தினமணி கதிர்

போதிமரக் கன்றுகள்

சகா

அனிதா.. அனிதா..
சமையல் அறையில் வேலையாக இருந்த அனிதாவுக்கு கணவன் சேகர் அழைக்கும் குரல் கேட்டது. தொடர்ந்து , ""உட்காருங்க ஜெகன்.. சும்மா ஃப்ரீயா இருங்க. இது உங்க வீடு மாதிரி'' என அவன் சொல்வதும் கேட்டது.
அனிதா பேச்சு சத்தம் கேட்டு வெளியேறி கூடத்துக்கு வர முயல.. அதற்குள் சேகரே அவளைத் தேடி சமையல் அறைக்கு வந்து விட்டான்.
""அனிதா என்னோட வேலை பார்க்கிற ஜெகனை நம்ம வீட்டுக்கு அழைச்சுட்டு வந்திருக்கேன். கொஞ்சம் வா உன்னை அவருக்கு அறிமுகம் செஞ்சுவைக்கிறேன்..!''
அனிதா கணவனை நம்பமுடியாமல் பார்த்தாள். 
""உங்களுக்குத்தான் ஆபிஸ் ஆட்களை வீட்டுக்கு அழைச்சுட்டு வர்றது பிடிக்காதே. இதென்ன புதுப் பழக்கம்..!''
""ப்ச். அதை பத்தி அப்புறம் பேசலாம். இப்ப கொஞ்சம் வர்றியா..!''  என்றான் அடிக்குரலில். அவளை மேலும் கீழும் பார்த்தவன், "" அப்படியே வந்துடாதே. தலையை சீவிக்கிட்டு முகத்துல இருக்கிற வேர்வையை சுத்தமாத் துடைச்சுட்டு நீட்டா வா..!'' என்றபடி வேகமாக நகர்ந்தான்.
""என்னாச்சு இவருக்கு. இப்படியெல்லாம் நடந்துக்க மாட்டாரே..'' அனிதா தனக்குள் யோசித்தபடி படுக்கை அறை நுழைந்து சேகர் சொன்னபடி அனைத்தையும் சரி செய்து கொண்டு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீருடன் முன்னே வந்தாள்.
டி.வி. ஓடிக் கொண்டிருந்தது. செய்தி பார்த்துக் கொண்டிருந்த இருவரும் திரும்பினர்.
""வாங்க..!'' என்றபடி ஜெகனிடம் தண்ணீர் டம்ளரை நீட்டினாள் அனிதா. புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்டான் அவன்.
""ஜெகனுக்கு சேகரை விடவும் நான்கைந்து வயது குறைவாக இருக்கலாம். மீசை இல்லாத திருத்தமான முகம். புருவங்கள் அடர்த்தியாக இருந்தன.  ஆறடி உயரம் சொல்லலாம். முதல் பார்வையிலேயே "கண்ணியமானவன்' என்கிற 
நற்சான்றிதழ் தருமளவு தோற்றம்.
""ஜெகன் இவங்க என் மனைவி அனிதா. எங்களுக்கு போன வருசம் பிப்ரவரியில தான் திருமணம் ஆச்சு. அனிதா இவரு ஜெகன். எங்களோட அலுவலகத்துல நிர்வாகப் பிரிவுல புதுசா சேர்ந்திருக்கிறாரு. சொந்த ஊர் கோவைக்குப் பக்கம். அப்பா, அம்மா எல்லோரும் அங்கேதான் இருக்காங்க. ஜெகன் இங்கே தங்கறதுக்கு வீடு பார்த்துட்டிருந்தார். நான்தான் நம்ம பக்கத்து வீட்டுக்கு மேல் போர்ஷன் காலியாக இருக்குன்னு சொல்லி இங்கே அழைச்சுட்டு வந்தேன்..''
""சரிங்க..!'' என்றாள் அனிதா. மனதில் வேகமாக சிந்தனை ஓடியது. அத்தனை சீக்கிரம் யாருடனும் ஒட்டாத தனது கணவன் இன்று தேடிப் போய் ஒருவருக்கு உதவி செய்வது அவளுக்கு புதிராக இருந்தது. அந்த அளவுக்கு அவன் தனது கணவனுக்கு முக்கியமானவன் என்பதும் புரிந்தது. ஒரு தட்டில் மிக்சரும், காபியும் எடுத்துக்கொண்டு முன்னே வந்தாள்.
""ஊருல அப்பா, அம்மா தனியாத்தான் இருக்காங்களா.? உங்ககூடப் பிறந்தவங்கள்ளாம்..''  எனப் பொதுவில் விசாரித்தாள்.
காபி அருந்திக் கொண்டிருந்த ஜெகன் அதை வேகமாக விழுங்கிவிட்டு எனக்கு ஒரே ஒரு அண்ணன்தான்.  மத்திய அரசுப் பணியில இருக்காரு. அவரு குடும்பம் மும்பையில இருக்கு. அப்பா, அம்மா மூத்தகுடிமக்கள். வெளியிடங்களுக்கு வர்றது சிரமமான காரியம். உடல் ஒத்துழைக்காது. தவிர சொந்த ஊருல உறவுகளைப் பிரிஞ்சு வர மாட்டாங்க. அதனாலதான் அவங்களை கூட இருங்கன்னு நான் தொந்தரவு பண்ணலை..
""சரி நாங்க போய் வீட்டைப் பார்த்துட்டு வர்றோம்..'' என எழுந்தான் சேகர்.
ஜெகனிடம் திரும்பினவள் அந்த வீடு உங்களுக்கு அவசியம் பிடிக்கும். ராசியான வீடும் கூட. கடைசியா அந்த வீட்டுல குடியிருந்தவங்க இப்ப சொந்த வீடு கட்டி குடி போயிட்டாங்க.  அந்த யோகம் உங்களுக்கும் அமையட்டும்!
""முதல்ல கல்யாணம். அப்புறம் சொந்த வீடு..'' என்றான் சேகர்.
""அதுசரி..'' என்று சிரித்தபடி எழுந்தான் ஜெகன்.
அவர்கள் நகர.. மீதம் வைத்த சமையல் வேலைகளை முடித்துவிட்டு, அறையை சுத்தம் செய்து விட்டு முன்னறைக்கு வந்தாள் அனிதா. அம்மாவுடன் பேசலாம் என்று போனெடுக்க சேகரும், ஜெகனும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.
""அனிதா..  ஜெகனுக்கு வீடு ஓகே. நான் கமலாம்மா கிட்டே பேசி வாடகையை கொஞ்சம் குறைச்சுத் தந்திருக்கேன். வர்ற வெள்ளிக்கிழமை முகூர்த்த நாளா இருக்கு ஜெகன். அன்னைக்கே வந்திடுங்க. அதை விட்டா அப்புறம் தேய்பிறை ஆரம்பாயிடும்!''
""நோ ப்ராப்ளம். எனக்கென்ன ஒத்தை ஆளு. என்னோட எல்லா சொத்தையும் ஒரு சூட்கேசுக்குள்ள அடக்கிடுவேன்.. சிரித்தான். நாளைக்கு ஆபிசுல வெச்சு உங்களுக்கு அட்வான்ஸ் பணம் தந்திடறேன்.''
""உட்காருங்க ஜெகன். சப்பாத்தி செய்திருக்கேன். சாப்பிட்டுட்டுப் போகலாம்..'' என்றாள் அனிதா.
""நீங்க தந்த காபியின் சுவையே இன்னும் தொண்டைக்குழியை விட்டு இறங்கலை. பக்கத்து வீட்டுல தான் இருக்கப் போறேன். நினைச்ச நேரத்துக்கு நானே தேடி வந்து கேட்டு வாங்கிச் சாப்பிட்டுக்கறேன்..''
""அதுவும் சரிதான்.'. கை கூப்பி விடை பெற்று விட்டு நகர்ந்தான்.
அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்த சேகர் அனிதாவிடம் திரும்பி, ""என்ன அனிதா ஆள் எப்படி..?'' என்றான்.
அவள் விழித்தாள். ""ம்..? எப்படின்னா..''
சேகர் பதில் சொல்லாமல் மர்மமாகப் புன்னகைத்தான்.
சில தினங்கள் சென்றன..!
ஜெகன் புதிய வீட்டுக்குக் குடிவந்திருந்தான். மாலை நேரங்களில்.. பொழுது போகாத 
சூழல்களில் சேகரின் வீட்டுக்கு வருவான்.
அனிதா, சேகர், ஜெகன் மூவருமாக சேர்ந்து செஸ்úஸா, கேரமோ விளையாடுவார்கள் 
அருகிலிருக்கும் பூங்கா வரை சென்று 
வருவார்கள்.
""அனிதா நீங்க எப்படியும் என்னை விடவும் குறைஞ்சது ஒரு வருசமாவது பெரியவங்களா இருப்பீங்க. அப்படியிருக்க என்னைப் போய் வாங்க போங்கன்னு கூப்பிட்டலாமா. சேகர் நீங்களும் தான்.. சும்மா ஒருமையிலேயே கூப்பிடுங்க. ப்ளீஸ் என ஜெகன் சொல்ல இருவரும் ஒத்துக் கொண்டனர்.
அன்று ஞாயிறு காலை டீவியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தபோது,  வீட்டின் காலிங்க் பெல் ஓசை கேட்டது. அனிதா கதவு திறக்க.. புன்னகையுடன் வெளியே நின்றிருந்த விசித்ரா, "" அண்ணி..'' என்றபடி பாய்ந்து வந்து அவளைக் கட்டிக் கொண்டாள்.
""வா.. விசித்ரா..'' என்றான் சேகர்.
""ஹேய் அண்ணா..''
""என்ன ஒரு சர்ப்ரைஸ். ஒரு போன் கூடப் பண்ணலை..'' வியப்புடன் கேட்டாள்.
""அனிதா. எனக்குத் தெரியும். ஓர் இன்ப
அதிர்ச்சியாக இருக்கட்டும்ன்னு தான் உனக்கு முன்னாடியே சொல்லலை!'' என்றான் சேகர். 
""ஜெகன்.. இது விசித்ரா என்னுடைய உடன்
பிறப்பு. விசி.. இவர் ஜெகன். என்னோட ஆபிஸ்ல ஒர்க் பண்றாரு..!''
""நம்ம குடும்ப நண்பர். இங்கே பக்கத்து வீட்டில் தான் தங்கியிருக்காரு..!'' என பரஸ்பரம் அறிமுகம் செய்தான்.
இருவரும் புன்னைகைத்துக் கொண்டார்கள்.
""அனிதா விசித்ராவுக்கு அரசு வேலையில சேர விருப்பமாம். அங்கே ஊருல தரமான பயிற்சி மையம் இல்லாததால இங்கே நம்ம வீட்டுல தங்கி பயிற்சி மையத்துல சேரப் போகிறா.!''
""அட.. சூப்பர் விசித்ரா..'' அணைத்துக் கொண்டாள் அனிதா.
""அட்வான்ஸ் வாழ்த்துகள் கலெக்டரம்மா..'' என கிண்டல் செய்தான் ஜெகன்.
""கலெக்டரா.. ஜனாதிபதின்னு வேணும்னாலும் கூட சொல்லிக்குங்க..'' என்று சிரித்தாள் விசித்ரா.
""விசி.. ஜெகன் சாதாரண ஆள் கிடையாது. இடைபுகுந்தான் சேகர். காலேஜுல ரேங்க் ஹோல்டராக்கும். எல்லா விசயத்துலயும் அப்டேட்டா இருக்கிறவரு. அரசியல், கலை, விளையாட்டு, ஆன்மிகம்.. அப்போ நடமாடும் என்சைக்ளோபீடியான்னு சொல்லுங்க. எதுக்குண்ணா எனக்கு செலவு பண்ணி பயிற்சி மையம்.? பேசாம இவர்கிட்டயே டியூசன் வெச்சுக்கலாமே..''
""நண்பனுக்காக இது கூட செய்யமாட்டாரா என்ன.?''- இடுப்பில் கை வைத்துக் கொண்டு குறும்புச் சிரிப்புடன் கேட்டாள் விசித்ரா.
""அதுக்கென்ன விசித்ரா. உங்களை ஐ.நா. சபைத் தலைவராவே வேணும்னாலும் ஆக்கிக் காட்டறேன்..'' என்றான் அவனும் பதிலுக்கு.
எல்லோரும் சிரித்தார்கள்.
அடுத்தடுத்த நாட்களிலேயே விசித்ராவும், ஜெகனும் நெருங்கிப் பழக ஆரம்பித்து விட்டனர். கேரம் விளையாடுகையில் அனிதாவும், சேகரும் ஒரு ஜோடியாகவும், ஜெகனும், விசித்ராவும் பார்ட்னராக ஒரு ஜோடியாக விளையாட ஆரம்பித்தனர். ஞாயிற்றுக்கிழமைகளில் சினிமா போவதாக ஏற்பாடானால் அனிதாவும். சேகரும் ஒரு வண்டியில் செல்ல விசித்ரா ஜெகனுடன் அவன் பைக்கில் சென்றாள்.
நோட்ஸ் எடுக்க லைப்ரரி போக, படித்ததை டிஸ்கஸ் செய்ய, சிக்கலான விசயம் பற்றி விவாதிக்க.. என விசித்ரா ஜெகனுடன்தான் பெரும்பாலான நேரம் கழித்தாள்.
தானாக அமைந்த வாய்ப்புகள் இருவரையும் அப்படி நெருக்கம் கொள்ள வைத்தன.
அனிதாவுக்கு வயிற்றைக் கலக்கியது. ஆரம்பத்தில் இதுபற்றி அதிகம் யோசிக்காதவளுக்கு நாளுக்கு நாள் இறுகும் இந்த நெருக்கம் உறுத்தலை உண்டாக்கியிருந்தது. கவலைப்பட ஆரம்பித்தாள்.
கணவனிடம் வெளிப்படையாகப் பேச தயக்கம் இருந்தது. அவனது எதையும் கண்டுகொள்ளாத் தன்மை எரிச்சல் தந்தது.
பொறுக்க முடியாது ஒரு தனித்த சந்தர்ப்பத்தில் வாய்விட்டே கேட்டு விட்டாள்.
""என்னங்க இது.. ஜெகனும், விசித்ராவும் இவ்வளவு இயல்பாகப் பழகிறாங்க. கொஞ்சம் கட்டுப்
படுத்தலாமே.!'' என முனகினாள். பூசி மெழுகினாள் வார்த்தைகளை. கண்டுகொள்ளாது 
நகர்ந்துவிட்டான்.
திடீர் திடீரென சமையல் அறை புகுந்து "அண்ணி ஜெகனுக்கு இனிப்புப் பணியாரம்ன்னா ரொம்பப் பிடிக்குமாம். நான் செய்து தர்றேனே எனச் சொல்லுவதும்
"அண்ணி ஜெகனும், நானும் இன்னைக்கு அஷ்டலட்சுமி கோயிலுக்குப் போயிட்டு வர்றோம்' எனச் சொல்லுவதும்.. தாங்க முடியாது கணவனிடம் மீண்டும் வெடித்து விட்டாள் அனிதா.
""அவங்க இப்படி ஜோடியா வெளியே சுத்தறதை அடுத்தவங்க பார்த்தா என்ன நினைப்பாங்க. நமக்குத்தானே அவமானம்..? நாளைக்கு விசித்ராவுக்கு கல்யாணம் பேசும்போது இதெல்லாம் சிக்கலை உண்டாக்காதா. பஞ்சையும், நெருப்பையும் இப்படி பக்கத்து பக்கத்துல வெச்சு அழகு பார்த்தா என்ன அர்த்தம்.?''
அவளைப் பார்த்து அர்த்தத்துடன் 
புன்னகைத்தான். 
""விசி நம்ம வீட்டுக்கு எதுக்கு வந்திருக்கிறான்னு சொல்லு..?''
""என்ன கேள்வி இது. அரசு வேலைக்காக பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்க..!''
""நான் அவளைப் பயிற்சி மையத்துல சேர்த்துவிட்டதோடு சரி, என்னைக்காவது அவகிட்டே அந்தப் படிப்பைப் பத்தி விசாரிச்சிருக்
கேனா..ம்..?''
அனிதா யோசித்து,  "" ஆமா. இல்லையே ஏன்.?''
""ஏன்னா அவளை நான் இங்கே வரவழைச்சது அந்தக் காரணத்துக்காக இல்லை. அவ ஜெகனோட பழகனும்ன்றது தான் என்னோட திட்டம். அதுதான் இங்கே சீரும், சிறப்புமா நடந்துக்கிட்டிருக்கு..!''
புரியாதவளாக கணவனை வெறித்தாள் அவள். 
 ""சே.. என்ன உளறல் இது. விசித்ரா எதுக்காக ஜெகன் கூடப் பழகணும்..?'' என வேகமாக பொறிந்தவள் அவனது அர்த்தப் புன்னகை கண்டு அதிர்ந்தாள். 
""ஓ, ஜெகனுக்கு விசித்ராவை கல்யாணம் செய்துவைக்கிற எண்ணத்துல இருக்கிறீங்களா நீங்க.? அதுக்குத்தான் இத்தனை வேலையுமா..!'' என்றாள் வியந்து போய்.
""அப்பாடா இப்பவாவது புருசன் மனசு புரிஞ்சு போனதே உனக்கு.!''
""சரி விசித்ராவுக்கு உங்க மனசு தெரியுமா. எண்ணம் புரிஞ்சுதான் ஜெகனோட அவ பழகுகிறாளா.?''
""சேச்சே.. உடனடியாக மறுத்தான். அதெப்படி அனிதா. அது நல்லா இருக்காது. அவகிட்டே இதுபத்தி நான் எதுவும் பேசிக்கலை..?''
எதையோ யோசித்த அனிதா மறுப்பாக தலையசைத்தாள். ""ம்ஹூம் இதெல்லாம் ஒத்துவருமான்னு எனக்குத் தோணலை..''
""பொறுத்திருந்து பார். இன்னும் ஒரே வாரம்தான் ரெண்டு பேருல ஒருத்தர் அவங்க காதலை சொல்லிடுவாங்க பாரு..!'' கண்ணடித்தான். 
சரியாக நான்காவது நாளில் ஒரு திருப்புமுனை உண்டானது.
ஊரிலிருந்து ஜெகனின் அம்மா வந்திருந்தார். தாயை அழைத்து கொண்டு சேகர் வீட்டு வந்தான் ஜெகன்.
""சேகர்.. இவங்க என் அம்மா மீனாட்சி. ஊரிலிருந்து வந்திருக்காங்க..'' என்று அறிமுகம் செய்தான் ஜெகன்.
""வணக்கம். வாங்கம்மா. விசி.. யாரு வந்திருக்காங்கன்னு பாரு.. உள்ளே குரல் தந்தான். நாங்களே உங்களைத் தேடி வந்து சந்திக்க இருந்தோம்..''
விசித்ரா உள்ளேயிருந்து வந்தாள். சட்டென அவரது காலில் விழுந்தாள்.
""எந்திரிம்மா.. எந்திரிம்மா.. மீனாட்சி அவளை எழுப்பி நெற்றியில் முத்தம் தந்தாள். 
""நீதானா அது.. உன்னைப் பத்தி என் மகன் நிறைய சொல்லியிருக்கான்.''
சேகர் அர்த்தத்துடன் மனைவியைப் பார்த்து கண்ணடித்தான்.
""நீங்க எல்லோரும் ஒரு குடும்பம் மாதிரி பழகறது மனசுக்கு நிறைவா இருக்கு..!''
மனதிலிருந்து வார்த்தைகள் வெளிவந்தன அவரிடமிருந்து.
""என்னம்மா ஏதாவது விசேஷமான செய்தியா. திடீர்ன்னு கிளம்பி வந்திருக்கீங்க.!''
ஜெகன் முன்னறிவிப்பு கூடத் தரலையே.. அனிதா கேட்டாள்.
""இவனைப் பார்த்து வெகுநாள் ஆகிப் போச்சு. ஊருக்கு வரச் சொன்னா ஏதாவது சாக்குபோக்கு சொல்லிட்டே இருக்கான். அதான் நானே வந்துட்டேன்.''
உங்க மூட்டு வலி பரவாயில்லையா அம்மா விசித்ரா அக்கறையுடன் விசாரித்தாள்.
""ம்! சித்தமருத்துவம் கொஞ்சம் கேட்குது. ஆமா உன் படிப்பு எப்படிப் போகுது..!''
""சிறப்பா தயாராகிட்டு இருக்கேன்ம்மா. மாதிரித் தேர்வுகள்ல நான் தான் முதல் மதிப்பெண்.''
""எல்லாம் ஜெகனோட பயிற்சி..'' என எடுத்துக் கொடுத்தான் சேகர்.
அனிதா உள்ளேயிருந்து காபியோடும், இனிப்புகளோடும் வந்தாள். நான் கூட ஜெகன் தன் வாழ்க்கையில அடுத்த கட்டத்துக்குப் போகப் போறாரோ.. அதுவிசயமாத்தான் பேச வந்தீங்களோன்னு நினைச்சேன்..
""அடடா இதுவேறயா. கூட்டணிக்கு வேற ஆள் சேர்ந்தாச்சா. இனி அம்மாவைப் பிடிக்கவே முடியாது.. தலையில் கை வைத்துக் கொண்டான் பொய்யாக.!''
""அட என்ன ஜெகன் நீங்க. அந்தந்த வயசுல அதது நடக்க வேண்டாமா. உங்க கல்யாணத்துக்கு இதுதான் சரியான நேரம்!''
""அவன்  சரின்னு  
சொன்னாப் போதும். சொந்தத்துலயே பொண்ணு தயாரா இருக்கு. தடபுடலா கல்யாணம் முடிச்சுடுவோம்! இவன்தான் அப்புறம், அப்புறம்ன்னு தள்ளிப் போட்டுட்டே இருக்கான். நீயாவது புத்தி சொல்லுப்பா..!''
விசித்ரா கை தட்டினாள். 
""அட.. அப்படியா. அப்போ கூடிய சீக்கிரம் பலமான கல்யாண விருந்தை எதிர்பார்க்கலாம்ன்னு சொல்லுங்க.!''
""அதுக்கென்ன போட்டுட்டாப் போச்சு..!'' சிரித்தான் ஜெகன்.
சேகர் திகைத்துப் போனான். முகம் இருண்டது. இதென்ன புதுக் குழப்பம். பேசத் தெரியாது திணறினான். அதிர்ச்சியுடன் தங்கை முகம் பார்த்தான். அவளது மலர்ச்சியும், மகிழ்ச்சியும் குழப்பம் தந்தது.
""என்ன இது இத்தனை இயல்பாக இருக்கிறார்கள். அப்படியானால் இருவருக்குள்ளும் ஒன்றுமே நடக்கவில்லையா? காதல் பூ பூக்கவில்லையா.?''
இத்தனை சந்தர்ப்பங்கள் தந்தும், வாய்ப்புகள் உருவாக்கியும் வீணடித்த தங்கை மேல் எரிச்சலாக வந்தது அவனுக்கு. அடக்கிக் கொண்டான்.
அனிதாவும் நடப்பவைகளைப் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மீனாட்சி கிளம்பிப் போன அடுத்த நொடியே கணவனின் சைகை புரிந்து விசித்ராவிடம் பேச ஆரம்பித்தாள் அனிதா.
""விசித்ரா.. நான் இப்படி வித்தியாசமாக் கேட்கிறேனேன்னு என்னைத் தப்பா நினைச்சுடாதே. ஜெகன் வேற பெண்ணைத் திருமணம் செய்துக்கிறதுல உனக்கு சந்தோசம் தானா. சங்கடம் இல்லையா.?''
""எனக்கு எதுக்கு சங்கடம். இதுல கவலைப்பட என்ன இருக்கு..!'' என்று கூறி புரியாமல் இருவரையும் மாறி மாறிப்பார்த்தாள். 
""என்ன அண்ணா..''
""அதுவந்து.. நீங்க ரெண்டு பேரும் ஒருத்தர் கூட ஒருத்தர் பழகறதை வெச்சு..''
முடிக்க முடியாது திணறி கணவனின் முகம் பார்த்தாள்.
""நோ நோ.. என்ன அண்ணி நீங்க.. அண்ணன் முன்னாடி இப்படித் தப்புத் தப்பாப் பேசலாமா? அண்ணனுடைய நண்பன் எனக்கும் அண்ணன் அல்லவா? அவர்கிட்டப் போய் தப்பான கண்ணோட்டத்தோடு பழகறது அண்ணனுக்கு நான் செய்கிற நம்பிக்கைத் துரோகம் ஆகிடாது! தவிர கிராமத்திலிருந்து இங்கே நான் வந்தது காதலிக்கவா.?''
""அதுக்கில்லை..!'' என இழுத்தாள்.
""புரியுது அண்ணி. நாங்க கொஞ்சம் இயல்பாகவே பழகிட்டோம். அது உங்க பார்வைக்கு வேற மாதிரி தோணிருக்குது.! பஞ்சும், நெருப்பும் பக்கத்து பக்கத்துல இருக்கே. பத்திடுமோன்னு பயப்பட்டிருக்கீங்க தானே. நாங்க என்ன ஜடப் பொருளா? உயிருள்ள, உணர்வுள்ள மனுசங்க அண்ணி. அண்ணன் எங்க மேல வெச்சிருக்கிற நம்பிக்கைய நாங்களே கெடுத்துக்குவோமா.? எங்க அண்ணன் என்னை அப்படி வளர்க்கலை. என்னைக்கும் அவரைத் தலைகுனிய வைக்க மாட்டேன்.!''
நெஞ்சு நிமிர்த்திச் சொன்னாள் விசித்ரா.
அனிதா கணவனைப் பார்த்தாள். ஆயிரம் அர்த்தம் அதில்.!
"அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பனைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா அண்ணனுக்கு பாடம் சொன்ன அருமைத் தங்கச்சியை இப்பத்தான் உலகத்துல முதல் தடவையாகப் பார்க்கிறேன்' என மனது சொல்லியது.
சேகர் இமைகொட்டாமல் தங்கையையே வெறித்தான். ""இந்த மாணிக்கத்தையா கேவலமான எண்ணத்துடன் இங்கே வரவழைத்தேன்.?''  என தன் சின்னத்தனமான புத்தியை நினைத்து உள்ளுக்குள் வருந்தினான்.
நட்பு குறித்தும், நம்பிக்கை குறித்தும் உயர்வான எண்ணங்கள் மனதில் உருவாக தங்கையின் விஸ்வரூபத்தை தலை உயர்த்தி பெருமையுடன் பார்க்கத் துவங்கினான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT