தினமணி கதிர்

பேல்பூரி

DIN

கண்டது

(சிவகாசியில் ஓர் ஆட்டோவில் கண்டது)

""உன்னை சிரிக்க வைப்பவர்களை நீயும் சிரிக்க வை!
உன்னை பார்த்து சிரிப்பவர்களை நீ சிந்திக்க வை!''

-ஜி.சுந்தரராஜன்,
திருத்தங்கல்.

(வெள்ளக்கோயில் முதியோர் இல்லம் ஒன்றில்..)

""குஞ்சு மிதித்து முடமான கோழிகள்
 உயிர்வாழும் இடம்''

-பெ.சதாசிவம்,
திருப்பூர்.

(மயிலாடுதுறை- திருவாரூர் மார்க்கத்தில் பூந்தோட்டத்தில் அருகேயுள்ள ஒரு ஊரின் பெயர்)

""ஒன்பது புளி''

-சி.முருகேசன்,
மாப்பிள்ளைக்குப்பம்.

கேட்டது

(வல்லம்படுகை மெயின் ரோடில் இருவர் பேசிக் கொண்டது)


""ஏன் வேகத்தடைக்கு பக்கத்துல நிற்கறீங்க..''
""பஸ் ஸ்டாப்புல பஸ்ûஸ நிறுத்தலைன்னா இங்க மெதுவா வரும்ல...''

-பி.கவிதா,
சிதம்பரம்.

(தென்காசியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில்..)

""என்னங்க! ஐநூறு ரூபாய்க்கு குறைந்த மொய் வாங்க மாட்டோமுன்னு சொல்றாங்க!''
""ஒரு சாப்பாடு இருநூறு ரூபாய் ஆகுதாம். தவிர, கல்யாண மண்டப வாடகை, பிற  செலவுகள் 
இருப்பதால்..''

-கு.அருணாசலம்,
தென்காசி.

(தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் கேட்டது)

""ஏலே முடிய நீளமாக வளர்த்துட்டு ரப்பர் பேன்ட்டெல்லாம் மாட்டிகிட்டு ஏன் இப்படி அலையறே?''
""இதுதான் இப்போ ஃபேஷன் மாமா''
"" ஏண்டா. உன் அக்காவ பொண்ணு பார்க்க வந்தவங்க உன்னை பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு போயிட்டாங்க!''

-நெ.இராமகிருஷ்ணன்,
சென்னை-74.

யோசிக்கிறாங்கப்பா!


உளி அடிபடும் சத்தத்திற்கிடையிலேயே தான் 
உருவாகிக்கொண்டிருக்கிறது தியானத்திலிருக்கும் புத்தன் சிலை!

- கௌந்தி மு ,
சென்னை.

மைக்ரோ கதை

ஆபிஸ் விட்டு வரும்போதே இட்லி, தோசைக்கான பாக்கெட் மாவுகளை கேசவன் வாங்கி வந்துவிடுவார். வீட்டு கிரைண்டர் ரிப்பேர் என்பதால், மாவை அரைக்காமல் நாள்தோறும் விதவிதமான சுவைகளில் மாவு பாக்கெட்டுகளை வாங்கி வந்து,  சமைத்து சாப்பிட்டு வந்தார் அவர்.
ஓரிரு மாதங்களில் கேசவனுக்கு திருமணம்.  மனைவி சீர் எடுத்து வரும்போது, கிரைண்டரும் வரும் என்பதால் புது கிரைண்டர் வாங்கவில்லை. 
திருமணமும் நடைபெற்று, மனைவி தாரிணியிடம் கேசவனின் வாழ்க்கை இனிமையாகக் கழிந்தது.  ஆனால், புது கிரைண்டரில் மாவு அரைத்தபாடில்லை.
அன்று வழக்கம்போல கேசவனும் ஆபிஸ் புறப்பட்டார். 
""ஏங்க. ஆபிஸ் விட்டு வரும்போது பாக்கெட் மாவு வாங்கிட்டு வாங்க. நானும் வேலைக்கு போறதால நமக்கு மாவரைக்க நேரம் கிடையாதுங்க. மறக்காதீங்க..'' என்றார் தாரிணி.
மனைவியின் பேச்சை கேட்ட கேசவன் புது கிரைண்டரை பார்த்தபடியே, வீட்டை விட்டு புறப்பட்டார்.

-சோ.மாணிக்கம்,
குத்தாலம்.

எஸ்எம்எஸ்

கடனில் கார் வாங்குவதைவிட 
காசு கொடுத்து சைக்கிள் வாங்குவது மேலானது.

-வி.ந.ஸ்ரீதரன்,
சிறுசேரி.

அப்படீங்களா!


சினிமா ரசிகர்களுக்கு சினிமா பார்ப்பது என்பது ஒரு தனி அனுபவம்.  இந்தக் காலத்தில் அதிலும் பிரம்மாண்டமான "ஐ மாக்ஸ்' திரையரங்குகளில் படங்களைப் பார்ப்பது சிறப்பான அனுபவம். 
நாட்டில் மிகக் குறைந்த அளவில்தான் "ஐ மாக்ஸ்'  திரையரங்குகள் உள்ளன. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இரண்டே இரண்டு திரையரங்குகள்தான் இருக்கின்றன.
ஹைதராபாத்தில் உள்ள பிரசாத் திரையரங்கமானது நாட்டிலேயே மிகப் பெரும் சினிமா ஸ்கிரீன் கொண்ட திரையரங்கமாக  விளங்கப் போகிறது. அங்கு 64 அடி உயரம், 101.6 அடி அகலம் கொண்ட ஸ்கீரினை தற்போது அமைத்து வருகின்றனர்.
இந்த பெரிய ஸ்கிரீனில் திரைப்படங்களைப் பார்க்கலாம் என்றும் தியேட்டர் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
விரைவில் வெளியாக உள்ள :அவதார் 2' படத்தை அப்படிப்பட்ட பிரம்மாண்டமான திரையில் பார்த்தால் மிகவும் பிரமிப்பாக இருக்கும் என சினிமா ரசிகர்கள் கருதுகிறார்கள். ஹைதராபாத் சினிமா ரசிகர்களுக்கு இந்த பிரம்மாண்ட திரை ஒரு இனிய சினிமா அனுபவத்தைக் கொடுக்கப் போகிறது.

- செளமியா சுப்ரமணியன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT