தினமணி கதிர்

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 117

4th Dec 2022 06:00 AM | கி. வைத்தியநாதன்

ADVERTISEMENT

 

துக்ளக் அலுவலகத்திலிருந்து வெளியே வந்ததும், திமுகவில் என்னதான் நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக, அறிவாலயம் நோக்கி நகர்ந்தேன். எந்தவிதப் பரபரப்பும் இல்லாமல் அறிவாலயத்தை அமைதி சூழ்ந்திருந்தது. வழக்கம்போல, கட்சித் தொண்டர்கள் நின்று கொண்டிருந்தனர்.

உள்ளே நுழைந்தபோது, தலைவர் கருணாநிதியின் அறைக்கு வெளியே சைதை கிட்டு, பலராமன், ராமஜெயம் உள்ளிட்ட சிலர் பேசிக் கொண்டிருந்தனர். அறையில் தலைவர் கருணாநிதி பொதுச் செயலாளர் க.அன்பழகன், ஆற்காடு வீராசாமி, நாஞ்சில் மனோகரன், முரசொலி மாறன் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் கலந்தாலோசனையில் இருப்பதாகத் தெரிவித்தனர். 

சந்திக்க விருப்பம் தெரிவித்து எனது முகவரி அட்டையை அனுப்பி வைத்தேன். அடுத்த சில நிமிடங்களில், அலுவலக உதவியாளர் ஒருவர் என்னிடம் வந்தார். ""தலைவர் யாரையும் சந்திப்பதாக இல்லை. பத்திரிகைப் பேட்டிகளும் கிடையாது. இன்றைக்கு நிருபர் கூட்டமும் இல்லை என்று உங்களிடம் தெரிவிக்கச் சொன்னார்'' என்று தகவல் தெரிவித்தார் அவர். திமுக தலைவர் கருணாநிதியிடம் மட்டுமே காண முடிந்த பண்பு அது.

ADVERTISEMENT

1996 பிறந்தது முதல், அடுத்த ஐந்து மாதங்களில் தேர்தல் வர இருக்கும் நிலையில், தமிழகத்தில் அரசியல் குழப்பம்தான் எல்லா கட்சிகளையும் எதிர்கொண்டது. முதல்வர் ஜெயலலிதா சார்பில் அரசியலுக்கு அப்பால் உள்ள பலர், ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் நிகழாமல் தடுப்பதில் முழுக் கவனமும் செலுத்தினர்.

""ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது. திமுகவுடன் காங்கிரஸார் கூட்டணி அமைக்க முடியாது. அதனால், ஒன்று அதிமுக கூட்டணியில் சேர வேண்டும் அல்லது தனிமையில் போட்டியிட வேண்டும். மதிமுக, திவாரி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸூடன் கைகோக்காது. அதனால் மூன்றாவது அணி அமைத்தாலோ, நான்கு முனைப்போட்டி ஏற்பட்டாலோ அதுவும் தனக்குத்தான் சாதகம்'' - இதுதான் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வியூகம்.

ஆந்திர தொழிலதிபர் ஒருவர் வீட்டு திருமணத்துக்காக ஆந்திர முன்னாள் முதல்வர் ஜனார்த்தன ரெட்டியும், அப்போது கடப்பா மக்களவை உறுப்பினராக இருந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியும் சென்னை வந்திருந்தார்கள். அவர்கள் இருவரும் தாஜ் ஹோட்டலில் தங்கி இருக்கும் விவரம் தெலுங்கு பத்திரிகையாளர் ஒருவர் மூலம் எனக்குக் கிடைத்தது. ஏற்கெனவே ராஜசேகர ரெட்டி அறிமுகம் என்பதால் அவர்களை சந்திக்கச் சென்றேன்.

ஜனார்த்தன ரெட்டி திருமணத்துக்காக மட்டும் வரவில்லை என்பது அங்கே போனபோது தெரிந்தது. ராஜசேகர ரெட்டி மட்டும்தான் தாஜ் ஹோட்டலில் இருந்தார். ஜனார்த்தன ரெட்டி முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கச் சென்றிருக்கிறார் என்கிற தகவலை ராஜசேகர ரெட்டி, மிகுந்த தயக்கத்துடன் தெரிவித்தார். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே, ஜனார்த்தன ரெட்டி தனது அறைக்குத் திரும்பிவிட்டார்.

""நான் அவரை சந்திக்கச் செல்கிறேன். உங்களை சந்திக்க அவர் விரும்புவாரா என்று எனக்குத் தெரியாது. தகவல் தெரிவிக்கிறேன். 

உங்களுக்கு ஜனார்த்தன ரெட்டிகாருவைத் தெரியுமா?''

""நெருக்கம் என்றெல்லாம் சொல்ல முடியாது. இரண்டு முறை அவரைப் பேட்டி எடுத்திருக்கிறேன். என் பெயரைச் சொன்னால் அவருக்கு அடையாளம் தெரியுமா என்பது சந்தேகம்தான். எதற்கும் எனது முகவரி அட்டையைத் தருகிறேன். அவர் அழைத்தால் சந்திக்கிறேன். இல்லையென்றால், பத்து நிமிடம் கழித்து நான் கிளம்பி விடுகிறேன்.''

சிரித்தபடி கைகுலுக்கி என்னிடமிருந்து விடைபெற்று, ஜனார்த்தன ரெட்டியின் அறைக்குச் சென்றார் ராஜசேகர ரெட்டி. அவர் போய் ஐந்து நிமிடங்களில் இன்டர்காம் ஒலித்தது. ராஜசேகர ரெட்டி அறையில் இல்லை என்கிற தகவலைத் தெரிவிப்போம் என்று கருதி நான் எடுத்தேன். எதிர்முனையில் ஜனார்த்தன ரெட்டியின் குரல் - ""கருணாகரன்ஜி வீட்டில் நாம் சந்தித்திருக்கிறோம், சரிதானே? நான் முதல்வராக இருந்தபோது, தில்லி ஆந்திரா பவனில் என்னைப் பேட்டி எடுத்தீர்கள், அந்த "நியூஸ்கிரைப்' வைத்தியநாதன்தானே?''

அவரது நினைவாற்றலைப் பார்த்து நான் வியந்து விட்டேன். என் பதிலுக்குக்கூடக் காத்திருக்காமல், "ரண்டி... ரண்டி...' என்று தனது அறைக்கு அழைத்துவிட்டார் அவர்.

அவரிடமிருந்து ஏதாவது தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்த்து நான் போனதைப் போலவே, என்னிடமிருந்து தகவல்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அவரும் இருந்தது அங்கே போனபோது தெரிந்தது. முதலில் என்னிடமிருந்து தகவல்களைத் தெரிந்து கொண்டார் அவர்.

""ஜெயலலிதாஜியிடம் என்ன பேசினீர்கள்? காங்கிரஸ் - அதிமுக கூட்டணி ஏற்படுமா?''

""தெளிவாக எதுவும் சொல்ல முடியவில்லை. ரஜினிகாந்தை காங்கிரஸ் தூண்டிவிடுகிறது என்று நினைக்கிறார் அவர். அதிமுகவில் பிளவை ஏற்படுத்தும் முயற்சிகளும் நடக்கின்றன என்பது அவரது குற்றச்சாட்டு. உங்கள் ஆசிரியர் சோவும், மூப்பனார்ஜியும் அதிமுகவிலிருந்து விலகியவர்களுடன் சேர்ந்துகொண்டு தனக்கு எதிராக வேலை பார்க்கிறார்கள் என்கிறார். அவர்கள் நடிகர் ரஜினிகாந்தைப் பகடைக் காயாகப் பயன்படுத்துகிறார்கள் என்று கருதுகிறார்.''

""பிரதமர் நரசிம்ம ராவ் என்ன நினைக்கிறார்? அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள விரும்புகிறாரா?''

""எதையும் என்னிடம் அவர் தெளிவாகச் சொல்லவில்லை. யாரிடமும் எதுவும் சொன்னதாகவும் தெரியவில்லை. ரஜினிகாந்த் மீது அவருக்கு என்னவோ நம்பிக்கை ஏற்படவில்லை. ரஜினிகாந்தும் வெளிப்படையாக முழுமனதுடன் காங்கிரஸூக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பதாகத் தெரியவில்லை. சோ என்ன சொல்கிறார்?''

""அவரிடமிருந்து எதுவும் தெரிந்துகொள்ள முடியவில்லை.''

""ரஜினிகாந்தின் தெளிவான ஆதரவு இல்லாமல், காங்கிரஸ் தனித்துப் போட்டிபோட முடியாது என்று நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?''

""நானும் அதையேதான் நினைக்கிறேன். ஆனால், காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதைத் தமிழ்நாட்டில் காங்கிரஸார் ஏற்றுக்கொள்வார்களா என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது. நீங்கள் ஏன் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசக் கூடாது?''

""அவர் எனக்கும் நன்றாகத் தெரிந்தவர்தான். ஆனால், நான் அவரை சந்தித்தால் அது தப்பாகிவிடும். ஜெயலலிதாஜி விரும்பமாட்டார் என்பது மட்டுமல்ல, மூப்பனார்ஜி என்னைத் தவறாக நினைத்துவிடுவார். பிரதமர்கூட அதை விரும்புவாரா என்று தெரியாது. தேவையில்லாமல் தமிழ்நாடு காங்கிரஸ் விவகாரத்தில் நான் தலையிட விரும்பவில்லை...''

""அப்படியானால், நீங்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தது பிரதமர் நரசிம்ம ராவின் கட்டளைப்படி என்று சொல்கிறீர்களா?''

""கட்டளை எல்லாம் இல்லை. அவருக்கு முதல்வர் ஜெயலலிதாவைத் தொடர்பு கொள்ளவும், அவரது மனநிலை குறித்துத் தெரிந்து கொள்ளவும் வழியா கிடையாது? சென்னையில் திருமணத்துக்குப் போகிறேன் என்றபோது, ஜெயலலிதாஜியை சந்திக்கக்கூடும் என்று தகவல் அனுப்பினேன். அவரது சம்மதம் கிடைத்தது. அதற்கு மேல் ஒன்றுமில்லை...''

அவரது பேச்சிலிருந்து, காங்கிரஸ் - அதிமுக கூட்டணிக்கான முயற்சிகள் நடக்கின்றன என்பதை நான் புரிந்து கொண்டேன்.

மக்களவைத் தேர்தல் நெருங்குவதால், அண்டை மாநிலங்களின் அரசியல் சூழல் குறித்துத் தெரிந்து கொள்ள முதலில் பெங்களூரு சென்றேன். கர்நாடக அரசியல் தலைவர்களை சந்தித்தும், பேட்டி எடுத்தும் விவரங்கள் சேகரித்துக் கொண்டு, கேரளத்துக்குப் பயணமானேன். 

பின்னாளில் மத்திய அமைச்சராக இருந்த வயலார் ரவி எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர். அப்போது அவர் மாநிலங்களவை உறுப்பினர். கொச்சி அரசினர் மாளிகையில் அவரை சந்தித்தேன். அவர்தான் முதன்முதலில் என்னிடம் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டது என்கிற செய்தியைத் தெரிவித்தார். அவர் இன்னொரு திடுக்கிடும் தகவலையும் என்னிடம் சொன்னார்.

""காங்கிரஸூடன் கூட்டணி அமைப்பது மட்டுமல்லாமல், தேர்தல் செலவுக்கும் பெரும் தொகை கொடுக்க அதிமுக தயாராக இருக்கிறது. பிறகு, பிரதமர் நரசிம்ம ராவ் அந்தக் கூட்டணியை எப்படி ஏற்றுக் கொள்ளாமல் இருப்பார்? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, ஜெயலலிதா - நரசிம்ம ராவ் கூட்டணி உறுதியாகி விட்டது.''

