தினமணி கதிர்

அன்னையர் தினம்: வந்தது எப்படி?

8th May 2022 06:00 AM | தி.நந்தகுமார்

ADVERTISEMENT


மாதா, பிதா, குரு, தெய்வம்- இதில் எப்போதும் அன்னைக்குதான் முக்கியம். அந்தத் தாய்க்கு ஒரு தினம் கொண்டாடப்படுகிறது என்றால் வியப்புதானே..!

புத்தாண்டு, பண்டிகைக் கொண்டாட்டங்கள்தான் உண்டு.  ஆனால், அன்னையருக்கும் ஒரு கொண்டாட்டம் இருக்கிறது.  தாயிற் சிறந்த கோயிலும் இல்லை..! இது உண்மைதான் ஒவ்வொருவரும் தங்களது தாயை மனதார வழிபட்டு, தங்களது பணிகளைத் தொடங்குகின்றனர்.  இப்படிப்பட்ட தாயைப் போற்றும் வகையில்,  ஆண்டு தோறும் மே மாதத்தில் 2-வது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. 

அன்னையை ஆராதிக்கும் கொண்டாட்டங்கள் பண்டைய காலத்தில் கிரேக்கத்தில் இருந்தன.  வசந்தக் காலத்தின் தொடக்கத்தை அவர்கள் தாய் தெய்வத்தை வணங்கியே கொண்டாடினர்.  

ருமேனியர்கள் "சைபெலி' என்ற பெண் தெய்வத்தைத் தாயாகக் கருதி வழிபட்டனர். இயேசு கிறிஸ்துவின் வருகைக்குப் பின்னர்,   மாதா ஆலயத்துக்கு மரியாதை செய்வதாக மாறியது. இவை எல்லாமே மத அடிப்படையில் உருவானவை! 

ADVERTISEMENT

இப்போது கொண்டாடும் அன்னையர் தினம் அப்படி அல்ல!

"அனா ஜார்விஸ்' என்ற சமூக சேவகி அமெரிக்காவின் வெர்ஜினியா மாநிலத்தில் கிராப்டன் என்ற இடத்தில் வாழ்ந்து வந்தார்.  

அப்போது யுத்தத்தில் உயிரிழந்த வீரர்களின்  குடும்பங்கள் தடுமாறி சீரழிந்தன.  இவர்களை ஒன்றுசேர்க்கவும், சமாதானம் செய்யவும் அவர் கடுமையாகச் சோர்வடையாமலும் போராடினார். 

தனது மகள் ரீவ்ஸ் ஜார்வீஸூக்கு பார்வையில்லை என்ற சோகத்தையும் பொருள்படுத்தாமலும் அனா ஜார்விஸ் தனது இறுதிக் காலம் வரை சமூகச் சேவையில் ஈடுபட்டு 1904-ஆம் ஆண்டில் மறைவுற்றார்.

இந்த நிலையில், ரீவ்ஸ் ஜார்வீஸ் தனது தாய் அனா ஜார்விஸின் நினைவாக தேவாலயத்தில் 1908-ஆம் ஆண்டு மே மாதத்தின் 2-வது ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாட்டை நடத்தினார்.  1913-ஆம் ஆண்டில் தனது வேலையின் காரணமாக ரீவ்ஸ் ஜார்வீஸ் , பென்சில்வேனியா என்ற மாநிலத்தில் உள்ள பிலடெல்பியாவில் குடியேறி, அங்கு சமூகச் சேவையிலும் ஈடுபட்டார்.

அன்னையைப் போற்றுவது குறித்த தனது எண்ணத்தை அவர் பென்சில் வேனியாவின் மாநில அரசுக்குத் தெரிவித்தார். 

இதையேற்று,  1913-ஆம் ஆண்டு முதல் அன்னையர் தினம் அங்கீகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து,  மே மாதத்தில் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினமாகக் கொண்டாடப்படும் என்று அப்போதைய அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் அறிவித்தார்.

இதைப் பின்பற்றி  இந்தியா, இலங்கை, பிரான்ஸ், கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்பட 80-க்கும் மேற்பட்ட நாடுகள் அன்னையர் தினத்தைக் கொண்டாடி வருகின்றன.  

கடந்த சில ஆண்டுகளாக அன்னையர் தினத்தன்று, தங்களது தாயுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, அன்னையர் தின வாழ்த்துகள் என்று கூறி டிரென்டிங் செய்யும் கலாசாரம் பெருவிட்டது.  தினம் தினம் அன்னையர் தினமாகக் கொண்டாடுவோம்.  அந்தவொரு நாளில் மட்டுமல்ல..!

இந்த 2022-ஆம் ஆண்டில் மே  8-இல் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT