தினமணி கதிர்

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 101

14th Aug 2022 06:00 AM | கி. வைத்தியநாதன்

ADVERTISEMENT

 

தில்லி லோதி எஸ்டேட்டிலுள்ள இந்தியா இன்டர்நேஷனல் சென்டரிலிருந்து ஆட்டோ பிடித்து நான் கிரேட்டர் கைலாஷ் போய்ச் சேர்ந்தபோது, இரவு மணி 10. அந்த நேரத்திலும் பிரணாப் முகர்ஜியின் வீட்டில் ஜேஜே என்று பார்வையாளர்களின் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. தெருவெல்லாம் அவரை சந்திக்க வந்திருந்தவர்களின் கார்கள் வரிசை கட்டி நின்றன.

வந்திருந்தவர்கள் பெரும்பாலும் அகன்ற பிறகு, நடுநிசியை நெருங்கும் நேரத்தில் நான் அழைக்கப்பட்டேன். வழக்கமான புன்சிரிப்புடன் "கம்.. கம்..' என்கிற உற்சாக வரவேற்பால் நான் நெகிழ்ந்தேன்.

""கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற இருக்கும் பிரம்மாண்டமான திருமணத்துக்கு உனக்கு அழைப்பிதழ் வந்திருக்கிறதா?'' என்று சிரித்தபடியே கேட்டார் பிரணாப்தா.

ADVERTISEMENT

""இதுவரையில் இல்லை, நீங்கள் திருமணத்துக்கு சென்னை வரப் போகிறீர்களா?''

""இல்லை.., இல்லை.., இல்லை. அழைப்பிதழ் வந்திருக்கிறது. தொலைபேசியில் அழைத்திருக்கிறார் ஜெயலலிதாஜி. பிரதமரே போகாதபோது, நான் மட்டும் எப்படி போவது? பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் இதுபோன்ற ஆடம்பரத் திருமணங்கள் நடத்துவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஜெயலலிதாஜி சில வேளைகளில் தான் அரசியல்வாதி என்பதை மறந்து விடுகிறார். நடராஜனுக்கு இதைத் தடுக்கும் அளவுக்கு செல்வாக்குக் கிடையாதா?''

""நான் நடராஜனை சந்தித்து மாதங்களாகி விட்டன..''

""சிவாஜி கணேசன் வேறு என்னைத் தனிப்பட்ட முறையில் அழைத்திருக்கிறார். தமிழ்நாட்டில் நடக்கும் எல்லாமே வேடிக்கையாக இருக்கிறது. உளவுத் துறையின் தகவலின்படி, அந்தத் திருமணமேகூட ஜெயலலிதாவின் செல்வாக்கை அடித்தட்டு மக்கள் மத்தியில் அதிகரிக்கக் கூடும் என்று சொல்கிறது. அப்படியா?''

நான் தமிழக அரசியல் நிலவரம் குறித்து எனக்குத் தெரிந்ததை எல்லாம் சொன்னேன். அவர் புன்சிரிப்புடன் அமைதியாகக் கேட்டுக் கொண்டார். அவருக்குத் தெரியாததையா நான் சொல்லிவிடப் போகிறேன்? ஆனால், எல்லா தரப்புச் செய்திகளையும் கேட்டுக் கொள்வது அவரது பாணி.

அவரிடமிருந்து விடைபெற்றபோது இரவு வெகுநேரமாகி விட்டதால், நான் திரும்பிச் செல்வதற்கு ஆட்டோ கூடக் கிடைக்கவில்லை. நீண்டநேரம் காத்திருந்து இரவு நேரப் பேருந்தில் நான் தங்கியிருந்த கரோல் பாக் விருந்தினர் விடுதிக்கு வந்து சேர்ந்தேன்.

காலையில் கெளடில்யா மார்க்கில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த ஆளுநர் சென்னா ரெட்டியை சந்திக்கச் சென்றபோது, அவர் அங்கே பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். திருமணம் நடப்பது குறித்துத் தனக்கு எதுவும் தெரியாதென்றும், தனக்கு அழைப்பிதழ் எதுவும் வரவில்லை என்றும் அவர் தில்லி நிருபர்களிடம் சொன்னபோது எனக்குச் சிரிப்பு வந்தது. அறையில் அவரை சந்தித்தேன்.

""வளர்ப்பு மகன் திருமணம் பற்றி எதுவும் தெரியாது என்று ஏன் சொல்கிறீர்கள்?''

""நிஜமாகவே எனக்குத் தெரியாது. பத்திரிகை செய்திகளை நான் நம்புவதில்லை. முதல்வர் என்னிடம் நேரடியாகச் சொல்லாததை நான் எப்படி நம்புவது? எனக்கு அவர் அழைப்பு அனுப்பவில்லை என்பதும் நிஜம்தானே?''

""அவர் உங்களை அழைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?''

""அழைப்பிதழை நானும் எதிர்பார்க்கவில்லை, திருமணத்துக்கு அவரும் என்னை எதிர்பார்க்கவில்லை. தன் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்கவும், மக்களின் கவனத்தைத் திசை திருப்பவும் அவர் விரும்புகிறார். சுப்பிரமணியன் சுவாமி சொன்னதுபோல, அவர் மேலும் மேலும் பிரச்னைகளை அதிகரித்துக் கொண்டே போகிறார். ஆமாம், என்னதான் சொல்கிறார் அந்த நடராஜன்? அவரை நீங்கள் பார்க்கவில்லையா?''

""இல்லை'' என்று தலையாட்டினேன்.

""நான் இன்னும் இரண்டு நாள்கள் தில்லியில்தான் இருக்கப் போகிறேன். நடராஜனுக்குத் தகவல் அனுப்பி அவரை இங்கே வரச்சொல்லுங்கள். நான் சந்திக்க விரும்புகிறேன் என்று சொல்லுங்கள். அதற்காகத்தான் நான் உங்களை வரச்சொன்னேன்.''

""அவருக்குத் தகவல் தெரிவிக்கிறேன். அவர் வருவாரா மாட்டாரா என்று எனக்கு தெரியாது.''

 

தில்லியில் பிரதமர், உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவாண் மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.எம். அகமதியையும் சந்தித்தார் சென்னா ரெட்டி. அந்த சந்திப்பின் பின்னணி என்ன என்பது இன்றுவரை வெளிவரவில்லை. ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கருதப்படும் ஓங்கோல் மக்களவை உறுப்பினர் மாகுந்த சுப்பராம ரெட்டி, இரண்டு மூன்று தடவை தமிழ்நாடு இல்லம் வந்து நீண்ட நேரம் ஆளுநர் சென்னா ரெட்டியுடன் உரையாடிச் சென்றார்.

நான் தகவல் தெரிவித்த அன்று இரவே ம. நடராஜன் சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்டு தில்லி வந்து சேர்ந்தார். நடராஜன் வந்திருக்கும் விவரத்தையும், அவர் வசந்த் குஞ்சிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் தங்கியிருக்கும் விவரத்தையும் ஆளுநர் சென்னா ரெட்டிக்குத் தெரிவித்ததுடன் எனது வேலை முடிந்துவிட்டது.

நான் சென்னை திரும்பிவிட்டேன். அவர்கள் சந்தித்தார்களா, பேசினார்களா, என்ன பேசினார்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், திருமணம் தொடர்பானதாகத்தான் இருக்கும் என்பது மட்டும் உறுதி.

நான் சென்னை திரும்பியபோது, திருமணத்துக்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. வேடிக்கை என்னவென்றால், மத்திய அமைச்சர்களில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் முக்கியமான பல தலைவர்கள் என்னைத் தொடர்பு கொண்டவண்ணம் இருந்தனர். எதற்கு தெரியுமா? முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து திருமணத்துக்குத் தங்களை அழைக்கும் அழைப்பிதழ் பெறுவதைப் பெருமையாக அவர்கள் கருதியதுதான் காரணம்.

இப்போதுபோல செல்பேசிகள் வந்திராத காலம் அது. எஸ்.டி.டி. வசதி வந்திருந்தது. காலையில் தொடங்கி மாலைவரை, திருமண அழைப்புப் பெறுவது குறித்துப் பேச எனக்கு வந்த அழைப்புகளைப் பட்டியலிட்டு மாளாது. போயஸ் தோட்டமும் சரி, இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் உள்ள முக்கியத் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்புவதில் அதீத ஆர்வம் காட்டியது என்பதுதான் அதைவிட வேடிக்கை.

ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பிப் பார்க்கும் விதத்தில் தனது வளர்ப்பு மகனின் திருமணம் நடத்தப்பட வேண்டும் என்று முதல்வர் செல்வி ஜெயலலிதா விரும்பினார் என்றுதான் கூற வேண்டும். அந்தத் திருமணத்துக்கு வந்த வெளிமாநில அரசியல்வாதிகள் பலரும் ஜெயலலிதாவின் நட்பைப் பெற விழைந்ததற்கு இன்னொரு காரணமும் இருந்தது.

அடுத்த சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் வர இருந்தது. நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்கிற எதிர்பார்ப்பு யாருக்கும் இருக்கவில்லை. அப்படி ஒருவேளை கூட்டணி அமையும் என்றால் ஜெயலலிதாவின் ஆதரவுடன் பிரதமராக வேண்டும் என்கிற கனவில், அந்தத் திருமணத்துக்கு வந்தார்கள் பலர்.

குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா, பிரதமர் நரசிம்ம ராவ், நிதியமைச்சர் மன்மோகன் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவாண் ஆகியோர் திருமணத்துக்கு செல்வதில்லை என்று முதலிலேயே முடிவெடுத்து விட்டனர். ஆளுநர் சென்னா ரெட்டிக்கு அழைப்பே அனுப்பப்படவில்லை எனும்போது அவர் போகாமல் இருந்தது எதிர்பார்த்ததுதான்.

மத்திய சமூக நலத் துறை அமைச்சர் சீதாராம் கேசரிக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எப்போதுமே நெருக்கம் உண்டு. ஜெயலலிதா மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோதே ஏற்பட்ட நட்பு அது. அதனால் அவர் வந்து விட்டார்.

பிகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், கர்நாடக முதல்வர் தேவே கெளடா, ராஜஸ்தான் முதல்வர் பைரோன் சிங் ஷெகாவத் மூவரும் ஒருநாள் முன்னதாகவே சென்னை வந்துவிட்டனர். ஒடிஸ்ஸா முதல்வர் பிஜு பட்நாயக் திருமணத்தன்று வந்து சேர்ந்துகொண்டார்.

பிரதமர் பதவிப் போட்டிக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்த ராமகிருஷ்ண ஹெக்டேயும், சரத் பவாரும் அரசியல் எதிர்பார்ப்புடன் வந்தவர்கள்.

இன்றைய தலைமையினர் தெரிந்து கொள்வதற்காக இந்தத் தகவல் - எம்.ஜி.ஆரின் மனைவியும் முன்னாள் முதல்வருமான வி.என். ஜானகி திருமணத்துக்கு வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார். நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். ஆனால், ரஜினிகாந்தும், அன்று உச்சத்தில் இருந்த இளையராஜாவும் திரைத்துறையினரில் வராதவர்கள்.

அதிவிமரிசையாகத் திருமணம் நடந்தது. விளம்பர வெளிச்சத்தில் வெளியே தெரியாமல் மறைந்தது என்னவென்றால், மத்திய உளவுத் துறை, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் சத்தம் போடாமல் தத்தம் கடமைகளைச் செய்து கொண்டிருந்தன. அதன் விளைவைத்தான் ஜெயலலிதாவும், சசிகலாவும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்துக்குப் பிறகு முதல்வர் ஜெயலலிதாவின் அணுகுமுறையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. அதற்குக் காரணம், ஆளுநர் சென்னா ரெட்டி - நடராஜன் சந்திப்பா அல்லது "டான்சி' வழக்கா என்பது தெரியாது. தில்லியிலும், ஹைதராபாதிலும், சென்னையிலுமாக மூன்று தடவைகள் நடராஜன், ஆளுநர் சென்னா ரெட்டியை சந்தித்தார். அந்த சந்திப்பு குறித்து நான் கேட்கும்போது அவர் சிரிப்பாரே தவிர, மறுத்ததில்லை.

அமைச்சர்களின் இலாகாக்களை ஆளுநர் மாளிகைக்குச் செல்லாமல் தன்னிச்சையாக மாற்ற முற்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் முந்தைய போக்கில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. முதல்வர் ஆளுநரை சென்று சந்தித்தார். இரண்டு அமைச்சர்களை அவரை சந்தித்து அகற்றினார். இருவருக்கும் இடையே திடீரென்று சுமுகமான உறவு ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க இருந்தது. பத்தாவது மக்களவையின் கடைசி குளிர்காலக் கூட்டத்தொடர் என்பதால், நான் தில்லிக்குக் கிளம்பிவிட்டேன். நான் கிளம்பியதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.

நான் மிகவும் மதிக்கும், என் மீது அக்கறை கொண்டிருந்த மூத்த தலைவர் தினேஷ் சிங்கின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக செய்தி வந்திருந்தது. ஆர்.கே. தவாண் தனி பொறுப்புடன் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகி இருந்ததும்கூடக் காரணம்தான். அவரை சந்திக்க வரும்படி, அவரது அமைச்சகத்திலிருந்து கடிதம் வந்திருந்தது.

செம்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் என்று தொடர்ந்து மூன்று நான்கு மாதங்கள் நான் தில்லியிலும், வடநாட்டின் பல மாநிலங்களிலுமாக இருந்தேன். அதற்கிடையில் அமைச்சர் தினேஷ் சிங் மறைந்தது, சில நாள்கள் என்னை சோகத்தில் சோம்பி இருக்க வைத்ததையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

பிரதமர் அலுவலகத்தின் இணையமைச்சராக இருந்த புவனேஷ் சதுர்வேதி, தினேஷ் சிங்கின் இறுதி மரியாதைக்குச் சென்றபோது என்னை தனியே அழைத்துச் சொன்ன செய்தியைக் கேட்டு நான் என்னை அறியாமல் குமுறி விட்டேன்.

""உன் மீது நான் நம்பிக்கை வைத்திருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா? சில ஆண்டுகளுக்கு முன்னர், நான் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது, தினேஷ்ஜிதான் உன்னை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவருக்கு உன்னைப் பிடிக்கும் என்பதால்தான் எனக்கு உன்னைப் பிடிக்கிறது...'' என்று அவர் தெரிவித்தபோது கண் கலங்காமல் என்ன செய்யும்?

அடுத்த ஐந்தாறு மாதங்களில் மக்களவைக்குத் தேர்தல் நடக்க இருக்கும் வேளையில், நரசிம்ம ராவால் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்கிற சந்தேகம் பரவலாகவே இருந்தது. அந்த நேரத்தில் அணுகுண்டு போட்டாற்போல உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவால் தலைநகரம் அதிர்ந்தது.
சவால்களை சாதகமாக்கிக் கொள்ளும் பிரதமர் நரசிம்ம ராவுக்கு அதுவே ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.

(தொடரும்)

ADVERTISEMENT
ADVERTISEMENT