தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் உபாதைகளுக்கு தீர்வு என்ன?

22nd May 2022 06:00 AM | பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

ADVERTISEMENT

 

இன்றைய வாழ்க்கை முறையில் ஏற்படும் பல நோய்களும் சிகிச்சைக்குக் கட்டுப்படுகிறதாகக் காண்கிறதே தவிர நிவிருத்தியாவதில்லை. முன் ஒரு சிலருக்கு மட்டும் ஏற்பட்ட உபாதைகள் இன்று பரவலாக, ஆனால் பொதுவாகக் காணப்படுவது எதனால்? இதற்கு ஆயுர்வேத மருத்துவம் என்ன?

-ஜானகி வெங்கட்,
பெங்களூரு.

மனிதன் தன் ஆரோக்ய வாழ்விற்கான எல்லா அம்சங்களையும் உணவின் மூலமே பெறுகிறான். அவ்வுணவு அளவில் மிகுந்தால் மட்டும் போதாது. சாரத்திலும் மிகுந்து இருக்க வேண்டியது அவசியம்.  அளவில் குறைந்தாலும் சாரம் மிகுந்திருந்தால் நல்லதே. செயற்கை உரங்கள் அளவைத்தான் பெருக்குகின்றனவே தவிர, தரத்தை அல்ல. கறிகாய்களில் முன்பிருந்த ருசியும் மணமும் இந்நாட்களில் காணப்படவில்லை.

ADVERTISEMENT

முன் நாட்களில் கிடைத்த மாதிரி இன்று கிடைக்கும் உணவுப் பொருள்களில் போஷண சத்து இல்லை. கோதுமை, முட்டை, பால், பழம் முதிலியவைகளைப் பெருமளவில் உற்பத்தி செய்யும்போது அவைகளின் உருவ அமைப்பு முன்போலிருந்தாலும் அவைகளின் தரம் மாறிவிட்டது. 

ரஸாயன உரங்கள் பூமியின் அளவை சீர் செய்யாமல் பயிர்களை அதிகம் விளைவிப்பதால், தானியங்களிலும் கறிகாய்களிலும் சத்துக்கள் குறையும் நிலையை ஏற்படுத்திவிட்டன.

பெட்டைக் கோழிகளிலும் செயற்கை வாழ்க்கை முறைக்குள் நிர்பந்தப்படுத்தப்பட்டும் செயற்கை உணவு கொடுக்கப்பட்டும் முட்டைகளின் உற்பத்தியாளர்களாக மாற்றப்பட்டுள்ளன.

பசுக்களும் தயாரிப்பு தீவனங்களை  உண்டு பாலைப் பெருக்குகின்றன. அப்போது பாலின் நிலை?

இன்று உணவு எவ்வளவு சத்துள்ளதாக ஏற்றாலும் உடலில் ஒட்டுவதில்லை. அஜீரணம், குடல் வேக்காளம், வாய் வேக்காளம், கிராணி, சோகை போன்ற ஜீரண உறுப்புகளின் பலக் குறைவால் வரும் நோய்கள் திருந்துவதே இல்லை.

நரம்புத் தளர்ச்சி, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை, உபாதை, இதய பலவீனம் போன்ற சகிப்புத் தன்மைக் குறைவால் ஏற்படும் நோய்கள் மிகப் பரவலாக ஏற்பட்டுள்ளன. 

பொதுவாக, இவை எல்லாம் உணவின் தரக்குறைவையும் உடலில் உணவு சரியாகச் சேராமையையுமே குறிக்கின்றன.

இயற்கை உரங்கள் பூமியின் வளத்தைப் பெருக்கியது போல செயற்கை உரங்கள் செய்யவில்லை என்று கவலைப்பட வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம்.

குடல் உட்புற வழியாக வந்து சேர்ந்திருக்கக் கூடிய விஷத் தன்மையின் தீவிரத்துக்கு ஏற்றவாறு உடலில் சீற்றமும் வாத, பித்த, கபங்களின் கெட்டுப் போன நிலையில், தாதுக்களில் அவற்றின் குணம் மற்றும் செயல்களின் குமுறல்களின் வெளிப்பாடே தீவிர நோய்களின் அறிகுறிகள்.

வாதச் சீற்றத்தை வெளியேற்ற வஸ்தி எனும் எனிமா சிகிச்சையும், அடக்குவதற்கு மூலிகைத் தைலங்களின் பயன்பாட்டையும் சீராகப் பயன்படுத்தி விஷநிலையைக் குணப்படுத்த வேண்டும்.

பித்தச் சீற்றத்தை வெளியேற்ற பேதி மருந்து சிகிச்சையும், அடக்குவதற்கு மூலிகை நெய் மருந்துகளையும் பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.

கபச் சீற்றத்தை வெளியேற்ற வாந்தி சிகிச்சை செய்தும், அடக்குவதற்கு தேனைப் பயன்படுத்துவதும் காலத்தின் கட்டாயமாகும்.

இயற்கை உரங்களையே பயன்படுத்தி பூமியின் வளத்தைப் பெருக்குவதுடன், உணவின் சாரத்தையும் கூட்டி மனிதர்களின் ஆரோக்யத்தை மேம்படுத்தும் வழிகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானவை.

(தொடரும்)

ADVERTISEMENT
ADVERTISEMENT