தினமணி கதிர்

வயலில் வளரும் "ஓவியங்கள்'

26th Jun 2022 06:00 AM | சக்ரவர்த்தி

ADVERTISEMENT

 


விளையும் பயிர் நடுவே பிரமாண்டமான ஓவியம் வரையும் ஜப்பானியக் கலை இந்தியாவிலும் பிரபலமாகிவிட்டது. பச்சை வயலின் நடுவே நட்டு வளர்க்கும் ஓவியங்களை வானிலிருந்து அல்லது மேடான இடத்திலிருந்து பார்த்தால் ரம்மியமாகத் தெரியும்.

இந்தியாவில் விநாயகர், கருஞ்சிறுத்தை, மீன்கள், இந்தியத் தேசப் படம், யானை என்று வரையத் தொடங்கியுள்ளனர். பூனாவிலும், கேரளம் வயநாட்டில் பிரபலமாக இது உள்ளது.

பொறியாளரும் தோட்டக்கலை நிபுணருமான ஸ்ரீகாந்த் 2015-இல் ஜப்பானிய வயலில் ஓவியம் நடும் கலையை தனது வயல்களில் அறிமுகம் செய்தார். அவர் கூறுகையில்:

ADVERTISEMENT

""எனது வயல் ஓவியங்களைப் பார்க்கப் பல ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்து போகும் சுற்றுலாத் தலமாகியுள்ளது. ஜப்பானிலிருந்து நாற்று விதைகளை வரவழைக்க முடியாது. அதனால் இந்தியாவில் பச்சை இலைகள் இல்லாத வேறு நெல் நாற்றுகளைத் தேடி அலைந்தேன். இறுதியில் கத்தரிப்பூ, கருப்பு நிற இலைகள் கொண்டிருக்கும் நெல் நாற்றுகள், அதன் விதைகள் கிடைத்தன.

முதலில் வயலில் ஸ்கெட்ச் போட வேண்டும். போட்ட ஸ்கெட்ச் சரியாக அமைந்திருக்கிறதா என்று உயரமான இடத்திலிருந்து பார்க்க வேண்டும். அதற்கு வயலில் மரங்களால் பரண் கட்டி அதன் மேல் ஏறி பார்க்க வேண்டும். இந்த ஆரம்ப வேலைகளை செய்து முடிக்கவே பல வாரங்கள் ஆகும். பிறகு வித்தியாச நிறமுள்ள நெல் விதைகளை நட வேண்டும். பயிர் வளர வளர பயிர் ஓவியம் நிறைவு பெறும். நான் விநாயகர், அரிதான கருஞ்சிறுத்தையை ஓவியமாக வரைந்துள்ளேன்'' என்கிறார் ஸ்ரீகாந்த்.

கேரளம் வயநாடு சுல்தான் பத்தேரியைச் சேர்ந்த பிரஸீத் குமார் நட்ட வயல் ஓவியங்களில் அவருக்குப் பிடித்தது புத்தர் ஓவியம். அவர் கூறியதாவது:

" "குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோயில் யானையான "குருவாயூர் கேசவன்' ஓவியம், சுவாமி விவேகானந்தர் ஓவியம் என வயலில் வளர்த்தேன். " பல நிற நாற்று விதை நெல்களான "நாஸர் பாத்"தை மகாராஷ்ட்ரத்தில் இருந்தும், "தம்பார் ஸாலி' வகையை கர்நாடகத்திலிருந்தும், ஜீரக சம்பா, மாப்பிள்ளை சம்பாவை தமிழ்நாட்டிலிருந்தும் வாங்குகிறேன்' என்கிறார் பிரஸீத்.

ஸ்ரீகாந்த், பிரஸீத் வரிசையில் மூன்றாவதாக இணைபவர் ஜான்சன். " "வயநாடு வயல் பக்கம் மக்களைக் கவர்ந்திழுக்க வயலில் ஓவியம் வரைகிறேன். அடிப்படையில் நான் ஆசிரியர். 5 ஆண்டுகளாக வயலில் ஓவியம் நட்டு வருகிறேன். எனது ஓவியங்களைக் கேள்விப்பட்டு ராகுல் காந்தியும் வந்து பார்த்துச் சென்றார்' என்றார்.

தமிழகத்திலும்..: கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அருகே மழவராயநல்லூரில் பாரம்பரிய விவசாயம் செய்து வரும் செல்வம் என்பவர் கலப்பை, எண்கள், கணக்கு குறியீடுகளை வயலில் வரைந்துள்ளார். "சிங்கார் ரக அரிசி கருப்பு ஊதா நிறத்தில், இரண்டரை அடி உயரம் வளரக்கூடியது. இதன் வயது 120 நாட்கள். இதன் அரிசி தங்க நிறத்தில் இருக்கும். அரிசி நீளமாக இருக்கும். பிரியாணி செய்வதற்கு ஏற்றது. இந்த ரகத்தினைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில், கணிதக் குறியீடுகள் வடிவில் (+, -, ÷, பு, ∆) நாற்றுகளை விதைத்து வருகிறேன்' என்கிறார் செல்வம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT