தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கோடை காய்ச்சலை தடுக்க?

15th May 2022 06:00 AM | பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

ADVERTISEMENT


எனக்கு அதீத தலைவலியுடன் உடல் சோர்வு, 100 டிகிரிக்கு மேல் காய்ச்சல், நடுக்கம், பசியின்மை, தொண்டை வலி என்று இந்தக் கடுங் கோடையில் அவதிப்படுகிறேன். இதை எப்படி குணப்படுத்துவது?

-முரளி,
சென்னை.

பொது இடங்களில் விற்கப்படும் ஐஸ் கலந்த கரும்புச் சாறு, பழச்சாறு, ஐஸ் மோர், சுத்தமில்லாத அருவாளால் வெட்டப்பட்ட இளநீர்த் தேங்காயில் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சும் வசதியை ஏற்படுத்தித் தரும் கடைகள் ஆகியவற்றையும், ரசாயனம் கலந்த குளிர்பானங்கள், கலர் பவுடர் கலந்த  மாமிசங்களையும் நீங்கள் பயன்படுத்தியிருந்தால் நீங்கள் குறிப்பிடும் வகையில் காய்ச்சலும், உடல் சோர்வும், நடுக்கமும், பசியின்மையும், தொண்டை வலியும் ஏற்பட வாய்ப்பிருக்கின்றன.

இதில் காணப்படும் அதீத தலைவலி, உடல் சோர்வு மற்றும் நடுக்கம் ஆகியவை நுண்கிருமிகளால் ஏற்படும் வாயுவின் சீற்றமானது,  நரம்பு மண்டலங்களைப் பாதிப்பதையே எடுத்துக் காட்டுகிறது. 

ADVERTISEMENT

வயிற்றிலிருந்து செயல்பட வேண்டிய பித்த தோஷத்தின் குணங்களின் வெளியேற்றம், தாதுக்களில் உணரப்படுவதால் கடும் காய்ச்சலையும் பசியின்மையும் வெளிப்படுத்துகின்றன. வாயு பித்தங்களின் சமநிலைக் கேட்டின் தொடர்பு மருந்துகளின் வழியாக துண்டிக்கப்படாமல் தொடர்ந்தால் அதுவே தொண்டை வலியையும் சிலருக்கு சுய நினைவை இழக்கும் நிலைக்கும் கொண்டு சென்றுவிடும் ஆபத்தையும் ஏற்படுத்தும்.

கோரைக்கிழங்கு, பர்பாடகப் புல், வெட்டி வேர், ரக்த சந்தனம், சுகந்தபலா மற்றும் சுக்கு ஆகியவை வகைக்கு 24 கிராம் எடுத்துப் பொடித்து, 750 மி.லி. லிட்டர் தண்ணீருடன் கலந்து அது பாதி அளவு குறுகும் வரை காய்ச்சி, குளிர்ந்த பிறகு வடிகட்டி மண்பானையில் ஊற்றி வைத்துக் கொண்டு, சிறிது சிறிதாகப் பருகுவதால் காய்ச்சல் நன்கு குணமாவதுடன் பசியும் நன்றாக எடுக்கத் தொடங்கும். ""ஷடங்க பானீயம்'' என்ற பெயரில் இந்தப் பொடி மருந்து தற்சமயம் விற்பனையிலுள்ளது.

உடல் பலவீனப்பட்டுவிடாமலிருக்க முழு புழுங்கலரிசியை லேசாக வறுத்து, அதில் சுமார் 200 கிராம் எடுத்து சுக்கு, தனியா, கண்டந்திப்பிலி ஆகியவற்றை வகைக்கு இரண்டு கிராம் சேர்த்து, ஒன்றரை லிட்டர் தண்ணீருடன் வேக வைத்து, அதில் அரிசி நன்கு வேகும் வரை காய்ச்சி, வடிகட்டி, தேவையான அளவு உப்பு கலந்து சிறிது சிறிதாகப் பருகி வர வேண்டும்.

ஒருநாளில் இருமுறை இதுபோல கஞ்சிக் காய்ச்சிக் குடிக்கலாம். மூன்று நாள்களிலேயே நல்லதொரு மாற்றத்தை உடலில் ஏற்படுத்தித் தரும். அதன்பிறகு சாதாரண உணவுக்கு நாம் தினப்படி சாப்பிடும் வகையில் மாறிவிடலாம்.

விற்பனையிலுள்ள சீந்தில்கொடி, பதிமுகம், வேப்பம்பட்டை, ரக்த சந்தனம், தனியா ஆகியவற்றின் சேர்க்கையினால் தயாரிக்கப்பட்ட கஷாயத்துடன் இருவில்வாதி குளிகைகளை அரைத்துச் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் பித்த- கபங்களின் சேர்க்கையால் ஏற்படும் காய்ச்சல், வாந்தி, எரிச்சல், தண்ணீர் வேட்கை போன்றவை குணமாவதுடன் பசியும் நன்றாக ஏற்படும்.

மாலையில் தேவதாரு, தசமூலம், ஷட்பலம் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்ட கஷாய மருந்தை இரண்டு கோரோசனாதி குளிகையுடன் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் தலைவலி, உடல் சோர்வு, காய்ச்சல், நடுக்கம், தொண்டை வலி போன்றவை நன்கு குணமாகி உடல் தெம்பையும் பெறலாம். இந்த கஷாய மருந்தும் விற்பனையிலுள்ளது.

கோடை வெயிலில் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்வதும் தரமற்ற பழரசம், தண்ணீர், ஐஸ் கலந்த குளிர்பானங்களைக் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

இரண்டு சுதர்சனம் அல்லது மஹா சுதர்சனம் எனும் மாத்திரைகளை இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான தண்ணீருடன் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டால் கோடைக் காய்ச்சலை பெருமளவில் தவிர்க்கலாம்.

(தொடரும்)

ADVERTISEMENT
ADVERTISEMENT