தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் அரிப்பு நீங்க வழி என்ன?

4th Dec 2022 06:00 AM | பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

ADVERTISEMENT

 

உடல்நிலை சரியில்லாத என் அப்பாவை பார்த்துகொள்ள வேண்டிய நிலையிலுள்ள எனக்கு பசி நன்றாக எடுத்தாலும், கடும் மலச்சிக்கல், சொட்டு சொட்டாக சிறுநீர் கழித்தல், உடல் அரிப்பு போன்ற உபாதைகள் உள்ளன.  என் வயது 36. அவரைவிட என் நிலைமை மோசமாகிவிடுமோ என்று பயமாக உள்ளது. நான் நன்றாக இருந்தால்தான் அவரால் வாழ முடியும். என் உபாதை குறைய என்ன வழி என்ன?

-சாதிக்,
கடலூர்.

அரை லிட்டர்  கொதிக்கும் சூடான தண்ணீரில் தங்களுடைய ஒரு உள்ளங்கை அளவு உலர் திராட்சையை எடுத்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் உள்ளங்கையால் திராட்சையை நன்கு கசக்கிப் பிழிந்து, நீக்கிவிட்டு, தண்ணீரை (திராட்சை நீக்கிய) சிறிது சூடாக்கி, காலையில் வெறும் வயிற்றில் சிறிது, சிறிதாகக் குடிக்கவும். 

ADVERTISEMENT

மலம் மற்றும் சிறுநீர்த் தடையை நீக்குவதுடன் குடல் சார்ந்த தடை ஏற்படுத்தும்  பிற கழிவுகளையும் நன்கு அகற்றிவிடும்.  நெய்ப்பும் குளிர்ச்சியும் உலர் திராட்சை உங்களுக்குத் தேவையான செயலை நிறைவேற்றித் தருவதுடன் குடல் வழுவழுப்பையும் செய்துவிட்டுச் செல்கிறது. இதனால்  குடல் அசைவுகள் அனைத்தும் சீராகி விடுவதால், தங்குத் தடையின்றி மலமானது வெளியேறத் தொடங்கிவிடும்.

அடி வயிற்றுக் குடல் பகுதியான பெருங்குடலில் செயல்படும் அபான வாயுவை நீங்கள் கெடுத்துக் கொண்டதற்கான காரணங்களையும் அறிந்து அவற்றை செய்யாதிருப்பதும் உங்கள் கடமையாகும்.  குடல் காற்றை வலுக்கட்டாயமாக அடக்காதிருத்தல், குடல்வாயுவின் சேர்க்கையை அதிகப்படுத்தும் வேர்க்கடலை, பருப்பு வகைகள், கிழங்குகள் போன்றவற்றை சாப்பிடாதிருத்தல், குளிர்ந்த நீர் பருகாதிருத்தல், சூடாறிப் போன உணவை மறுபடியும் சூடாக்கி சாப்பிடாதிருத்தல் போன்றவை நீங்கள் கவனித்து செயலாற்ற வேண்டியவை.

சுற்றுப்புறச் சூழலில் காற்று கெட்டுவிட்ட நிலையில் ஏற்படும் நுண் கிருமிகளால் பலருக்கும் உடல் அரிப்பும் தடிப்பும் ஏற்படும். 

வெளிப்புறக் குளிரினால், தோலில் ஏற்படும் சுருக்கம், அரிப்பை ஏற்படுத்தலாம்.  புளிப்பான உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்வதாலும், கடல் வாழ் பிராணிகளைச் சாப்பிடுவதாலும் உடல் அரிப்பு ஏற்படலாம்.

வேப்பம்பட்டை, சரக்கொன்றைப்பட்டை, புங்கம்பட்டை, அரசம்பட்டை, ஏழிலைப்பாலைப் பட்டை ஆகியவற்றில் கிடைத்ததைக் கொண்டு, வகைக்கு பத்து கிராம் எடுத்து, அவை தண்ணீரில் மூழ்குமளவு சேர்த்துக் கொதிக்கவிட்டு, வடிகட்டி, அரிப்புள்ள இடங்களில் ஊற்றித் துடைத்துவிட அரிப்பானது குறைந்துவிடும்.

உடல் நலிவுற்ற நிலையில் படுக்கையிலுள்ள அப்பாவைப் பார்த்துகொள்ள வேண்டிய நிலையில், அதன் மூலமாகத் தொற்று ஏற்படாமலிருக்கவும், குடல் சுத்தியை உறுதி செய்துகொள்வதிலும் தீவிர கவனம்  கொள்வது அவசியமாகும்.

மாணிபத்ரம் எனும் லேஹிய மருந்தை, பத்து- பதினைந்து கிராம் எடுத்து, மதிய உணவிற்கு ஒரு மணி நேரம் முன் நக்கிச் சாப்பிடுவதால், குடல் சார்ந்த கழிவுகள், நுண் கிருமிகள், மலம்- சிறுநீர் தடை போன்ற உபாதைகள் அனைத்தும் நீங்கிவிடும். இதன்மூலமாகவே தோல் அரிப்பும் குணமாகிவிடும்.

நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்க்கும் தூர்வாதி கேர தைலத்தின் வெளிப்புற உபயோகமும், வில்வாதிகுளிகை, ஆரக்வாதி கஷாயம், படோல மூலாதி கஷாயம் போன்றவற்றின் உள்உபயோகத்தாலும் நீங்கள் பெரும் நன்மையானது உங்களால் பிறருக்கும், முக்கியமாக பணிவிடையாற்றும் தந்தைக்கும் உங்கள் மூலமாக கிருமி தொற்று ஏதும் ஏற்படாது பாதுகாக்கும். ஆயுர்வேத மருத்துவர்களின் ஆலோசனைகளை நேரில் கேட்டுப் பெறுவதும் நன்மைகள் பல அளிக்கக் கூடும்.

(தொடரும்)

ADVERTISEMENT
ADVERTISEMENT