தினமணி கதிர்

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 93

தினமணி

சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்க அதிபரின் வேண்டுகோளை (கட்டளையை?), வளர்ச்சியில் பின்தங்கி இருக்கும் ஒரு நாட்டின் பிரதமர் தலையை ஆட்டி நிராகரித்ததைப் பார்த்து பில் கிளிண்டன் அதிர்ச்சி அடைந்திருப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. நாடாளுமன்றப் பெரும்பான்மை இல்லாத, மக்கள் செல்வாக்கு நிரூபிக்கப்படாத வயதான பிரதமர் என்கிற அளவில்தான் அதிபர் கிளிண்டன் பிரதமர் நரசிம்ம ராவைப் பார்த்திருக்க முடியும்.

அப்படி என்னதான் கேட்டுவிட்டார் அல்லது கோரிக்கை வைத்தார் அதிபர் கிளிண்டன் என்றுதானே கேட்கிறீர்கள்? அவர் முன்வைத்த கோரிக்கை இதுதான் - ""நான் அமெரிக்க அதிபராகவும், நீங்கள் இந்தியப் பிரதமராகவும் இருக்கும்போது, காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வுகண்டால், அது உலக வரலாற்றில் சாதனையாக இருக்கும். ஜம்மு, லடாக் பகுதிகளை நீங்கள் வைத்துக்கொண்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கை முழுமையாக பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுத்து விடுங்கள். பிரச்னை முடிந்துவிடும்!''

அமெரிக்க அதிபராகப் பதவி வகிக்கும் எல்லா அதிபர்களுக்கும் சமாதானத்துக்கான நோபல் விருது பெற வேண்டும் என்கிற பேராசை உண்டு. அதிபர் பில் கிளிண்டனுக்கும் அப்படியொரு எண்ணம் இருந்திருக்கக் கூடும். கிளிண்டனுக்கு முன்னாள் அதிபர்களாக இருந்த தியோடர் ரூஸ்வெல்ட் (1906), உட்ரோ வில்சன் (1919) இருவருக்கும் சமாதானத்துக்கான நோபல் விருது வழங்கப்பட்டிருந்தது. 

பில் கிளிண்டனுக்கு முன்னர், பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், ரிச்சர்ட் நிக்ஸன் இருவருக்கும்கூட அந்த ஆசை இருந்ததாகச் சொல்வார்கள். 1977 - 81-இல் 39-ஆவது அமெரிக்க அதிபராக இருந்த ஜிம்மி கார்ட்டருக்கு,  இஸ்ரேலுக்கும் - எகிப்துக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்படுத்தியதற்காக 2002-இல் சமாதானத்துக்கான நோபல் விருது வழங்கப்பட்டது. அதேபோல, அதிபரான எட்டாவது மாதத்தில், 44-ஆவது அதிபரான பராக் ஒபாமாவுக்கு சமாதானத்துக்கான நோபல் விருது 2009-இல் வழங்கப்பட்டது கடும் விமர்சனத்துக்கும்  உள்ளானது.

அதிபர் பில் கிளிண்டனின் கோரிக்கையை நிராகரித்தது மட்டுமல்ல, அது குறித்து விவாதிப்பதையே தவிர்த்துவிட்டார் பிரதமர். அதற்கு முன்னர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றச் சென்றபோது கேட்கப்பட்ட கேள்விக்குச் சொன்ன அதே பதிலைத்தான், அதிபர் பில் கிளிண்டனிடமும் அவர் தெரிவித்தார். 

""இந்திய மக்களுக்குச் சொந்தமான 1 மில்லி மீட்டர் இடத்தைக்கூட விட்டுக்கொடுக்க எனக்கு உரிமை கிடையாது. அது எப்போதுமே இந்திய மக்களுக்குத்தான் சொந்தம்.''

பிரதமர் நரசிம்மராவின் தெளிவான, அழுத்தமான முடிவு அதிபர் பில் கிளிண்டனை ஆத்திரப்படுத்தி இருந்தாலும் அவர் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என்று என்னிடம் தெரிவித்தார்  தூதரக உயரதிகாரி ஒருவர். ஒரு வருடம் முன்புதான் அதிபராகி இருந்த பில் கிளிண்டன், வேறு பல அழுத்தங்களுக்கும் உள்ளாகி இருந்தார். "இந்தியாவை எந்தவிதத்திலும் பகைத்துக் கொள்ளக் கூடாது, நட்புறவு நாடாக்க வேண்டும்' என்பது அமெரிக்க வெளியுறவுத் துறை அவருக்கு வழங்கி இருந்த ஆலோசனை. அதற்கு அமெரிக்காவின் பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களின் அழுத்தம் முக்கியமான 
காரணம்.

அமெரிக்காவில் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் தங்கியிருந்த ஆறு நாள்களிலும் தொடர்ந்து பல நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றினார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அவர் நிகழ்த்திய 50 நிமிட உரையும், அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவரது சிறப்புரையும் கூர்ந்து கவனிக்கப்பட்டன. பரவலாகப் பாராட்டப்பட்டன.

""பாகிஸ்தான் குறித்தோ, சீனா குறித்தோ ஒரு வார்த்தைகூடப் பேசாமல், ஆப்ரஹாம் லிங்கன், தாமஸ் ஜெஃபர்சன் போன்றவர்களின் கருத்துகளை மேற்கோள் காட்டி அவர் பேசியது அனைவரையும் கவர்ந்தது. விவாதத்துக்குரிய எல்லா பிரச்னைகளையும் தவிர்த்து, இந்தியாவின் சிறப்புகளையும், அதன் பொருளாதார வருங்காலத்தையும் பற்றி மட்டுமே பிரதமர் ராவ் ஒவ்வொரு கூட்டத்திலும் பேசியதன் பின்னணியில், இந்திய வெளியுறவுத் துறையின் ஆறுமாத உழைப்பு இருந்தது'' என்று அவருடன் சென்றிருந்த வெளியுறவுத் துறை இணையமைச்சர் சல்மான் குர்ஷித் அப்போது என்னிடம் தெரிவித்திருக்கிறார். 

காஷ்மீர் பிரச்னையைத் தவிர்த்தது போலவே அணுஆயுத பயன்பாட்டு ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவதையும் அவர் தவிர்த்து விட்டார். பிரதமர் ராவும், நிதியமைச்சர் மன்மோகன் சிங்கும் எல்லா சந்திப்புகளிலும் ஒன்றாகவே இருந்தனர் என்றும், அரசியல் பிரச்னைகளைப் பிரதமரும், பொருளாதாரப் பிரச்னைகளை நிதியமைச்சரும் சாதுர்யமாகக் கையாண்டனர் என்றும் அப்போது வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டது.

இன்று இந்தியா அடைந்திருக்கும் எல்லா வளர்ச்சிகளுக்கும், பொருளாதார மேம்பாட்டுக்கும் பிரதமர் நரசிம்மராவின் 1994 அமெரிக்க அரசுமுறைப் பயணம்தான் அடித்தளமிட்டது என்பதை இந்தியா மறந்துவிட்டது என்பது மிகப் பெரிய வேதனை.

""பிரதமர் நரசிம்மராவ் எதிர்பார்த்ததுபோல வளைந்து கொடுப்பவராக இல்லை என்பதால், அதிபர் கிளிண்டன் கோபப்படவில்லை. சொல்லப்போனால், பிரதமர் ராவின் பிடிவாதம் அவருக்குப் பிடித்திருந்தது. அனுபவசாலியான ஒரு தலைவரை சந்தித்ததாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்'' என்று இணையமைச்சராக இருந்த சல்மான் குர்ஷித் கூறினார். பிரதமர் ராவுடன் சென்ற பத்திரிகையாளர்கள் பலரும் எனக்கு நண்பர்கள். அவர்களும் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

தனது அமெரிக்க விஜயத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரசிம்மராவ் தில்லி திரும்பிய சில நாள்களில் நானும் சென்னைக்குத் திரும்பிவிட்டேன். இப்போதுபோல, இணைய வசதிகள் இல்லாத காலம் என்பதால், மாதம் இருமுறை தில்லிக்குப் போவதும் வருவதுமாக இருந்தேன்.

