தினமணி கதிர்

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 85

24th Apr 2022 06:00 AM | கி. வைத்தியநாதன்

ADVERTISEMENT


கேரள முதல்வர் கருணாகரனும், துணைநிலை ஆளுநர் வைக்கம் புருஷோத்தமனும் தனிப்பட்ட முறையில் ஏதோ கலந்தாலோசிக்க இன்னொரு அறைக்குச் சென்றனர். நானும் ஜி.கே. மூப்பனாரும் தனித்து விடப்பட்டோம்.

இரண்டு பிரதமர்களைத் தேர்ந்தெடுத்தவர் காமராஜர் என்றால், பல மாநில முதல்வர்களைத் தேர்ந்தெடுத்த பெருமைக்குரியவர் ஜி.கே. மூப்பனார். ரப்பர் செருப்பு, கதர் வேட்டி, அரைக்கை சட்டையில் ஜி.கே. மூப்பனார் ஒரு மாநிலத் தலைநகரில் வந்து இறங்குகிறார் என்றால், அந்த மாநிலத்தின் உள்கட்சிப் பிரச்னையானாலும், அமைச்சரவை மாற்றமானாலும், முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவதாக இருந்தாலும், சிக்கலே இல்லாமல் சுலபமாக நடைபெறும் என்பது அன்றைய காங்கிரஸ் கட்சியில் எழுதப்படாத எதிர்பார்ப்பு.

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, பி.வி. நரசிம்ம ராவ் என்று மூன்று பிரதமர்களின் மரியாதையையும், நம்பிக்கையையும் மூப்பனார் பெற்றிருந்ததுபோல வேறு எவரும் பெற்றதில்லை. ராஜீவ் காந்தி, பி.வி. நரசிம்ம ராவ் ஆகிய இருவரும் பிரதமர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மூப்பனாரும் ஒரு முக்கியமான காரணம் என்பதை ஏற்கெனவே நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஜி.கே. மூப்பனார் அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை. அவரிடம் தனிப்பட்ட முறையில் கேட்க வேண்டும் என்று நினைத்த கேள்வியைக் கேட்பதற்கு அப்போது எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. கேட்டு விட்டேன்.

ADVERTISEMENT

""இந்திரா அம்மையாருடன் நெருக்கமாக இருந்தீர்கள். ராஜீவ் காந்தி, நரசிம்மராவ் பிரதமராவதிலும் உங்களுக்குப் பங்குண்டு. அவர்களிடமும் நெருக்கமாக இருந்திருக்கிறீர்கள். உங்களுக்கு அமைச்சராக வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டதே இல்லையா? இல்லை, அவர்கள் உங்களை அமைச்சராக்க விரும்பவில்லையா?''

மூப்பனாரைப்போல ஒரு ரசிகரைப் பார்க்க முடியாது. சில விமர்சனங்களைக்கூட அவரால் மட்டும்தான் ரசித்துச் சிரிக்க முடியும். பலரும் அவர் ரொம்பவும் அமைதியான, சீரியசான மனிதர் என்று நினைக்கிறார்கள். ஆனால், அவரைப்போல சிரித்துப் பேசி கலகலப்பாக இருப்பவர்கள் கிடையாது எனலாம். பேட்டிகளில்தான் அவர் மெளனமாகிவிடுவார்.

""மந்திரியாகி என்ன பெரிதாகச் செய்துவிடப் போகிறேன். அதைவிட கட்சி வேலையில்தான் எனக்கு இஷ்டம். காங்கிரஸ் கட்சி நல்லா இருந்தா தேசம் நல்லா இருக்கும். அவ்வளவுதான் என்னோட அபிப்பிராயம்.''

மூப்பனார் ஏதோ சம்பிரதாயத்துக்காகவோ, பதில் சொல்வதற்காகவோ அப்படிச் சொன்னதாக நான் நினைக்கவில்லை. அவரது வார்த்தைகளில் நிஜம் இருந்தது. அவருக்கு சங்கீதம் பிடிக்கும். அதேபோல அரசியலும் பிடிக்கும். எவ்வளவு கடினமான சூழலிலும் கொஞ்சம்கூட சமநிலை இழக்காமல் செயல்பட அவரால் முடிந்ததற்கு அதுதான் காரணம் என்று நான் நினைத்துக் கொள்வதுண்டு. தனிப்பட்ட முறையில் அவர் தெரிவித்த இன்னொரு கருத்தைக் கேட்டு நான் திடுக்கிட்டேன். அப்போது அதை என்னால் எழுதவோ, வெளியே சொல்லவோ முடியவில்லை. 

இப்போது நினைத்தால் வியப்பாக இருக்கிறது.

""ஆளுநரோட அந்த அம்மா சண்டை போடறதைப் பெரிசா எடுத்துக்கிறீங்க.. எழுதறீங்க. எனக்கென்னவோ அதெல்லாம் மக்களை திசை திருப்பவும், மக்களோட கவனம் எதிர்க்கட்சிகள் மீது திரும்பாம இருக்கவும் அந்த அம்மா நடத்தும் நாடகம்னுதான் நினைக்கிறேன்...''

""என்ன நீங்கள் அதை வெறும் நாடகம் என்று சொல்லிவிட்டீர்கள்? முதல்வருக்கு அப்படி நாடகமாட வேண்டிய அவசியம் என்ன இருக்கு?''

""ஏன் இல்லை? மதிமுக பிளவால், திமுக = மதிமுக என்று மாற்று அரசியலாக உருவாகிவிடக் கூடாதுன்னு அந்த அம்மா நினைக்காதா? அவங்க ஆட்சி மேலே பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுகின்றன. அவையெல்லாம் மக்களின் கவனத்தை ஈர்த்து விடாமல் பார்த்துக்க வேண்டாமா? நான் சொன்னா உங்களை மாதிரியே சோவும் சிரிக்கிறார். ஆனால் அதுதான் நிஜம்.''
மூப்பனாரின் கணிப்பு என்னை ஆச்சரியப்படுத்தியது. அவரே தொடர்ந்தார்:

""உண்மையிலேயே அந்த அம்மாவுக்கு ஆளுநர் மேலேயும், மத்திய அரசின் மேலேயும் கோபம் இருந்தா, எங்க ஆட்சிக்குத் தர்ற ஆதரவை விலக்கிக் கொள்வதுதானே? ஏன் பார்லிமெண்ட்ல எங்க ஆட்சியை அதிமுக ஆதரிக்கணும்?''

அவரது கருத்தில் நியாயம் இருப்பது எனக்குப் புரிந்தது. மத்திய அரசை ஒரு புறம் ஆதரித்துக் கொண்டு, இங்கே ஆளுநரை எதிர்ப்பதன் மூலம் முதல்வர் ஜெயலலிதா அரசியல் செய்கிறார் என்கிற உண்மையை நான் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. அப்போது எனக்கு இன்னொன்றும் புரிந்தது.

பிரதமர் பி.வி. நரசிம்ம ராவும் ஒரு அரசியல் நாடகம் நடத்திக் கொண்டிருந்தார் என்பதுதான் அது. முதல்வர் ஜெயலலிதாவைப் போலவே "ஈகோ' பார்க்கும் மாரி சென்னா ரெட்டியைத் தமிழக ஆளுநராக நியமிப்பதன் மூலம், மோதலைத் திட்டமிட்டு ஏற்படுத்தி இருந்தார் நரசிம்ம ராவ் என்று நினைக்கத் தோன்றுகிறது. முதல்வருக்கு எரிச்சல் ஏற்படுத்தி, ஆளுநர் சென்னா ரெட்டி, டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி ஆகிய இருவர் மூலமும் அவரது நிம்மதியைக் குலைப்பது என்பது பிரதமரின் நோக்கமாக இருக்க வேண்டும். தன்னை சார்த்திருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை அதன் மூலம் முதல்வருக்கு ஏற்படுத்தி இருந்தார் பிரதமர்.

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, முதல்வர் கருணாகரனும், துணைநிலை ஆளுநர் வைக்கம் புருஷோத்தமனும் வந்தனர். மூப்பனாரும், கருணாகரனும் கிளம்பினார்கள்.

""லீடர் இன்னும் அதிக நாள்கள் கேரள முதல்வராகத் தாக்குப்பிடிக்க மாட்டார். அவருக்கு எதிர்ப்புகள் வலுக்கின்றன. பிரதமரேகூடக் கருணாகரனைப் பதவியிலிருந்து அகற்றக்கூடும்'' என்று வைக்கம் புருஷோத்தமன் தெரிவித்ததும் நான் திகைத்துப் போனேன். அந்தோணி அணியைச் சேர்ந்தவர் என்பதால் அப்படிச் சொல்கிறார் என்று எனக்குத் தோன்றியது. நான் எதுவும் பேசவில்லை. அவரே தொடர்ந்தார் = 

""சுப்பிரமணியம் சுவாமியைப் பற்றி கருணாகரன் உங்களிடம் சொன்னாரே அது, சுவாமிக்கு மட்டுமல்ல, பிரதமர் பி.வி. நரசிம்ம ராவுக்கும் பொருந்தும். 

இந்திரா காந்தி அமைச்சரவையில் இரண்டாம் இடத்தில் இருந்த பிரணாப் முகர்ஜியை இப்போது தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டு, முக்கிய பொறுப்புக் கொடுத்து ஓரங்கட்டிவிட்டார். மூப்பனாரை எம்.பி. ஆக்காமல் இருக்கிறார். விரைவிலேயே கருணாகரனை முதல்வர் பதவியிலிருந்து அகற்றி விடுவார்.''

வைக்கம் புருஷோத்தமன் சொன்னதுபோல உடனே அது  நடக்கவில்லை. அதற்கு மேலும் ஒன்றரை ஆண்டுகள் தேவைப்பட்டன. ஆனாலும், அவர் சொன்னது என்னவோ நடந்தது.

அந்த சந்திப்புக்குப் பிறகு அடுத்த மூன்று மாதங்கள் நான் பத்திரிகைப் பணிகளில் மும்முரமாக இருந்துவிட்டேன். ஓமந்தூர் தோட்டத்தில் இருந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியில் அரசியலுக்கு அப்பாற்றப்பட்ட நண்பர்களாகத் தொடரும் சிலரை சந்திப்பது அல்லாமல், அதிகம் தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை. 

அதிகரித்து வந்த ஆளுநர் = முதல்வர் மோதலை அருகிலிருந்து பார்ப்பதைவிட எட்ட இருந்து ரசிப்பது சுவாரஸ்யமாக இருந்தது என்றும் வைத்துக்கொள்ளலாம். இதற்கிடையில் கேரள அரசியல் சற்று சூடு பிடித்ததும், தேர்தல் நெருங்குவதால் கர்நாடக அரசியல் பரபரப்பானதும் என்னை பெங்களூரு, திருவனந்தபுரம் என்று அலைக்கழித்துக் கொண்டிருந்தன. 

திருவனந்தபுரம் சென்றிருந்தபோது, ஆர்.கே. தவாண் வந்திருப்பதாகவும், அவர் ஆளுநரின் விருந்தினராக ராஜ்நிவாஸில் (ஆளுநர் மாளிகை) தங்கியிருப்பதாகவும் சொன்னார்கள். தொடர்பு கொண்டபோது உடனே கிளம்பி வரச் சொன்னார். சூரஜ்குண்ட் காங்கிரஸ் மாநாட்டிற்குப் பிறகு அவரை நான் சந்திக்கவில்லை.

அப்போது கேரள ஆளுநராக இருந்த பி. ராச்சையாவும், ஆர்.கே. தவாணும் நெருங்கிய நண்பர்கள். ராச்சையா, இந்திரா காந்தி கால அரசியல் தலைவர். காங்கிரஸில் பாபு ஜெகஜீவன் ராமுக்கு அடுத்த நிலையில் இருந்த பட்டியலினத் தலைவர்களில் முக்கியமானவர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ராச்சையா, நிஜலிங்கப்பாவில் தொடங்கி, எஸ்.ஆர். பொம்மை வரை ஏறத்தாழ ஆறு முதல்வர்களின் அமைச்சரவைகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்.

நான் போனபோது என்னை வரவேற்பறையில் அமர வைத்துவிட்டு, ஏ.டி.சி. ஆர்.கே. தவாணுக்குத் தகவல் சொல்லி அனுப்பினார். அந்த நேரத்தில், ஆர்.கே. தவாணும் ஆளுநரும் ராஜ்நிவாஸ் புல் தரையில் நாற்காலியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர் போலும். என்னை அங்கே அழைத்துவரச் சொல்லிவிட்டார்கள். 

அதற்கு முன்பு ஆளுநர் ராச்சையாவை நாடாளுமன்ற சென்ட்ரல் ஹாலிலும், அக்பர் சாலை காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திலும் பார்த்திருக்கிறேன் என்றாலும் அவருடன் எனக்கு அறிமுகம் கிடையாது. தலைவர்கள் எளிமையாக இருந்து பார்த்திருக்கிறேன். ஆனால், ஆளுநர் ராச்சையா எளிமையிலும் எளிமை.

ஆர்.கே. தவாணைச் சந்திக்க வந்திருப்பவர் என்பது தவிர என்னைப் பற்றி அவருக்கு வேறு எதுவும் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் ஆளுநர் ராச்சையா எழுந்து நின்று, கைகுலுக்கி வரவேற்று என்னை அமர வைத்தபோது நான் உருகித்தான் (குறுகித்தான்) போனேன் என்று சொல்ல வேண்டும். "பெருக்கத்து வேண்டும் பணிவு' என்பதன் உள்பொருளை உணர்ந்தேன். 

நான் எதிர்பார்த்தது போலவே, ஆர்.கே. தவாணின் முதல் கேள்வியே தமிழகத்தில் நடைபெறும் ஆளுநர் = முதல்வர் மோதல் குறித்துதான். இந்திரா காந்தியின் அறிவுறுத்தல் காரணமாக, ஜெயலலிதா மீது ஆர்.கே. தவாணுக்கு எப்போதுமே ஒரு அக்கறை உண்டு. ஜெயலலிதாவுடன் மோதுவது தனது நண்பரான டாக்டர் மாரி சென்னா ரெட்டி என்பதால் கூடுதல் அக்கறை இருந்ததோ என்னவோ...

""ஆளுநரின் பாதுகாப்பு குறைக்கப்பட்டிருக்கிறது. அவரை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்கக் கூடாது என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆளுநர் மாளிகைக்குப் போக மாட்டேன் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார். எல்லாமே வேடிக்கையாக இருக்கிறது.''

ஆர்.கே. தவாணின் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை. அமைதியாக இருந்தார். ஆர்.கே. தவாணால் அழைக்கப்பட்டிருக்கிறேன் என்பதால்தான் என்று நினைக்கிறேன், என்னைப் பத்திரிகையாளனாக நினைக்காமல் மனம் திறந்தார் ஆளுநர் ராச்சையா.

""ராஷ்டிரபதி பவனில் இரண்டு வாரங்களுக்கு முன்பு குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாஜியை சந்திக்க நான் சென்றிருந்தபோது, எனக்கு முன்பு அவரை சந்தித்துவிட்டு வந்து கொண்டிருந்தார் ஜெயலலிதாஜி. நாங்கள் சில நிமிடங்கள் நலம் விசாரித்துப் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவர் சொன்னது எனக்கே தர்மசங்கடமாக இருந்தது...''

""க்யா போல்தியா? (அவர் என்ன சொன்னார்?) என்று கேட்டார் தவாண்.''

""நான் மற்ற முதல்வர்களைப்போல 30%, 35% வாக்குகள் பெற்று ஆட்சி அமைக்கவில்லை. 60% வாக்குகள் பெற்று ஆட்சி அமைத்திருக்கிறேன். அதைப் புரிந்து கொள்ளாதவராக இருக்கிறார் எங்கள் ஆளுநர். நீங்கள் தமிழக ஆளுநராக வந்திருக்கலாம். இப்போதைய பிரச்னைகள் இருந்திருக்காது.''

சிரித்தார் ஆர்.கே. தவாண். நாங்கள் இருவரும் ஏதோ சொல்லப் போகிறார் என்கிற எதிர்பார்ப்புடன் அவரைப் பார்த்தோம்.

""ஜெயலலிதாஜி கோபப்படுவதற்குக் காரணம் இருக்கிறது. உண்மையில் ஜெயலலிதாஜி பயந்துதான் போயிருக்கிறார். ஆளுநர் சென்னா ரெட்டியும் நடராஜனும் சந்தித்ததுதான் அவரது ஆத்திரத்தை அதிகரித்திருக்கிறது.''

ஆர்.கே. தவாண் சொன்ன செய்தியைக் கேட்டபோது ஆளுநர் ராச்சையா அதிர்ந்தாரோ என்னவோ, நான் அதிர்ந்துதான் போனேன்.

(தொடரும்)

ADVERTISEMENT
ADVERTISEMENT