தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: புகை வைத்தியம்!

எஸ். சுவாமிநாதன்

எனக்கு அடிக்கடி இருமல், மூச்சிரைப்பு, ஜலதோஷம், குரல்வளை வலி, துர்கந்தமான மூச்சுக்காற்று, முகம் வெளுத்துப்போதல், தலைமுடி சிக்கு என்றெல்லாம் அடிக்கடி துன்பப்படுகிறேன். "சளி பிடிச்சா சனி பிடிச்ச மாதிரி' என்ற சொலவடை எனக்குச் சரியாகத்தான் இருக்கிறது. எப்படி குணப்படுத்துவது?

நாராயணன், கரூர்.

மனிதர்களை எந்த ஒரு யுகத்திலும் விடாத இந்தப் பிரச்னையை முன்பே அறிந்து இருந்த நம் முன்னோர் "தூமபானம்' எனும் மூலிகைப் புகை வைத்தியத்தைக் கண்டறிந்து பயன்படுத்தி தம்மை குணப்படுத்திக் கொண்டனர். அதுபற்றிய விவரம்:

கபவாத தோஷங்களால் கழுத்திலும் தொண்டையிலும் ஏற்படக் கூடிய உபாதைகளைத் தடுக்கும்விதத்திலும், ஏற்பட்டுப் போன உபாதகளைக் குணப்படுத்தும் விதமாகவும் எப்போதும் கவனமாக இருந்து மூலிகைப் புகையைப் பயன்படுத்தி குணம் பெற வேண்டும்.

ஸ்நிக்தம் (நெய்ப்பு), மத்யம், தீக்ஷ்ணம் என வரிசைக்கிரமமாக வாத தோஷத்திலும், வாத - கப தோஷத்திலும், கபதோஷத்திலும் பயன்படுத்தக் கூடிய தூமபானத்தை ஆயுர்வேதம் கண்டறிந்துள்ளது.

தும்மல், கொட்டாவி, மலம் கழித்தல், சிறுநீர் கழித்தல், அறுவைச் சிகிச்சை, சிரிப்பு மற்றும் பல் தேய்த்தல் ஆகியவற்றின் இறுதியில் ஸ்நிக்தம் எனும் நெய்ப்பான தூமபானத்தைச் செய்து கொள்வார்கள். மேற்குறிப்பிட்ட காலங்களிலும் இரவின் இறுதியிலும், உணவிற்குப் பிறகும், மூக்கில் மருந்துவிட்டுக் கொண்ட பிறகும் மத்யதூமபானம் செய்து கொண்டார்கள்.
உறக்கம், மூக்கில் மருந்துவிடுதல், கண்ணில் மைஎழுதுதல், குளித்தல், வாந்தி ஆகியவற்றின் இறுதியில் தீக்ஷ்ண தூமம் பிரயோகம் செய்து தம்மைப் பாதுகாத்துக்கொண்டனர்.

புகை வைத்தியத்திற்காக மூங்கில் குழாயினுள் மூன்று அறைகளோடு கூடியதும், வளைவில்லாமல் நேரானதும், அடிப்பகுதியில் கட்டை விரல் நுழையும்படியான அளவில் ஓட்டையுடன் கூடிய குழாயை வடிவமைத்துப் பயன்படுத்தினார்கள். ஸ்நிக்த தூமத்தில் 32 அங்குலமும், மத்யதூமத்தில் 40 அங்குலமும் என்ற கணக்கில் எடுத்துக் கொண்டு உபயோகித்தனர்.

நேராக அமர்ந்து தூமபானத்தில் மட்டுமே மனதைச் செலுத்தி, வாய் துறந்து, ஒரு மூக்குத் துவாரத்தை அடைத்து, மற்ற துவாரத்தில் குழாயை வைத்து மூலிகைப் புகையை உறிஞ்ச, வாய் வழியாக மட்டுமே புகையை வெளியே விட வேண்டும். மூக்கு மற்றும் தலையிலுள்ள உபாதைகள் நீர்த்து ஜலதோஷமாக உள்ள நிலையில், முதலில் மூக்கு வழியாக உறிஞ்சவும். கெடுதிகள் கெட்டியாக மூக்கு மற்றும்தலையில் ஒட்டியுள்ள நிலையில் அவற்று உருக்குவதற்காக வாய் வழியாகப் புகையைச் செலுத்தவும். எதுவாக இருப்பினும் மூன்று முறைமட்டுமே ஒரு தடவையில் செய்ய வேண்டும். மூக்கு வழியாக புகையைவிட்டால், கண் கேடடைந்துவிடும்.

அகில், குக்குலு, கோரைக் கிழங்கு, ஜடாமாஞ்சி, வெட்டிவேர், இருவேலி, லவங்கம், அரேணுகம், அதிமதுரம், வில்வபழச்சதை, குங்குமப்பூ, உளுந்து, பார்லி, எள்ளு, தேங்காய், மஜ்ஜை, நெய்க்கொழுப்பு, நெய் போன்றவை ஸ்நிக்ததூம பானம் செய்வதற்குப் பயன்படுத்தலாம்.

சிற்றீந்தல், கோலரக்கு, ஏலக்காய், தாமரைப் பூ போன்றவை மத்ய தூமத்திலும், வரட்டுமஞ்சள், தசமூலம், அரிதாரம், கோலரக்கு, திரிபலை போன்றவை தீக்ஷ்ண தூம பானத்திலும் பயன்படுத்தி குணமடைந்தனர்.

காலத்திற்கேற்றாற் போல் எளிதாகக் குறிப்பிட வேண்டுமே என்பதால், நீங்கள் விரலி மஞ்சள் கட்டையை எடுத்து, அதன் மேல் சிறிது நெய் தடவி, நெருப்பில் காட்டினால் வரும் புகையை, ஒரு மூக்கை அடைத்து மறு மூக்கினுள் புகையைச் செலுத்தி, வாய் வழியாக வெளியே விடவும். ஒரு நாளைக்கு மூன்று வேளையாவது செய்யலாம். வால்மிளகையும் புகைப்பதற்காகப் பயன்படுத்தலாம். ஊசிமுனையில் வால்மிளகைக் குத்தி நெருப்பில் காண்பிக்க, புகையும்.

நீங்கள் குறிப்பிடும் அத்தனை உபாதைகளுக்கும் காது, வாய், கண்ணீர் ஒழுக்கு, கண் அரிப்பு, கண் வலி, உணர்வற்றநிலை, அலுப்பு, விக்கல் போன்ற உபாதைகளையும் இந்தப் புகை வைத்தியம் மூலம் குணப்படுத்திக் கொள்ளலாம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

SCROLL FOR NEXT