நண்பர் ஒருவர் இல்லத் திருமணத்துக்காக நான் கொச்சி சென்றிருந்தபோது, அங்கே ஜார்ஜ் பெர்ணான்டஸ் வந்திருப்பதாக சொன்னார்கள். விசாரித்தபோது அவர் கடற்கரையையொட்டி அமைந்த மெரைன் டிரைவிலுள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அவரை சந்திக்கச் சென்றிருந்தபோது, அவர் விருந்தினர் மாளிகைக்கு அருகிலுள்ள சுபாஷ் போஸ் பூங்காவுக்கு சென்றிருப்பதாகச் சொன்னார்கள். அங்கே சாதாரணமான ஒரு பெஞ்சில் அமர்ந்து நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் மக்களவை ஜனதா தள உறுப்பினர்.

ஜார்ஜ் பெர்ணான்டஸைப் போல எளிமையான தலைவரைப் பார்க்க முடியாது. அவரைப்போல எரிமலைக் குழம்பாக அனல் பறக்கப் பேசும் பேச்சாளரையும் பார்க்க முடியாது. பெரியவர், சிறியவர் வித்தியாசமில்லாமல் பழகும் ஜார்ஜ் பெர்ணான்டஸூக்கு எதிரிகளே கிடையாது. எல்லோருமே நண்பர்கள்தான். இந்திரா காந்தி மட்டும்தான் விதிவிலக்கு!

என்னை அங்கே அவர் எதிர்பார்க்கவில்லை. அழைத்து அருகில் அமரச் சொன்னார். அவருடன் இருந்த கேரள ஜனதா தளத் தலைவர்கள் எல்லோருமே எனக்கு நன்றாகப் பழக்கமானவர்கள் என்பதைக் கேட்டு ஜார்ஜ் பெர்ணான்டஸூக்கு ஒரே வியப்பு. நான் சுற்றி வளைக்காமல் விஷயத்துக்கு வந்தேன்.

""சென்னையில் நீங்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்ததாகச் சொன்னார்கள். என்ன திடீரென்று ஜெயலலிதாவுடன் சந்திப்பு?''

""காங்கிரஸூக்கும் பாஜகவுக்கும் எதிராக மூன்றாவது அணி ஒன்று உருவாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதில் அதிமுகவும் இணைந்தால் நன்றாகத்தானே இருக்கும்?''

""அது எப்படி சாத்தியமாகும் என்று நினைக்கிறீர்கள்? ஒரே உரையில் எப்படி இரண்டு கத்திகள் இருக்க முடியாதோ அப்படி, ஒரே அணியில் திமுகவும் அதிமுகவும் இருக்க முடியாது என்று உங்களுக்குத் தெரியாதா?''

""திமுக இல்லாமல் போனால், மதிமுக இருக்கலாமே, அதிலென்ன தவறு?''

நான் அவரது திட்டத்தைப்  புரிந்து கொண்டேன். திமுகவில் பிளவு ஏற்பட்டதைத் தொடர்ந்து வை. கோபால்சாமியை வி.பி. சிங் உள்ளிட்ட ஜனதா தளத் தலைவர்கள் தவிர்க்கும் நிலைமை. முலாயம் சிங் யாதவ் , லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டவர்களும் சோஷலிஸ்டுகளான ஜார்ஜ் பெர்ணான்டஸ், ரபி ரே, மது தண்டவதே உள்ளிட்டோரைத் தவிர்க்கும் சூழல். அதனால், தனது நண்பரான வை. கோபால்சாமி தொடங்கியிருக்கும் மதிமுகவை ஆதரிக்க ஜார்ஜ் முற்பட்டிருக்கலாம். 

""ஜெயலலிதா என்ன சொல்கிறார்? அவர் அதற்கு சம்மதித்தாரா?''

""எந்த முடிவும் சொல்லவில்லை. காங்கிரஸ் அவரை மோசமாக நடத்துகிறது. ஆளுநரை பயன்படுத்தித் தொந்தரவு கொடுக்கிறது. அவரைச் சுற்றி உள்ளவர்கள் மீது அமலாக்கத் துறை ஏவிவிடப்பட்டு, வழக்குகள் போடப்படுகின்றன. மத்திய - மாநில உறவுக்கு ஏற்பட்டிருக்கும் சவாலில், கூட்டாட்சித் தத்துவத்துக்காக ஜெயலலிதாஜிக்கு ஆதரவளிக்க ஜனதா தளம் கடமைப்பட்டிருக்கிறது.''

