தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வெளி உணவால்  ஏற்படும் பிரச்னைகள்!

எஸ். சுவாமிநாதன்

எனக்கு வயது 31. அடிக்கடி வேலை நிமித்தமாக பல ஊர்களுக்கும் சென்று தங்கி அங்குள்ள ஹோட்டல் சாப்பாடுதான் சாப்பிட முடிகிறது. அதனால் வயிறு கெடுகிறது. வாய் கசப்பு, குமட்டல், பசியின்மை, வாய்ப்புண் என்றெல்லாம் அடிக்கடி ஏற்படுகிறது. இவை மாறவும், குடல் கெடாமல் இருப்பதற்காகவும் நான் என்ன செய்ய வேண்டும்?

தாஸ், திருச்சி.

மனிதர்களின் ஆரோக்கியம் அவர்கள் உணவின் வழியாக சம்பாதித்துள்ள பலத்தில்தான் இருக்கிறது. இதற்காகத் தொடர்ந்து செயல்படும் கல்லீரல், குடல் போன்ற பகுதிகள், உணவிலுள்ள விஷப் பொருள்களை வடிகட்டி, சத்தான பகுதியை மட்டுமே உடல் வளர்ச்சிக்காக எடுத்துக் கொண்டு, கழிவுகளை மலம், சிறுநீர், வியர்வை என்றெல்லாம் வெளியேற்ற அவை செய்யும் அனைத்து முயற்சிகளுக்கும் தடைக்கல்லாக இருப்பது, நீங்கள் பல இடங்களிலும் சாப்பிடும் உணவே. உணவில் அதீத கவனம் செலுத்தி உங்களுக்கு அன்போடும்
பரிமாறும் செயலை ஹோட்டல்களில் எதிர்பார்க்க முடியாது.

நீங்கள் குறிப்பிடும் அறிகுறிகளின் வாயிலாக ஹோட்டல் உணவுகள் மூலமாக உங்களுடைய போதகம் எனும் நாக்கிலுள்ள கபதோஷமும், குடலில் செரிமானம் செய்வதற்காகக் காத்திருக்கும் பாசகபித்தம் எனும் தோஷமும் கெட்டுவிட்டதாகத் தெரிகிறது. இவை இரண்டையும் கெடுக்கும் அரிசியும் உளுந்தும் கலந்த இட்லி, தோசை, வடை, தேங்காய் சட்னி போன்றவற்றை நீங்கள் காலை உணவாகச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அவற்றிலுள்ள நெய்ப்பும், குளிர்ச்சியும், கனமும், கப சீற்றத்துக்கு காரணமாகவும் லேசு மற்றும் வயிற்றை இளக்கிவிடும் குணங்களால் பித்த சீற்றத்திற்கும் காரணமாகின்றன.

அதற்கு மாற்றாக, பொங்கல், இடியாப்பம், அடை, ஆப்பம் போன்றவற்றைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடலாம். அவையும் நன்கு செரிமானம் ஆன பிறகே அடுத்த வேளை உணவைத் தேர்வு செய்ய வேண்டும். இரு உணவுகளுக்கும் நடுவே செரிமானத்திற்கான கால அவகாசத்தை நீங்கள் ஏற்படுத்தித் தந்தால்தான் உபாதைகள் குறைய வாய்ப்பிருக்கிறது.

சீற்றமடைந்துள்ள தோஷங்களைச் சாந்தப்படுத்தும் சீந்தில் கொடி, பதிமுகம், வேம்பு, செஞ்சந்தனம், தனியா போன்றவை மிகச் சிறந்தவை. இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கஷாயம் தயாரித்து விற்கப்படுகிறது. காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து மூன்று வாரங்கள் சாப்பிட்டால், நீங்கள் குறிப்பிட்ட உபாதைகள் குறையும்.

வில்வாதி லேகியம் எனும் மருந்தை இரவு படுக்கும் முன் சுமார் பத்து கிராம் நக்கிச் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளவும். வயிற்றில் கசடுகள் ஏதும் ஏற்படாமல், குமட்டலைக் குறைத்து, பசியை நன்றாகத் தூண்டிவிடும்.

நீங்கள் தங்கும் அறையிலேயே சூடான பாலை வரவழைத்து அதில் சுத்தமான அவல் கலந்து, இரவில் சாப்பிட, மறுநாள் காலை வயிற்று உபாதைகள் ஏதுமில்லாமல் சுகமாக எழுந்திருக்கலாம். அதை விடுத்து, இரவில் பரோட்டா, குருமா, சிக்கன், மட்டன் என்றெல்லாம் சாப்பிட்டால் விரைவில் வயிற்று உபாதைகள் ஏற்பட்டு, அல்சர், குடல் வாயு சீற்றம் என்று துன்பப்பட நேரும். மனமும் அமைதியில்லாமல் எதிலும் தெளிவில்லாத சிந்தனைப் போக்கை உருவாக்கும்.

ஆறு மாதத்திற்கு ஒருமுறை பித்தத்தை நீர்பேதியாக வெளியேற்றும் அவிபத்தி சூரணம், திரிவிருத்லேகியம் போன்றவை நீங்கள் சாப்பிட உகந்தது.

(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்துக்கு ஆபத்து -முதல்வர் ஸ்டாலின்

ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக ஜெ.பி.நட்டா பிரசாரம்!

பலாப்பழ சின்னம் மீதுதான் சந்தேகம்: ஓ. பன்னீர்செல்வம் மீது ஓபிஎஸ் புகார்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் அறுபத்து மூவர் விழா கோலாகலம்!

‘வில்லேஜ் குக்கிங்’ தாத்தாவின் மருத்துவத்துக்கு உதவ ராகுல் மறுப்பா?

SCROLL FOR NEXT