தினமணி கதிர்

வெல்வது யுக்தியே!

DIN

சதுரங்க விளையாட்டில் பெரிதும் நாட்டம் கொண்ட ஒரு மன்னன் இருந்தார். அந்த மன்னனுடன் சதுரங்கம் ஆடிய பல ராஜ்ஜியத்து மன்னர்கள், திறமையான பல விளையாட்டு வீரர்கள் தோற்றுப் போயினர். இந்தச் சூழ்நிலையில் மன்னனுக்கு நம்மை ஜெயிக்க யாருமில்லை என்ற மமதையும் வந்துவிட்டது. ஒரு போட்டியை அறிவிக்கச் செய்தார். "இந்தத் தேசத்திலோ அல்லது வெளி தேசத்திலிருந்தோ யார் வேண்டுமானாலும் மன்னனை சதுரங்கப் போட்டியில் எதிர்கொள்ளலாம். ஜெயித்தால் ராஜியத்தில் பாதி, தோற்றால் ஆயுள்கால சிறைவாசம்' என்றார்.
 அப்போது பல நாட்டு மன்னர்கள் பாதி ராஜியத்துக்கு ஆசைப்பட்டு விளையாட வந்து சிறைக்குச் சென்றனர். இந்தச் சமயத்தில் வெளிதேசத்தில் இருந்து ஒரு பிச்சைக்காரர் வந்தார். அவர் அரண்மனைக்குள் வருவதைப் பார்த்த காவலாளிகள் அடித்து வெளியே துரத்த முயன்றனர். அப்போது பிச்சைக்காரர், "என்னைத் துரத்தாதீர்கள், மன்னனுடன் சதுரங்கம் ஆட வந்திருக்கிறேன்' என்றார்.
 காவலாளிகள் இந்த விஷயத்தை மன்னரிடம் கூறினர். அழைத்துவரச் சொன்னார் மன்னர். அவனைப் பார்த்து சிரித்த மன்னர், "நீ என்னிடம் சதுரங்கம் விளையாட வந்தாயா, உனக்கு அந்தத் தகுதியும் திறமையும் இருக்கிறதா?'' என்று ஏளனமாக கேட்டார்.
 உடனே பிச்சைக்காரர், ""போட்டிக்குத் தேவை திறமைதான் தகுதியில்லை. ஆகவே நான் உங்களிடம் போட்டியிடத் தயார். என்னுடன் விளையாட தாங்கள் தயாரா ?'' என்றார்.
 மன்னனுக்கு ஒன்றுமே புரியவில்லை, இவன் ஒரு பிச்சைக்காரர். இவனுடன் விளையாடுவதா என்ற எண்ணமும், நாம் விளையாடவில்லை என்று சொன்னால் பிச்சைக்காரர் வெளியே சென்று, "மன்னனைப் போட்டிக்கு அழைத்தேன். அவர் என்னிடம் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் மறுத்துவிட்டார் என்றும் சொன்னால் மக்களும் பிற தேசத்து ராஜியத்தாரும் நம்மை இழிவாக பேசிவிடுவார்களோ?'' என்று குழம்பினார்.
 இதனால் மன்னர் போட்டிக்கு சம்மதித்தார். விளையாடிக் கொண்டிருக்கும்போது பிச்சைக்காரர், "அரசரே! நீங்கள் பார்த்து நிதானமாக விளையாடுங்கள். நான் நிச்சயம் ஜெயிப்பேன். நீங்கள் தோற்றால் மக்களும் மற்ற ராஜியக்காரர்களும் பிச்சைக்காரனிடம் தோற்றார் மன்னர்'' என்று ஏளனமாகப் பேசுவார்கள் என்றான்.
 இதைக் கேட்ட மன்னருக்குத் தலை சுற்றுவது போல் ஆயிற்று. நன்கு விளையாடிக்கொண்டிருந்த மன்னருக்கு இந்தப் பிச்சைக்காரனின் வார்த்தைகளால் நாம் தோற்றுவிடக்கூடாது என்ற எண்ணமே மனதுக்குள் அதிகமாக ஓடியது. அதனால் அவரது கவனம் சிதறியது. காய்களை நகர்த்துவதில் தடுமாறினான். இறுதியில் தோற்றுப் போனார்.
 அரசர் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு தலைகுனிந்து நின்றார்.
 "மன்னரே! நான் விந்திய தேசத்து மன்னர். பிச்சைக்காரர் அல்ல. உங்களிடம் தோற்றுப்போய் சிறையில் இருக்கும் மன்னர்கள் சிலர் என் நண்பர்கள். இதை கேள்விப்பட்டு இங்கு வந்தேன். நான் மன்னனாக வந்திருந்தால் உங்களை ஜெயித்திருப்பது சற்று கடினமாக இருந்திருக்கும். ஆனால் பிச்சைக்காரராக வந்து உங்கள் தன்னம்பிக்கையை இழக்க வைத்தேன். எதிரியை பலவீனம் ஆக்குவது ஒரு போர் உத்தி. அதனால் நான் ஜெயித்தேன். நீங்கள் தோற்றீர்கள்''.
 இதையடுத்து சதுரங்கத்தில் தோற்றுப்போய் சிறையில் இருக்கும் அனைவரையும் விடுதலை செய்தார். மன்னனின் மமதையும் அழிந்தது.
 -செ. விமலாதேவி
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தோ்தல் பணி: சுகாதாரப் பணியாளா்களுக்கு மதிப்பூதியம் தேவை’

சட்டவிரோதமாக மது விற்பனை: ஒருவா் கைது

வாக்கு பதிவாகியிருந்ததால் தொழிலாளி ஏமாற்றம்

3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: விஜய்வசந்த் எம்.பி.

39 வாக்கு எண்ணும் மையங்களில் நான்கடுக்கு பாதுகாப்பு

SCROLL FOR NEXT