தினமணி கதிர்

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 89

22nd May 2022 06:00 AM | கி. வைத்தியநாதன்

ADVERTISEMENT

 

தில்லியில் கரோல்பாகிலுள்ள குருத்வாரா சாலையில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்திருந்தேன். ஒருநாள், நண்பர் பி.ஆர். சேதுப்பிரகாசம் தில்லிக்கு வர இருப்பதாகத் தெரிவித்தார். மெளலானா ஆசாத் சாலையிலுள்ள விக்ஞான் பவனில் ஒரு நிகழ்ச்சி நடக்க இருப்பதாகவும், அதற்காக தில்லி வர இருப்பதாகவும் தெரிவித்தார் அவர். 

பி.ஆர். சேதுப்பிரகாசம் எனது வாழ்க்கையில் கிடைத்த மிக அற்புதமான, என் மீது அக்கறையுள்ள நண்பர்களில் ஒருவர். விமானப்படையில் வேலை பார்த்துப் பணி ஓய்வு பெற்ற பிறகு, சென்னையில் குடியேறி மிகப் பெரிய தொழிலதிபராக உயர்ந்தவர். ஜெயலலிதா ஆட்சியில் அதிமுக கொறடாவாக இருந்த திருச்சி மனோகரின் மூத்த சகோதரர். 

வேன்டேஜ் லெதர்ஸ், நியூ லைன் பைனான்ஸ், எஸ்.எஸ். இன்டர்நேஷனல் என்று பல நிறுவனங்களை நடத்திவந்த சேதுப்பிரகாசம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நெருங்கிய நண்பர் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். அவர் எனது குடும்ப நண்பர் என்று சொல்வதைவிட, உடன் பிறவாச் சகோதரர் என்று சொல்லும் அளவுக்கு எங்களது நெருக்கம் இருந்தது.

ADVERTISEMENT

எழும்பூர் காஸா மேஜர் சாலையில் இருந்த அவரது வீட்டில் நான் சந்தித்த ஒருவர் இன்று இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபராக வலம் வருகிறார் என்பதை நினைக்கும்போது நான் அடையும் ஆச்சரியத்துக்கு அளவேயில்லை.

ஒருநாள் பி.ஆர்.எஸ்ûஸ சந்திக்க நான் அவரது வீட்டுக்குச் சென்றிருந்தபோது, மும்பையிலிருந்து வந்திருந்த ஒருவர் அவருடன் இருந்தார். சேதுப்பிரகாசம் தோல் ஏற்றுமதித் தொழிலிலும், துறைமுகத்தில் சுங்கத்துறை தொடர்பான "கிளியரிங் ஃபார்வேர்டிங்' தொழிலிலும் இருந்ததால், மும்பையிலுள்ள பல தொழிலதிபர்கள் அவருடன் தொடர்பில் இருந்தனர். விமானப்படையில் பணிபுரிந்ததால் அவருக்கு ஹிந்தியில் சரளமாக உரையாட முடியும் என்பது பலரும் அவரைத் தேடிவரக் காரணமாக இருந்தது.

அன்று நான் சென்றபோது, சேதுப்பிரகாசத்துடன் அமர்ந்து அளவளாவிக் கொண்டிருந்தார் கெளதம் அதானி. இப்போது அம்பானிக்கு நிகரான தொழில் சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தி கோலோச்சிக் கொண்டிருக்கும் கெளதம் அதானியின் தொடக்க காலகட்டம் அது. என்னை ஒரு பத்திரிகையாளர் என்று சேதுப்பிரகாசம் அறிமுகப்படுத்தி, தில்லியில் "நியூஸ்கிரைப்' அலுவலகம் இருப்பதாகச் சொன்னபோது, கெளதம் அதானி அப்போது சிரித்துக் கொண்டு சொன்ன வார்த்தைகள் இப்போதும் காதில் ரீங்காரம் செய்கின்றன. 

"தில்லி பஹூத் தூர் ஹை' (தில்லி மிகத் தொலைவில் இருக்கிறது) என்று சிரித்துக் கொண்டே சொன்னது இப்போது அவருக்கு நினைவிருக்காது. ஏனென்றால், தில்லி அவருக்கு மிக அருகில் வந்துவிட்டது.

