தினமணி கதிர்

அவளொரு நவரச நாடகம்

14th Aug 2022 06:00 AM | சரசுராம்

ADVERTISEMENT


என் மகன் விஷ்ணுவின் அறையில் ஒலித்த இசை அதன் சுவரில் மோதி மோதி அதிர்ந்து கொண்டிருந்தது. எனக்குள் சட்டெனமின்னலாய் வந்து மறையும் அப்பாவின் ஞாபகத்தை தவிர்க்க முடியவில்லை. இந்த வாழ்வின் அழகிய பக்கங்களை படிக்காமலே தொலைத்த மனிதர். தன்னைச் சுற்றிலும் அவர் வைத்திருந்த ஒரு நெருப்பு வளையம் எங்களையும் சேர்த்து வதைத்ததுதான் அவர் மீதான வெறுப்புக்கு காரணம். ஒரு நல்ல இசை ஒலித்துக் கொண்டிருக்கும் போது நெஞ்சில் இப்போது அவர் நினைப்பு எதற்கு?

நான் பாட்டை கேட்க முனைந்தேன். விஷ்ணு கேட்டுக் கொண்டிருந்தது ஒரு மெலடிதான். ஆனால் அதன் சப்தம் அதிகமாக இருந்தது. அதிலிருந்து வந்த அந்த ஃபேஸ் சுற்றிலும் இருந்த பொருள்களையும் லேசாய் அசைப்பதாகக் கூடத் தோன்றியது. விஷ்ணு தன்னை மறந்து அந்தப் பாட்டிற்குள் இருந்தான். இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற எந்த உணர்வும் அவனிடம் இல்லை. அவன் பலமான வேறு ஒரு யோசனையில் இருப்பதாகத் தோன்றியது. கல்லூரியில் படிக்கிற பையன். நிச்சயம் பிரச்னைகள் இருக்கும். அதற்கான ஆறுதல்தான் அந்த இசையில் தேடிக் கொண்டிருக்கிறான்.

அதுவொரு ஆப்பிரிக்கன் இசை. அந்த இசைக்குள் கேட்பது என்ன வகையான கருவிகள் என்பதும் தெரியவில்லை. பாடுபவரின் குரல் வெகுதூரத்தில் ஒரு அசரீரியாய் கேட்டது. சோகம் நிறைந்த குரல். அதுதவிர அதன் மொழியின் ஒரு வரியும் எனக்கு புரியவில்லை. புரிய வேண்டுமாயென்ன? இசைக்கு மொழி எதற்கு? நல்ல இசையே ஒரு மொழிதான். அந்த மொழியில்தான் விஷ்ணு அவனை மறந்திருந்தான். கேட்க , கேட்க அந்த இசை நம்மையும் அதன் உலகத்துக்குள் இழுப்பதாக இருந்தது. அதன் ஆரம்ப வரி மட்டும் சற்றே புரிந்து என் உதடு முணுமுணுக்க தொடங்கிய போது என் மனைவி வசுந்தரா அவளது அறையிலிருந்து கத்தினாள்.

""விஷ்ணு.. ப்ளீஸ் சவுண்டை கொஞ்சம் குறைச்சுக்க.. ப்ளீஸ்.. ஐ வாண்ட் டூ ரீட் திஸ் புக்..''என்றாள்.

ADVERTISEMENT

அந்தப் பாட்டின் சப்தம் சட்டென இளைத்தது. சுவரும் தன்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டது. பாட்டு நின்றதும் விஷ்ணு வெளியே வந்தான். ஒரு ஆற்றில் குளித்துவிட்டு கரையேறிய திருப்தி அவன் முகத்தில் தெரிந்தது. என் அருகில் வந்து அமர்ந்துக் கொண்டான். நான் படித்த பேப்பரை மடக்கி டேபிள் மீது வைத்தேன். திரும்பி நான் அவனைப் பார்த்தேன். அவன் இன்னும் அமைதியாகவே இருந்தான்.

""வாட் ஹேப்பண்ட் விஷ்ணு..?''

""நத்திங்ப்பா.. எ சுமால் ப்ராப்ளம் வித் மை பிரண்ட்ஸ்.. எப்பவும் வர்றதுதான்.. ஒரு நல்ல பாட்டைக் கேட்டேன்.. மனசெல்லாம் சரியாயிடுச்சு.. இசைதானே நல்ல ஆறுதல்..! இத நீங்க தானப்பா அடிக்கடி சொல்லுவீங்க..''

""அப்கோர்ஸ்.. அதுதான் மிகச் சிறந்த நண்பன்.. அதுதான் மிகச் சிறந்த ஆறுதல்..

உன்னோட வயசுல அதெல்லாம் கிடைக்காம எங்கப்பாகிட்ட நானெல்லாம் பட்ட கஷ்டங்கள் மிகத் துயரமானது.. சரி.. பழைய கதை இப்ப எதுக்கு..?''
""ப்ளீஸ்.. அத சொல்லுங்கப்பா.. ஐ வாண்ட் டூ லிஸன் ஒன் மோர் டைம்..''
""நோ.. விஷ்ணு இட்ஸ் வெரி போரிங்,..''
""ப்ளீஸ்ப்பா.. பாட்டு கேட்டுட்டேன்.. ஒரு கதையும் கேட்கறேன்.. மனசு இன்னும் ரிலாக்ஸ் ஆகும்.. தாத்தா பண்ணினது ஓரளவு தெரியும்.. இருந்தாலும் இன்னொரு முறை கேட்கறனே..''
வசுந்தராவும் உள் அறையில் இருந்து வெளியே வந்தாள். புத்தகத்தை டேபிளில் வைத்துவிட்டு என் கதையை கேட்க தயாரானாள்.
எனக்கெல்லாம் இசையே துணை. எத்தனையோ துயரங்களுக்கு ஆறுதல் தந்து என்னை அணைத்துக் கொண்டதும் அதுதான். அது மட்டும் இல்லையென்றால் நானெல்லாம் கிறுக்கு பிடித்து அலைந்திருக்கவும் வாய்ப்புண்டு.. என்றபடி மீண்டும் என் துயரக்கதையை சொல்லத் தொடங்கினேன்.
என்னுடைய சின்ன வயதில் எங்கள் வீட்டில் பாட்டெல்லாம் அவ்வளவு எளிதில் கேட்க முடியாது. அதற்கு அத்தனை தடைகள் இருந்தன. அப்பாவின் தடைகள். அப்போது எம்ஜிஆர் பாடல்கள் என்றால் எங்களுக்கு அவ்வளவு உயிர். பாட்டு கேட்க ஒரே வழி ரேடியோதான். மரத்தில் செய்யப்பட்ட அந்த வால்வ் செட். அதன் முன் பக்கம் கொசுவலை மாதிரி பழுப்பேறிய ஒரு துணி இருக்கும். டொக்கென சின்ன சத்தத்துடன் அதன் ஸ்விட்சை ஆன் செய்வதே அவ்வளவு சுகமாய் இருக்கும். அது மெதுவாய் ஹீட் ஆகி லைட்டெல்லாம் எரிந்து பிக்கப் ஆவதற்குள் முக்கால்வாசிப் பாடல் முடிந்துவிடும்.
மீதியை கேட்பதற்குள் எங்கப்பா வந்துவிடுவார். வேகமாய் அதை ஆஃப் செய்துவிட்டு நானும் என் அண்ணனும் ஓடி மறைவோம். இதில் பலசமயம் அவர் அந்த ரேடியோவில் ஸ்டேஷன் எல்லாம் மாற்றி வைத்துவிட்டுதான் ஆபிஸிற்கே போவார். அவர் போன பிறகு கோயம்புத்தூர் ஸ்டேஷனை தேடி பாட வைப்பதற்குள் அப்பா ஆபிஸிலிருந்தே வந்துவிடுவார்.
ஒவ்வொரு முறையும் வீட்டுக்குள் அப்பா இருக்கிறாரா என சுற்றும் முற்றும் பார்த்துவிட்டே என் கைகள் ரேடியோ பக்கம் போகும். "அவளொரு நவரச நாடகம்..' எஸ்.பி.பி.யின் குரலில் லயித்துப் போவேன்.
கேக்கின் மீதிருக்கும் சிவந்த செர்ரி பழம் போல இனிக்கும் குரல். அவரது அந்த ஆரம்ப கால குரலுக்கு அவ்வளவு ரசிகன் நான்!
"அறுசுவை நிரம்பிய பால்குடம் ஆடும் நடையே நாட்டியம்.!' தொடரும் வரிகளில் எங்களை மறந்திருப்பேன். இந்த வாழ்க்கை எவ்வளவு சுவாரஸ்யங்கள் நிறைந்தது என ஒவ்வொன்றாய் புரிகிற வயது அது. அப்பா எங்கிருந்து வருகிறார் எனத் தெரியாது. வேகமாய் வருவார். அப்பா நல்ல உயரம். அதற்கேற்ற உடம்பு. கட்டை மீசை. அது வருவது மோசமான ஒரு புயலைப் போலத்தான் இருந்தது. அவரது காலடியில் அன்பின் அத்தனை மலர்களும் மிதிபடும். கேள்வியின் அத்தனை சுவர்களும் உடைந்து நொறுங்கும். வந்தவர் வந்த வேகத்தை விட அதிக வேகத்தோடு அந்த ரேடியோவை ஆஃப் செய்வார். அணைத்துவிட்டு அப்படியே ஒரு ஹைஸ்பீடில் பில்டப்பாய் எங்களை திரும்பிக்கூட பார்க்காமல் அவரது அறைக்கு போய் மறைவார். எஸ்பிபி சட்டென என்னைவிடவும் வேகமாய் அந்த ரேடியோவிற்குள் சுருங்குவார்.
இது வீட்டில் தினமும் நடக்கிற ஒன்றாகிவிட்டது. ரேடியோ அப்பாவுடையது. அதன் முழு அதிகாரமும் அவரிடமே இருக்கிறது. அதன் உரிமையும் அவருடையதுதான். அவர் எப்போதாவது அதிகம் சப்தம் இல்லாமல் பாட்டுக் கேட்டால் மட்டுமே நாங்களும் கேட்க முடியும். அவ்வப்போது செய்திகள் கேட்பார். "வனமாலி வாசுதேவ மனமோகனா..' அவ்வவ்போது அதுவும் சன்னமாய் ஒலிக்க அந்த கர்நாடக சங்கீதத்தை கண்கள் மூடி கேட்டுக் கொண்டிருப்பார். சிலசமயம் மதிய ஒலிப்பரப்பில் நாடகங்கள் கேட்கும். அவர் அதை அணைத்துவிட்டு எழும்போது நாங்களும் எழுந்து கொள்ள வேண்டும். அதுதவிரவும் அப்பா பொதுவாகவே வீட்டில் கலகலப்பாய் பேசியதையும் நான் பார்த்ததில்லை. யாரையும் சப்தமாய் பேச அனுமதித்ததும் இல்லை. பெரும்பாலும் மௌனம் தான் அவரின் மொழியாகவும் வீட்டின் மொழியாகவும் மாறிப் போனது. மௌனம் என்பது அவ்வளவு லேசானதாயென்ன? அதன் கனத்தை சுமந்து கொண்டு எப்படி நடக்கிறார் என்றும் நான் யோசித்ததுண்டு.
வீட்டில் நடப்பதை நினைத்து எனக்குள் வெறுப்பு பொங்காமல் இல்லை. ஒருநாள் சாப்பிடும் போது அம்மாவிடம் கேட்டேன். கேட்கும் போது எனக்கு அழுகை வந்தது.
""என்னம்மா இது நியாயம்? இந்த வீட்டில சுதந்திரமா ரேடியோல ஒரு பாட்டு கேட்க முடியுதா..?''
அம்மா எங்களைப் பார்த்தாள். பிறகு பேசினாள்.
""உங்க அப்பா ஏன் அப்படி பண்றார்.. எதுக்கு அப்படி பண்றார்னு எனக்கு தெரியாது.. ஆனா.. அவரு எது பண்ணினாலும் அதுக்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும்டா.. அது மட்டும் எனக்கு தெரியும்டா..'' என்றாள்.
அம்மாவின் விளக்கம் எனக்கு சமாதானம் தரவில்லை. அப்பா என்பவர் குடும்பத் தலைவர். சம்பாதித்து நேர நேரத்துக்குச் சாப்பாடெல்லாம் போடுபவர். அவர் என்ன செய்கிறாரோ அதுதானே வீட்டில் சட்டமாக இருக்க முடியும். அதை மீறவும் முடியாது. ஒரு கொடியை நட்டி போராட்டமெல்லாம் நடத்திவிடவும் முடியாது. ஆனாலும் பாட்டு கேட்கும் தாகம் தீருமாயென்ன? நானே நானா.. யாரோதானா..?
ஒரு வீதியில் நடக்க அது ஒரு டீக்கடையில் அந்தப் பாடல் ஒலிக்கிறது. இளையராஜாவின் இசை. வாணி ஜெயராமின் அந்த தெய்வீகக் குரல். என்னை மறந்து அந்த வீதியில் அப்படியே நின்று விடுவேன். அந்தப் பாடல் முடியும் வரை உலகில் நடக்கும் எந்த விஷயமும் என்னை சிறிதும் அசைத்ததில்லை. ஆனாலும், வீட்டில் ரேடியோவை வைத்துக் கொண்டு வீதியில் நின்று பாட்டைக் கேட்க வைத்த அவமானம் நெஞ்சை குத்தவே செய்தது.
