தினமணி கதிர்

எனக்கே எனக்கு...

20th Feb 2022 06:00 AM | உஷா தீபன்

ADVERTISEMENT


""குட் மார்னிங்''- என்று அந்தப் பெரியவரின் வாய் முனங்கியது. கை உயர்ந்தது. பதில் வணக்கம் சொன்னான் இவன். தினசரி காலையில் வாசல் கதவு திறந்ததும் கண்ணில் படுபவர் அவர்தான். நேர் எதிர்வீடு. திண்ணைக்கு அடுத்த வெளி வராண்டாவில் குத்திட்டு அமர்ந்திருப்பார். தள்ளாத வயதில் எப்படி அவரால் அப்படி கீழே கால்களை மடித்துக் குத்திட்டு அமர முடிகிறது என்று ஆச்சரியமாய் இருக்கும். வாயிலிருந்து எச்சில் வழிந்து கொண்டேயிருக்கும். வழியாமல் உள் நிறுத்தும் அல்லது எகிறி பக்கவாட்டில் இருக்கும் மணல் பகுதியில் துப்பும் சக்தி அவருக்குக் கிடையாது. நெஞ்சிழுப்பு உண்டு. திணறும்
சத்தம் கேட்டது. கண்களில் நீர் வழிந்து கொண்டேயிருப்பதால் கண்களின் அழுக்கை எடுப்பது சுலபமாய் இருந்தது அவருக்கு. வழக்கமாய் காலையில் கொஞ்ச நேரத்திற்கு அப்படித்தான் அவஸ்தைப்படுவார். வெயில் ஏறி மூச்சு சமனப்பட்டதும் திண்ணையில் போய் அமர்ந்து கொள்வார். தினமும் இந்த தரிசனம் உண்டு இவனுக்கு!
அதோடு தன்னிச்சையாக அவர் அவனுக்கு வணக்கம் சொல்கிறார். ஒரு சிறிய மன நெருக்கப் புன்னகை. ஏனோ இவனைப் பிடித்திருக்கிறது. தெம்போடு நடந்து கொண்டிருந்த காலத்திலே வெளி கேட் வரை இறங்கி வந்து பேசுவார். "இங்கே வா' என்று அழைத்ததில்லை. இறங்குவது தனக்காகத்தான் என்று அருகில் சென்று விடுவான். எடுத்த எடுப்பில் தலையில் கை வைத்து ஆசிர்வதிப்பார். அது ஏன் என்று சிலிர்ப்பாகவே இருக்கும். கண்கள் கலங்கி விடும். வேறு ஒன்றும் பேசியதில்லை. இடுங்கிய கண்களின் வழியே அன்பு வழியும்.
அப்பகுதியில் வீடு கட்டிக் குடிவந்தபோதிலிருந்தே அறிவான். அப்போது அவர்கள் வீடு மட்டும்தான் அங்கே கட்டப்பட்டிருந்தது. அவர் மகன் கட்டியது.
அவர் யாருடனும் பேசுவது கிடையாது. பார்ப்பதோடு சரி. ஒரு சிறு புன்னகை கூடக் கிடையாதுதான். கிணறு வெட்டும் முன் அவர்கள் போரிலிருந்துதான் ரப்பர் குழாய் இழுத்து தண்ணீர் உபயோகித்தது. உதவிக்கு மறுக்காமல் ஒத்துக் கொண்டார் மகன். "வெறும் தொண்ணூறு அடிதான் வெட்டினோம்...கைக்கெட்டுற மாதிரி தண்ணி வந்திடுச்சு...' என்று சந்தோஷப்பட்டார். அதைப் பார்த்துதான் இவனும் தன் வீட்டுக்கு ஒரு கிணறை வெட்டிக் கொண்டான். அதிலும் நீர் கொப்பளித்தது. எழுபது அடியோடு நிறுத்திக் கொண்டான்.
கிணற்றடியில் வாளி வாளியாக இறைத்துத் தலையில் ஊற்றிக் கொள்வதில் ஓர் அலாதியான சந்தோஷம். கிராமத்தில் வயற்காட்டுக் கிணற்றுக்குக் குளிக்கப் போவது உண்டு. "கடவுளே, மோட்டார் போட்டு இறைச்சு, தண்ணி கம்மியா இருக்கணுமே' என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டே போனதும்... நாலடி ஆழத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் ஊற..ஊற... இடுப்பு, மார்பு, கழுத்து என்று வந்து ஆள் முங்கும் அளவுக்கு ஆகி, அதில் தினமும் நீச்சல் பழகியதை மறக்கவே முடியாது. பக்கவாட்டுத் திட்டில் நின்று கொண்டு எதிர்த் திட்டுக்குச் செல்வது, பயத்தில் ஒரே பாய்ச்சலில் பாய, காலுக்குத் திட்டு அகப்படாத நிலையில் "பக் பக்' என்று தண்ணீர் குடித்து, கையைப் பிடித்து ஓர் இழு இழுப்பார்கள் நண்பர்கள்.
அந்தக் கிணறே இல்லை இப்போது. அப்படிப் பல வயற்காட்டுக் கிணறுகள் காணாமல் போயின. அவை காணாமல் மறைந்ததுபோல் நாமும் சொந்த ஊருக்கு அந்நியமாகிப் போனோம். ஊரும் பேரும் உருஅற்றுப் போனது. உருவெளி மாறிப்போய் எங்கோ கிடக்கிறோம்.
இப்போதெல்லாம் அந்தப் பெரியவர் நிமிர்ந்தே பார்ப்பதில்லை. பார்க்க முடியவில்லை. தலை, குனிந்த
மேனிக்கேதான் இருக்கும். சாப்பிடும் நேரத்திற்குத் தட்டில் உணவு திண்ணையில் வைக்கப்படும். சத்தம் கேட்டு வராண்டாவில் இருந்து உள்ளே செல்வார்.
""மாமா... டிபன் வச்சிருக்கேன்'' அவ்வளவுதான். அந்த வார்த்தையே அதிகம்...!
""இப்படித் துப்பித் துப்பி வச்சா, ஒரு நாளைக்கு எத்தனை வாட்டிதான் பெருக்கறது, சுத்தம் பண்றது? ஒரு சட்டி வச்சிக்குங்கன்னாலும் கேட்க மாட்டேங்கிறீங்க... உங்க அப்பாவுக்கு நீங்கதான் சொல்லணும். இல்லன்னா... இனிமே நீங்களே கழுவிச் சுத்தம் பண்ணுங்க. என்னால ஆகாது'' -முடிந்தது விஷயம்.
""நா கழுவிக்கிறேன்... நீ கவலைப்படாதே'' - இது அவர் மகனின் பதில். தாசானுதாசன்.
அருகே, எதிரே உள்ள வீடுகளுக்குக் கேட்குமே என்று யோசிப்பதெல்லாம் இல்லை. "என் வீடு, என் புருஷன், என் மாமனார்... நா பேசுறதுக்கு யார்ட்டக் கேட்கணும்' என்பது போலிருக்கும் அந்தப் பொருட்படுத்தாத குரல். அதற்கும் ஒரு தைரியம் வேண்டும்தானே...! ஆளுமை அங்கே கொடி கட்டிப் பறந்தது.
அந்த மாதிரி நேரங்களில் இவன் உள்ளே வந்து விடுவான். நின்று தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் அங்கு பார்ப்பதாகத்தான் அர்த்தப்படும். இங்கென்ன வேடிக்கை? என்றால் முகத்தை எங்கு கொண்டு வைத்துக் கொள்வது? எதுக்கு வம்பு? இவனாக நினைத்துக் கொள்வதுதான். அந்த அம்மாள் ஒரு நாளும் ஒரு வார்த்தை இவனிடம் பேசியதில்லை. தன்னை ஒரு பொருட்டாகத் திரும்பி நோக்கினால்தானே? கெளரவம் ஜாஸ்தி!
முதலில் மாடியில் இருந்தார்கள் அவர்கள். கீழே வாடகைக்கு விட்டிருந்தார்கள். அப்போது அந்தப் பெரியவர் பால்கனி வழியே வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார். கிழக்குப் பார்த்த வீடு. காலை வெய்யில் "சுள்'ளென்று ஏறின பின்பும், அங்கேயேதான் இருப்பார். உடம்போடு தலையாகத் துணியைப் போர்த்திக் கொண்டு யார் என்று அறிய முடியாத வண்ணம் அமர்ந்திருப்பார். ஒருமுறை அடக்க முடியாமல் ஒன்றுக்கிருந்து விட்டார். அது கீழே வழிய, கீழ் வீட்டில் இருந்தவர்கள் அந்த நேரம் பார்த்து வாசல் பக்கம் வர ஒரே அமர்க்களம். தீர்த்தவாரி முடிந்து சண்டை ஓய ஒரு நாள் ஆகிப் போனது.
அவர்கள் காலி பண்ணிக் கொண்டு போய் விட்டார்கள். பிறகுதான் இவர்கள் கீழே. எந்த நிலையிலும் அவரின் கண்கள் எதிரே இவனைப் பார்த்துக் கொண்டேயிருக்கும். இவன் மீதான பார்வைக்கு மட்டும் சலுகையுண்டு. தன் பையனிடம் நிறையப் பேச ஆவல் கொண்டிருப்பாரோ என்று நினைத்துக் கொள்வான் இவன்.
