தினமணி கதிர்

6 மாதங்கள்3 கின்னஸ் சாதனைகள்!

சி.வ.சு. ஜெகஜோதி


காஞ்சிபுரம் ஓரிக்கை திருவேகம்பன் அவின்யூவில் வசித்து வருபவர்எஸ்.இளவரசன், 6 மாதங்களில் 3கின்னஸ் சாதனைகளைப் புரிந்துள்ளார்.

தனியார் பெயின்ட் உற்பத்தி நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணியாற்றி வரும் இவர், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து கின்னஸ்சாதனைகளை செய்து வருகிறார். கடந்த 6 மாதங்களில் 3 கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தி, சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.3 முதுநிலைப் பட்டங்களையும் பெற்றிருக்கும் இவரை சந்தித்து பேசினோம்.

சாதனைகள் குறித்து சொல்லுங்களேன்?

கையடக்கக் கணினியில், இஸட் முதல் ஏ வரை ஆங்கில எழுத்துகளை, அதாவது 5.24 நொடிகளில் ஒரே ஒரு ஆள்காட்டி விரலால் தட்டச்சு செய்தேன். ஏ முதல் இஸட் வரை தட்டச்சு செய்வது எளிது. ஆனால் இஸட் முதல் ஏ வரை தலைகீழான வரிசையில் தட்டச்சு செய்வது கடினம். இந்தச் சாதனையை 16.9.2021-இல் செய்து கின்னஸ் சாதனையாளரானேன்.

எனக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்தவர் 6.82 நொடிகளில் தட்டச்சு செய்திருந்தார்.அவரது சாதனையை முறியடித்திருக்கிறேன்.

இரண்டாவதாக, பொதுவாக எந்த ஒரு ஸ்மார்ட் போனிலும் எழுத்துகள் அருகருகேயும், சிறிதாகவும் இருக்கும். ஆங்கில எழுத்துகள் மாறி,மாறி இருக்கும். வரிசையாக இருக்காது. நான் ஏ முதல் இஸட் வரை ஆங்கில எழுத்துகளை 5.26 நொடிகளில் தட்டச்சு செய்தேன். இந்தச் சாதனையை கடந்த 15.1.22-இல் செய்து முடித்து கின்னஸ் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்தேன். இதற்கு முன்பு இந்தச் சாதனையை வேறு யாரும் செய்துகின்னஸில் இடம் பிடிக்கவில்லை.

டேபிள் டென்னிஸ் விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் 14 பந்துகளை வலது கை விரல்களுக்குள் ஒவ்வொன்றாக அடுக்கி அவற்றை தலைகீழாகப் புவியை நோக்கி சாய்த்துப் பிடிக்கும்போது, கீழே விழுந்து விடாமல் வைத்திருந்தேன். 6 பந்துகளுக்கு மேல் வைத்திருப்பதே மிகவும் கடினமானது. நானோ 14 பந்துகளை மொத்தம் 10 நொடிகள் வரை கீழே விழாமல் தலைகீழாக சாய்த்துப் பிடித்து வைத்திருந்தேன். 28.2.22-இல் இந்தச் சாதனையை செய்து கின்னஸில் இடம் பிடித்தேன். எனக்கு முன்பு கனடா நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டோபர் மோரின் என்பவர் 13 பந்துகளை 10 நொடிகள் விரல்களுக்குள் அடுக்கி தலைகீழாகப் பிடித்து சாதனை செய்திருந்தார்.அவரது சாதனையையும் நான் முறியடித்தேன். இந்த 3 கின்னஸ் சாதனைகளையும் கடந்த 6 மாதங்களில் செய்து முடித்திருக்கிறேன். கின்னஸ் அமைப்பிலிருந்து 3 சாதனைகளுக்கும் சான்றிதழ்களும் வந்துள்ளன.

கின்னஸில் தொடர்ந்து சாதனைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?

இந்த ஆண்டு பிப்ரவரியில் மட்டும் உலக அளவில் 34 பேர் கின்னஸில் இடம் பிடித்திருக்கின்றனர். இதில் இந்தியாவிலிருந்து இருவர் மட்டுமே உள்ளனர்.அந்த இருவரில் நானும் ஒருவன். இந்தியாவில் கின்னஸ் சாதனையாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது. இதே நிலை நீடித்தால் இந்தியாவில் கின்னஸ் சாதனையாளர்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டு விடும். நம் தேசத்துக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் எனது கின்னஸ் சாதனைகள் தொடர்கின்றன.

கடந்த சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் வந்திருந்தபோது, அவரைச் சந்தித்து எனது சாதனைகளைத் தெரிவித்தேன். அவர் தொடர்ந்து சாதனைகளைச் செய்து பெருமை சேர்க்க வேண்டும் என்று கூறிஉற்சாகமும் ஊட்டினார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தியும் என்னைப் பாராட்டி உற்சாகப்படுத்தினார்.

""ஊக்குவிக்க ஆள் இருந்தால் ஊக்கு விற்பவரும் தேக்கு விற்பார்'' என்பது பழமொழி. பலரது பாராட்டும்,ஊக்கமும் என்னை ஒரு கின்னஸ் சாதனையாளராக மாற்றி சரித்திரத்தில் இடம் பிடிக்க வைத்திருக்கிறது.
வேறு ஏதேனும் கின்னஸ் சாதனை செய்
வீர்களா?
எனது முதுகுக்கு பின்புறம் மடிக்கணினியை வைத்துக் கொண்டு அதைப் பார்க்காமலேயே ஏ முதல் இஸட் வரை சரியான இடைவெளியுடன் 26 ஆங்கில எழுத்துகளையும் தட்டச்சு செய்துள்ளேன். இந்தச் சாதனையையும் ஏழரை நொடிகளில் செய்து அதையும் கின்னஸ் அமைப்புக்கு அனுப்பியிருக்கிறேன்.அதற்கும் விரைவில் சான்றிதழ் வந்து விடும். நிறைய சாதனைகளை விரைவில் நிகழ்த்துவேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக ஆட்சியில் செய்யாறு தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்கள்: முக்கூா் என். சுப்பிரமணியன்

ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர சிறுவா், சிறுமிகள் விண்ணப்பிக்கலாம்

கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு

ஆரணியில் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

ஆரணி பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

SCROLL FOR NEXT