடந்துவிட முடியாது.  

திரைப்படங்களை பற்றி விமர்சிக்கும்போது, அரசியல் வராமல் தடுக்கலாம். ஆனால் அரசியல் அல்லாத ஒரு திரைப்படத்தை, அரசியல் இல்லாமல் விமர்சிக்கவே முடியாது. அரசியல் பின்னணியால் பிணைந்த ஒரு வெற்றி படம் "உலகம் சுற்றும் வாலிபன்".

திரைப்படங்களில் அரசியல் பஞ்ச் டயலாக்குகள், பஞ்ச் காட்சிகள் வருவதெல்லாம் இப்போது சாதாரணம். இரண்டு படங்கள் ஹிட் கொடுத்த நடிகர்கள்கூட, தன் அடுத்த படத்தில் அரசியல் பஞ்ச் வைக்கச் சொல்லும் காலமிது. ஆனால், ஒரு படமே அரசியலாக மாறியது "உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில்தான்!

இதற்கு பின்னர் வந்த எந்த படமும், இந்தளவுக்கு ஒரு நடிகரின் வாழ்க்கையோடு ஒட்டிஇருந்ததில்லை.  இதன் பிண்ணனி குறித்த தகவல்கள் இன்று படிக்கும் போது கூட ஆச்சரியமாக உள்ளது. இப்படியெல்லாம் கடந்ததுதான் இந்தப் படம் வெற்றிப் படமாகியாதா என்று நினைத்தால் ஆச்சரியம் கொள்ளும். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு, வெளியீடு ஆகியவற்றின்போது நடந்த சில "ஹைலைட்'  சம்பவங்கள்:

படத்துக்கு எம்.ஜி.ஆர். முதலில் வைத்திருந்த பெயர்-  "மேலே ஆகாயம் கீழே பூமி' என்பதுதான். பின்னர்தான் "உலகம் சுற்றும் வாலிபன்' என்று பெயர் 
மாறியது.

தான் இரு வேடங்களில் நடித்த இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஹாங்காங், சிங்கப்பூர், ஜப்பான், தாய்லாந்து என்று பெரும்பகுதி வெளிநாட்டிலேயே முடித்தார் எம்.ஜி.ஆர். 

எம்.ஜி.ஆர். படத்தில் சந்திரகலா,  லதா,  மஞ்சுளா என மூன்று நடிகைகள் இருந்தும், நான்காவதாக தாய்லாந்து நடிகையான மேட்டா ரூங்ரட்டா என்றொரு நடிகையையும் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார் எம்.ஜி.ஆர். 

படத்தின் இசையமைப்பாளராக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் குன்னக்குடி வைத்தியநாதன்.  பின்னர்தான் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பாளரானார். 

வெளிநாட்டுப் படப்பிடிப்புக்குக்கூட அதிகம் பேர் அனுமதிக்கப்படவில்லை. எம்.ஜி.ஆர்., வி.என்.ஜானகி, ஆர்.எம்.வீரப்பன், மஞ்சுளா, லதா, சந்திரகலா, நாகேஷ், அசோகன், ஒளிப்பதிவாளர் ராமமூர்த்தி, இயக்குநர் ப.நீலகண்டன், வசனகர்த்தா சொர்ணம், நடன இயக்குநர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஒருசிலர் மட்டுமே வெளிநாட்டுக்கு  சென்றார்கள்.

தாய்லாந்தில் படத்தை ஷூட் செய்வதற்கு வெறும் 10 நாள்களே அந்த நாட்டு அரசால் அனுமதியளிக்கப்பட்டது. ஷூட்டிங் நடைபெற்றபோது, அந்த இடத்துக்கு அருகில் விபத்து ஒன்றில் தாய்லாந்து நடிகர் ஒருவர் சிக்கிக் கொண்ட தகவல் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற எம்.ஜி.ஆர்., மீட்புப் பணிகளில் தானே களமிறங்கினார். இந்தத் தகவல் தாய்லாந்து பத்திரிகைகளில் மறுநாள் செய்தியானவுடன், எம்.ஜி.ஆர். மீது ஏற்பட்ட நன்மதிப்பால் படப்பிடிப்புக்கு வழங்கப்பட்ட அவகாசத்தை இரட்டிப்பாக்கியது தாய்லாந்து அரசு.

ஜப்பானின் எக்ஸ்போ 70 அரங்கில், எட்டு லட்சம் மக்களுக்கு நடுவே, "உலகம்... அழகுக் கலைகளின் சுரங்கம்'-  என்ற பாடலின் படப்பிடிப்பை நடத்தியதெல்லாம் அவருடைய அசாத்திய திறமை, சாதனை. 

சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் "மாக்னாஸ் கோல்டு' என்ற ஆங்கிலப்படம் தான் அதுவரை வசூலில் முதன்மை வகித்தது . அதனை முறியடித்த படம் உலகம் சுற்றும் வாலிபன்.  ரூ.  13 லட்சத்துக்கும் மேல் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. 

திரையிட்ட அனைத்து தியேட்டர்களில் 50 நாள்,   45 தியேட்டர்களில் 75 நாள் ,   25 தியேட்டர்களில் 100 நாள் ,    7 தியேட்டர்களில் வெள்ளி விழா என தமிழ் திரையுலகை புரட்டிப் போட்டு, தமிழ் சினிமாவில் வரலாறு ஏற்படுத்திய சினிமா இது .

2021- இல்  டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தமிழகம் முழுவதும் 89 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியிருக்கிறது. சென்னையில் மட்டும் 32 தியேட்டர்களில் ரிலீஸ்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

உரத் தொழிற்சாலையை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பு: 5 கிராம மக்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT