தினமணி கதிர்

பேல்பூரி

14th Aug 2022 06:00 AM

ADVERTISEMENT

 

கண்டது

(தேனியில் ஷேர் ஆட்டோ ஒன்றின் பின்புறம் எழுதியிருந்த வாசகம்) 

முயற்சி செய்து தோற்பது கெளரவம்! 
முயலாமல் இயலாது என்பது கேவலம்! 

-ச.அரசமதி, தேனி. 

ADVERTISEMENT

 

(திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஓர் கடையின் பெயர்)

அக்கா இட்லி கடை - தம்பி தேநீர் கடை

-ஆர்.ஜெயலட்சுமி,
திருநெல்வேலி.

 

(நாகர்கோவில் மையப் பகுதியில் உள்ள ஓர் சிற்றுண்டி கடையின் பெயர்)

பழங்கஞ்சி நீராகார மையம்

-கே.பிரபாவதி,
மேலகிருஷ்ணன்புதூர்.

 

கேட்டது

(திருச்செந்தூரில் உள்ள ஓர் திருமண மண்டப வாயிலில் தம்பதி பேசிக் கொண்டது)

"" ரெண்டு நாளா பாண்டியன் ஸ்டோர் ( சீரியல்) பார்க்க முடியலைன்னு" வருத்தப்பட்டுக்கிட்டு இருந்தியே!''
""ஆமாங்க.. கல்யாண வேலையில பார்க்கலை''
"' இந்தா நல்லா பார்த்துக்கோ ! எதிரே இருக்கு  "பாண்டியன் ஸ்டோர்' கடை''.

- முகதி.சுபா,
திருநெல்வேலி.

(நாகர்கோவிலில் நண்பரின் வீட்டில் )

""ஏண்டீ... டீக்காக எவ்வளவு நேரம்டி காத்திருக்கிறது. சீக்கிரம் போட்டுக் கொண்டு வாடீ!''
""நான் ஒரு டீ போடுறதுக்குள்ள நீங்க எத்தனை டீ போட்டுட்டீங்க..! உங்களுக்குதான் வேகம் அதிகம். போய் போடுங்க..!''

-கே.ஆர்.ஜெயக்கண்ணன்,
கவற்குளம் தேரிவிளை.
 

(மன்னார்குடி, உணவகம் ஒன்றில் தம்பதியுடன் மகன்)

"" ஏங்க அவன் கேட்கிறதை வாங்கிக் கொடுங்
களேன். ஆசைப்பட்டுத் தானே கேட்குறான்!''
"" ஆசைப்பட்டு கேட்குறவன் எப்பப் பாரு புரோட்டா வேணும்! பிரியாணி வேணும்தானே கேட்கிறான். என்னைக்காச்சும் ஒரு நாளாவது தம்பி வேணும்.. தங்கச்சி வேணும்னு கேட்குறானா..''

- ப. இராஜகோபால்,
மன்னார்குடி.

 

யோசிக்கிறாங்கப்பா!

சமூக வலைதளங்கள் மனிதனின் கைவிரல்கள் அல்ல;
அவை கைகளைப் பூட்ட வந்த கை விலங்குகள். 

- வி. பஞ்சாபகேசன்,
திருச்சி. 

 

மைக்ரோ கதை


கதறி அழுதுக் கொண்டே மருத்துவரைப் பார்த்தார் கேசவன்.

""என்னப்பா! உடம்புக்கு என்ன?''

என்றார் மருத்துவர். பலமுறை என்னவென்று மருத்துவர் கேட்டும்,  கேசவன் அழுதுக் கொண்டே இருந்தார்.

பின்னர் ஆசுவாசப்படுத்திக் கொண்ட கேசவன், "" ஒரு சந்தேகத்தைக் கேட்க 
வந்தேன்'' என்றார்.

""என்னப்பா கேளு...'' என்றார் மருத்துவர்.

""நோயாளிகளுக்குக் கொடுக்கிற மருந்து, மாத்திரைகள் எல்லாம் எப்படி தயாரிக்கிறாங்க..!'' என்றார் கேசவன்.

""பெரிய அறிவியல் அறிஞர்கள், விஞ்ஞானிகள் இரவு- பகலாகச் சிந்திச்சு, ஆராய்ச்சி செய்து, கண்டுபிடிக்கிறாங்க..! அப்புறம் எலி, முயல், புறா போன்ற சிற்றுயிர்களுக்கும், நாய், பன்றி, குரங்கு போன்ற உயிர்களுக்கும் கொடுக்கிறாங்க..! அப்புறமாகதான் மனிதர்களுக்கு தர்றாங்க..'' என்றார் மருத்துவர்.

""அது சரி.. டாக்டர்.. என் மனைவி டி.வி.யில வர்ற சமையல் நிகழ்ச்சியைப் பார்த்துட்டு, சமைச்சி எனக்குப் போட்டு டெஸ்ட் பண்றாங்க டாக்டர்.  என்னை சாப்பிடச் சொல்லிட்டு, கதவுச் சந்தில் பார்க்கிறா.. அதான் பயமா இருக்கு..'' என்றார் கேசவன்.

மருத்துவருக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் திருதிருவென முழித்தார்.

-டி.எம்.ரத்தினவேல்,
சத்தியமங்கலம். 

 

எஸ்எம்எஸ்


ஆசையும், எதிர்பார்ப்பும் பல சமயங்களில் 
ஏமாற்றத்தையும்,  சில சமயங்களில் 
அவமானத்தையும் தேடி தருகிறது.

- மீ.யூசுப் ஜாகிர்,
வந்தவாசி.

 

அப்படீங்களா!

தொடக்கக் காலத்தில் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்து லைக்ஸ் மட்டும் பெறுவதற்காக பயன்படுத்தப்பட்ட ஃபேஸ் புக்கில், பின்னர் விடியோக்கள், நேரலை, வர்த்தகம் எனப் பல சேவைகள் அறிமுகமாகின.

இதில் வியாபாரிகளையும், வாடிக்கையாளர்களையும் இணைக்கும் வகையில், நேரலை விற்பனை சேவையை ஃபேஸ் புக் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இதில் எந்த ஒரு வியாபாரியும் தனது கடையையோ, பொருளையை நேரலை மூலம் விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்கலாம். அந்த பொருள்கள் குறித்த விவரங்களை டேக் செய்யும் வசதியும் அளிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்தச் சேவையை ஃபேஸ்புக் நிறுவனம் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நிறுத்துகிறது. ஃபேஸ்புக் நேரலையை வியாபாரிகள் தொடரலாம் என்றாலும் அதில் முன்பைப்போல் டேக் செய்து முடியாது. 

இதற்கு பதிலாக ஃபேஸ்புக் ரீல் என்ற சிறு விடியோக்களை பிரபலப்படுத்துவதில் கவனம் செலுத்த உள்ளது. பெரிய விடியோக்கள் காண வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்பதால் ரீல்ஸ் விளம்பரங்களை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் மேம்படுத்தப்படுகிறது என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

-அ.சர்ப்ராஸ்

ADVERTISEMENT
ADVERTISEMENT