தினமணி கதிர்

பன்முக ஆளுமை

14th Aug 2022 06:00 AM | திவ்யா அன்புமணி

ADVERTISEMENT

 

தமிழ்ப் பத்திரிகைஉலகில் பன்முக ஆளுமை கொண்டவர் ஓவியர் தாமரை.

1936-ஆம் ஆண்டில் திருவாரூர் அருகே வேப்பந்தாங்குடி எனும்கிராமத்தில் பிறந்த இவர், சென்னையில் நீண்ட ஆண்டுகளாக வசித்து பத்திரிகை உலகில் பெரும்பங்காற்றினார். இவர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி, தனது86-ஆம் வயதில் இயற்கை எய்தினார்.

திருவாரூரில் இருந்து புறப்பட்டு குழுவாகவும், தனித்தனியாகவும் சென்னை வந்த இளைஞர்களில் ஓவியர் தாமரை என்ற என்.வைத்தியலிங்கமும் ஒருவர். இவரின் அண்டைவீட்டுக்காரர் தி.ராஜகோபாலன் மேற்படிப்பு படிப்பதற்காக வந்தார். பேராசிரியராகவும் ஆனார்.

ADVERTISEMENT

ராமதாஸ் என்ற இளந்தென்றல் தியாகராய கல்லூரி- பள்ளி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். நாடகமும் எழுதினார். அமைச்சர் என்கிற அப்துல் ரகுமான் "கை சீவல் கடை' நடத்தினார். நடிக்கவும் செய்தார்.

சி.ஏ.முத்துராமன் முரசொலியில் ஆசிரியர் குழுவிலும், வைத்தியலிங்கம் ஓவியப் பணியிலும் (ஆசிரியர் பி.சி.கணேசன் பரிந்துரையில்) சேர்ந்தனர். முரசொலியில் ஏற்கெனவே ஓவியப் பணிகளை செல்லப்பனும், அவ்வப்போது சீனி.சோமுவும், எஸ்.பாலுவும் செய்துவந்தனர்.

இவர்கள் எல்லோருமே திருவாரூரைச் சேர்ந்தவர்கள். தாமரைக்கு அண்ணா நடத்திய "காஞ்சி' பத்திரிகையில் வாய்ப்பு கிடைத்தது. அங்கு ஆசிரியர் குழுவில் முத்துராமனும் சேர்ந்தார்.

காஞ்சிபுரத்தில் இருந்தாலும் கனவெல்லாம் சென்னைதான். தினமணி கதிரில் ஓவியர் தேவை என்பதை அறிந்து வைத்தியலிங்கம் விண்ணப்பித்தார். பணியில் சேர்த்துக் கொள்ளவும் பட்டார்.

தினமணிக்கும், கதிருக்கும் ஆசிரியராக இருந்த ஏ.என்.சிவராமன், பாரதியார் வாழ்க்கையை எழுதிய ரா.அ.பத்மநாபன், துமிலன், லட்சுமணன், சாவி, கே.ஆர்.வாசுதேவன், தீபம் நா.பார்த்தசாரதி, கணையாழி கஸ்தூரிரங்கன் உள்ளிட்டோரின் தலைமையின் கீழ் ஓவியராக, பக்க வடிவமைப்பாளராகப் பணிபுரிந்தார். இவ்வாறாக தினமணி கதிரில் 35 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்த பெருமைக்குரியவர்.

1960-70-களில் வெளிவந்த வார இதழ்களில் ஆப்செட்டில் அச்சிடப்பட்ட ஒரே வார இதழ் தினமணி கதிர்தான். இதனால் பக்க வடிவமைப்பும், ஓவியமும் முக்கியத்துவம் பெற்றன. தாமரையும் தனது திறமையைக் காட்டினார்.

"ஓ மனிதா' எழுதிய பிரபல எழுத்தாளர் விந்தன், "நடைபாதை' நாவல் எழுதிய இதயன், "கமலி உன்னைக் காதலிக்கிறேன்' எழுதிய வை.சு. என்ற வை.சுப்பிரமணியன், அபர்ணா நாயுடு, கௌசிகன் என்கிற வாண்டு மாமா, அண்ணாவின் கதையை எழுதிய நவீனன் போன்றோர் கதிரில் இருந்த ஜாம்பவான்கள்.

வாஷ் டிராயிங், கோட்டுச் சித்திரம், கேலிச்சித்திரம், சித்திரக் கதைத் தொடர் என தாமரை, ராஜம் எனக் கையெழுத்திட்டு வரைந்துவந்தார். அப்போது, "இல்லஸ்ட்ரேட் வீக்லி'யில் பணிபுரிந்த ஓவியரான மேரியோ மிராண்டாவைப் பின்பற்றி, அதே பாணியில் "தாமெரியோ' என்ற பெயரிலும் ஓவியம் வரைந்து வந்தார்.

ஸ்ரீ வேணுகோபாலன் எழுதிய "திருவரங்கன் உலா', "மதுரா விஜயம்' ஆகியவை கோபுலுவின் சித்திரத்தில் வெளிவந்தன. அவர் வெளிநாடு செல்ல நேர்ந்ததால் அடுத்த சில வாரங்களுக்கு அந்தத் தொடருக்கு கோபுலுவைப் போலவே ஓவியம் தீட்டினார் தாமரை. குங்குமத்தில் கலைஞர் மு.கருணாநிதி எழுதி வந்த குறளோவியத்துக்கும் கோபுலுவுக்குப் பதில் சித்திரங்களை வரைந்த பெருமையும் தாமரைக்கு உண்டு.

திருவாரூர் ராமதாஸ் எழுதிய அசோகன் உள்ளிட்ட நாடகங்களிலும் , எக்ஸ்பிரஸ் - தினமணி மனமகிழ்மன்றம் நடத்திய, "ராதா விஜயம்', "பெரிமேசன் பெரியசாமி' நாடகங்களிலும் முக்கியப் பாத்திரம் ஏற்று நடித்தார்.

"பெரிமேசன் பெரியசாமி' நாடகத்துக்குத் தலைமை வகித்த இயக்குநர் ஹரிஹரன், தாமரையின் நடிப்புத் திறமையைக் கண்டு, தான் இயக்கிய "ஏழாவது மனிதன்' திரைப்படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடிக்க வைத்தார் தொடர்ந்து "பகடை பன்னிரெண்டு', "கைதியின் தீர்ப்பு', "சூரக்கோட்டை சிங்கக் குட்டி' ஆகிய படங்களிலும் நகைச்சுவை பாத்திரங்களில் நடிக்க தாமரைக்கு வாய்ப்பு கிடைத்தது. "காணி நிலம் வேண்டும்' என்ற திரைப்படத்தில் எழுத்தாளர் அசோகமித்திரனுடன் தாமரையும் நடித்தார்.

"வண்ணக் கோலங்கள்', "தேவை ஒரு மாப்பிள்ளை', "கல்யாணக் கைதிகள்' உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார். மேடைகளில் பாடவும் செய்த இவர், கோயில்களில் ஆன்மிக உரை நிகழ்த்திய அனுபவமும் உண்டு. "கல்கி' பத்திரிகையில் இரு ஆண்டுகள் கேலிச்சித்திரத்தை வரைந்து வந்தார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, ஒரு கை, ஒரு கால் செயலிழந்தபோதும், தன்னுடைய மனோதிடத்தால் இடது கையால் ஓவியம் பழகி வாரப் பத்திரிகைகளுக்கு ஓவியம் வரைந்து, அளித்தார்.

சமயச் சான்றோர்கள் அப்பர், சுந்தர், திருஞானசம்பந்தர் உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாற்றை எளிய நடையில் அனைவரும் பயிலும் பகையில் நூல்களாக எழுதி வெளியிட்டார்.

சிறுவர் மணி ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் உள்ளிட்ட இதழ்களில் "பாலாஜி' என்ற பெயரில் கதையும், சித்திரமும் எழுதிவந்தார்.

தாமரை இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவரது சித்திரங்கள் பல நூற்றாண்டுகள் பேசும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT