தினமணி கதிர்

இந்தியாவின்  ஒலிம்பிக்ஸ்  நம்பிக்கை!

1st May 2022 06:00 AM | சக்கரவர்த்தி

ADVERTISEMENT

 

நீளம் தாண்டுவதில் உலக சாதனை 8.95 மீ. (29 அடி நாலேகால் அங்குலம்). 1991-இல் நடந்த சாதனையை இதுவரை யாரும் தகர்க்கவில்லை. சென்ற ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்ஸில் 8.41 மீ. தாண்டியதுதான் சாதனை.

தூத்துக்குடியைச் சேர்ந்த ஜஸ்வின் ஆல்ட்ரின் சென்ற மாதம் 8.37 மீ. தாண்டி சாதனை படைத்துள்ளார். ஒலிம்பிக்ஸ் சாதனைக்கும், ஜெஸ்வினின் சாதனைக்கும் ஒன்றரை அடி வித்தியாசம் மட்டுமே இருந்தாலும் அதற்காக அதிகம் உழைக்க வேண்டியக் கட்டாயத்தில் ஜெஸ்வின் இருக்கிறார். திடீரென்று விளையாட்டு அரங்கில் பேசப்படுபவர் அல்ல ஜெஸ்வின். 20 வயதுக்கு கீழ் நீளம் தாண்டுவதில் தேசிய சாம்பியனாக இருப்பவர். 20 வயது நிறைவானதால் அடுத்த பிரிவுக்குச் சென்றிருப்பவர். காலில் காயம் ஏற்பட்டதினால், 2020 ஒலிம்பிக்சில் கலந்து கொள்ள முடியவில்லை.

இந்தியாவின் ஒலிம்பிக்ஸ் நம்பிக்கையாக மாறியிருக்கும் ஜெஸ்வின் நீளம் தாண்டுவதில் பெற்று அனுபவம் பயிற்சி குறித்து மனம் திறக்கிறார்.

ADVERTISEMENT

"தூத்துக்குடிக்கு அருகே உள்ள முதலூர் கிராமத்தைச் சேர்ந்தவன். உலகம் முழுவதும் பேசப்படும் மஸ்கொத்து அல்வா இந்த கிராமத்தில்தான் தயாராகிறது. எனது அப்பா ஜான்ஸன், மஸ்கொத்து அல்வா தயாரித்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். நான்தான் குடும்பத்தில் மூத்தவன்.

இதுவரை பயிற்சிக்காக மூன்று முறை வெளிநாடுகள் சென்றிருக்கிறேன். இரும்பு உற்பத்தி ஆலையின் ஆதரவுடன் பெங்களூருவில் பயிற்சி செய்து வருகிறேன். நீளம் தாண்டுவதில் 8 மீ மேல் தாண்டுவது பெரிய விஷயம். சில மாதங்களாக நான் 8 மீட்டருக்கு அதிகமாகவேத் தாண்டிவருகிறேன். இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள முடியும்.

பள்ளியில் கோ- கோ , வாலிபால் ஆட்டங்களில் பங்கு பெற்றுள்ளேன். நன்றாக ஓடவும் செய்வேன். உயரம் தாண்டுவேன். பிறகுதான் நீளம் தாண்டுவது எனக்கு பொருந்தும் எனக் கருதி நீளம் தாண்டுவதில் கவனம் செலுத்தத் தொடங்கினேன். ஜுனியர்களுக்கான போட்டிகளில் பங்கு பெற்று முதலாவதாக வந்தேன்.

2019-இ ல் ராஞ்சியில் ஜூனியர்களுக்காக தேசிய போட்டிகள் நடந்தன. அதில் நான் கலந்து கொண்டேன். எனது நீளம் தாண்டுதலைக் கண்ட பிரான்ஸ் நாட்டு பயிற்சியாளர் ஆண்டனியைச் எனக்கு பயிற்சி தர முன்வந்தார். புதிய யுக்திகளைச் சொல்லி தந்தார். அவர் தந்த பயிற்சியினால்தான் என்னால் 8 மீ தூரத்திற்கு அதிகமாக தாண்ட முடிகிறது.

தொடக்கத்தில் வீட்டில் படிப்பில் கவனம் செலுத்தச் சொன்னார்கள். விளையாட்டில் சாதனை புரிந்தால் வேலை தானாகக் கிடைக்கும் என்று பெற்றோரைச் சமாதானம் செய்து தூரம் தாண்டுவதில் ஈடுபட்டேன்.

ஏப்ரல் 2022-இல் கேரளம் மலப்புரத்தில் நடந்த தேசிய போட்டியில் 8.37 மீ. நீளம் தாண்டி மலைக்க வைத்தேன். ஆனால் அதில் ஒரு திருப்பம். இந்த சாதனைக்குத் தங்கப் பதக்கம் கிடைத்தாலும், தேசிய சாதனையாகக் கருதப்படாதாம். நான் நீளம் தாண்டியபோது காற்று வேகமாக வீசியதால் என்னால் அந்த நீளத்தைத் தாண்ட முடிந்திருக்கிறது என்று போட்டி ஏற்பாடு செய்த தேசிய விளையாட்டு வல்லுநர்கள் முடிவு செய்துள்ளார்கள். உடலில் எடை கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால் பார்த்து பார்த்து சாப்பிட வேண்டியதிருக்கிறது. தற்சமயம் கியூபா பயிற்சியாளரான யோயன்றி பெடன்சாஸ் எனக்குப் பயிற்சி தந்து வருகிறார். இவரது பயிற்சிகள் மூலம் நீளம் தாண்டுவதில் சாதனை புரிவேன்' என்கிறார் ஜெஸ்வின்.

ADVERTISEMENT
ADVERTISEMENT