அப்பாவிடம் வந்து அமர்ந்து நாலு வார்த்தை மகன் பேசிப் பார்த்ததேயில்லை. வீட்டுக்குள்ளேயேதான் கிடப்பார். டி.வி., டி.வி., சதா காட்சிகள்தான். டிஸ்கஷன் கேட்கிறாராம். விளங்கினாப்போலதான் என்று நினைத்துக் கொள்வான். இங்கிருந்து பார்த்தால் அந்த டி.வி. நாள் பூராவும் ஓடுவது தெரியும். வாயிருந்தால் அழும். முடியாவிட்டால் யாரும் எதிர்பாராத ஒரு நன்னாளில் கண் மூடும். அதற்கு ஓய்வு என்பதே இரவு இவர்கள் தூங்கும்போதுதான்.
இவன் தன் வீட்டு வராண்டாவில் அமர்ந்துதான் தினசரி படிப்பான். தவறாமல் பேப்பரை ஒரு அலசு அலசி விடுவான். அவனது தீவிர வாசிப்பைக் கவனித்துக் கொண்டேயிருந்தவர், "" நீ படிச்சிட்டு எனக்குக் கொடு'' என்று சைகை மூலம் ஒரு நாள் சொன்னார். அவர் காட்டியதை அப்படித்தான் புரிந்து கொண்டான்.
நடந்து கொண்டிருந்த காலங்களில், நடைப் பயணமாகக் கிளம்பி ஒன்றரைக் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொதுநூலகத்திற்கு வருவதைப் பார்த்திருக்கிறான். அங்கு நுழைந்து ஒரு நாளிதழைக் கையில் எடுத்தாரென்றால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு வேறு யாரும் அதைப் படிக்க முடியாது. மூழ்கி முக்குளித்துக் கிடப்பார். அவருக்கென்று ஓர இருக்கை ஒன்று உள்ளது. அதில்தான் உட்காருவார். அங்கே ஜன்னல் வெளிச்சம் கிடைக்கும். ஆனால் .ஃபேன் காற்று சரியாக வராது. அது ஒரு பொருட்டில்லை என்பது போல் செய்திகளை விழுங்கத் தொடங்கி விடுவார்.
இது ஒரு நாள் சர்ச்சை ஆனது. "முன் ஷீட்டைப் படிக்கும்போது உள் தாளை வேறொருத்தருக்குக் கொடுக்கலாமில்ல... நீங்களே மணிக்கணக்காப் படிச்சிட்டிருந்தா மத்தவங்க படிக்க வேண்டாமா?' என்று ஒருவர் சண்டைக்கு நின்றார். ரொம்ப நாள் கவனித்திருந்து, தாங்க மாட்டாமல் கேட்டது போலிருந்தது. அதைக் காதில் வாங்காதது போலவே பேப்பருக்குள் முகத்தை நுழைத்துக் கொண்டு அதி தீவிரமாய்ப் படித்துக் கொண்டிருந்தார். இவனை அங்கே தெரியும். காட்டிக் கொள்ளமாட்டார்.
"தினமும் நூலகம் வருகிறான். இவனெல்லாம் ஒரு ஆளா எனக்கு?' என்பது போல்தான் இருப்பார். அந்த இடத்தில் ஒரு முறை கூட தெரிந்ததாகவே காட்டிக் கொண்டதில்லை என்பதுதான் விநோதம். அதற்கான அவசியமும் இல்லை என்றே வையுங்கள். அவர்தான் பேசவே மாட்டாரே!
அவர் செய்கை இவனுக்குப் பிடிக்காதுதான்.
ஆனாலும் எப்படிச் சொல்வது? எதிர்வீட்டில் அன்றாடம் முகம் பார்க்கும் பெரியவரை எப்படிப் பகைத்துக் கொள்வது? அந்தச் சாபம் வேறு வேண்டுமா? கண்டு கொண்டதே இல்லை. அப்படிப் பேப்பரை ஒரு தாள் பிரித்துக் கொடுப்பது என்பது அவருக்குப் பிடிக்கவில்லை. மொத்தமுள்ள தாள்கள் அத்தனையையும் அந்தப் பிரிண்டிங் மசி மூக்கில் மணக்க மணக்க கையில் பிடித்துக் கொண்டு படிக்க வேண்டும் அவருக்கு. பக்கங்கள் சிதறிப் போனால் செய்திகள் விட்டுப் போகும் என்று நினைத்தாரோ என்னவோ... சின்னக் குழந்தை தான் எடுத்துக் கொண்டதை அல்லது வைத்திருப்பதை மற்ற யாரும் கேட்டால் தராதுதானே? அல்லது அழும். அதுபோல்தான் இவரது செய்கையும்.
அதற்கு அடுத்த வாரம் ஒன்று நிகழ்ந்தது. ஒவ்வொரு தினசரி இடது மேல் நுனியிலும் மொத்தத் தாள்களையும் ஒன்றிணைத்து "ட' வைத் திருப்பிப் போட்டாற்போல் நூலால் தையல் போட்டு பிரிக்க முடியாதபடி ஆக்கப்பட்டிருந்தது. அதுநாள்வரை அந்த நடைமுறை இல்லை. அம்மாதிரி ஒன்றிணைத்துத் தைத்து ஒரு தினசரியைப் பிரிக்க முடியாதபடி பராமரிப்பதை நகரின் தலைமை நூலகத்தில்தான் பார்த்திருக்கிறான்.
அப்போதும் ஒரு பிரச்னை கிளம்பத்தான் செய்தது. ""ஒரு புரட்டுப் புரட்டிட்டுக் கொடுப்பீங்களா...மணிக்கணக்கா நீங்களேவா படிக்கிறது... மத்தவங்க பார்க்க வேண்டாமா?'' என்றார் ஒருவர். அவரும் வயசானவர்தான். ஆனாலும் விரைப்பான கோபமிருந்தது. இவர் படிக்கிற அந்தப் பேப்பரை நான் படிக்காமல் வீடு திரும்ப மாட்டேன் என்று முறைத்துக் கொண்டு பழியாய் நின்றார். வீம்புக்கு வீம்பு...!
பொதுவாகவே மனிதர்களுக்கு அறுபது வயதுக்கு மேல்தான் கொஞ்சம் நிதானம் வருகிறது என்று சொல்கிறார்கள். அது உடம்பு முடியாமல் போவதால். மைன்ட் மெச்சூரிட்டியால் அல்ல என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது.
""வெறுமே புரட்டிட்டுத் தரணும்னா வீட்டுல டி.வி. யிலேயே நியூஸ் கேட்டுக்கலாமே? அது போதுமே! இங்க வந்து ஏன் படிக்கணும்... பொறுங்க... படிச்சிட்டுத் தர்றேன்... எத்தனை பேப்பர் கிடக்கு... அதை எடுத்துப் படிங்க''என்று ஒரு போடு போட்டார் பெரியவர். வேறு யாரும் இவர் படிக்க நினைக்கும் தினசரியை வைத்திருந்தால் அவர்கள் படித்து முடிக்கும்வரை காத்திருப்பதை இவன் பார்த்திருக்கிறான். அந்தப் பொறுமை யாருக்கும் வராதுதான். ஆனால் அவர் அதிர்ஷ்டம் நூலகத்திற்குள் நுழைந்ததும் அந்த தினசரி அவர் கைக்குக் கிடைத்து விடுவதுதான். ஒரு வேளை "இந்த டயத்துக்கு அந்தப் பெரியவர்
வருவார். அதனால அது கெடக்கட்டும். நாம தொட வேண்டாம்' என்று மற்றவர்கள் விட்டுக் கொடுக்கிறார்களோ, என்னவோ? இல்லையென்றால் தினசரி அந்த செய்தித்தாள் அவரிடம் அப்படித் தடையின்றிச் சிக்குமா? வேறு செய்தித்தாளையோ, வார, மாத சஞ்சிகைகளையோ அவர் தொட்டு இவன் பார்த்ததில்லை.
ஒரு நாள் அதே எதிராளி இவர் படித்துக் கொண்டிருக்கும்போது ஆத்திரம் வந்தவராய்ப் பட்டென்று தாளுக்கு முன் பக்கம் வந்து நடுவே கையை விரித்து ஒரு தட்டுத் தட்டி அந்தச் செய்தித்தாளைப் பறித்தார். பெரியவர்
வெல வெலத்துப் போனார். ஏறக்குறையக் கைகலப்பு மாதிரிதான் அது. அதிரடி என்றால் அதுதான். இப்படியா ஒரு மனுஷனுக்குக் கோபம் வரும்?
""பார்த்து சார்... உங்க சண்டைல பேப்பரக் கிழிச்சிடாதீங்க... நான் ஃபைன் கட்டணுமாக்கும்'' என்றது அந்த நூலகர் பெண்மணி. இருக்கையிலிருந்து பதறி எழுந்து வந்து விட்டது.
""நீங்கதான ஒரே பேப்பரா தைச்சுப் போட்டிருக்கீங்க... தனித் தனியா இருந்தா என்ன கெட்டுப் போகுது... ஆளுக்கு ஒரு தாளாப் படிக்கலாமில்ல... இந்த மாதிரி, தான் மட்டும் படிச்சாப் போதும்னு நினைக்கிற ஆளுங்க கைல மாட்டினா... நாள் பூராவும் வேறே யாரும் தொட்டுக் கூடப் பார்க்க முடியாதாக்கும். எதுக்காக இந்த நடைமுறையைக் கொண்டு வந்தீங்க ? நான் தினமும் இப்டிக் கேட்குறேனேன்னா? இல்ல அந்தாளுக்கு வசதி செய்யவா? சொல்லுங்க? அவருக்காக மட்டும்தான் லைப்ரரி நடத்துறீங்களா? இது பொது நூலகம்தானே?''-
அடேயப்பா...எத்தனை கேள்விகள்?
"இதென்னடா வம்பாப் போச்சு?' என்று தலையில் கையை வைத்துக் கொண்டு அந்தப் பெண் உட்கார்ந்து விட்டது.
""ஒவ்வொரு பேப்பரும் இத்தனைன்னு கணக்கு வேணும் சார் எங்களுக்கு... அடுக்கி வச்சி, எண்ணிக் கொடுக்கணும். அதுக்காகத்தான் இந்தத் தையல். இல்லன்னா எங்களைக் கேள்வி கேட்பாங்க... நாங்க வீட்டுக்கு எடுத்திட்டுப் போறமோன்னு சந்தேகப்படுவாங்க... அதனால இதெல்லாம் நீங்க கேள்வி கேட்காதீங்க... எங்களுக்கு அப்பப்ப என்ன சொல்றாங்களோ அதுப்படிதான் நாங்க செய்ய முடியும். அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் படிக்கப் பாருங்க. இங்க வர்றவங்களெல்லாம் வயசுல பெரியவங்களா இருக்கீங்க... சீனியர் சிட்டிசன்úஸ இப்படிச் சண்டை போட்டீங்கன்னா எப்டி சார்? அமைதி தவழ வேண்டிய எடத்துல இப்டி கச்சடா பண்ணினா என்னதான் சார் பண்றது?'' அழாத குறை.
"அமைதி காக்கவும்' என்று எழுதிய அட்டை காற்றில் அலமந்து ஆடிக் கொண்டிருந்தது. ஃபேன் காற்றில் அது எப்போதும் ஆடிக் கொண்டேதான் இருக்கும். அது இப்போது கனப் பொருத்தமாய் இருந்தது.
""என்னத்த அட்ஜஸ்ட் பண்றது? கச்சடா அது இதுங்கிறீங்க? கொஞ்சமாவது இங்கிதம் இருக்கா அவருக்கு? தான் மட்டுமே படிச்சாப் போதும்னு நினைக்கிறாரே? அதைச் சொல்ல மாட்டீங்களா? இங்க யாராச்சும் அப்டி இருக்காங்களா? ஏதோ அஞ்சு நிமிஷம், பத்து நிமிஷம் படிப்பாங்க...
அட...அரைமணி நேரம்தான் படிக்கட்டுமே... யாரு வேண்டாம்னாங்க...அதுக்காக ரெண்டு மணி நேரத்துக்கு ஒருத்தரே ஒரு நியூஸ் பேப்பரை வச்சிட்டு மோந்து பார்த்திட்டிருந்தா எப்டி? ... லைப்ரரி டைமே எட்டரையிலர்ந்து பதினொன்றரை வரைக்கும்தானே? பிறகு சாயந்தரம் நாலரைக்குதானே? இந்த த்ரீ அவர்ஸ்ல ரெண்டு மணி நேரம் இவருக்கே போயிடுச்சின்னா... மத்தவங்க எப்பப் படிக்கிறதாம்? நாங்க எத்தனை பேர் இருக்கோம்? இது தெரிய வேண்டாமா அவருக்கு? என்ன அநியாயமா இருக்கு?''
இவ்வளவு பெரிதாய் இந்தச் சண்டை ஆகும் என்று அந்த நூலகர் எதிர்பார்க்கவேயில்லை. அப்படியும் அது ஒரு யோசனை சொன்னது.
""சாயங்காலம் வந்து படியுங்களேன் சார்?'' யதார்த்தமாய்ச் சொல்லும் சிலவும் சமயங்களில் பிரச்னை ஆகிவிடும்தான். ஒன்றைச் சொல்லும்முன் இதைச் சொன்னால் சரியா வருமா என்று ஆயிரம் முறை யோசித்தாக வேண்டும். அதுதான் பக்குவம். அதுவும் தன் வயசுக்கு இதைச் சொல்லலாமா என்றும் நினைத்துப் பார்க்க வேண்டும். முடியுமானால் "சிவனே' என்று இருந்து விடுவதுதான் உத்தமம். ஒன்றைச் சொல்வதை விட சொல்லாமல் விட்ட காரியங்கள்தான் பிரச்னையில்லாமல் போயிருக்கிறது. தானே ஓயும் என்று விட்டுவிடுவதுதான் நல்லது. சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டது அந்தப் பெண். இதுவே பெரிய ஆம்பிளையா ஒரு லைப்ரரியன் இருந்தா இப்படி நடக்குமா? வேதனையுடன் நினைத்துக் கொண்டது, சின்னப் பெண் ஆகையால் லேசாக அழுதது போல் கூட இருந்தது.
""இப்டியெல்லாம் இந்தக் கிளை இருக்குன்னு மேலதிகாரி காதுக்குப் போனா... நான் சரியில்லைன்னு என்னை மாத்தினாலும் மாத்திப்புடுவாங்க சார்... வீட்டுக்குப் பக்கத்துலன்னு இவ்வளவு நாள் கழிச்சு இப்பத்தான் வந்திருக்கேன்... கெடுத்திடாதீங்க ஐயா'' அதன் வேண்டுதல் அவர்களை அசைத்ததாய்த் தெரியவில்லையே?
""ஏன் அவர் வந்து படிக்கட்டுமே சாயங்காலம்? நாங்கதான் வரணுமா? என்னங்க இது நியாயம்? எங்களுக்கும் காலைலதான் வசதி... அவரைப்போல... என்ன பேசறீங்க நீங்க? அவரென்ன உங்க தாத்தாவா? இம்புட்டு வக்காலத்து வாங்குறீங்க?'' - கேட்டவர் விடுவதாயில்லை. சண்டைக்கு "அடி பிடி மாடு பிடி' என்று நின்றார். அவரும் வெகு நாளாய் அந்த நூலகத்திற்கு கதியே என்று வந்து கொண்டிருப்பவர்தான். தொடர்ந்து வந்து ஆதரவு தருவதனாலேயே ஓர் உரிமை கிடைத்து விடுகிறதுதானே? அல்லது ஒரு தைரியம் வந்து விடுகிறது. நியாயத்தைத் தட்டிக் கேட்காமல் எப்படி இருப்பது? வயது போனால்தான் இந்தப் பிடிவாதமே தலை தூக்குகிறது. பித்தம் தலைக்கேறி உச்சியை விட்டு இறங்க மறுக்கிறது.
""வயசானவர் சார்... பாவம்... இந்தத் தள்ளாத வயசுல அவர் நடந்து லைப்ரரிக்கு வர்றதே பெரிசு... போகட்டும் சார்... விடுங்க... இதப் போய் பிரச்னை ஆக்காதீங்க''
இதெல்லாம் அவர் காதில் விழுந்ததா தெரியவில்லை. செவிடு போல் "தேமே'னென்று படித்துக் கொண்டிருந்தார், சற்று முன்பு வரை...
""என்னம்மா இப்டிச் சொல்றீங்க? நாங்களும்தான் வயசானவங்க... நாங்க என்ன எளவட்டமா? போக்கத்துப் போயா இங்க வர்றோம்? ஏதோ நம்ம பகுதில ஒரு லைப்ரரி இருக்கே... ஆதரவு கொடுப்போம்னு வந்திட்டிருக்கோம்... இவர் அதைக் கெடுத்துடுவார் போல்ருக்கே... எங்களுக்கும் பொழுது போகணும்ல?'' -சொல்லிவிட்டு, படிப்பவர்கள் பக்கம் திரும்பிய போது அந்தப் பெரியவர் அங்கே இல்லை.
வெளியே வட்டமேஜை போல் சிமிண்ட் தளம் போட்டிருந்த பெரிய அடர்ந்த நிழல் கொண்டிருந்த மரத்தைச் சுற்றிய பகுதியில், தரைத் தளத்தில், உடம்பைச் சுருக்கிக் கொண்டு படுத்துக் கண் மூடியிருந்தார். "நாடு சுதந்திரம் அடைஞ்ச போது வந்து படுத்தவங்க...' என்று ஏதோவோர் படத்தில்
வசனம் வரும். அது நினைவு வந்தது இவனுக்கு. பலரும் உறங்கிக் கொண்டிருந்தனர் அங்கே. அந்த நிழலும் இதமான காற்றும் பெரியவர் கண்களைச் செருகியிருந்தன. அயர்ந்த தூக்கம்.
எனக்குத் தெரிய அதுதான் அவர் கடைசியாக நூலகம் வந்த நாள். அதற்குப் பின் அந்தப் பக்கமே ஆளைக் காணவில்லை. நமக்காக இவர்கள் ஏன் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும் என்றோ, அல்லது வரப் பிடிக்காமலோ, அல்லது தள்ளாமையோ... எதுவோ ஒன்று அவரைத் தடுத்து விட்டது. ஆனால் ஒரே தினசரியை அவ்வளவு நேரம் தானே வைத்துக் கொண்டு படிப்பதை, மற்றவர்களும் படிக்கக் கொடுக்காமையை,
எதுக்குப் பிரச்னை என்று விட்டுக் கொடுக்காமையை அவர் கொஞ்சமேனும் உணர்ந்தாரா? தெரியவில்லை. அதற்குப் பின் அந்த லைப்ரரியே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டாரா அல்லது உண்மையிலேயே உடம்பு முடியலையா என்றும் அறிந்து கொள்ள முடியவில்லை.
""என்னங்க அந்த மனுஷன ஆளையே காணலை'' என்றார் அந்த சண்டை போட்டவர். பரிதாபப்பட்டது
போல்தான் இருந்தது. ஆனால் அந்தக் குறிப்பிட்ட தினசரியைப் படிக்கப் படிக்க ஆள் மாறிக் கொண்டே
யிருந்தது.
அவர்கள் கீழ் வீட்டிற்கு வந்தாயிற்று. இவருக்காகவே வந்தது போல்தான் இருந்தது. வராண்டாவில் இருந்தால் பக்கச் சந்து வழியாகப் பின் கழிப்பறைக்குச் சென்று விடலாம். என்ன... அதுவரை அடக்க முடியணும்... பாவம். காம்பவுன்ட்டுக்குள்ளேயே கொஞ்சம் நடக்கலாம். ஆஸ்த்மா தொந்தரவு இருந்தது அந்தப் பெரியவருக்கு. அதுதான் தாங்க முடியாமல் எச்சில் வழிவது கூடத் தெரியாமல் அலமலந்து அமர்ந்திருக்கும் நேரம். வெயில் ஏறும்வரை பொடி நடை போடுவார். அது முடிந்து வராண்டா உள் பக்கத் திண்ணைக்குச் சென்று விடுகிறார். அங்கேயே அமர்ந்து, "கண்ணில் காணும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே' என்று இங்கு எதிர்த் திசையில் நிற்கும் இவனையே பார்த்துக் கொண்டிருக்கிறார். வேறு வண்டிகள், ஆட்கள் ஏதேனும் தெருவில் குறுக்கே போனால் தட்டுப்படும். கணத்தில் மறைந்து விடும். மற்றப்படி இவனை நோக்கியே அந்தப் பார்வை. ஏதோ கேட்காமல் கேட்பது போல!
இப்போதெல்லாம்... அங்கே... அந்தத் திண்ணையில்... அவருக்காகக் காத்திருக்கிறது அந்தத் தினசரி. உள்ளே இருந்து வெளிப்படும் கணங்களில் அவர் முகம் மலர்கிறது. ஆசை ஆசையாய் ஒரு குழந்தையை எடுத்துக் கொள்வதுபோல் அதைக் கையில் ஏந்துகிறார். "எனக்கே எனக்கு' என்று நெஞ்சோடு அணைத்துக் கொள்கிறார். நூல் தொங்கும் மூக்குக் கண்ணாடியைக் காதில் மாட்டிக் கொண்டு செய்திகளை மேய ஆரம்பிக்கிறார். இழுப்பு நின்ற பிறகு பிடிக்கும் வேகம். இங்கே அவருக்கு எந்தத் தடையும் இல்லை. யாரும் அவரை எதுவும் கேட்கப் போவதில்லை. எவ்வளவு நேரம் வேணுமானாலும் அவர் அதைப் படிக்கலாம். மனனம் கூடச் செய்யலாம். ஊன்றி அழுந்திப் படிக்கையில், முகத்தைப் புதைத்துக் கொண்டு செய்திகளில் புதைகையில், நேரம் காலம் இன்றிப்
படிக்கப் படிக்க செய்திகள் அழிந்து போகும் அபாயம் உண்டு அங்கே. அத்தனை தீவிரம். அவ்வளவு ஆர்வம் அந்த உயிருக்கு! படித்து முடித்து எப்போது திருப்தி வருகிறதோ அப்போது அதை மடித்துக் கீழே போடலாம். அதற்கும் யாரும் ஒன்றும் சொல்லப் போவதில்லை. அன்றாடம் அவர் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டிருப்பதே அந்த செய்தித்தாள்தான். உளவியல்ரீதியாக, அது அவர் உயிரைப் பற்றிக் கொண்டிருக்கிறது. நீட்டித்துக்
கொண்டிருக்கிறது.
அவருடைய ஆசை அவருடைய முழு விருப்பத்தின்படி எந்தவித இடையூறுமில்லாமல் அங்கே நிறைவேறிக் கொண்டிருக்கிறது. "செய்திகள் வாசிப்பது சரோஜ்
நாராயண்ஸ்வாமி' என்ற அந்தப் பழைய வானொலிக் கம்பீரக்குரல் இப்போதும் நம் காதுகளில் ஸ்பஷ்டமாக ஒலித்துக் கொண்டுதானேயிருக்கிறது. அமைதியாய், அணுக்கமாய் வாசித்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார் அந்தப் பெரியவர். எதிர்ப்பாளர்கள் இல்லை. ஏமாந்தோரும் இல்லை. ஏதேனும் மன வியாகூலத்தில், அந்தப் பேப்பரை மடித்துக் கசக்கித் தூக்கி எறிந்தாலும் கூட யாரும் கேட்கப் போவதில்லை. அந்தக் கணங்கள், அந்த நேரம் அவருக்கான உரிமை. அந்த அளவுக்கான தீவிரம்
அந்தக் ககன வெளியில்! புயல் தினமும் அங்கே விடாமல் மையம் கொள்கிறது. விலகுகிறது. திரும்பவும் மையம் கொள்கிறது.
இங்கிருந்தமேனிக்கே இவன் அந்தக் காட்சியை அனுதினமும் முழுமையாகப் பார்த்து உள் வாங்கிக் கொண்டிருக்கிறான். ஓரொரு சமயம் பேப்பருக்குள் முகம்
புதைத்துக் கொண்டு எதையேனும் மனதில் நினைத்துத் தனக்குத்தானே குமைந்து அழுது கொண்டிருக்கிறாரோ என்று கூடத் தோன்றத்தான் செய்கிறது இவனுக்கு. மனசுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அவரின் வாழ்வின் கடைசி மிச்சமான அந்த ஆசை அனுதினமும் எந்தவிதத் தடங்கலுமின்றி அங்கே பலிதமாகி, நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அதில் அவனுக்கு அலாதி திருப்தி. நிறைவு.
""பேப்பர் முழுசா உங்ககிட்டத் திரும்பி வருமான்னு சொல்ல முடியாது... கொடுக்கும்போது இருந்தாப்ல சுத்தமா, கிழியாம, கசங்காம இருக்குமாங்கிறதுக்கும் நாங்க கியாரண்டி இல்ல... இதுக்காக நீங்க எப்பவும் எதுவும் எங்க கிட்டப் புகார் சொல்லக் கூடாது. சொல்லிப்புட்டேன்... உங்க விருப்பத்துக்கு நீங்க செய்றீங்க... எங்களுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை... சரிதானா?''- இது அந்த அம்மாளின் என்னை நோக்கிய தீர்மானமான அழுத்தமான பேச்சு.
""ஆஹா... எவ்வளவு ஜாக்கிரதையுணர்வு? எப்படியான ஒரு சுயநலம்? என்ன ஒரு நேசமான ஆதரவு?
இப்படியாப்பட்ட ஆட்கள்தான் எதிலாவது திகிடு முகடாக மாட்டுவார்கள். தவிர்க்க முடியாமல் நினைத்துக் கொண்டான். "நன்றாய் இருக்கட்டும். நலமே பெறட்டும்' என்று பிறகு சமாதானமும் செய்து கொண்டான்.
""ரொம்ப சந்தோஷம்மா... ஒண்ணும் பிரச்னையில்ல'' என்றான் அவர்களை நோக்கி. வீட்டிலுள்ள சொந்தங்களே இப்படியென்றால் வெளியே இருப்பவர்களை என்னவென்றுதான் சொல்வது? உலகம் பலவிதம்! சிலர் ஒருவிதம்!
அந்தச் செய்தித்தாள் அனுதினமும் அதன் நேரத்துக்கு, அந்தப் பெரியவர் இஷ்டத்துக்கு அங்கே அடைக்கலம் புகுந்து அவரைத் திருப்திப்படுத்தி, பூரணத்துவம் பெற்ற பிறகு தன் வீடு அடைய இங்கே திரும்பி வந்து, வழக்கமான தீவிர வாசிப்பின்றி, நேரம் கடந்தும் ஆன ஆதர்ச நிலையில் செய்திகளை வெறுமே ஒரு புரட்டுப் புரட்டுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறான் இவன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT