தினமணி கதிர்

பேல்பூரி

26th Jun 2022 06:00 AM

ADVERTISEMENT

 

கண்டது

மயிலாடுதுறை- தரங்கம்பாடி மெயின் ரோடில் உள்ள முடிதிருத்தும் கடையின் பெயர்

""வந்தா வெட்டுவோம்''

-ம.ஸ்ரீகிருஷ்ணா,
மயிலாடுதுறை.

ADVERTISEMENT

 

சென்னை விருகம்பாக்கம் காமராஜர் சாலையில் உள்ள ஒரு ஹோட்டலின் பெயர்

சிஎஸ்கே கபே

-கோ.குப்புசுவாமி,
சென்னை.

 

மதுரையில் ஷேர் ஆட்டோஒன்றில் கண்ட வாசகம்

குழந்தை- கடவுள் தந்த வரம்
மனைவி- வரமாய் வந்த தாய்

-மதுரை குழந்தைவேலு,
சென்னை.

 


கேட்டது

(புதுச்சேரி பாரதி பூங்காவில் இரு நண்பர்கள்)

""போனா பெரிய வேலைக்குத் தான் போவேன்னு ரொம்ப பிடிவாதமா இருந்தியே? இப்ப என்ன வேலை பார்க்குற ?
"" யானையை குளிப்பாட்டிவிட்ற வேலை!''

- இரா. அருண்குமார்,
புதுச்சேரி.

 

(சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் எதிரெதிர் வீட்டுக்காரர்கள் இருவர்)

""மியூஸியம் மாதிரி வீடு அமைதியாக இருக்கே? பசங்களெல்லாம் எங்கே?''
""எல்லா வானரமும் ஜூவுக்கு போயிருக்கு!''

-மு.தாஜுதீன்,
தஞ்சாவூர்.

 

(நாகர்கோவிலில் உள்ள கிளீனிக் ஒன்றில்நர்ஸூம் பெரியவரும்)

""ஏம்மா... டாக்டர் எப்பத்தான் வருவார்?''
""அதான் ஓ.பி.யில இருக்கார். சீக்கிரம் வந்திடுவார்னு சொன்னேனே...''
""நல்லா சொன்னீங்க ... உத்தரப்பிரதேசத்துல இருந்து வர்றது சாதாரணமான விஷயமா?''
""அய்யோ கடவுளே ....நான் அந்த "உ.பி' ய சொல்லலை. ஆஸ்பத்திரிலயே இருக்குற "ஓ.பி.ய சொன்னேன் !''

-மகேஷ் அப்பாசுவாமி,
பனங்கொட்டான்விளை.

 

யோசிக்கிறாங்கப்பா!


விலைவாசி ஏறாத ஒரே ஒரு எரிபொருள் சூரியன்.

-மோகனா அம்பி,
கும்பகோணம்.

 

மைக்ரோ கதை

""மாமா! கைய கால வச்சுக்கிட்டு சும்மா தான் இருங்களேன். குச்சியை எடுத்துட்டு, ஒட்டடை அடிக்கிறேன்; வாரியலை எடுத்துட்டு கதவு ஜன்னல் பீரோ எல்லாம் சுத்தப் படுத்துறேன்னும் வீட்டைச் சுத்தி சுத்தி வர்றீங்க... ! வயசான நீங்க கீழே விழுந்துட்டா மருத்துவம் பார்ப்பது யார்? இதையெல்லாம் வீட்டில் இருக்கிற சின்னவங்க நாங்க பார்ப்போம்!.'"- மாமனாரை பார்த்து மருமகள் சங்கீதா சீறினாள்.
""நீ சொல்றத சொல்லு... நான் வழக்கம்போல செய்வதை செய்யத் தான் செய்வேன்'' என்று மருமகளை ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றார் சதாசிவம்.
மாலையில் சங்கீதாவின் சிநேகிதி ஹேமா வந்தாள். வீட்டுக்குள் அவள் நுழைந்ததுமே வீடு முழுவதையும் பார்த்துவிட்டு புருவம் உயர்த்தினாள்.
""அடியே சங்கீதா! வீட்டை எவ்வளவு "நீட்டா' வச்சிருக்கே! என்னால இந்த அளவுக்கு வச்சிருக்க முடியலியே! சீலிங், சுவர், ஜன்னல், கதவு எல்லாம் ரொம்ப சுத்தமா இருக்கு!'' என்று புகழ்ந்தாள் ஹேமா.
சங்கீதாவுக்கு உச்சி குளிர்ந்தது. அதே நேரம் அந்தப் பக்கத்தில் வந்த சதாசிவம், இதையெல்லாம் கவனித்துக் கொண்டு புன்னகைத்து சென்றார்.

-தென்காசி
கு.அருணாசலம்

 

எஸ்.எம்.எஸ்.


அரசாங்க ஆஸ்பத்திரிக்கு போனா வலிச்சாதான் பிள்ளை பிறக்கும். தனியார் ஆஸ்பத்திரிக்கு போனா கிழிச்சாதான் பிள்ளை பிறக்கும்.


-பத்மா சாரதி,
தஞ்சாவூர்.


அப்படீங்களா!

வாட்ஸ் ஆப் செயலியைப் போன்றே தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படும் டெலிகிராம் செயலி 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. எனினும், வாட்ஸ் ஆப் நிறுவனம் இந்தியாவில் கொண்டு வந்த புதிய விதிமுறைகளால், வாட்ஸ்ஆப்பில் பரிமாற்றம் செய்யப்படும் தகவல்கள் பாதுகாப்பானதாக இல்லை என்று கருதி ஏராளமானோர் டெலிகிராம் செயலிக்கு மாறினர்.

இதனால் இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக டெலிகிராம் செயலியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மேலும், வாட்ஸ் ஆப்பை காட்டிலும் டெலிகிராமில் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் அதிகம்.
இந்நிலையில், "டெலிகிராம் ப்ரீமியம்' என்ற புதிய செயலி மாதம் ரூ. 390-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் தொடங்கப்பட்டுள்ள இந்த செயலியை கட்டணம் செலுத்தி பயன்படுத்துபவர்களுக்கு ஏராளமான புதிய சேவைகளை அந்த நிறுவனம் அளிக்கிறது.
4 ஜிபி வரையிலான ஃபைல்களை அனுப்பலாம், வேகமாக டவுன்லோடு செய்யலாம், ஒரே செயலியில் 4 கணக்குகளை வைத்து கொள்ளலாம், 1000 குழுக்களை உருவாக்கலாம், ஆடியோ வடிவில் வரும் தகவல்களை எழுத்துவடிவு தகவலாக மாற்றலாம், சுயவிவர குறிப்பை பெரிதாக எழுதலாம், சுயவிவர படத்துக்கு பதிலாக விடியோவை பதிவேற்றம் செய்யலாம், விளம்பரங்கள் இல்லாமல் பயன்படுத்தலாம் என ஏராளமான புதிய சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்களுக்கு இந்த டெலிகிராம் ப்ரீமியம் இன்னும் தொடங்கப்படவில்லை.

-அ.சர்ப்ராஸ்

ADVERTISEMENT
ADVERTISEMENT