தினமணி கதிர்

மெய்ப்பொருள்!

15th May 2022 06:00 AM | சாயம் வெ.ராஜாராமன்

ADVERTISEMENT

 

காலிங் பெல் ஓசை கேட்க, சென்று கதவைத் திறந்தான் மாதவன். நின்றிருந்தவர் அப்பாவின் நண்பர் என்று தெரியும். ஒரு தடவை அவர், அப்பாவைப் பார்க்க வந்தபோது பார்த்திருக்கின்றான்.

""வாங்க அங்கிள். உட்காருங்க' சோபாவில் உட்கார வைத்தான். "அப்பாவோட ஃப்ரண்ட்தானே நீங்க. ஒரு தடவை வந்தபோது பார்த்திருக்கேன். பெயர் தெரியலை. சாரி'' சொன்னான் மாதவன்.

""என் பேரு கணபதிப்பா. ஓரிரண்டு தடவைதான் உங்க வீட்டுக்கு வந்திருக்கேன். சந்தானத்தோட ஃப்ரண்ட். கூட படிச்சவன்..'' சொன்னார். தன் ஷேவ் செய்யப்படாத முகத்தைத் தடவியபடி.

ADVERTISEMENT

""சொல்லுங்க அங்கிள். என்ன விஷயம்?'' கேட்டான் மாதவன்.

""சந்தானத்தைத்தான் பார்க்கணும். கூப்பிடேன்''

""அப்பா இல்லை அங்கிள். கோயம்புத்தூர் போயிருக்கார். ஒரு ஃபங்க்ஷன். நாளன்னைக்குத்தான் வருவார்' ""அம்மாவும் அப்பா கூட போயிருக்காங்க..'' சொன்னான்.
""ரெண்டு நாள் ஆகுமா.. ஓஹ்..'' சொன்ன கணபதியின் முகம் வாட்டமடைய ஆரம்பித்தது.
""ஆமாம் அங்கிள். என்ன விஷயம். சொல்லுங்க. நான் அப்பாகிட்ட சொல்லிடறேன். இப்பவே ஃபோன் வேணும்னா பண்ணுங்களேன்''. கேட்ட மாதவன் தன் கைப்பேசியை எடுத்தான்.

""வேண்டாம்பா அவன் கோபப்படுவான். அவன் வாய்ல யார் புகுந்து வெளியே வர்றது. கொஞ்சம் பணம் கடன் கேட்கலாம்னு வந்தேன்.. பேட்லக்'' சொல்லிய படியே தன் முகத்தை மறுபடியும் தடவியபடியே யோசனையில் ஆழ்ந்தார் கணபதி.

""நீ என்ன பண்ணறே.. உன் பேரு..?'' இரண்டு நிமிஷம் கழித்து கேட்டார் கணபதி.
""மாதவன் அங்கிள்..''
""நீ என்ன பண்ணறே. மாதவா?''
""எம்.காம் படிச்சிருக்கேன் அங்கிள்'' இப்பொழுது இவன் குரலிலும் முகத்திலும் சோகம் படற ஆரம்பித்தது.
""முடிச்சுட்டு ?''
""வேலை தேடிட்டு இருக்கேன்'' அவன் குரல் மன வெப்பத்தைப் பரப்பி நின்றது.
""ஓஹ்'' கணபதி பெருமூச்சு விட்டார். ""வேலை தேடிட்டு இருக்கியா..?''
பதில் எதுவும் சொல்லவில்லை மாதவன். கவலைப்பட ஆரம்பித்தான். அது அவன் முகத்தில் தெள்ளத் தெளிவாக தெரிந்தது.
""ரெண்டு நாள் கழிச்சு அப்பாவை வந்து பாருங்களேன்.. '' சொன்னான்.
""அதுதான் பண்ணனும் போல இருக்கு. சரி உன் முகம் ஏதோ வாட்டமா இருக்கே. ஏன் மாதவா?'' கேட்டார் கணபதி.
""அதான் அங்கிள் சொன்னேனே. வேலை தேடிண்டு இருக்கேன்னு. தேடிட்டே இருக்கேன். கிடைக்கற பாடில்லை..'' அவன் குரலில் நம்பிக்கையின்மை பளிச்சிட்டது.
""வேலைக்கு அப்ளை பண்ணியிருக்கியா..
எக்ஸாம் எல்லாம் எழுதறியா.. இன்டர்வ்யூ ஏதாவது..'' கேட்டார் கணபதி.
""உதவாக்கரை.. எதுக்கும் லாயக்கில்லாதவன். ஒழுங்கா படிச்சாத் தானே. எப்பவும் எழுபது பர்சண்ட்டைத் தாண்டினதே இல்லை. பாடங்களைப் புரிஞ்சு சிரத்தையா படிச்சாத்தானே. மூளை இருக்கணும் அதுக்கு.எம்காம்ல பர்ஸ்ட் க்ளாஸ் எப்படித்தான் நீ வாங்கினேங்கறது அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும். அறுபது பர்சண்ட் மார்க் வாங்கி பாஸ் பண்ணி.. இன்டர்வ்யூவுக்குப் படை எடுக்கறே. என்ன ப்ரயோசனம். அதுக்கெல்லாம் மூளைஇருக்க வேண்டாமா. கவர்மண்ட் பேங்க் பரீட்சைன்னா பாஸ் பண்ண நாலட்ஜ் வேணாமா.. அது உன் கிட்ட எங்க இருக்கு. முட்டாள்.. தண்டச் சோறு. இன்னும் எத்தனை வருஷம் தண்டச் சோறு தின்னுட்டு இருப்பியோ. ஒரு வேலைக்குப் போக துப்பு இல்லை.
ஒண்ணுக்கும் உபயோகப்படாத எம்.காம் டிகிரி.
நாக்கில் வழிச்சுக்க வேண்டியதுதான் அதை வைச்சு..'' அப்பாவின் வசவு நினைவுக்கு வந்தது.
""மாதவா.. நான் கேட்டேனே இன்டர்வ்யூ ஏதாவது அட்டெண்ட் பண்ணறியா. எக்ஸாம் எழுதறியான்னு ..
நீ என்ன யோசனையில் மூழ்கிட்டே?'' கணபதி கேட்ட போதுதான் நிகழ்வுலகிக்கு வந்தான் மாதவன்.
""அப்பாவோட திட்டு அங்கிள்.. அது என்னிக்கு முடிவுக்கு வருமோ.. ''
""சரிப்பா என் கேள்விக்கு பதில் சொல்லு. வேலைக்கு ட்ரை பண்ணறதைப் பற்றி .. ''
""டைரக்டா சொல்லணும்னா இன்னிக்கே கூட ஒரு இன்டர்வ்யூ இருக்கு அங்கிள். வரச் சொல்லி இருக்காங்க'' உலர்ந்த குரலில் சொன்னான்.
""போகலையா?''
""பதினொன்றரை மணிக்குத்தான் போகணும். ஆனால் போகப் போறது இல்லை அங்கிள்'' சொன்னவன் தலை தானாக குனிந்தது.
""என்னப்பா. என்ன சொல்ற. ஏன்?'' அதிர்ந்து கேட்டார் கணபதி.
"போங்க அங்கிள் எவ்வளவு இன்டர்வ்யூ அட்டெண்ட் பண்ணறது. எவ்வளவு எக்ஸாம் எழுதறது. வெறுத்துப் போச்சு அங்கிள். அப்பாகிட்ட திட்டோ திட்டுன்னு திட்டு வாங்கறதுதான் மிச்சம். வாழ்க்கையே வெறுத்துப் போச்சு.நாலு கேள்வி கேட்கறான். சர்டிபிகேட்ஸ் பார்க்கறான். செலக்ட் ஆனா இன்டிமேட் பண்ணறோம்னு சொல்றான். அவ்வளவுதான். அதுக்கப்புறம் எந்தக் கம்பெனியில்இருந்தும் ஒரு தகவலும் வர மாட்டேங்குது.கவர்மண்ட், பேங்க், ரயில்வே எக்ஸாம் கதையும் இதேதான். அப்ளை பண்ணி பரீட்சை எழுதறதோட சரி. ம் வெறுத்துப் போச்சு அங்கிள்..'' ஒரு சோக கீதமே பாடலானான்.
""அப்ப உனக்கு வேலையே கிடைக்காதுன்னு முடிவே பண்ணிட்டியா?'' கணபதி கேட்க,
""இதோ வரேன் அங்கிள்'' சொல்லிவிட்டு வீட்டினுள் சென்றான் மாதவன். திரும்பி வரும்போது அவன் கையில் ஒரு க்ளாஸ். அதில் ஜூஸ். ""சாரி அங்கிள்.
இவ்வளவு நேரம் உங்களுக்கு எதுவுமே கொடுக்காம பேசிட்டு இருக்கேன். உங்களுக்கு சுகர் இல்லையே. நான் காப்பி போட்டுக் கொடுத்தா நீங்க அப்புறம் காப்பி சாப்பிடற பழக்கத்தையே விட்டுடுவீங்க. அதான் ஜூஸ் கொடுக்கறேன்'' சொல்லிவிட்டு அவர் கையில் கொடுக்க, வாங்கிப் பருகலானார் கணபதி.

""சரி மாதவா. வேலை கிடைக்காதுன்னு நீ முடிவு பண்ணிட்ட இல்லையா..?''
""அது வந்து.. கிடைக்கும்னு நம்பிக்கையே வர மாட்டேங்குதே''
ஜூஸ் க்ளாûஸ வைத்தார் கணபதி. ""நீ படிச்சவன் தானே.. நாலு இன்டர்வ்யூவுக்குப் போயி வேலை கிடைக்கலேன்னா.. நாலைஞ்சு எக்ஸாம் எழுதி வேலை கிடைக்கலேன்னா, வாழ்க்கையே வெறுத்துப் போய்மூலையில் உட்கார்ந்துடுவே. வேலையே கிடைக்காது. நம்பிக்கையே இல்லைன்னு சொல்லிட்டு இருப்பே இல்லியா?''
""நாலைஞ்சா.. எத்தனை இன்டர்வ்யூ. எத்தனை எக்ஸாம்ஸ்.. கணக்கே இல்லே..''
""இருக்கட்டுமே மாதவா.. உடனே வேலையே கிடைக்காதுன்னு முடிவு பண்ணி அழுதுண்டு இருக்கறதா. எம்.காம் போஸ்ட்க்ராஜுவேஷன்.. சும்மா இல்லை. இப்படி விரக்தியா பேசலாமா?'' சொன்னார் கணபதி.
""பின்ன என்ன செய்யறது அங்கிள்?''அழவே ஆரம்பித்து விடுவான்போல இருந்தான் மாதவன். தலை இன்னும் தொங்கியது.
""உனக்கு வேலை தரக் கூடாதுன்னு கம்பனி முதலாளிகளும், அரசாங்கமும், வங்கிகளும் முடிவு செய்துட்டது போல இல்ல பேசற நீ?''
""அப்படித்தான் தோணுது அங்கிள்'' சொன்னவன் கண்களில் கண்ணீர் திவலை ஒன்று தோன்றி நிலையாய் நின்றது.
""மாதவன்னு ஒருத்தன் இருக்கான். ந்யூ காலனி, டென்த்ஸ்ட்ரீட்ல. அவனுக்கு ஒரு காலும் வேலை கொடுக்கக் கூடாதுன்னு முடிவு எடுத்துட்டு இன்டர்வ்யூ நடத்துவாளா.எக்ஸாம் கண்டக்ட் பண்ணுவாளா. ஏதோ உன் நேரம் இதுவரைக்கும் கிடைக்கலை. ஏதாவது ஒரு இன்டர்வ்யூவுல உன்னை செலக்ட் பண்ணாம போயிடுவானா இல்லே. ஒரு எக்ஸாம்ல நீ பாஸாகாமதான் போயிடுவியா. உனக்குன்னு ஒரு நல்ல நேரம் கண்டிப்பா இருக்கும் மாதவா.எல்லாருக்கும் ஒரு ஆப்பர்சூனிட்டி உலகத்தில் இருக்கு. முயற்சி பண்ணிண்டே இருக்கணும். இன்னிக்கு இன்டர்வ்யூலயே நீ செலக்ட் ஆனாலும் ஆகலாம். அடுத்த தடவை நீ எழுதற எக்ஸாம்ல பாஸ் ஆகலாம்'' கணபதி பேசிக் கொண்டே போக, மாதவன் முக பாவனை மாற ஆரம்பித்தது. முகம் நிமிர்ந்து பார்க்கத் தொடங்கியது.
""இந்த உலகம் நம்மை ரிஜெக்ட் பண்ணறத்துக்காகவே இருக்கறதா நினைக்கறது தப்பு. உன்னை மாதிரி பல பேர் இன்டர்வ்யூவுக்கு வர்றான். ஒரிரண்டு பேரைதான் அவனால செலக்ட் பண்ண முடியும். லட்சக்கணக்கான பேர் பரீட்சை எழுதறான். ஆயிரக்கணக்கான பேரைதான் அவனால செலக்ட் பண்ண முடியும். தட்ஸ் ஆல். உன்னை ரிஜெக்ட் பண்ணனும்கறது அவங்களோட எண்ணம் இல்லை. யாருக்குத் தெரியும். ஒரே நேரத்துல நாலைஞ்சு இடங்கள்லேயிருந்து அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்து, எந்த வேலையில சேர்றதுன்னு ஒரு வித இன்பக் குழப்பம் உனக்கு வருமோ என்னவோ. யார் கண்டது? குளிச்சு சாப்பிட்டு இன்டர்வ்யூவுக்குப் போயிட்டு வாப்பா. நம்பிக்கையோட.. உனக்கு வேலை கிடைக்கும். இன்னிக்கே கூட கிடைக்கலாம்..'' சொல்லியவாறு எழுந்தார் கணபதி.
""நான் வரேன் மாதவா.. நாளன்னைக்குவரேன்' சொல்லி விட்டுக் கிளம்பினார் கணபதி. குளிக்க டவலுடன் பாத்ரூமுக்குள் நுழைந்தான் மாதவன் அன்று மாலை அவன் கைப்பேசியை எடுத்து நம்பரை அழுத்த, அடுத்த முனையில் கைப்பேசியை எடுத்தது அவன் அப்பா..
""என்னடா?''
""அப்பா எனக்கு ஒரு வேலை ஆல் மோஸ்ட் கிடைச்சிடுச்சு'' அவன் குரலில் குதூகலம் தானாக சேர்ந்து கொண்டது.
""என்னது, ஆல்மோஸ்ட் வேலை கிடைச்சிடுச்சா.. அது என்னடா ஆல்மோஸ்ட் வேலை கிடைக்கறது. சரிதான். வேலை கிடைக்கறதுங்கறது போய் ஆல்மோஸ்ட் வேலை கிடைக்கற ஸ்டேஜுக்கு இறங்கிட்டே. பேஷ் பேஷ். அது எங்கே கிடைக்கும் உனக்கு. அதுக்கெல்லாம் மூளைஇல்லவேணும்..'' மறுமுனையில் அப்பா கல்யாண மண்பட நாகஸ்வர ஓசை இடையே திட்டுப் பாட்டு பாட ஆரம்பித்தார். முழு வீச்சில்.
""அது வந்து இன்னிக்கு ஆல்வின் இன்டஸ்ட்ரீஸ்ல இன்டர்வ்யூவுல என்னை செலக்ட் பண்ணிட்டாங்கப்பா. எம்டியை பார்க்கணுமாம். அவர் ஓகேன்னா வேலை கன்பார்ம்ட். அவரை எப்ப நான் பார்க்கணும்னு எனக்கு இன்பார்ம் பண்ணி சொல்லறதா சொல்லி இருக்காங்க'' சொன்னான்.
""சரிதான் இன்டர்வ்யூ பண்ணறவங்க உன்னை ஓகே சொல்லவே நிறைய கம்பெனி ஏறி இறங்க வேண்டியதாப் போச்சு. இன்னும் எவ்வளவு எம்டிங்களைப் பார்த்தப்புறம் உனக்கு வேலை கிடைக்குமோ.. எம்டி உன்னை உடனே ஓகே சொல்லிடுவாரா.. ம்.. நான் நம்பலை.. என்னவோ வேலை கிடைச்சுட்ட மாதிரி இல்ல போன் பண்ணியிருக்கே.. இதைச் சொல்லத்தானா.. சரி வேற ஏதாவது விஷயம் இருக்கா சொல்ல?'' அப்பாவின் குரலில் ஏளனம் தூக்கலாக இருந்தது. தொடர்ந்து அவர், ""இல்லேன்னா •போனை உடனே வை'' என்றார்.
""அப்பா கணபதி அங்கிள். உன் ஃப்ரண்ட், வந்திருந்தார் காலைல..'
""யாரு அந்த உதவாக்கரை கணபதியா.. வீட்டுக்கு வந்தானா.. வேஸ்ட் ஃபெல்லோ... கடன் கேட்கத்தான் வந்திருப்பான். வேலைக்குப் போய் நாலு காசு சம்பாதிக்க வக்கில்லை. யார் கிட்ட கடன் கேட்கலாம்னு அலைய வேண்டியது. உன்னை ஏதாவது கடன் கேட்டானா..?'' கேட்டார்.
""கடன் வாங்கத்தான் வந்ததா சொன்னார். அப்புறம் நீ ஊருக்கு போயிருக்கேன்னதும் கொஞ்ச நேரம் பேசிட்டுப் போனார் அவ்வளவுதான்''
""என்னது கொஞ்ச நேரம் பேசிட்டுப் போனானா. . நான் இல்லேன்னு அவனை உடனே போகச் சொல்லிட வேண்டியதுதானே. அவன் கூட உனக்கு என்ன பேச்சு. அவன் பேச்சைக் கேட்டேன்னா நீ உருப்பட்டா மாதிரிதான்..
ஏற்கெனவே நீ ரொம்ப லட்சணம்.. அவன் கூட சேர்ந்தேன்னா சுத்தம்.. என்ன பேச்சு அவன் கூட உனக்கு..?''
""இல்லப்பா, உண்மை என்னன்னா நான் வெறுப்புலஇன்னிக்கு இன்டர்வ்யூ கூட போகற மூடுல இல்ல. கணபதி அங்கிள்தான் எனக்கு அட்வைஸ் பண்ணி, உற்சாகப்படுத்தி.. விடாமுயற்சி பண்ணனும்னு எடுத்துச் சொல்லி.. நான் இன்டர்வ்யூவுக்கே போனேன்..''
""அதான பார்த்தேன். நீ ஏதோ முதல்ல ஆல்மோஸ்ட் அது இதுன்னு சொன்ன உடனே ஒரு அஞ்சு பர்சண்ட் ஏதோ உருப்புட்டுட்டேன்னு பார்த்தேன். காலணா காசுக்கு சம்பாதிக்க துப்பு
இல்லாம, வேலை வெட்டி இல்லாம ஊரைச் சுத்தி யார் கிட்ட கடன் வாங்கலாம்னு திரியறவன் பேச்சைக் கேட்டு நீ இன்டர்வ்யூக்கு போனேன்னு சொல்றே.. அவனே நாலு காசு சம்பாதிக்க வக்கில்லாம வெட்டியா ஊர் சுத்திண்டு திரியறான். அவன் உன்னை விடா முயற்சி செய்யச் சொன்னானா.
விளங்கினா மாதிரிதான். எனக்கு உன் மேல இருந்த அந்த அஞ்சு பர்சண்ட்நம்பிக்கையும் போச்சு. போயே போச்சு. இனிமே கணபதி வந்தான் அவன் கூட பேசிட்டு இருந்தேன்னு சொன்னே.. எனக்கு வர கோபத்துல என்னபண்ணுவேன்னே தெரியாது. சரி வேற ஏதாவது விஷயம் இருக்கா..?'' அப்பாவின் குரலில் சூடு.
""அம்மா கூட பேசணும்பா.. '' சொன்னான்.
""அம்மா, பெரியம்மா, சித்தி கூட எல்லாம் பேசிண்டிருக்கா. அப்புறம் பேசு..'' சொல்லி விட்டு இணைப்பைத் துண்டித்தார் அப்பா.
அவன் கைப்பேசியை வைத்து திரும்புவதற்குள் அது ரிங்டோன் இசை பாட, எடுத்தான் ""ஹலோ மாதவன் ஹியர்.. யாரு..''
""மிஸ்டர் மாதவன்.. ஆல்வின் இண்டஸ்ட்ரீஸ்லேயிருந்து கால் பண்ணறோம். நாளைக்கு நீங்க எங்க எம்டியை லெவன் ஓ க்ளாக் வந்துமீட் பண்ணனும். வித் ஆல் சர்டிபிகேட்ஸ்.. ஆல் தி பெஸ்ட்..''
கைப்பேசியை வைத்துவிட்டு அவன் கூட படித்த சரவணன் என்னும் நண்பன் பணிபுரியும் கம்பெனிக்கு எதற்கும் இருக்கட்டுமே என்று பயோடேட்டா அனுப்புவதில் மும்முரமானான் மாதவன். அவனை அன்று மாலை மாதவன் தொடர்பு கொண்டு ஏதாவது வேலை காலி இருக்கின்றதா என்று விசாரிக்க, ஒரு வேலை காலி இருக்கின்றது. அப்ளைபண்ணு என்று சொல்லி இருந்தான்
சரவணன்.
அப்ளிகேஷன் டைப் பண்ண ஆரம்பித்தான் மாதவன். சுறுசுறுப்பாக..! ஒன்றுக்கு இரண்டாக வேலை கிடைக்கட்டுமே என்று..!

Tags : Virtual
ADVERTISEMENT
ADVERTISEMENT