நான் பி.ஆர்.எஸ். வீட்டில் கெளதம் அதானியை சந்தித்த ஆண்டு 1994. அப்போது சிறிய அளவில் ஏற்றுமதிகளில் ஈடுபட்டிருந்தது அகமதாபாதில் இயங்கி வந்த அதானி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம். பங்குச் சந்தையிலும் ஈட்பட்டிருந்தார் அவர். குந்த்ரா என்கிற இடத்தில் ஒரு தனியார் துறைமுகம் நிறுவும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டிருப்பதாக என்னிடம் சேதுப்பிரகாசம் தெரிவித்தார்.

இப்போதைய கெளதம் அதானியின் நிலைமையே வேறு. 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள அதானி குழுமம், இப்போது ஈடுபடாத துறைகளே இல்லை எனலாம். அதே நேரத்தில் ஒன்றை மட்டும் நான் இங்கே குறிப்பிட வேண்டும். நான் கெளதம் அதானியை ஒரு சில நிமிடங்கள்தான் - அதிகம் போனால் அரை மணிநேரம் - சேதுப்பிரகாசத்தின் வீட்டில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அதற்குப் பிறகு இன்றுவரை சந்திக்கவும் இல்லை.

கெளதம் அதானியிடம் வெளிப்படையாகப் பேசும் தன்மை இருந்தது. நட்புறவுடன் பழகும் விதமும், முன்னேற வேண்டும் என்கிற துடிப்பும் தெரிந்தது. இந்த அளவுக்கு அவர் மிகப் பெரிய சாதனைகள் படைப்பார் என்று சேதுப்பிரகாசம் நினைத்தாரோ என்னவோ, நான் நிச்சயமாக நினைக்கவில்லை.

நண்பர் சேதுப்பிரகாசமும், வெங்கட் என்பவரும் இணைந்து நடத்திவந்த வேன்டேஜ் லெதர்ஸ் நிறுவனம், ஏற்றுமதியில் சாதனை படைத்ததற்காக வர்த்தக அமைச்சகத்தின் விருது பெற்றிருந்தது. அவ்விருதைப் பெறுவதற்காகத்தான் அவர்கள் இருவரும் விக்ஞான் பவன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தில்லி வந்திருந்தனர். பத்திரிகையாளராக அல்லாமல், சேதுப்பிரகாசத்தின் நண்பராக எனக்கும் அவர் அனுமதி பெற்றிருந்தார்.

விக்ஞான் பவனில் நுழைந்தபோது, எனக்குப் பழக்கமான பத்திரிகையாளர்களும், வர்த்தகத் துறை அமைச்சக அதிகாரிகளும் இருந்ததால் அவர்களுடன் இணைந்து கொண்டுவிட்டேன். ராஜீவ் படுகொலையைத் தொடர்ந்து, தில்லியில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டிருந்தன. அதையும் மீறி அவர்களுடன் இருக்க முடிந்ததென்றால் பிரணாப் முகர்ஜிக்குத் தெரிந்தவர் என்பதால்தான் என்பதை நான் உணராமல் இல்லை.

குடியரசுத் தலைவர், வர்த்தகத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இணையமைச்சராக இருந்த கமாலுதீன் அகமது, துறைச் செயலாளர் என்று பலரும் மேடையில் இருந்தனர். நான் பத்திரிகையாளர்கள் பகுதியில் இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்தேன். பிரணாப் முகர்ஜியை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், அவரது பார்வை என்மீது படாதா என்கிற நைப்பாசை நிறையவே இருந்தது. 

பொது இடங்களில், அதிலும் குறிப்பாக இதுபோன்ற நிகழ்வுகளில் பார்க்கும்போது, அவர் என்னை அழைத்துப் பேசியது கிடையாது. சில நிகழ்வுகளில் பார்த்ததன் அடையாளமாகப் புன்னகை புரிவது அல்லது தலையாட்டுவது உண்டு. அன்று அதற்கான வாய்ப்புக்கூட கிட்டவில்லை. 