என் நண்பன் சுரேஷின் "பானாசானிக்' டேப்தான் எங்களுக்கு கிடைத்த ஒரே பரிசு.! "சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கறதே.." ஸ்டீயோ சவுண்டில் இசை அப்படியே மீன் போல் துள்ளும். எங்களை அப்படியே மயக்கத்தில் ஆழ்த்தும். கல்லூரி விட்டு வருவோம். மாலை வேளைகள். சுரேஷ் வீடுதான் எங்கள் சொர்க்கம். இளையராஜாவின் அற்புதங்களில் லயித்து போனதெல்லாம் அவனது டேப்ரிகார்டர் மூலம்தான். "ரோஜாவை தாலாட்டும் தென்றல்..', "பூவே இளைய பூவே.', "நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்..' எத்தனை பாடல்கள்! அத்தனையும் பேரானந்தத்தின் அனுபவங்கள்! இசைமழை பொழிந்த அந்த நாள்களின் ஈரங்கள் இன்னும் மனதில் அப்படியே இருக்கிறது. அந்த நண்பன்தான் இந்த பிறவியின் பெரிய அதிர்ஷ்டக்காரனாகவே எனக்கு தோன்றுவான். பாட்டை கேட்க வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்த அவனது அப்பா மீது எனக்கு பொறாமையே வரும். அப்படி இன்னும் இரண்டு மூன்று அப்பாக்களை படைத்திருந்தால் அந்த இயற்கைக்கு என்ன இழப்பு வந்துவிடும் என்ற ஆதங்கமெல்லாம் எனக்கு வந்ததுண்டு.
என் படிப்பு முடிகிறது. வேலை கிடைத்து மனதில் பல சுமையோடுதான் சென்னைக்கு வருகிறேன். என் நண்பன் ராஜகோபாலின் அறையில் தான் தங்குகிறேன். அந்த அறையில் ஒரு செட்டு இருந்தது. அசெம்பிள் செட். ராஜகோபால் அந்த அறைக்கென பொதுவாகவே வைத்திருந்தான். மிகச் சுதந்திரமாய் அதில் பாடல்கள் கேட்க தொடங்குகிறேன். ஒரு நாள் "அவளொரு நவரச நாடகம்..' பாடத் தொடங்குகிறது. யாராவது வந்து ஆஃப் செய்து விடுவார்களோ என்ற பதட்டம் தானாய் வருவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.
இப்போது என் கம்ப்யூட்டரில் ஆயிரக்கணக்கான பாடல்கள் இருக்கின்றன. சி.டி.க்களிலும் பாடல்கள் நிரம்பி வழிகிறது.
5.1-இல் துல்லிய இசையைதான் நான் ஒவ்வொரு நாளும் கேட்கிறேன். ஒருநாள் எம்.எஸ்.வி. அடுத்த நாள் இளையராஜா. அடுத்தது அப்படியே மாறி மைக்கேல் ஜாக்சன், பாப் மெர்லி, மடோனா என போய்விடுவேன். இது என் வாழ்க்கை. எனக்கு பிடித்த மாதிரி வாழ்வதை தவிர அதற்கு நான் தரும் மரியாதை வேறொன்றும் இல்லை. "அவளொரு நவரச நாடகத்தை இப்போது எத்தனை முறை வேண்டுமானாலும் நான் கேட்டு ரசிக்கலாம்.
யாருடைய தடைகளும் இதற்கு இல்லை.
அப்பா இப்போது இல்லை. அப்பா சமீபத்தில்தான் இறந்து போனார். வாழ்க்கையை வாழவே தெரியாமல் தன்னை நத்தைபோல் சுருக்கிக் கொண்டவர். கடைசியில் எதைதான் கொண்டு போனார்? அவர் மறைவுக்கு பிறகு அந்த ரேடியோவைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு எரிச்சலும் கோபமும் வரும். போன மாதத்தில் ஒருநாள் அதே கோபத்தில் தூசி மூடிய அந்த ரேடியோவை தூக்கிக் கொண்டு காயலாங்கடைக்கு போனேன். வசுந்தரா பார்த்தபடியே நின்றிருந்தாள். அவள ஏதோ சொல்ல நினைப்பதாகத் தோன்றியது. ஆனால் எதுவும் சொல்லவில்லை. எனக்கு தெரிந்த அúஷ்ரப்தான் அந்தக்கடையை வைத்திருந்தான். ஏ டூ இசட் ஷாப். கத்தி முதல் கடப்பாறை வரை எல்லாமே அங்கு கிடைக்கும். நான் கொண்டு வந்த ரேடியோவையும் அஷ்ரப் மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டான்.
""சார்.. இந்த வால்வ் செட் இப்பெல்லாம் கிடைக்காது.. ஒரு வகையில இதுவும் பழம்பொருள்தான்.. நானும் இத யார்க்கும் விக்கறதா இல்ல.. ஷோவுக்காக வச்சுக்க போறேன்.. எவ்வளவு சார் வேணும்..?''
என்றான்.
""பணமே வேண்டாம் அஷ்ரப்.. அப்பா யூஸ் பண்ணினது.. நீங்களே வச்சுக்கங்க..'' என்றபடி வேகமாய் கிளம்பிக் கொண்டேன்.
அத்தனைக்கும் பிறகும் அந்த வெறுப்பு இன்னும் என் நெஞ்சில் இருக்கத்தான் செய்கிறது.
நான் எல்லாம் சொல்லி முடிக்க வீடு அமைதியானது. மழைக்கு பின் வருமே அதே அமைதி. ஒரு ஆழ்ந்த ஆசுவாசம் எனக்குள்ளும் தோன்றியது. விஷ்ணுதான் மீண்டும் பேச்சை தொடங்கினான்.
""தாத்தா ஏன்ப்பா அப்படி நடந்துகிட்டாரு..?''
""யாருக்குடா தெரியும்..? அவருக்குகூட தெரியுமான்னு தெரியல..''
""எனக்கொரு கேள்வி தோணுதுப்பா..?''
""ம்.. கேளு..''
""உங்கப்பாகிட்ட பாதிக்கப்பட்டதால நீங்க எங்களுக்கு சுதந்திரம் கொடுத்தீங்க.. என்ன பாட்டு வேணுன்னாலும் கேட்கலாம்.. எப்ப வேணுன்னாலும் டி.வி. பார்க்கலாம்.. யாருக்கும் தொல்லை தராம எந்தக் காரியத்தையும் செய்யலாம்.. எல்லாத்தையும் ரசித்து வாழறதுக்கும் நீங்கதான் கத்துத் தந்திருக்கீங்க.. ஆனா, தாத்தா அப்படி நடந்துகிட்டதுக்கும் ஒரு காரணம் இருக்குமில்லையா..? அத ஏன்ப்பா நீங்க தெரிஞ்சுக்கல..''
"காரணம்..?'- விஷ்ணுவின் கேள்வி சட்டென எனக்குள் உறைத்தது. அப்பா ஏன் அவ்வளவு நடந்து கொண்டார்? எனக்குள் எப்போதும் இருந்த கேள்விதான். விஷ்ணுவுக்கு உடனே பதில் சொல்ல முடியவில்லை.
"தாத்தாவுக்கே வாழ்க்கையில எதிர்பார்த்து கிடைக்காத அபூர்வமான பொருளா ரேடியோ இருந்திருக்கலாம்.. அது கிடைச்சதும் அதை தன்னை தவிர வேறும் அனுபவிச்சிற கூடாதுங்கற சைக்காலஜிக்கல் பிராப்ளம்கூட அவருக்கு வந்திருக்கலாம் இல்லையாப்பா..?' அது தவிர நமக்கு தப்புன்னு படறது அவருக்கு சரியாக்கூட இருந்திருக்கலாம்..' என்றான் விஷ்ணு.
""யூ ஆர் க்ரெட் விஷ்ணு.. பட் தாத்தாவோட அந்தக் காரணம் மட்டும் மாறுது..'' என்று சொல்ல நான் சட்டென திரும்பி வசுந்தராவைப் பார்த்தேன். அவள் தொடர்ந்தாள்:
""உங்களுக்கு சின்ன வயசுல காதில ஏதாவது பிரச்சனை இருந்துச்சா..?'' என்றாள்.
""ஆமாம் வசு.. அதுக்கு டிரீட்மெண்ட்கூட எடுத்தாங்க.. ஞாபகம் இருக்கு..''
""எஸ்.. அதுக்கு பேரு ஹை ப்ரீக்குவன்ஸி ஹியரிங் லாஸ்.. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல சத்தத்தை நீங்க கேட்கக்கூடாது.. கேட்டா உங்களுக்கு முழுசா ரெண்டு காதுமே கேட்காம போக நிறைய வாய்ப்பு இருந்துச்சு.. ஆனா உங்களுக்கு மியூசிக்ன்னா ரொம்ப பிடிக்கும்.. ரேடியோன்னா உயிர்.. அத தூக்கி போட விடமாட்டீங்க.. பாட்டகூட சத்தமாத்தான் கேட்பீங்க. உங்களுக்கு என்ன பிரச்னைன்னு உங்ககிட்ட சொல்ல உங்கப்பாவால முடியல.. அதுக்குத்தான் உங்கள பாட்டுக் கேட்க விடமாட்டாரு.. வீட்டில யாரும் சத்தம் போட்டு பேசக்கூட யாரையும் அனுமதிக்கல.. பையனுக்கு ஏதாவது ஆயிடக்கூடாதுங்கறத தவிர அவரு மனசில வேற ஒன்னுமில்ல.. ஆனா அதுதான்.. அவர் மேல உங்களுக்கான வெறுப்பா மாறுச்சு.. அதைப்பத்தி அவரு கவலைப்படல.. பையனுக்கு எதுவும் ஆயிடக்கூடாதுங்கற அந்த பயமும்.. உங்க மேல இருக்கிற அந்த பாசம் மட்டும்தான் அவர் மனசில எப்பவும் இருந்துச்சு.. அது கடைசிவரைக்கும் அவருகிட்ட அப்படியேதான் இருந்துச்சு.. அந்தப் பிரச்சனை உங்களுக்கு சரியாகி இன்னைக்கு நீங்க இசையை இவ்வளவு ரசிச்சு கேட்க முடியுதுன்னா அதுக்குக் காரணம்.. உங்கப்பாதான்..''
நான் அதிர்ந்து போய் வசுந்தராவையே பார்த்தேன். பதட்டமாகிக் கேட்டேன்.
""இத.. இத யாரு சொன்னா..?''
""உங்கப்பா இறந்ததை விசாரிக்க அவரோட க்ளோஸ் பிரண்ட் சுப்ரமணியம் வந்தாரு.. நீங்க அப்ப வீட்ல இல்ல.. அவரு உங்கப்பாவைப் பத்தி நிறைய விஷயங்கள எங்கிட்ட நினைவுப்படுத்திகிட்டாரு.. அதுல ஒன்னுதாங்க இது..''
கேட்க கேட்க மனம் அதிர்ந்து போனது. சட்டென எதுவும் ஓடாமல் நான் உறைந்து போனேன். ஒரு பாரம் நெஞ்சை கனமாய் அழுத்த ஆரம்பித்தது. எதுவுமே என்னால் பேச முடியவில்லை. அமைதியாய் எழுந்து போனேன். விஷ்ணு என்னையே பார்த்தபடி இருந்தான்.
என் அறைக்குள் வருகிறேன். எனக்கு எப்போதும் இசைதானே ஆறுதல். கம்ப்யூட்டரில் எம்.ஜி.ஆர் பாடல்களை கேட்கத் தொடங்குகிறேன். அவரது பாடல்தான் என்றும் எனக்கு உற்சாகம் தருபவை. "அச்சம் என்பது மடமையடா..' ஒலிக்கிறது. லயித்துப் போகிறேன்.
மனம் ஒரு மேகம் போல் லேசாகிறது. இரண்டு பாடல்களை அடுத்து "அவளொரு நவரச நாடகம்.. ஒலிக்கத் தொடங்குகிறது. நிமிர்ந்து உட்கார்கிறேன். மீண்டும் அப்பாவே மனம் முழுவதும் நிறைகிறார். என் கண்களில் நீர் திரண்டு வருகிறது. சுவற்றில் இருக்கும் அப்பாவின் புகைப்படத்தைப் பார்க்கிறேன். அவரது புன்னகையின் மீது அந்தப் பாடல் மோதி விழுகிறது.
மனம் மெல்ல மெல்ல சமாதானம் ஆனதும் அஷ்ரப்பின் நம்பருக்குதான் போன் செய்தேன்.
""அஷ்ரப்.. அப்பாவோட அந்த பழைய ரேடியோ எனக்கு மறுபடியும் கிடைக்குமா..?''

ADVERTISEMENT
ADVERTISEMENT