""எப்படி இவ்வளவு ஆணித்தரமாகவும், நீங்களே ஏற்பாடு செய்தது போலவும் சொல்கிறீர்கள்?''

கண்ணைச் சிமிட்டியபடி வயலார் ரவி அடுத்த குண்டைத் தூக்கிப் போட்டார்.
""ஜெயலலிதாவுக்கும், நரசிம்ம ராவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தியவர் எனக்கும் நண்பர். அவர் யார் என்று கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்...''

""யார் அது, ஜனார்த்தன ரெட்டியா?''

""ரெட்டியாவது, நாயுடுவாவது... அவர் ஒரு ஜோதிடர். நம்பினால் நம்புங்கள். கூட்டணி அமைகிறதா இல்லையா பாருங்கள்.''
வயலார் ரவி வேடிக்கை செய்கிறார் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால், அது வேடிக்கை அல்ல, உண்மை என்பதை அடுத்தடுத்த நகர்வுகள் உறுதி செய்தன. 

இனிமேல், விறுவிறுப்பான அரசியல் மாற்றங்கள் தில்லியில்தான் நடைபெறப் போகின்றன என்று எனக்குத் தோன்றியது. கொச்சியிலிருந்து வயலார் ரவி, எர்ணாகுளம் மக்களவை உறுப்பினராக இருந்த பேராசிரியர் கே.வி. தாமஸ், மாவேலிக்கரா எம்.பி.யான பி.ஜே. குரியன் ஆகியோருடன் நானும் தில்லிக்குக் கிளம்பிவிட்டேன்.

வெஸ்டர்ன் கோர்ட்டில் மூப்பனாரின் அறை பரபரப்பாக இருந்தது. மத்திய அமைச்சர்களாக இருந்த ப. சிதம்பரம், எம். அருணாசலம், எம்.பி.க்களாக இருந்த திண்டிவனம் ராமமூர்த்தி, என்.எஸ்.வி. சித்தன், அடைக்கலராஜ் என்று மூப்பனாருக்கு நெருக்கமான ஆதரவாளர்கள் அங்கே கலந்தாலோசனையில் ஈடுபட்டிருந்தனர்.

வெஸ்டர்ன் கோர்ட்லிருந்து சாலையைக் கடந்தால் இருந்த ஹரீஷ்சந்திர மாத்தூர் லேனில் இணையமைச்சர் கே.வி. தங்கபாலுவின் வீடு. பிரதமர் நரசிம்ம ராவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருந்த  தங்கபாலுவிடம் அதிமுகவுடனான கூட்டணியை உறுதி செய்யும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் குமரி அனந்தன் வெஸ்டர்ன் கோர்ட்டுக்கும், ஹரீஷ்சந்திர மாத்தூர் லேனுக்கும் மாறிமாறி வந்து போய்க் கொண்டிருந்தார். 

ஜெயலலிதா - நரசிம்ம ராவ் இருவரும் கூட்டணியை உறுதி செய்துவிட்டனர். மூப்பனாரும் அவரது ஆதரவாளர்களும் எந்தவித முடிவும் எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருந்தனர். ரஜினிகாந்தின் வெளிப்படையான ஆதரவு இல்லாமல் காங்கிரûஸவிட்டு வெளியேற அவர்கள் தயாராக இருக்கவில்லை என்பதுதான் உண்மை. 

அடுத்தகட்ட முடிவுக்காகத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் சென்னைக்குத் திரும்ப முடிவெடுத்தனர். அந்த விமானத்தில் நானும் சென்னை திரும்பிக் கொண்டிருந்தேன். குமரி அனந்தனும் அந்த விமானத்தில்தான் இருந்தார்.

யாருமே எதிர்பாராத திருப்பம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் அரங்கேறிக் கொண்டிருந்தது. அதை மூப்பனாரும் எதிர்பார்க்கவில்லை. நரசிம்ம ராவும் எதிர்பார்க்கவில்லை. ஏன், ரஜினிகாந்தும் எதிர்பார்க்கவில்லை.

(தொடரும்)

ADVERTISEMENT
ADVERTISEMENT