தினமணி கதிர்

விக்டோரியா மகாராணியும் ஐந்தாம் ஜார்ஜும்

மு.ரியானா


இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து அரசி விக்டோரியா மகாராணி,  தன் பேரன் ஐந்தாம் ஜார்ஜை (பிற்காலத்தில் மன்னன்) இளமையில் வெளிநாட்டில் ஒரு கப்பல் கட்டும் துறையில் பணிபுரிய அனுப்பியிருந்தார்.
பேரனுடைய செலவுக்கு அங்குக் கிடைக்கும் ஊதியம் போதாது என்று எண்ணித் தானும் ஒரு ஜம்பது பவுன் மாதம்தோறும் அனுப்பிக் கொண்டிருந்தார்.
""தன் செலவுக்கு  இந்தப் பணமும் போதவில்லை''  என்று 
ஐந்தாம் ஜார்ஜ்  பாட்டி விக்டோரியா மகாராணிக்கு, ""இனி நூறு பவுனாக அனுப்புங்கள்'' என்று எழுதிக் கேட்டிருந்தார்.
இதனைக் கண்டதும், மகாராணியார் சிந்தனையில் ஆழ்ந்தார்.  அதிகமாக அனுப்ப விரும்பவில்லை. அனுப்பாமல் இருக்க மனமும் ஒருப்படவில்லை. அனுப்பாவிட்டால் பேரன் வருந்துவானே என்ற கவலை ஒருபுறம். அனுப்பினால் பேரன் அதிக செலவாளியாகிக் கெட்டு விடுவானே என்ற வேதனை மற்றொருபுறம். என்செய்வோம்! இந்தக் குழப்பத்தில் அவரால் இன்னது செய்வது என்று புரியவில்லை.
பேரனை எண்ணி, கடிதம் எழுதுவார்; அதை அனுப்பாமல் கிழித்துவிடுவார். எழுதுவதும், கிழித்துப் போடுவதும் சில நாள்கள் சென்றன.
இறுதியாக,  உலகத்தையாளும் சக்கரவர்த்தினி, தன் பேரனுக்கு (வருங்கால மன்னனுக்கு) பணம் அனுப்ப மறுக்கலாமா?- என்று எண்ணிக் கடைசியாகப் பணம் அனுப்பப் போகும்போது, மனம் வரவில்லை. பணத்தையும் அனுப்பவில்லை.
பின், ஒருநாள் கடிதம்- அதில் அவன் பெருஞ்செல்வத்தில் பிறந்து வளர்ந்த குடிமகனாயினும், எப்படிச் சிக்கனமாய் இருந்து வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பது பற்றிய விதிகளை, அதற்குரிய வழிகளை எல்லாம் நன்கு விளக்கமாக விவரித்து எழுதி- கடிதத்தை உறையிற் போட்டு அஞ்சலில் அனுப்பச் சொன்னார்.
அஞ்சலில் போட்டுவிட்டு வந்தவனை நோக்கி பதைபதைத்து- ""அஞ்சல் நிலையத்துக்குச் சென்று அந்தக் கடிதத்தைத் திரும்பி வாங்கிவா'' என்று அவனைத் திருப்பி அனுப்பினார்.
அங்கு போய் வந்த வேலையாள், ""அஞ்சல் கட்டு எடுத்தாயிற்று; போய்விட்டது'' என்று சொன்னான்.
விக்டோரியா மகாராணிக்குப் பெருங் கவலை.
""பேரன் என்ன நினைப்பானோ? என்ன செய்வானோ? எப்படிக் கஷ்டப்படுகிறானோ?''- என்ற கவலையில் அந்த வாரம் முழுவதும் சரியாக உண்ணாமலும், உறங்காமலும் கூட இருந்து வருந்தினார்.
பேரனிடமிருந்து பத்தாம் நாள் கடிதம் வந்தது. அதைக் கண்டதும் பேரன் என்ன எழுதியிருக்கின்றானோ எப்படி துயருகிறானோ? என்ற கவலையில் உடல் நடுங்கி, கை நடுக்கத்தோடு கடிதத்தைப் பிரித்துப் பார்த்தார்கள்.
அதில், இந்த நான்கு, ஐந்து வரிகள்தான் இருந்தன:
""பாட்டி. இனிமேல் நீங்கள் ஐம்பது பவுனும் அனுப்ப வேண்டாம். நான் பணம் கேட்கும்போதெல்லாம் எனக்கு சிக்கன வாழ்க்கைக்கான விவர விளக்கவியல் எல்லாம் எழுதி அனுப்பிக் கொண்டே இருங்கள். அது போதும்! ""சிக்கனமாக வாழ்வது எப்படி'' எனும் கட்டுரையின் ஆசிரியர் விக்டோரியா மகாராணி என்று- இதனை ஒரு புத்தக வியாபாரிக்கு ஆயிரம் பவுனுக்கு விற்றுவிட்டேன்.''
இதனைப் பார்த்ததும், உலகத்தையாண்ட மகாராணியின் உள்ளம் எப்படி இருந்தது? எப்படி இருந்திருக்கும் ?

- (கி.ஆ.பெ. விசுவநாதம் எழுதிய அறிவுக் கதைகள் நூலிலிருந்து)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணனும் களப்பலியானவனும்...

அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

SCROLL FOR NEXT