அந்தக் கூட்டத்துக்கு இடையே அவர் என்னைப் பார்க்க வேண்டும், அடையாளம் காண வேண்டும் என்று விழைவதும்கூடத் தவறுதான். சில மாத இடைவெளிக்குப் பிறகு அவரைப் பார்க்க முடிந்தது என்கிற ஆறுதலுடன் அந்த நிகழ்வு முடிந்தது.

எனக்குப் பிரணாப் முகர்ஜியைத் தெரியும் என்பதால், சேதுப்பிரகாசம் அவரை சந்திக்க ஏற்பாடு செய்து தரும்படி கேட்டார். நான் அவரது தனிச்செயலாளரைத் தொடர்பு கொண்டபோது, யாரையும் சந்திப்பதில்லை என்று சொல்லிவிட்டார். அந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. தள்ளி இருந்தபடி பிரணாப் முகர்ஜியைப் பார்த்தேன் என்கிற ஆறுதல்தான் மிஞ்சியது.

முன்னாள் பிரதமர் சந்திரசேகர் சொன்னது முதல், ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி தில்லிக்கு எப்போது வருகிறார், ஊருக்குப் போகிறார் என்பதைத் தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருந்தேன். அவர் வரும்போதெல்லாம் தொலைபேசியில் தொடர்பு கொள்வதும், ஓரிரு தடவைகள் நேரில் சந்திப்பதுமாகக் கடந்தன.

அப்போது ஜவுளித்துறை அமைச்சராக இருந்த ஜி. வெங்கடசுவாமி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி அவரை அடிக்கடி சந்திப்பது வழக்கம். அமைச்சர் ஜி. வெங்கடசுவாமியின் உதவியாளராக இருந்தவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டிக்கும் மிகவும் வேண்டியவர். அவருடன் எனக்கும் நல்ல நட்புறவு இருந்ததால், ஒய்.எஸ்.ஆர். எப்போது தில்லிக்கு வருகிறார் என்கிற தகவல் பெறுவதற்கு எனக்கு வசதியாக இருந்தது.

பிரதமர் சந்திரசேகர்ஜி சொன்னதுபோல, ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் நம்பிக்கையைப் பெறுவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. பல சந்திப்புகளுக்குப் பிறகுதான், ஒருநாள் அவர் மனம் திறந்து என்னிடம் பேசினார். அதுவும், அவர் சொல்வது குறித்து நான் வெளியில் உளற மாட்டேன் என்கிற முழு நம்பிக்கையும் ஏற்பட்ட பிறகுதான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. சந்திரசேகர்ஜிக்கு நெருக்கமானவர் என்பதும்கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

தில்லி குதுப்மினார் போகும் வழியில் அமைந்திருந்தது ஓர் அழகான தோட்ட பங்களா (ஃபார்ம் ஹெளஸ்). ஆந்திரபவனில் சந்தித்த என்னைத் தனது காரில் ஏறிக்கொள்ளச் சொன்னார் ராஜசேகர ரெட்டி. அவரது நண்பரின் தோட்ட பங்களாவில், ஓய்வெடுப்பதற்காக அவர் செல்வதாகத் தெரிவித்தார்.

அங்கே உணவருந்தி, சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு, மாலையில் தோட்டத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போதுதான் அவர் அந்த அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்தார்.

""வெளியுலகுக்குத் தெரியாத ஒரு மிகப் பெரிய துயர சம்பவம் 7, ரேஸ் கோர்ஸ் சாலையில் நடந்திருக்கிறது. பிரதமர் பக்கவாதத்தால் தாக்கப்பட்டிருக்கிறார்!'' என்று அவர் சொன்னபோது நான் அதிர்ச்சியால் தாக்கப்பட்டேன்.

பிரதமருக்குப் பக்கவாதம் என்பது சாதாரண விஷயமா? அதை எப்படி வெளியில் யாருக்கும் தெரியாமல் மறைக்க முடியும்? புற்றுநோய், இதய அடைப்பு, காசம் உள்ளிட்ட நோய்த்தொற்று போன்றவற்றைக்கூட வெளியில் தெரியாமல் மறைக்க முடியும். பக்கவாதம் தாக்கினால் எப்படி அதை மறைக்க முடியும்?

""நீங்கள் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை. நன்றாகத் தெரிந்துதான் சொல்கிறீர்களா?''

""நீங்கள் இப்படி கேட்பீர்கள் என்று தெரியும். நீங்கள் மட்டுமல்ல, யாராக இருந்தாலும் கேட்பார்கள். நானும் கேட்டேன். தீர விசாரித்த பிறகுதான் சொல்கிறேன். நல்லவேளையாக பாதிப்பு பெரிதாக இல்லை. அதை அவரால் சாமர்த்தியமாக மறைக்க முடிந்திருக்கிறது.''

""பக்கவாதத்தை எப்படி சாமர்த்தியமாக மறைக்க முடியும்?'' (சம்பவம் நடந்த ஆண்டு, இந்த அளவுக்கு பிசியோ தெரபி வளர்ச்சி அடையாத 1994 என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.)

""நரசிம்ம ராவுக்கு நீண்ட நாள்களாக சர்க்கரை நோய் இருக்கிறது. ரத்த அழுத்தமும், இதய நோயும் அத்துடன் இணைந்து கொண்டன. முறையான உடற்பயிற்சியும், மருத்துவமும் அவரை சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டிருந்தன. அப்படி இருக்கும்போதுதான் அவர் ஒருநாள் இரவில் திடீரென்று பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.''

""அப்புறம் என்னவாயிற்று?''

""எப்படி, எப்போது நடந்தது என்பது தெரியாது. மருத்துவர் வந்து பரிசோதித்தபோது, அவரது வலது கையும், முகத்தின் வலது பகுதியும் உணர்வற்று இருந்தன. கைகளின் அசைவு, பேச்சு, பார்வை ஆகியவற்றில் பாதிப்பு தெரியவில்லை. ஏனைய பகுதிகளில் பாதிப்பு இருக்கவில்லை என்கிறார்கள். அதற்கு "சென்ஸரி ஸ்ட்ரோக்' என்று பெயர்.''

""பிரதமர் எப்படி அதை சமாளித்தார்?''

""பக்கவாதம் பாதிக்கப்பட்டது வெளியில் தெரிந்தால், அவரை அகற்ற வேண்டும் என்கிற கோஷம் எழக்கூடும். பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாகிவிடும். அதனால் மறைத்து விட்டனர். இத்தனை நாளாகியும் உங்களுக்குத் தெரியவில்லை பார்த்தீர்களா?''

பக்கவாதம் பாதிக்கப்பட்டும், அடுத்த இரண்டு ஆண்டுகள் நரசிம்ம ராவ் எதுவுமே நடக்காததுபோல பிரதமராகத் தொடர்ந்தார். 72 வயது பிரதமரின் முகத்தில் எந்தவித பாவமும் இல்லாமல் இருந்ததற்கும், அவர் அதிகம் பேசாமல் இருந்ததற்கும் காரணம் இன்றுவரை யாருக்கும் வெளியில் தெரியவில்லை. 

தனக்கு ஏற்பட்ட சிறிய அளவு பக்கவாத பாதிப்பையும், நரசிம்ம ராவால் தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முடிந்தது. அவரது முகபாவத்திலிருந்து யாரும் எதையும் தெரிந்துகொள்ள முடியாமல் இருந்ததற்கு அந்த பக்கவாத பாதிப்பு அவருக்கு உதவியது. 

யாரிடமும் சொல்லக் கூடாது என்று ஒய்.எஸ்.ஆர். தெரிவித்தாலும்கூட, அவர் சொன்னது உண்மைதானா என்று என்னால் உறுதிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை. அது உண்மை, உண்மை, முற்றிலும் உண்மை என்று நான் இப்போது உறுதியாகச் சொல்ல முடியும்.

பிரதமர் நரசிம்ம ராவால் மட்டும்தான் அந்த ரகசியத்தை காப்பாற்றியிருக்க முடியும். அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டது இன்று வரைக்கும் யாருக்கும் தெரியவில்லை என்பது ஆச்சரியம்தானே! 

மூன்று நாள்கள் கழித்து பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

(தொடரும்)
 

ADVERTISEMENT
ADVERTISEMENT