தினமணி கதிர்

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 94

26th Jun 2022 06:00 AM | கி. வைத்தியநாதன்

ADVERTISEMENT

 

ஆளுநர் சென்னா ரெட்டி என்னிடம் ஜார்ஜ் பெர்ணான்டஸ் - முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு குறித்து கேட்டது எனக்குத் திகைப்பை ஏற்படுத்தியது. எங்கோ கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடந்த சந்திப்பு குறித்து அவருக்கு எப்படித் தெரிந்தது என்பது மட்டுமல்ல எனது வியப்பு.

ஆளுநராக இருப்பவர்களுக்கு மத்திய, மாநில உளவுத் துறைகளில் தகவல் தருவதற்குப் பலர் இருக்கக் கூடும். எனது சந்தேகம், அந்த உளவுத் துறையினர் ஜார்ஜ்பெர்ணான்டஸைக் கண்காணிக்கிறார்களா அல்லது எனது செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றனவா என்பது.

ஜார்ஜ் பெர்ணான்டஸூக்கும் எனக்கும் இடையே நடந்த எல்லா உரையாடல்களையும் நான் அவரிடம் தெரிவித்தேன். அனைத்தையும் அவர் அமைதியாகக் கேட்டுக் கொண்டார். எந்தக் குறுக்குக் கேள்வியும் கேட்கவில்லை. நான் பேசி முடித்ததும் சிரித்தார்.

ADVERTISEMENT

""என்ன சிரிக்கிறீர்கள்? நான் சொன்னதில் ஏதாவது தவறு இருக்கிறதா?''

""இல்லையில்லை. ஜார்ஜ் பெர்ணான்டஸ் தனது நேரத்தை வீணாக்குகிறார்.

ஜெயலலிதா ஒருநாளும் அவரை நம்பமாட்டார் என்று எனக்குத் தெரியும்.''

""எதனால் அப்படிச் சொல்கிறீர்கள்?''

""ஜார்ஜ் பெர்ணான்டஸூம், கருணாநிதியும் நெருங்கிய நண்பர்கள். ஜனதா கட்சி ஆட்சியின்போதும் சரி, தேசிய முன்னணி ஆட்சியிலும் சரி அவர்கள் இணைந்து செயல்பட்டவர்கள். அதெல்லாம் ஜெயலலிதாவுக்குத் தெரியாதா என்ன? இப்போதைக்கு அவருக்கு காங்கிரஸூக்கு எதிரான தலைவர்களின் நட்பு தேவை. அதனால்சந்திக்க ஒப்புக்கொண்டார். அதற்கு மேல் ஒன்றும் இல்லை.''

""உங்களுக்குத்தான் இவ்வளவு தெரிந்திருக்கிறது. பிறகு ஏன் என்னை வரவழைத்து, நாங்கள் என்ன பேசினோம் என்று தெரிந்து கொள்ள நினைக்கிறீர்கள்?''

""நான் கேள்விப்படாத, எனக்குத் தெரியாத ஏதாவது புதிய செய்தி கிடைக்கிறதா என்று பார்த்தேன். அவ்வளவுதான்...''

""ஜெயலலிதா ஆட்சி தொடருமா இல்லை கவிழுமா?''

""எதற்காக அவரது ஆட்சி கவிழ வேண்டும்? சட்டப் பேரவையில் 164 இடங்களுடன் அதிமுக இருக்கும் நிலையில், ஆட்சியை யார் கவிழ்த்துவிட முடியும்? எதிர்க்கட்சி என்று சொல்வதற்கு 9 பேர்தான் இருக்கிறார்கள். காங்கிரஸ் அதிகாரபூர்வ எதிர்க்கட்சியாக இருந்தாலும், அதிமுகவின் கூட்டணிக் கட்சிதானே. பிறகு ஏன் ஆட்சி கவிழ வேண்டும்?''

""அதிமுக ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. நீங்கள் நினைத்தால் அதன் அடிப்படையில் ஆட்சியைக் கலைக்கலாமே, அதனால் கேட்டேன்.''

""ஆட்சியைக் கலைப்பது போன்ற முடிவுகளை பிரதமர் நரசிம்ம ராவ்தான் எடுக்க வேண்டும். நான் எடுக்க முடியாது. அதிமுக பிளவுபட்டால் வேண்டுமானால், காங்கிரஸின் ஆதரவுடன் மாற்று அரசு அமையலாம். அதற்கும் வாய்ப்பு தெரியவில்லை.''

ஆளுநராகப் பதவி வகிக்கும் ஒருவரிடம் அதிகப்பிரசங்கித்தனமாக எப்படிக் கேட்பது என்கிற தயக்கத்துடன் நான் அவரைப் பார்த்தேன்.

""செப்பண்டி... சொல்லு... சொல்லு... ஏதோ கேட்க விரும்புகிறாய் என்று தெரிகிறது. டெல்...'' என்று தெலுங்கு, தமிழ், ஆங்கிலம் கலந்து கேட்டார் அவர்.
""அதிமுகவைப் பிளவுபடுத்தி, காங்கிரஸின் ஆதரவுடன் மாற்று ஆட்சி அமைக்க நீங்கள் முயற்சி செய்வதாகக் கூறப்படுகிறது, அது உங்களுக்குத் தெரியுமா?''

""என்னை ஆளுநர் பதவியிலிருந்து அகற்றி வேறொரு ஆளுநரைக் கொண்டுவர முதல்வர் ஜெயலலிதா முயற்சி செய்வதாகக் கூறப்படுகிறது, அது உனக்குத் தெரியுமா?''

அவரும் சிரித்தார். நானும் சிரித்தேன். அவரிடமிருந்து விடைபெற்று வெளியே வந்தேன்.

உண்மை என்னவென்றால், நான் சொன்னதும் உண்மை, அவர் சொன்னதும் உண்மை என்பதுதான்.

சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் இருந்த எனது "நியூஸ்கிரைப்' அலுவலகத்துக்கு வந்தபோது, "தமிழரசி' வார இதழ் ஆசிரியர் ம. நடராஜன் என்னிடம் பேச விரும்புவதாகத் தொலைபேசி வந்தது என்று சொன்னார்கள். திரும்ப அழைத்தபோது, அவர் அந்த அலுவலகத்திலிருந்து சென்றுவிட்டிருந்தார்.

அன்று மாலையில் எனது நண்பரும் "வேன்டேஜ்' லெதர்ஸ் அதிபருமான சேதுப்பிரகாசம், என்னை சந்திக்க அலுவலகம் வந்தார். அவருடன் சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த அவரது நண்பர் ஒருவரும் இருந்தார். அவர்கள் இருவரும் பெசன்ட் நகர் கலாக்ஷேத்ரா காலனியிலுள்ள ம. நடராஜனின் வீட்டுக்கு அவரை சந்திக்க போய்க் கொண்டிருப்பதாகத் தெரிவித்தனர். அவர்களுடன் நானும் ஒட்டிக்கொண்டேன்.

நாங்கள் பெசன்ட் நகர் போய்ச் சேரும்போதே மணி சுமார் எட்டாகி இருந்தது. வழக்கம்போல மொட்டை மாடியில் கடற்கரைக் காற்று சில்லென்று வீச, ம. நடராஜனின் "சபை' கூடியிருந்தது. அவரை சந்திக்க வரும் முக்கியமான நண்பர்களும், அரசியல் பிரமுகர்களும், அவருடன் இரவு உணவு அருந்தியபடி பேசிக் கொண்டிருப்பது வழக்கம்.

நான் வருவேன் என்று அவர் எதிர்பார்த்ததாகவும், சேதுப்பிரகாசத்துடன் வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் சொன்னார் ம. நடராஜன். சிங்கப்பூரிலிருந்து வந்திருந்தவர், நடராஜன் குடும்பத்துக்கு நெருக்கமானவர் என்பது அவர்கள் பேசிக் கொண்டதிலிருந்து தெரிந்தது. அவரை அழைத்து வருவதற்காகத்தான் சேதுப்பிரகாசம் வந்திருந்தார் என்பதையும் புரிந்து கொண்டேன்.

தனது முழு நம்பிக்கைக்கு உள்ளவர்களாக இருந்தால் மட்டும்தான் ம. நடராஜன் தனது வீட்டுக்கு அழைப்பார். அப்படியே அழைத்தாலும், மிக முக்கியமானவர்கள் என்றால் மட்டும்தான் அவர்களை மாடிக்கு அனுமதிப்பார். மாடியில் இருக்கும்போது எந்தவித ஒளிவு மறைவோ, தயக்கமோ இல்லாமல் அவர் மனம் திறந்து பேசுவார், கருத்துத் தெரிவிப்பார் என்பதும் நான் பார்த்த உண்மை.

என்னிடம் திரும்பி ம. நடராஜன் கேட்ட கேள்வியால் நான் வாயடைத்துப் போனேன். நான் ஜார்ஜ் பெர்ணான்டஸைப் பார்த்தது, ஆளுநர் சென்னா ரெட்டியைப் பார்த்தது, பேசியது எல்லாவற்றையும் அவர் தெரிந்து வைத்திருக்கிறார் என்றால் எனக்கு எப்படி இருந்திருக்கும்?

ஆளுநருக்குத் தகவல் கிடைப்பதில் வியப்பில்லை. முதல்வர் ஜெயலலிதாவுடன் கருத்து வேறுபாடு இருப்பதாகச் சொல்லப்படும் ம. நடராஜனுக்கு எப்படி, யார் தகவல் தெரிவிக்கிறார்கள் என்கிற ஆச்சரியம் எனக்கு இன்றுவரை அகலவில்லை. அதற்கு விடை கிடைக்கவுமில்லை.

""ஆளுநரும் மாற மாட்டார். ஆட்சியும் கவிழாது'' என்று சொல்லிவிட்டுச் சிரித்தார் ம. நடராஜன்.

சிறிது நேரம் அரசியல் பேசிக் கொண்டிருந்தோம். சேதுப்பிரகாசத்துடன் நானும் கிளம்பிவிட்டேன். அடுத்த ஒரு வாரத்தில், நடராஜனே எதிர்பார்க்காத அந்த சம்பவம் நடந்தது.

ஒரு வருடம் முன்பு லண்டனிலிருந்து ம. நடராஜன் உபயோகப்படுத்தப்பட்ட பழைய டோயோட்டா "லெக்சஸ்' கார் ஒன்றை இறக்குமதி செய்திருந்தார். அதன் ஆவணங்கள் திருத்தப்பட்டு, தயாரிப்புத் தேதி மாற்றப்பட்டதாகக் கூறிப் பொருளாதாரக் குற்றவியல் பிரிவு அவர் மீது குற்றம் சாட்டியது. அவருடன் மேலும் மூன்று பேரையும் சேர்த்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த "லெக்சஸ்' கார் கைப்பற்றப்பட்டது.

பிரதமர் நரசிம்ம ராவ், சுப்பிரமணியம் சுவாமி, ஆளுநர் சென்னா ரெட்டி போன்றவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தும்கூட, ம. நடராஜன் மீதும் வழக்கு பாய்ந்தபோது, அதை முதல்வர் ஜெயலலிதாவே எதிர்பார்த்திருக்க மாட்டார் என்றுதான் கூற வேண்டும்.

இப்போது "லெக்சஸ்' கார் இந்தியத் தெருக்களில் சீரழிகிறது. அதை யாரும் சீந்துவார் இல்லை. 1994-இல் பெரும் தனவந்தர்களால் மட்டுமே அந்தக் காரை இறக்குமதி செய்ய முடியும் என்கிற நிலைமை இருந்தது. ஆவணங்களில் முறைகேடாகத் திருத்தம் செய்ததால், அரசுக்கு சுமார் ரூ. 1.62 கோடி சுங்கவரி இழப்பு ஏற்பட்டது என்பதுதான் வழக்கே.

அந்த 1994 வழக்கில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு 2017-இல் ம. நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. அதற்குள் அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி இருந்ததால், மேல் முறையீட்டில் தடை வாங்கி இருந்தார். அவரது இறுதிக் காலத்தில் நான் சந்தித்தபோது அவர் சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா? ""அரசியலில் நண்பர்களே கிடையாது!''

அடுத்த இரண்டு ஆண்டுகள் சென்னைக்கும், தில்லிக்கும் இந்தியாவின் ஏனைய பகுதிகளுக்கும் அடிக்கடி பயணித்துக் கொண்டிருந்தேன் என்றாலும், பெரும்பாலான நாட்கள் சென்னையில்தான் இருந்தேன். தமிழகத்தில் அரசியல் மட்டுமல்ல, ஏனைய பல முக்கியமான நிகழ்வுகளும் தொடர்ந்து நடந்த வண்ணம் இருந்தது முக்கியமான காரணம்.

ஒருபுறம் ஊழல் குற்றச்சாட்டுகளால் அவப்பெயர் பெற்றிருந்தாலும் 1991 - 96 ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் பல சாதனைகளும் நிகழ்ந்தன. ஊடகங்களைப் புறக்கணித்ததும், சாதுரியமாக மத்திய அரசுடன் இணக்கமான உறவை மேற்கொள்ளாததாலும் அந்த ஆட்சி மக்களின் அதிருப்திக்கு ஆளானது என்பது இப்போது மீள்பார்வை பார்க்கும்போது தெரிகிறது.

ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கமும், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளும் ஜெயலலிதா அரசுக்கு தேசிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தன. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலிருந்தும் நேரு விளையாட்டரங்கத்தைப் பார்க்க அமைச்சர்களும், அதிகாரிகளும் வருவதும் போவதுமாக இருந்தனர். அவர்களுடன் எனது பத்திரிகை நண்பர்களும் வருவதால், நான் அவர்களுடன் இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

சென்னை மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் கட்டடத்துக்குப் பின்னால் இருந்த மாநகராட்சி கால்பந்து மைதானம்தான், இப்போது ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கமாக மாற்றப்பட்டிருக்கிறது. 1993-இல் ஜெயலலிதாவின் முனைப்பால் தொடங்கிய அரங்கத்தின் பணிகள் 234 நாள்களில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன. அப்போது, அடிக்கடி முதல்வர் ஜெயலலிதாவே நேரில் சென்று பணிகளைப் பார்வையிடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.

1995-இல் ஏழாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு சென்னை தயாரானதும், அப்போதைய பரபரப்பும், சென்னையை இந்தியாவின் விளையாட்டு வரைபடத்தில் முக்கியமான நகரமாக மாற்றியது. குடியரசுத் தலைவர் சங்கர்தயாள் சர்மா தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைக்க வந்திருந்தார். ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்த குடியரசுத் தலைவரை சந்திக்க நான் நேரம் கேட்டிருந்தேன்.

""பத்திரிகையாளர்கள், விருந்தினர்கள் என்று யாரையும் குடியரசுத் தலைவர் சந்திக்க வேண்டாம் என்று தமிழக அரசு எங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. இங்கிருந்து வழக்கம்போல, நாங்கள் திருப்பதி தரிசனத்துக்குச் செல்கிறோம். அங்கே குடியரசுத் தலைவர் இரண்டு நாள்கள் தங்கி இருப்பார். அப்போது வந்து நீங்கள் சந்திக்கலாம்'' என்று ராஷ்டிரபதி பவனத்தின் பத்திரிகைத் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதற்கிடையில் ஆந்திர மாநிலத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. 1994 டிசம்பர் மாதம் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் என்.டி. ராமாராவ் தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மிகப் பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், அடுத்த பத்தே மாதத்தில் தனது மாமனாரான என்.டி. ராமாராவின் ஆட்சியைக் கவிழ்த்து முதல்வர் பதவியைக் கைப்பற்றி இருந்தார் மருமகன் சந்திரபாபு நாயுடு.

திருப்பதி பத்மாவதி விருந்தினர் விடுதிக்கு குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவை சந்திக்கச் சென்றிருந்தபோது அங்கே நான் பார்த்த காட்சி என்னை நிலைகுலைய வைத்தது.

(தொடரும்)

ADVERTISEMENT
ADVERTISEMENT