தினமணி கதிர்

சிவாஜியின் ஆசை!

17th Jul 2022 06:00 AM | டாக்டர் ராஜலட்சுமி ராதாகிருஷ்ணன்/ ராதாகிருஷ்ணன்

ADVERTISEMENT

 

தினமணி கதிர் 15.5.2022- இதழில் ஜி. அசோக் எழுதிய "பொன்னியின் செல்வன்' குறிப்புகள் என் நினைவலைகளை கிளர்ந்தெழுப்பியதால் அதைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பொன்னியின் செல்வனை எவ்வளவு ஆழமாக நேசித்தார் என்பதை அனைவரும் அறிவர். ஆயினும், தனிப்பட்ட மருத்துவராக இருந்த காரணத்தால், அவரை நாள்தோறும்  சந்தித்து வந்த என் கணவருக்கும் சற்று அதிகமாக தெரிந்த செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

நடிப்பில் இருந்து சிவாஜி கணேசன் சற்று ஓய்வு பெற்றிருந்த காலம். காலையிலேயே குளித்து வெண்மையான ஆடையில், நெற்றித் திருநீரோடு பக்கத்தில் பொன்னியின் செல்வனோடு அமர்ந்திருப்பார். நான் துவங்குவேன்.

ADVERTISEMENT

""பொன்னியின் செல்வன் திரைப்படமாக வந்தால் நீங்கள் பெரிய பழுவேட்டரையராக நடிக்க வேண்டும்''

சிம்மக் குரலில் சிரிப்போடு, ""ஏன்.. நான் கிழவனாகிவிட்டேனா''

""இல்லை.. நவரஸங்களையும் காண்பிக்க வேண்டிய பாத்திரம் அது..''
ஒரு கணம் மௌனமானார்.

""யார் படமாக்குவார்கள். என் நண்பர்கள் எல்லோரும் மறைந்துவிட்டார்களே...''
அவர் குரலில் விரக்தியும் சோகமும் தெரிந்தது.

சில நாள்கள் கழிந்தவுடன்...

""ஒய்.எம்.சி.ஏ. திறந்தவெளி அரங்கில் பொன்னியின் செல்வன் நாடகம் நடக்கப் போகிறது' என்று சொன்னேன்.

""யார் நடத்துகிறார்கள்?'' என்று கேட்டார். குரலிலே ஆர்வமும், நாடகத்தின் மீதான காதலும் விரவி ஒலித்தன.

""மாஜிக் லேண்டன் என்ற அமைப்பு'' என்றேன்.

""நானும் வருகிறேன்'' என்று சொன்னவர்,  அந்த நாடக அரங்கின் அமைப்பை சொல்லாமலேயே விவரித்தார்.

பன்னாட்டு நாடக மேடைகளின் வடிவங்கள் அவர் நினைவுகளில் நிரந்தரமாகத் தங்கியிருந்ததைப் புரிந்துகொண்டேன்.

எங்கள் ஆசானும் இதய நோய் நிபுணருமான வி.கணேசன்தான், சிவாஜி கணேசனின் இதயத்தின் காவலர். அவர் அனுமதி மறுத்துவிட்டார்.

""திறந்தவெளி அரங்கு. மக்கள் கூட்டம் அதிகமாய் இருக்கும். புழுதி மிகும். உங்கள் நுரையீரலுக்கு ஆகாது. நீங்கள் கட்டபொம்மன் நாடகம் நடத்தியபோது, நீங்கள் இளைஞர்''

அவர் முகம் வாடிவிட்டது. ஆனால், டாக்டர் சொல்வதைத் தட்ட மாட்டார்.

""சரி.. நீ போய் பார்த்துவிட்டு வந்து விவரி''

""எட்டு அரங்குகள். தடாகமும் உண்டு. உயரத்தில் சுந்தரசோழர் மஞ்சத்தில் படுத்தே இருப்பதும் உண்டு''

ஒளி மாற்றி மாற்றி பாய்ச்சப்பட்டதை விவரித்தபோது, அவர் முகத்தில் ஒளி பரவியதை இன்றும் என்னால் மறக்க முடியாது. மீண்டும் பொன்னியின் செல்வன்.

நான்கு மணி நேரம். மியூஸிக் அகாதெமி அரங்கத்தில் நாடகம். நானும், என் கணவரும்.. முன் வரிசையில் அமர்ந்திருந்தோம். 

ஆடி பதினெட்டு. காவிரி வணக்க ஆரம்பம். அரங்கத்தின் அழகு அமைப்பு. பசுபதியின் (ஆதித்த கரிகாலன்) நடிப்பு... பார்க்க.. பார்க்க... அழுகை வெடித்தது. அசையாமல் அமர்ந்திருந்தோம்.

முன்னர் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தின் ""பொன்னியின் செல்வன்'' குறித்த விவரங்களுக்காக அன்னை இல்லத்தில் காத்திருந்த சிவாஜி, ""மியூஸிக் அகாதெமி'' நாடகத்தில் நடத்தபோது, மறைந்து விட்டிருந்தார்.

அந்த ஆர்வம். மா.இராசமாணிக்கனாரின் மருமகள் புனிதவதி இளங்கோவன். செம்பியன் மகாதேவி கூத்துப் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட பல இளைஞர்கள்...''

முன்னர் நான் விவரித்தபோது, அவர் கூறிய சொற்கள்:

""இந்தப் படைப்பில் பங்கு பெற எப்படிப்பட்டவர்கள் முன்வந்துள்ளனர். எனக்குதானே கொடுத்துவைக்கவில்லை. பார்க்கவும்... நடிக்கவும்...''

""இன்று யாரிடம் பகிர்வது'' என்ற கனத்த இதயத்தோடும் நானும் என் கணவரும் 
மியூஸிக் அகாதெமி வாயிலில் வெகுநேரம் கண்ணீரோடு அமர்ந்திருந்தோம்.

""டாக்டர். பொன்னியின் செல்வனை 12 முறைக்கு மேல் படித்துவிட்டேன். விமானத்தில் செல்லும்போதெல்லாம் பொன்னியின் செல்வன் என்னோடு பயணிப்பார்''

""என் சோழ நாடு.. எழுதியவர் சோழ நாட்டவன். நானும் சோழ நாட்டுக்காரர்.. பெருமை எங்களுடையது''

அந்தக் குரல்.. அதில் தொனித்த கர்வம். தன் மண்ணை நேசித்த பாங்கு. மறக்க முடியாது.

அவர் மறையவில்லை. கல்கியும் மறையவில்லை. சோழ நாட்டில் மீண்டும் எங்காவது பிறந்திருப்பார்கள்.

மேதைகளைப் போற்றும் நாட்டில் மேதைகள் என்றும் மறைவதில்லை.
 

(சிவாஜி கணேசனின் மருத்துவர்கள்)

படங்கள்:  யோகா

ADVERTISEMENT
ADVERTISEMENT