தினமணி கதிர்

சவாலான எதுவுமே சுவாரஸ்யம்தான்!

தி. நந்​த​கு​மார்

ஆங்கில நாவல் மொழிபெயர்ப்பு சுவாரசியமாக இருந்தது. சவாலான எதுவுமே சுவாரஸ்யமானதுதான் என்கிறார்  எழுத்தாளர் மாலன். 

சாகித்ய அகாதெமியின் மொழிபெயர்ப்பு 2021-க்கான விருது எழுத்தாளர் மாலனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. நூலின் பெயர் ""ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்''. பிரபல எழுத்தாளர், கவிஞர்  சைரஸ் மிஸ்ரி எழுதிய "க்ரானிக்கல் ஆஃப் ஏ கார்பஸ் பேரர்' என்ற ஆங்கில நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பே இந்த நூல்.

மாலனிடம் பேசியதிலிருந்து...:

கே: நீங்கள் இந்த நாவலை மொழிபெயர்ப்புக்குத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன?

ப: மொழிபெயர்ப்பு குறித்து நான் ஒரு கொள்கை வைத்திருக்கிறேன். மொழிபெயர்க்கப்படும் ஒரு படைப்பு வாசிப்பவருக்கு அவர் அறியாத உலகங்களை அறிமுகப்படுத்த வேண்டும். நான் முன்பு அமெரிக்கச் சேரிகளில் வாழும் கறுப்பினப் பெண்களின் பாடுகளை விவரிக்கும் நாவல் ஒன்றை மொழி பெயர்த்திருக்கிறேன். 

புரட்சிக்காரரான மா சே துங் இயற்கை அழகில் தன்னையிழக்கும் கவிஞராக எழுதிய கவிதைகளை மொழி பெயர்த்திருக்கிறேன்.

இது இந்தியாவில் வசிக்கும்,  ஆனால் இந்தியர்கள் அதிகம் அறிந்திராத பார்சி சமுதாயத்தினரின் நம்பிக்கைகள், சடங்குகள், விழுமியங்கள் இவற்றைப் பின் புலமாகக் கொண்ட ஒரு காதல் கதை. பார்சிகளின் அக்னிக் கோயில் ஒன்றில் பணியாற்றும், பெரிதும் மதிக்கப்படும், அறிவார்ந்த, மரபார்ந்த தலைமைக் குருக்களின் மகனொருவன் பிணம்தூக்கி ஒருவரின் மகளைக் காதலிக்கிறான். அவளின் தந்தை திருமணம் செய்து கொடுக்க ஒரு நிபந்தனை விதிக்கிறார். அது: அவன் குருக்களின் வீட்டிலிருந்து வெளியேறி தன்னைப் போல பிணந்தூக்கும் தொழிலில் இணைந்து கொள்ள வேண்டும் என்பது. காதலின் பொருட்டு அந்த நிபந்தனையை ஏற்கிறான் கதாநாயகன். ஆனால் காதல் மண வாழ்வு நெடுங்காலம் நீடிக்கவில்லை. காதல் மனைவி ஒரு பெண் குழந்தையைப் பெற்றுக் கொடுத்துவிட்டு இறந்து போகிறாள்.  ஆனால் கதாநாயகன் பிணந்தூக்கும் தொழிலிலிருந்து விலகவில்லை. இந்த நாவல் ஏழ்மையான, விளிம்பு நிலையில் உள்ள, பிணந்தூக்கிகள் எதிர்கொள்ளும் அவமானங்கள், இழிசொற்கள், புறக்கணிப்புகள், போராட்டங்கள் இவற்றையும் பேசுகிறது.

மொழிபெயர்ப்பில் உள்ள சவால்கள் என்ன?

மொழிபெயர்ப்பு என்பது சொற்களை மொழி பெயர்ப்பது அல்ல. படைப்பின் ஆன்மாவை இன்னொரு மொழிக்குக் கடத்துவது. ஒரு கலாசாரத்தை இன்னொரு கலாசாரத்துக்கு அறிமுகப்படுத்துவது. அதற்கு மொழி ஒரு கருவி அவ்வளவுதான். வீணையடி நீ எனக்கு என்ற தன் கவிதையை மொழிபெயர்க்கும் பாரதி வீணை என்ற இடத்தில் "ஹார்ப்' என்பதைப் பயன்படுத்துகிறார். வீணைக்குக் குடம் உண்டு. அதுதான் அதற்கு கமகத்தைத் கொடுக்கிறது. ஆனால் ஹார்ப்புக்கு குடம் கிடையாது (அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும் பாட்டின் காட்சியில் கையில் வைத்துக் கொண்டு, எம்ஜிஆர் வாசிப்பாரே அதுதான் ஹார்ப்) அதை அறிந்தேதான் பாரதி அந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறார். ஏனெனில் அவர் வீணை என்ற ஒன்றை அறியாத ஆங்கில சமூகத்திற்காகத்தான் மொழிபெயர்க்கிறார். அவர்கள் அறிந்து கொள்ள ஏதுவாக அவர்களின் இசைக்கருவியை எடுத்துக் கொள்கிறார்.

மொழிபெயர்ப்பு அனுபவம் எப்படி இருந்தது?

சுவாரசியமாக இருந்தது. சவாலான எதுவுமே சுவாரஸ்யமானதுதான். பத்திரிகைகளில் பணியாற்றியபோது செய்திகளை, செய்திக் கட்டுரைகளை மொழி பெயர்த்திருக்கிறேன். ஆனால் பத்திரிகை மொழிபெயர்ப்பும்  படைப்புகளை மொழிபெயர்ப்பதும் ஒன்றல்ல. இது வேறு ஒரு அனுபவம்;  வேறு ஒரு சுகம்.  உங்களுக்குள் உள்ள எழுத்தாளனை ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு பாத்திரமும் உரசிச் செல்லும்.

மலைமுகட்டில் காற்று வாங்குவதற்கும் கடற்கரையில் காற்று வாங்குவதற்கும் வித்தியாசம் உண்டல்லவா?

சாகித்ய அகாதெமி விருது குறித்து எப்படி உணர்கிறீர்கள்?

மகிழ்ச்சியாக இருந்தது. நான் ஏற்கனவே தமிழக அரசு அளித்த சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்றிருக்கிறேன். ஆனால் பலர் என்னைப் பத்திரிகையாளராக அறிவார்கள். சிலர் எழுத்தாளனாக,  சிறுகதை ஆசிரியனாக, படைப்பாளியாக அறிவார்கள் . இந்த விருது நான் ஒரு மொழிபெயர்ப்பாளனும் கூட என சமூகத்துக்கு அறிவிக்கிறது. அதனால் மகிழ்ச்சி. முதல்வர் உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள்,சக எழுத்தாளர்கள், அன்பான வாசகர்கள் எனப் பலதரப்பினரும் வாழ்த்தினார்கள். அவர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றி. இதற்கு முன்னரும் ஆண்டுதோறும் இந்தப் பரிசு யாரோ ஒருவருக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அப்போதெல்லாம் அது இத்தனை கவனம் பெற்றதாக எனக்கு நினைவில்லை. இப்போது சாகித்ய அகாதெமியின் இந்த விருதும் பரவலாகக் கவனம் பெறுவது சந்தோஷம் கொடுக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

SCROLL FOR NEXT