தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடலுக்கு ஏற்ற உணவு!

19th Jun 2022 06:00 AM | பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

ADVERTISEMENT

 

இன்றைய சூழலில் உண்ணப்படும் உணவுப் பண்டங்கள் பல வகைகளில் கிடைக்கின்றன. உண்பவருக்கு உடம்புநிலைக்கு எப்படிப்பட்ட உணவு தேவையோ அதற்கேற்ப உணவு வகைகளைத் தேர்ந்தெடுந்து உண்பதால், உடல்நிலை ஆரோக்கியம் பெறும் வகையில் சில உதாரணங்களை ஆயுர்வேதம் குறிப்பிடுகிறதா?

-ராஜமாணிக்கம்,
கோவை.

மனிதர்கள் சுலபமாய் இஷ்டப்படி தம் உடல்நிலைக்கேற்ப உணவு சில உணவு உபாயங்களை ஆயுர்வேதம் கூறுகின்றது. அவற்றிலிருந்து சில உதாரணங்கள்:
வெல்லம் கொஞ்சம் அதிக அளவில் சாப்பிட்டால் பசி மந்தத்தை நிச்சயம் ஏற்படுத்துகிறது. வெல்லமே சம அளவு கடுக்காயின் பொடி, அதற்கு கால் பங்கு சுக்குப் பொடி சேர்த்துச் சாப்பிட்டால் வெல்லமே மப்பை நீக்கி, பசியின் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

ADVERTISEMENT

கடுக்காய் சுக்குகளில் பசியின் தீவிரத்தை அதிகரிக்கச் செய்யும் குணம் இருந்தாலும் அவைகளைத் தனியாக உபயோகித்தால் இந்தச் சேர்க்கை விசேஷத்தினால் பசியின் தீபன சக்தி சுக்கு கடுக்காய்களில் அதிகமாகிறது.

நெய்  வெளியில் அனல் ஜ்வாலையில் வார்த்தால், ஜ்வாலையைத் தீவிரமாய் ஆக்குவதைப் போலவே குடலில் இருக்கும் அக்கினி சக்தியை வளர்க்கிறது. ஆனால் உருக்கின தேன் மெழுகுடன் கலந்து நெய் சாப்பிட்டால் அதிகமான பசியை அடக்கிவிடுகிறது. நாக்கையும் தொண்டையையும் வரள வைக்கும் கடும் தாகத்தையும் தேன் மெழுகு சேர்க்கையினால் நெய் அகற்றுகிறது.

உடம்பில் பித்தம் அதிகமாயிருக்கிறது. அதைக் குறைக்க வேண்டும். பித்தத்தைக் குறைப்பதற்கும் அதனால் விளைந்த கெடுதியைப் போக்குவதற்கும் முக்கியமாய் இனிப்பு சுவை உணவு தேவை. 

இனிப்புப் பண்டம் கைவசம் இல்லை. உப்பும் காரமும் வீட்டிலுள்ளது. ஆனால் அது பித்தத்தை அதிகப்படுத்தும். இம்மாதிரியான நிலையில் உப்புச் சுவைப் பண்டத்தில் எலுமிச்சம்பழச் சாறு, புளிப்பு மாதுளை,புளிவஞ்சி இவை ஏதாவதொன்றின் சாறைச் சேர்க்கவும்.  ஒரே நிமிடத்தில் உப்புக்காரம் மாறி, அந்த உணவு இனிப்புச் சுவையாய் மாறிவிடும். பித்தமும் அடங்கிவிடும்.

உப்புக்காரம் மிகுந்த உணவை உண்ணும்படி நேர்ந்தாலும் உடனே புளிப்புச் சுவையைப் பருகவும். குடல் எரிவு முதலிய உபாதி உண்டாகாது.

பாக்கு சுண்ணாம்பு வெற்றிலை இவைகளுக்குத் தனித்தனியே சுவை நிறம்,  செய்கை குணம், மணம்  எல்லாம் வெவ்வேறுதான். இம்மூன்றையும் ஓர் குறிப்பிட்ட அளவில் ஒன்று சேர்த்து பற்களால் மென்று சுரக்கும் சாறு சேரும்போது அவை எல்லாம் மாறி விடுகின்றன.

வாய் சிகப்பு நிறம் அடைகிறது. மூன்றிலும் இல்லாத குணங்களை உடம்பில் செய்கிறது. வாய் துர்நாற்றம் ஒழிகிறது. நறுமணம், ருசி, முகமலர்ச்சி, ஜீரண சக்தி முதலியதைச் செய்கிறது.

நெல்லை வறுத்துத் தயாரிக்கும் சத்து மாவு, உடலில் எண்ணெய் பசையைக் குறைத்து வறட்சி தரக் கூடியது. ஆனால் சுத்தமான தண்ணீருடன் கலக்கிக் குடித்தால் வறட்சி செய்யாது. நெய்ப்பைக் குறைக்காது. நேர்மாறாக சீக்கிரம் பசி வேகத்தைக் குறைத்து புஷ்டியும் திருப்தியும் தருகிறது.

இப்படி இயற்கையின் சுபாவத்தின் தன் சக்தியை அறிந்து அதற்கேற்ப உணவை ஏற்று ஆரோக்கியத்தை மேம்படும் வழியில் நாம் வாழ பழகிக் கொள்ள வேண்டும்.

(தொடரும்)

ADVERTISEMENT
ADVERTISEMENT