""முதல்வர் ஜெயலலிதாவையும், மதிமுக பொதுச்செயலர் வை. கோபால்சாமியையும் சந்தித்த நீங்கள் ஏன் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கவில்லை? அவர் உங்களது நீண்டநாள் நண்பர். அவசரநிலைக் காலத்திலிருந்து உங்களுக்கு அவருடன் தொடர்பு உண்டு. நீங்கள் திமுக பிளவுபட்டிருப்பதை ஆதரிக்கிறீர்களா?''

""எனக்கும் கருணாநிதிக்கும் இடையே எப்போதுமே நெருக்கமான உறவு உண்டு. இப்போது அவர் ஆட்சியில் இல்லை. அவர்களது உள்கட்சிப் பிரச்னைகள் குறித்து எனக்கு அக்கறையும் இல்லை. நரசிம்மராவ் அரசின் பொருளாதாரக் கொள்கையை எதிர்ப்பவர்கள் அனைவரையும் ஓரணியில் சேர்க்க வேண்டும் என்பதுதான் எனது இப்போதைய குறிக்கோள். அதற்காகத்தான் கேரளாவிலுள்ள இடது முன்னணித் தலைவர்களை சந்திக்க வந்திருக்கிறேன்.''

""நீங்கள் ஏன் திமுக - மதிமுகவுக்கு இடையே சமசர முயற்சியில் ஈடுபடக் கூடாது..?''

""முலாயம், லாலு பிரிந்திருப்பது போலத்தான் திமுக, மதிமுக பிளவும். எதிர்க்கட்சிகள் இப்படிப் பிளவுபடுவதால்தான் காங்கிரஸ் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வருகிறது. "உலகமயம்' என்கிற விஷ விதையைக் காங்கிரஸ் தூவி இருக்கிறது. அதற்கு எதிராக 1977-இல் செய்தது போல மீண்டும் அனைத்துக் கட்சிகளையும் அணி திரட்டுவதுதான் எனது குறிக்கோள். அதில் திமுக, அதிமுக, மதிமுக எல்லாமே அடங்கும்...''

போகாத ஊருக்கு வழி தேடிக் கொண்டிருக்கிறார் ஜார்ஜ் பெர்ணான்டஸ் என்று நான் நினைத்துக் கொண்டேன். சொல்லவில்லை.

""உங்கள் கூட்டணியில் பாஜகவையும் இணைத்துக் கொள்வீர்களா?''

""மாட்டோம். காங்கிரஸூம், பாஜகவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். இரண்டுமே உலகமயம், பொருளாதாரச் சீர்திருத்தம் என்று பேசும் கட்சிகள். கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை இல்லாத கட்சிகள். ஜனதா கட்சி, தேசிய முன்னணிபோல ஒரு மாற்று அணி உருவாக வேண்டும்.''

பல பிரச்னைகள் குறித்து நாங்கள் நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்தோம். அங்கே இருந்த கேரள ஜனதா தளத் தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் ஆகியோரும் எங்கள் விவாதத்தில் கலந்து கொண்டார்கள். பிறகு மெல்லப் பொடிநடையாக அரசினர் விருந்தினர் மாளிகைக்கு வந்து சேர்ந்தோம்.

நான் சென்னை திரும்பியபோது, ஆளுநர் சென்னா ரெட்டி என்னை சந்திக்க விரும்புவதாகத் தகவல் வந்திருந்தது. தகவல் கிடைத்து இரண்டு நாள்கள் கடந்துவிட்டதால், ஆளுநர் மாளிகையைத் தொடர்பு கொண்டேன். அடுத்த நாள் காலை 11 மாளிகைக்கு என்னை வரச்சொன்னார்கள்.

என்னிடம் ஆளுநர் சென்னா ரெட்டி எழுப்பிய முதல் கேள்வி, ஜார்ஜ் பெர்ணான்டஸ் - ஜெயலலிதா சந்திப்பு பற்றியது. எனக்கு ஒரே வியப்பு...

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களின் கவனத்தை திசை திருப்பும் மோடி: பிரியங்கா குற்றச்சாட்டு

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

உலகம் சுற்றும் ஏகே!

ஐபிஎல்: 100-வது போட்டியில் களமிறங்கும் கில்!

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT