தினமணி கதிர்

தொலைத்தவன்

7th Aug 2022 05:28 PM |  பா. வெங்கடேஷ்

ADVERTISEMENT

 அவசரமா ஒரு கால் பண்ணனும். செல்போன் இருந்தா தர்றீங்களா'' என்று வேணு அருகே வந்த தினேஷ், படபடப்புடன் கேட்டான்.
 பீடியை ஒரு இழுப்பு இழுத்தபடி திரும்பினான் வேணு. பரபரப்பான அந்த மார்கெட்டில் உலாவும் இத்தனை பேரை விட்டுவிட்டு தன்னிடம் வந்து நின்றவனை சந்தேகத்துடன் பார்த்தபடி சிறிய பட்டன் போனை நீட்டிய வேணு, "எட்டாம் நம்பர் சரியா வேலை செய்யாது'' என்றான்.
 "இந்த மாடல்தான் பெஸ்ட். தொலைஞ்சா நஷ்டம் இல்லை. முப்பதாயிரத்துல லேட்டஸ்ட் ஒன் ப்ளஸ் போன். ப்ளூ கலர். காலையிலதான் வாங்கினேன். சிம்கார்ட் போட்டதோட சரி. இதுவரைக்கும் ஒரு கால் கூட பண்ணலை. அதுக்குள்ள காணாம போச்சு..'' என புலம்பியபடி தன் செல்நம்பரை ஒற்றி காதில் வைத்தான் தினேஷ்.
 "சே... ரிங் போகுது.. எங்கே இருக்கோ தெரியலையே!'' என ஆத்திரத்துடன் தலையில் அடித்துக்கொண்டு, வேணுவின் செல்போனை திரும்பக் கொடுத்தான்.
 பீடியை, தூர எறிந்த வேணு, ""சார், டென்சன் ஆவாதிங்க. பொறுமையா யோசிங்க! கை மறதியா எங்கெனா வுட்டுட்டு வந்திருக்கப் போறிங்க?'' என்று தினேஷின் முகத்தில் புகையை ஊதி விட்டு ஆறுதல் சொன்னான்.
 "பஸ் ஸ்டாண்ட்லேர்ந்து மார்கெட் வரைக்கும், வெயில்ல, பைத்தியம் மாதிரி ரெண்டு தடவை சுத்தி வந்திட்டேன். அகப்படலையே..!'' என விரல்களில் நெற்றி வியர்வையை வழித்து கீழே சிந்தி சலித்தான் தினேஷ்.
 ""செல்போன்.. அதுவும் புதுசு.. கிடைச்சா எவனாவது விடுவானா சார்.'' என்று அப்படியும் பேசிவிட்டு வேணு தன் மீன்பாடி வண்டியில் சுருண்டு படுத்தான்.
 அங்கிருந்து நகர்ந்த தினேஷ் எதிரே இருந்த லோடு வேனின் நிழலின் அடுத்து என்ன செய்வது என்று குழம்பி நின்றான். மொபைல் கடையில் கொடுத்த அட்டைப் பையை ஆறாவது முறையாக துழாவினான். செல்போன் பெட்டி, சார்ஜர், குப்பையாக சில பேப்பர்கள். கனவு போல இருந்தது அவனுக்கு.
 பஸ் ஸ்டாண்ட் அருகே கனிகா மொபைல்ஸ் கடையில் சற்று முன் வாங்கிய புத்தம்புது செல்போன் எங்கே மாயமாக மறைந்தது. கடை வாசலில் கையில் பார்த்தது நினைவு இருந்தது. அதன் பின்? நடந்த நிகழ்வுகள் பதற்றத்தில் தெளிவாக நினைவுக்கு வர மறுத்தன. அங்கு இயர்ஃபோன் விலை அதிகமாக இருக்க, அங்கிருந்து மார்க்கெட்டின் மத்தியிலிருந்த அசிம் பாய் மொபைல் கடைக்குத்தான் போனான் தினேஷ்.
 கடை வாசலில் நின்று செல்போனை எடுக்க தன் பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டவன் அதிர்ந்தான். அதன்பிறகு சட்டைப் பாக்கெட், கையிலிருந்த அட்டைப்பை எல்லாவற்றிலும் தேடி வியர்த்தான். தன்னைத் தானே உரக்க திட்டிக் கொண்டவன், கீழே பார்த்தபடி வந்த வழி வேகமாக நடந்தான். அப்போதிலிருந்து இதுவரை இரண்டு முறை அந்த ஒரு கிலோமீட்டர் தூரத்தை வலம் வந்து விட்டான்.
 தமிழகமெங்கும் வேகமாக கிளை பரப்பி வளர்ந்து வரும் பைனான்ஸ் கம்பெனி, பஸ் ஸ்டாண்ட் அருகே ஒரு புதிய கிளையை திறக்க அதில் தினேஷுக்கு வேலை. காலை ஒன்பது மணிக்கு உள்ளே போனால், ஓய்ந்து வெளியே வர இரவு பத்தாகிவிடும். இந்தச் சிக்கலுக்காகவே ஆன்லைனில் செல்போன் வாங்க முயற்சித்தான். டெலிவரி வட்டத்துக்குள் அவன் ஊர் இன்னும் வராத காரணத்தால், மேனேஜரிடம் கெஞ்சி ஒரு மணி நேரம் பெர்மிஷன் வாங்கி இன்று காலை கனிகா மொபைல் கடைக்கு வந்திருந்தான் தினேஷ்.
 வேலைக்குச் சேர்ந்து முதல் மாத சம்பளத்துக்குக் காத்திருந்து நண்பர்களுடன் பேசி, இன்டர்நெட்டில் ஆராய்ந்து, குழம்பி, முடிவெடுத்து, பழைய செல்போனை எக்ஸ்சேஞ்சில் கொடுத்து, சம்பளப் பணத்தில் கணிசமான தொகைப் போட்டு, மீதி பணத்துக்கு இ. எம். ஐ. என கடனில் ஆசையாக வாங்கிய செல்போன் தவறியது வெறுப்பென்றால், கம்பெனியில் இந்த சோகக் கதை பரவி அவனை ஏளனமாகப் பார்ப்பது இன்னும் எரிச்சலாகுமோ என்று யோசித்தபடி பஸ் ஸ்டாண்டுக்கு தளர்வுடன் நடந்தான் தினேஷ்.
 வழியில் அசிம் பாய் கடையைப் பார்த்தவுடன் யோசனையுடன்கடைக்குள் நுழைந்தான் தினேஷ்.
 ""கொஞ்ச நேரம் முன்னால உங்க கடைக்கு வந்தேன். என்னோட புது செல்போன் கைமறதியா வெச்சுட்டேனான்னு பாருங்க பாய்'' என்ற தினேஷின் பேச்சில் அவனுக்கே அவநம்பிக்கை தெரிந்தது.
 " இல்ல ஜி. கடை திறந்ததிலிருந்து இப்ப வந்த நீங்கதான் முதல் கஸ்டமர். காலையில உங்களை நான் பாக்கலையே. அது சரி எங்கே தவற விட்டிங்கன்னு யோசிங்க.. உங்க நம்பருக்கு கால் பண்ணிப் பாருங்க..'' என்று தினேஷின் வாடிய முகத்தைப் பார்த்த அசிம் பாய் வருத்தத்துடன் தன் செல்போனை நீட்டினான்.
 நடந்ததை சலிப்புடன் விவரித்த தினேஷ். "என் போனை கண்டுபிடிக்க ஏதாவது வழி இருக்கா? உதவி பண்ணுங்க பாய்!'' என பெருமூச்சு விட்டபடி சேரில் உட்கார்ந்தான் தினேஷ்.
 ""செல்போன்ல மொபைல் ட்ராக்கர் போட்டிருந்தா முயற்சி பண்ணலாம்.. போலிஸ்ல புகார் கொடுத்தும் கண்டுபிடிக்க வழி இருக்கு. இப்ப செல்போன்ல ஐ.எம்.இ.ஐ. நம்பரை கூட மாத்திடுறாங்க. எதுக்கும் நீங்க மொபைல் வாங்குன கடையில விசாரிங்களேன்'' என்று தலைகுனிந்து தன் வேலையை ஆரம்பிக்க, ஏமாற்றத்துடன் எழுந்து நகரந்தான் தினேஷ்.
 காலை பத்தரை மணிக்கு, கெருகாத்தூரிலிருந்து, பஸ் ஸ்டாண்டுக்கு வந்து நின்ற பஸ்ஸிலிருந்து இறங்கினார் காசிலிங்கம். வாரத்துக்கு ஒரு முறை காலையில், டவுனுக்கு வந்து மார்கெட்டில் காய்கறிகள், மளிகைச் சாமான்களை வாங்கிக்கொண்டு, மதியம் கெருகாத்தூருக்கு கிளம்பும் பஸ்ஸில், வீட்டுக்கு திரும்பி விடுவது அவர் வழக்கம்.
 பஸ் ஸ்டாண்ட் ஓரமாக அவசரத்துக்கு ஒதுங்கும் இடத்தில் வந்து நின்ற காசிலிங்கத்தின் கண்ணில் பட்டது அந்த ப்ளஸ் ஒன் போன். வெயிலில் பளபளத்தது. குனிந்து எடுத்தவர், சுற்றும் முற்றும் பார்த்தார். யாருமில்லை. பஸ் ஸ்டாண்டில் டைம் ஆபிûஸ நோக்கி நடந்தார். அங்கு இருக்கை காலியாக இருந்தது. திரும்ப வரும்போது கொடுத்து விடலாம் என்று பேண்ட் பாக்கெட்டில் வைத்தார். காசிலிங்கத்தின் சிறிய பட்டன் போனை விட அரை மடங்கு பெரிதாக இருந்தது கிடைத்த செல்போன்.
 வழக்கமாக மருந்து வாங்கும் முத்து மெடிக்கல் ஸ்டோரில் அந்த ஒன் ப்ளஸ் போனை எடுத்து மேசை மேல் வைத்தார் காசிலிங்கம். அவருக்கு இது போன்ற ஸ்மார்ட் போன்களில் அதிக பரிச்சயம் இல்லை.
 "இந்த போன் பஸ் ஸ்டாண்டுல அநாதையா கிடந்திச்சு. யாருதுன்னு தெரியல. ஏதாவது செல்நம்பர் இருக்கான்னு பாருங்க முத்து, கூப்பிட்டு கொடுத்திடலாம்'' என்று சொல்ல, "இது புதுசால்ல இருக்கு. பேட்டர்ன் லாக் இல்ல.. மிஸ்டு கால் ஒண்ணு இருக்கு'' என்று டயல் செய்தார் முத்து.
 மறுமுனையில் வேணுவின் செல் நம்பருக்கு சென்றது கால். குட்டித் தூக்கத்திலிருந்த வேணு பதிலளிக்கவில்லை. "தவற விட்டவங்க திரும்பக் கூப்பிட்டா, பச்சை பட்டன் மாதிரி இருக்குல்ல, இதை அழுத்திப் பேசுங்க! இது ரீ டயல்'' என்று விளக்கி கையில் கொடுத்த போனை மேசை மீது வைத்த காசிலிங்கம், " நேரமாயிட்டு.. முத்து.. டீ சாப்பிடலாம் வாங்க'' என்று கிளம்பினார்.
 நடந்ததைப் கவனித்த மருந்துக் கடைப்பையன் சிவா, காசிலிங்கத்தின் மறதியை வைத்து வேறு ஒரு கணக்கு போட்டான். மேஜை மீது பளபளத்த ப்ளஸ் ஒன் போனை ஆஃப் செய்து தன் பாக்கெட்டுக்குள் நுழைத்தான். காசிலிங்கம் டீக்கடையிலிருந்து அப்படியே விடைப்பெற்று கிளம்ப, முத்து திரும்பியவுடன் அவசரமாக வெளியே வந்தான் சிவா. மார்கெட்டில் மொபைல் கடைக்கு போனவன், " அண்ணே இதை எடுத்துகிட்டு அஞ்சாயிரம் கொடுங்கண்ணே, அவசரச் செலவு இருக்குது'' என்றான் அக்கம்பக்கம் பார்த்தபடி. கையால் கூட தொடாமல் அப்படியே வெறித்தபடி, ""டேய் இது ஒன் ப்ளஸ் போன். லேட்டஸ்ட் மாடல். முப்பதாயிரத்துக்கும் மேல இருக்குமே உனக்கு ஏது '' என்று சந்தேகமாகப் கேட்டார் பாய்.
 ""வீதியில கிடைச்சுது யாருதுன்னு தெரியல... அடகு நகையை மூட்டணும்.. பணம் தாங்கண்ணே'' என்று பொய்யை படபடப்புடன் சொன்னான் சிவா. " தொலைச்சவன் கில்லாடியா இருந்தா ஈசியா லொக்கேஷன் கண்டு பிடிச்சிடலாம். திருட்டு கேஸ் ஆச்சுன்னா. உனக்கு சங்குதான் தம்பி. அல்பமா ஆசைப்பட்டு, ரிஸ்க் எடுக்காதே.. கிளம்பு முதல்ல...
 "அநேகமா தொலைச்சவன் உன்னைத் தேடியும் வரலாம் பாத்துக்க..'' என பாய் மிரட்டும் குரலில் சொல்ல, வெளிறிய முகத்துடன் ஒன் ப்ளஸ் போனை எடுத்துக் கொண்டு மருந்து கடைக்கு கிளம்பினான் சிவா.சற்று முன் வந்து போன தினேஷின் சோகமான முகம் பாயின் நினைவுக்கு வந்து போனது. பாவம் இப்ப அவன் வந்திருக்க கூடாதா. சே..யாருனாவது விசாரிச்சு வெச்சிருக்கலாம். அவன் கொடுத்து வெச்சது அவ்வளவுதான் என்று வருத்தத்துடன் வெளியே வந்து தினேஷ் தென்படுகிறானா என்று பார்த்தபடி நின்றான்.
 பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்த தினேஷ் தலைவலியில் நெற்றியை தேய்த்தபடி எவன் அடிச்சிட்டுப் போனானோ தெரியலியே என்று புலம்பினான். யார் செல்போன் பேசினாலும் அது தன்னுடையதாக இருக்குமோ என்று சந்தேகத்துடன் எட்டிப்பார்த்தான்.
 அருகிலிருந்த கடை டெலிபோனில் தன் செல்நம்பரை முயற்சித்தான். இப்போது ஸ்விட்ச் ஆஃப். போச்சு... இனி கிடைக்க வாய்ப்பில்லை என்று நொந்தவனுக்கு, அடுத்த மாதம் முதல், தொலைந்த செல்போனுக்கு ஈ எம் ஐ வேறு கட்டி அழ வேண்டி வருமே என்று ஆத்திரமாக வந்தது.
 கனிகா மொபைல்ஸ் பில்லை எடுத்து தொடர்பு கொண்டான். அவர்களுக்கு ஆச்சரியமானது.
 "இப்பதானே சார் வாங்கிட்டு போனிங்க, அதுக்குள்ள எப்படி தொலைஞ்சது. நாங்க அப்பவே சொன்னோம் நீங்க ஏன் இன்சூரன்ஸ் எடுக்கலை, க்ளெயிமாவது கிடைச்சுருக்கும். பேட்டர்ன் லாக் போடலை. ரிஸ்க் தான் சார். நீங்க மொபைலை முடக்குறது எப்படின்னு கம்பெனிக்கு போன் பண்ணுங்க!'' என்று தொடர்பை துண்டித்தனர்.
 இன்னொருவரிடம் போன் பெற்று தன் நண்பன் ஜெகனுக்கு போன் போட்டு நடந்ததை புலம்பினான்.
 "என்னப் பண்ணலாம்னு தெரியலையேடா. உன் செல்போனை ட்ராக் பண்ண வழி இருக்குதான்னு பாக்குறேன். எடுத்தவன் சிம்கார்டை மாத்திட்டான்னா கஷ்டம்தான். எதுக்கும் சிம் கார்டை ப்ளாக் பண்ணிடு தினேஷ், வேலைக்கு லீவு போட்டுட்டு பஸ் ஸ்டாண்டுல இரு, நான் வர்றேன் எனக்கு தெரிஞ்ச ஏட்டு மூலமா போலீஸ்ல ஏதாவது மூவ் பண்ண முடியுமான்னு பாக்கலாம்'' என்று சொல்ல, கைக்குட்டையில் வியர்வையை ஒற்றிய தினேஷ், அடுத்துகம்பெனிக்கு மேனேஜருக்கு போன் செய்து நிலைமையைச் விளக்கி விடுப்பு சொன்னான், மறுமுனையில் அவர் ஏற்க மறுத்து வரச்சொல்ல, இரைச்சலாக இருப்பதாக கூறி "ஹலோ...ஹலோ...'' என்று கத்தி விட்டு, ரிசீவரை வைத்துவிட்டான். பஸ் ஸ்டாண்ட் டைம் ஆபிஸில் விசாரித்தான். அவர்களும் இல்லையென்று கை விரிக்க தளர்வுடன் நடந்து பெஞ்சில் அமர்ந்தான்.
 பார்மசிக்கு கனத்த பைகளுடன் திரும்ப வந்தார் காசிலிங்கம். அந்த புது செல்போனை மறந்துட்டு போயிட்டேன் என்று மூச்சிரைக்க சொல்ல, ""சார் வருவீங்கன்னு தெரியும் நான் எடுத்து வெச்சிருந்தேன்'' என்று மேசைக்கடியிலிருந்து ப்ளஸ் போனை அவசரமாக எடுத்து ஆன் செய்து கொடுத்தான் சிவா.
 பளபளத்த செல்போனை முன்னும் பின்னும் பார்த்த காசிலிங்கம், "இதை எந்தக் கடையில வாங்குனதுன்னு கண்டுபிடிக்க முடியுமா. தவற விட்டவன் ரொம்ப கஷ்டப்படுவானே. நான் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில கனிகா மொபைல் கடையில விசாரிச்சு பாக்கிறேன்'' என்று ஓனர் முத்துவிடம் ஆதங்கத்துடன் பேசினார் காசிலிங்கம்.
 "ஏன் சார் உங்களுக்கு வேண்டாத வேலை. போலீஸ் ஸ்டேஷன்ல விவரத்தை சொல்லி கொடுத்திட்டு ஊருக்கு பஸ் ஏறுங்க!'' என்ற முத்துவின் பதிலைக் கேட்டு வாட்சைப் பார்த்தார் காசிலிங்கம்.
 அதே நேரம், சோம்பல் முறித்து மீன்பாடி வண்டியிலிருந்து இறங்கி பீடியை பற்ற வைத்த வேணு செல்போனில் மிஸ்டு காலை பார்த்தவுடன் தூக்கத்துக்கு முன்பான சம்பவங்கள் நினைவுக்கு வர பளீரென்று அந்த யோசனை பிடித்தான். தினேஷின் செல்நம்பரை மறுமுறை டயல் செய்தான். பச்சை குறியீட்டை உடனே அழுத்தி, "ஹலோ'' என்றார் காசிலிங்கம். குரலில் படபடப்பை கூட்டி பேச ஆரம்பித்தான் வேணு.
 ""சார், என்னோட செல்போனை தொலைச்சிட்டேன். புதுசு சார். புளூகலர். இன்னிக்கு காலையிலதான் வாங்கினேன். எனக்கு இது பெரிய பணம் சார். கடன்ல வேற வாங்கியிருக்கேன். தயவு செஞ்சு கொடுத்திடுங்க சார்'' என்று முடிந்த அளவுக்கு வழக்கமான தொனியை மாற்றி உருக்கமாக பேசினான்.
 மெல்ல சிரித்தபடி சிவாவிடம் திரும்பிய காசிலிங்கம் , " செல்போன் ஓனர் பேசுறாருப்பா'' என்றபடி, " இத பாருங்க நான் பஸ் ஸ்டாண்ட் வந்து போன் பண்றேன். எனக்கு ஒரு மணிக்கு பஸ். கால் மணி நேரத்தில வந்திருங்க என்னால காத்திருக்க முடியாது'' என்று சொல்லி முடிக்க, " எனக்கு தெய்வம் சார் நீங்க. வந்துட்டு இந்த நம்பருக்கு கூப்பிடுங்க சார். நான் செல்போனை வாங்கிக்கிறேன்'' என்ற பவ்யமாக பேசி முடித்த வேணு ஓசியில் தேடி வந்த அதிர்ஷ்டத்தை மனதுக்குள் கொண்டாடினான்.
 கால் மணி நேரத்தில் காசிலிங்கத்தை பிடிக்க, பஸ் ஸ்டாண்டில் பரபரப்புடன் ஓடிய வேணு எதிர்பட்டவனுடன் மோதி எழ, பாக்கெட்டிலிருந்த அவன் செல்போன் எகிறி விழுந்தது. அலை பாய்ந்த அவன் கவனத்தில் அது எட்டவேயில்லை. கூட்டத்தில் கலந்தான் வேணு.
 கைக்குட்டையில் வியர்வையை துடைத்தபடி காசிலிங்கம், ஒன் ப்ளஸ் போனை எடுத்து நம்பரை அழுத்தினார்.
 அடுத்த சில நொடிகளில்.... தன் காலடியில் கர்ண கொடூரமாக ரிங்டோன் கவனத்தை கலைக்க, குனிந்து செல்போனை எடுத்த தினேஷ் டிஸ்ப்ளேயில் தன் நம்பரை பார்த்து நம்பமுடியாமல், ஆச்சரியத்தில் கூச்சலிட்டான். உடனே பச்சை பட்டனை அழுத்தினான். தினேஷை பேசவிடாமல் அவசரமாக ஆரம்பித்தார் காசிலிங்கம்.
 ""சார் பஸ் ஸ்டாண்டு பெஞ்சில உட்கார்ந்திருக்கேன். செல்போனை தொலைச்சவரு தான நீங்க. சீக்கிரம் வாங்க. நான் நீலச்சட்டை போட்டிருக்கேன்'' என்று கையை உயர்த்த, திரும்பிய தினேஷின் கண்ணில் பளபளத்தது அவனது புத்தம் புதிய ப்ளஸ் போன். சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தான்.
 " தெய்வமே... இதோ உங்க கிட்டதான் சார் இருக்கேன்'' என்று நொடிகளில் ஓடினான்.
 அடுத்த சில நிமிடங்களில் சட்டைப் பாக்கெட்டை துழாவிய வேணு அதிர்ந்தான். கூட்டத்தில் இடிபட்டு அங்கும் இங்கும் என கீழே பார்த்தபடி பரபரப்பாக நடந்தவன், பஸ்சை நோக்கி நகர்ந்த காசிலிங்கத்தை நிறுத்தி படபடப்புடன் கேட்டான். ""சார், அவசரமா ஒரு கால் பண்ணனும் செல்போன் இருந்தா தர்றீங்களா!''
 

ADVERTISEMENT
ADVERTISEMENT