தினமணி கதிர்

60 ஆண்டு கால கனவு: பொன்னியின் செல்வன்

15th May 2022 06:00 AM | ஜி. அசோக்

ADVERTISEMENT


1950-ஆம் ஆண்டில் தொடங்கி, 1954-ஆம் ஆண்டு வரை, கல்கி எழுதிய "பொன்னியின் செல்வன்' சரித்திர தொடர் கதை, "கல்கி' வார இதழில் தொடராக வெளிவந்து வாசகர்களின் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர், 5 பாகங்கள் கொண்ட புத்தகமாகவும் வெளியிடப்பட்டது.

சோழ நாட்டில் நடக்கும்படியாக எழுதப்பட்ட இந்தக் கதைக்குள் இருந்த சுவாரஸ்யத்தை உணர்ந்த எம்.ஜி.ஆர், 1958-ஆம் ஆண்டில் ரூ.10 ஆயிரம் கொடுத்து "பொன்னியின் செல்வன்' கதையின் உரிமையைப் பெற்றார். இதன்பின்னர், சில இயக்குநர்களை அணுகி இது சார்ந்து பேசியுள்ளார் எம்.ஜி.ஆர்.

ஆனால், இறுதியில் தானே தயாரித்து இயக்குவதாக முடிவெடுத்தார். வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பதாகவும் இருந்தது. ஜெமினி கணேசன், வைஜெயந்தி மாலா, பத்மினி, சாவித்ரி, சரோஜா தேவி, நம்பியார், எம்.என்.ராஜம், டி.எஸ். பாலையா உள்ளிட்ட பல நட்சத்திரங்களை நடிக்கவைக்கவும் முடிவு செய்திருந்தார். "எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்' அளிக்கும் "பொன்னியின் செல்வன்' போஸ்டர்கூட வெளியிடப்பட்டது.

ஒருநாள், சீர்காழியில் மேடை நாடகத்தில் நடிக்கும்போது மேடையிலேயே எம்.ஜி.ஆருக்கு விபத்து ஏற்பட்டது. அதிலிருந்து குணமடைய எம்.ஜி.ஆருக்கு 6 மாதங்கள் தேவைப்பட்டன. குணமடைந்ததும், அவர் நடிப்பில் பாதியில் நின்ற போயிருந்த படங்களை நடித்துக் கொடுத்தார். இதனால், இயக்குநராக பொன்னியின் செல்வனுக்கான பணியைச் செய்ய முடியவில்லை.

ADVERTISEMENT

1990-களில், எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து கமலும் "பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்க முடிவு செய்தார். ஆனால், அவருடைய கனவும் கனவாகவே நின்றுவிட்டது. பொன்னியின் செல்வன், இதுநாள் வரை படமாகத்தான் வெளிவரவில்லையே தவிர, நாடகமாகப் பல மேடைகளில் அரங்கேறியிருக்கிறது. 2,400 பக்கங்கள் கொண்ட நாவலை நாடகமாக்குவதும் அவ்வளவு எளிதல்ல. ஆனால், அதைச் சாத்தியமாக்கிக் காட்டியது மேஜிக் லேன்டர்ன் நாடகக் குழு. 1999-ஆம் ஆண்டு, பொன்னியின் செல்வன் கதையை நான்கு மணி நேர நாடகமாக்கியது.

சென்னையில் நடந்த இந்த நாடகத்தில் நடிகர்கள் நாசர், பசுபதி உள்ளிட்டோர் நடித்தனர். 2009, 2010-ஆம் ஆண்டுகளில்... மணிரத்னம், "பொன்னியின் செல்வன்' கதையைத் படமாக எடுக்கப் போகிறார் என்ற செய்திகள் வெளியாகின. மகேஷ்பாபு, விஜய், அனுஷ்கா உள்ளிட்டோர் நடிப்பதாக தகவல்கள் தந்தியடித்தன. ஆனால், அப்போதும் அது போட்டோ ஷூட்டோடு நின்று போனது.

1958-ஆம் ஆண்டு முதல் 2018 வரையில் கனவாக இருந்த பொன்னியின் செல்வன் படம், 2019-ஆம் ஆண்டின் இறுதியில் நனவாகத் தொடங்கியது. இந்த முறை நிச்சயம் மிஸ் ஆகாது என்று பொன்னியின் செல்வன் ரசிகர்களும் நம்பிக்கை கொண்டுள்ளனர். அந்த நம்பிக்கைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்பு, டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என வேகம் எடுத்தன மணிரத்னத்தின் பணிகள்.

அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், சுந்தர சோழராக அமிதாப்பச்சன், வல்லவராயன் வந்தியதேவனாக கார்த்தி, பெரிய பழுவேட்டரையராக தெலுங்கு நடிகர் மோகன்பாபு, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவை நாச்சியராக கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். கதைப்படி நந்தினி கதாபாத்திரம் பேரழகி. கதையின் வில்லியான இந்த வேடம் ஏமாற்று வேலை செய்யும் எனவே, ஐஸ்வர்யாரையை விதவிதமான தோற்றங்களில் காணலாம்.

இப்படத்தின் தற்போதைய அப்டேட் செய்தி... தாய்லாந்து, ஹைதராபாத், புதுச்சேரி, சென்னை என பல இடங்களில் படப்பிடிப்பை நடத்திய படக் குழு, தற்போது இறுதிக் கட்டப் பணிகளில் இருக்கிறது. ஒருபுறம் டப்பிங் நடந்து வரும் நிலையிஸ் கிராஃபிக்ஸ் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்தக் கோடை விடுமுறைக்கு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தை இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் வெளியிட வேண்டும் என்பது படக்குழுவின் எண்ணமாக உள்ளது.

ரூ. 500 கோடி செலவில் எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் பல்வேறு நாடுகளில் இருக்கும் முக்கியமான நிறுவனங்களில் நடந்து வருகின்றன. இது முடிந்ததும் படத்தின் விளம்பரப் பணிகள் தொடங்கவுள்ளன. ஜூன் முதல் வாரத்தில் இதற்கான முதல் கட்டப் பணிகள் தொடங்குகின்றன.

இதற்கிடையில் ஒவ்வொரு கதாபாத்திரங்களாக அறிமுகம் செய்வது, டீஸர், பாடல்கள் என ஒவ்வொன்றும் வெளியாகவுள்ளது.

இவையெல்லாம் முடிந்ததும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாத இறுதியில் படம் திரைக்கு வரும் என்கிறார்கள்.

எம்.ஜி.ஆர். காலத்தில் காசு கொடுத்து கதை உரிமை பெறப்பட்டது. அதன்பின்னர், பொன்னியின் செல்வன் நாட்டுடைமையாக்கப்பட்டுவிட்ட காரணத்தால் மணிரத்னத்துக்கு கதை உரிமை பற்றிய பிரச்னை இல்லை. ஆனால், இவ்வளவு பெரிய கதையைத் திரைக்கதையாக்குவதில் பல சிக்கல்கள் இருந்திருக்கும். அதன் காரணமாகத்தான் பொன்னியின் செல்வனை நாடகமாக எழுதிய குமரவேலையும் திரைக்கதையாக்கத்தில் சேர்த்துள்ளார் மணிரத்னம்.

வசனங்கள் எழுதும் பணியை எழுத்தாளர் ஜெயமோகனுக்கு வழங்கியுள்ளார். 60 ஆண்டுகளாகப் பலரின் கனவாக இருந்த "பொன்னியின் செல்வன்' படம், இந்தத் திறமை வாய்ந்த படக்குழுவால் நிச்சயம் நனவாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT