தினமணி கதிர்

எதிர்பாராதது...!

7th Aug 2022 05:33 PM

ADVERTISEMENT

 1984-ஆம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்வு. மதுரை என்.சி.சி. அலுவலகத்தில் உயர்நிலை எழுத்தராக அரசுப் பணியில் இருந்தேன். எங்கள் படைப்பிரிவில் மதுரை கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்த பா.சடகோபன் அலுவலராகப் பணிபுரிந்தார். அவரது கல்லூரி அலுவலகத்தைச் சிறப்பாக அமைத்து கொடுத்து உதவியதில், எனக்கு மிகவும் நல்ல நண்பராக விளங்கினார்.
 ஒரு மாலைப் பொழுதில், அழைப்பின்பேரில் விருந்துக்காக அவரது வீட்டுக்குச் சென்றிருந்தேன்.
 வீட்டின் முன் அறையில் சாய்வு நாற்காலியில் அவரது தந்தை ஆர்.பாஷ்யம் ஓய்வாகச் சாய்ந்து கொண்டு புத்தகம் படித்துகொண்டிருந்தார். அவரை வணங்கி மரியாதை செலுத்திவிட்டு, சடகோபனையும், அவரது மனைவியும் சந்தித்து அளவளாவிக் கொண்டிருந்தேன்.
 "உங்கள் தந்தை இந்த வயதிலும் நிறைய படிப்பாரோ? அருகில் பல புத்தகங்களும், வார இதழ்களும் சிதறிக் கிடக்கின்றனவே?'' என்று கேட்டேன்.
 உடனே சடகோபன், " உங்களுக்கு சர்ப்ரைஸ். நீங்கள் யாருக்கு முன்னால் நிற்கிறீர்கள் என்று தெரிந்தால் மிகவும் ஆச்சரியப்படுவீர்கள். எனது தந்தைதான் "சாண்டில்யன்' என்ற புனைப் பெயரில் "யவன
 ராணி', "கடல்புறா' போன்ற சரித்திர நாவல்களை எழுதியவர். அவர் முன்புதான் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள்'' என்றார்.
 நான் மிகவும் அகமகிழ்ந்து அவரை வணங்கினேன். எனது வியப்புக்கு அளவே இல்லை. சிறந்த பிரபல எழுத்தாளரை குடும்ப நண்பராகச் சந்தித்ததில், பெரு மகிழ்ச்சி அடைந்தேன். நன்கு பேசி விடைபெற்றேன்.
 இதன்பின்னர், சாண்டில்யன் 1987-இல் மறைவு அடைந்தது எண்ணி மிகவும் வருந்தினேன்.
-கே.சுப்பராஜன்

ADVERTISEMENT
ADVERTISEMENT