தினமணி கதிர்

புகைப்படம்

DIN

தெருவிற்கே கேட்பதுபோல் காலையில் மாமியார் கத்தியது இன்னமும் லட்சுமி காதில், நாராசமாக ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றது.
""எங்கப்பா போட்டோவதானே கொண்டாந்து வச்சிருக்கேன். அதுக்குப்போய் ஏன் அத்தை இப்படிக் கத்துறீங்க?'' என்று அப்போதே திருப்பிக்கேட்டிருக்க வேண்டுமென்றுதான் மருமகள் லட்சுமிக்குத் தோன்றுகிறது. தெரிந்தோ தெரியாமலோ, தானும் அந்தப் பிரச்னைக்கு ஒரு காரணமாகி விட்டதால், அப்போது எதுவும் பேச முடியாமல் அமைதியாகப் போக வேண்டிய சூழ்நிலையும் அவளுக்கு ஏற்பட்டுவிட்டது. அதற்காக இப்படியா பேசுவார்களென்று அவள் மனம் ஆறாமல் தவிக்கின்றது.
மணி பதினொன்றாகியும் காலை உணவை இன்னும் முடிக்கவில்லை. கோபத்தோடு பெட்ரூம் கதவை மூடிக்கொண்டு, கட்டில் மீது தலை சாய்த்து அழுத கண் வற்றாது, தன் தந்தையின் போட்டோவை மடியில் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கின்றாள் லட்சுமி. சென்ற வாரம் அப்பாவுக்கு முப்பது முடிந்து வீடு திரும்பும்போது அண்ணனிடம், ""அப்பா போட்டோ ஒண்ணு
இருந்தா குடுண்ணா... வீட்ல கொண்டு போய் வச்சிக்கிறேன், எப்பவும் அவர் எங்கூடவே இருக்கற மாதிரி எனக்கொரு தெம்பாயிருக்கும். அதுக்குத்தான்'' என்று சொல்லி கேட்டு வாங்கி வந்தாள். ஏதோ பொக்கிஷம் கிடைத்ததுபோல் அவளுக்கு ஒரு பூரிப்பு. போட்டோவை வைத்துதான் அவரை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று அவசியமில்லையென்றாலும், மனம் கஷ்டப்படும் நேரத்தில் அப்பா போட்டோவைப் பார்த்தால் ஆறுதலாக இருக்குமே என்றுதான் வாங்கிவந்தாள்.
கணவனுக்கு இந்த விஷயம் அன்றே தெரியும். அவளின் விருப்பத்திற்கு அவன் தடையேதும் சொல்லவில்லை. பொதுவாகவே எதற்கும் தடை சொல்வதில்லை என்பது வேறு விஷயம். இருந்தாலும், ""எங்கப்பா போட்டோவை.. பார்த்தீங்களா?'' என்று ஆசை ஆசையாகக் கொண்டு வந்து காண்பித்து, கண்கலங்கி நின்றிருந்திருக்கின்றாள்.
அவளுடைய துயரில் அவனும் பங்குகொண்டு, ""கவலைப்படாதே நான் இருக்கறேன்! ஒன்னை நல்லா பாத்துக்கறேன்' என்று ஆறுதலாக தட்டிக்கொடுத்திருக்கின்றான். அந்த அன்பின் அரவணைப்பில் கரைந்தவள், மாமியாரிடம் இதைப்பற்றி சொல்ல வேண்டுமென்ற எண்ணமே தோன்றாமல் போய் விட்டதே தவிர, சொல்லக் கூடாதென்றில்லை.
ஒருவேளை மாமியாரிடம் சொல்லியிருந்தால் கூட, லட்சுமி நினைத்தது நடந்திருக்குமோ என்னவோ தெரியவில்லை. அம்மா வீட்டிலிருந்து கொண்டு வருகின்ற பொருள்களுக்கெல்லாம் இங்கு தடையேதும் கிடையாது. வரவு மட்டுமே வைத்துக் கொள்ளப்படும். அப்படித்தான் இதற்கும் தடை சொல்லமாட்டார்கள் என்றெண்ணி மாமியாரிடம் சொல்ல மறந்து விட்டாள். அதுவும் வாங்கி வந்தவுடனேயும் வைத்து விடவில்லை. ஒரு வாரம் கழித்து, இன்றுதான் அந்த போட்டோவை வெளியே எடுத்து தனது முந்தானையால் துடைத்துப் பார்த்திருக்கின்றாள்.
குழந்தை போன்று, கபடமற்று சிரித்த முகத்தைப் பார்க்க பார்க்க, அழுகை பொங்கிக் கொண்டுதான் வந்தது. கண்களில் கண்ணீர் குளமாகி பார்வையை மறைக்கும் வரை துடைத்துக் கொண்டிருந்திருக்கின்றாள். அந்த "போட்டோ'வை எங்கு வைப்பதென்று, ஒவ்வோர் அறைக்கும் சென்று, இந்தப் பக்கம் வைக்கலாமா? அந்தப் பக்கம் வைக்கலாமா?யென்று பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றாள். இவள் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் மின்னல் வெட்டாய் போவதை, என்ன செய்கிறாளென்று மாமியார் சந்தேகத்தோடு பார்த்தாளே தவிர, எதுவும் அவளுக்கு விளங்கவில்லை.
முன்னறையில், மாமனார் போட்டோவிற்கு பக்கத்தில் வைத்துப் பார்த்தாள். இங்கு வைத்தால் மாமியார் எதாவது சொல்வார்களென்று, அப்போதே உள்ளுக்குள் "கெவிலி' கத்தியிருக்கின்றது. அந்த எண்ணத்தை உடனே மாற்றிக் கொண்டாள். தான் அதிகம் புழங்கும் சமையலறையில், தினசரி நாள்காட்டியின் பக்கத்தில், வடக்குப் பக்கம் பார்த்தவாறு வைத்துப் பார்த்தாள். பொருத்தமாக இருப்பதுபோல் தோன்றியதால், அங்கிருந்த ஓர் ஆணியில் போட்டோவிற்கு வலிக்காததுபோல் மெதுவாக பொருத்தி விட்டாள்.
அதற்காகவே ஆணியடித்து வைத்திருப்பதுபோல் பெருமையாகப் பார்த்து, சரியான இடத்தில்தான் வைத்திருக்கின்றோமென்று திருப்திப்பட்டுக் கொண்டாள். அப்பாவின் சிரிப்பிற்கு, பதில் சிரிப்பும் சிரித்து வைத்தாள். அந்த போட்டோவைப் பார்க்கப் பார்க்க, தைரியமும் தன்னம்பிக்கையும் இன்னும் கொஞ்சம் அதிகமானதுபோல் அவளுக்கொரு உணர்வு.
""இந்த வீட்ல எனக்கு தெரியாம எதுவும் நடக்க கூடாது? அப்படி ஏதாவது நடந்துச்சின்னு வச்சிக்குங்க... நான் மனுஷியாவேயிருக்கமாட்டேன்''
இது அவ்வப்பொழுது, லட்சுமி காதில்மட்டும் விழுவதுபோல் மாமியார் சாடையாக பேசும் மிரட்டல்மொழி. தனக்குத் தெரியாமல் இவர்களெதுவும் செய்துவிடக் கூடாதென்பதற்கும், இங்கு எல்லாமே நான்தான்! என்னையில்லாமல் ஒரு துரும்பு கூட ஆடவும் கூடாது அசையவும் கூடாதென்று உணர்த்துவதற்குத்தான் அப்படிச் சொல்லி வைத்தாள்.
அப்படிப்பட்டவளுக்கு இந்தப் போட்டோவை பார்த்ததும், காய்ந்த எண்ணெய்யைப் போல் கொதிக்க ஆரம்பித்துவிட்டாள்.
""ஏய் லட்சுமி... லட்சுமி...'' என்றதும் மாமியாருக்குத்தான் ஏதோ நடக்கக் கூடாதது நடந்துவிட்டது போல, அதற்குத்தான் இப்படி அலறுகின்றார்களென்று நினைத்து, ""என்னங்கத்த... என்னங்கத்த'' என்று பதறியடித்துக்கொண்டு, சமையலறைக்கு ஓடிவந்திருக்கின்றாள். வந்ததுக்கப்பறம்தான் தெரிந்தது சாதாரண மாமியார் அப்போது சந்திரமுகியாக மாறியிருந்தது.
""என்னாதிது? என்னாதிதுங்கறேன்ல்ல... யார் வீட்ல கொண்டாந்து யாரை வைக்கறது? அதெல்லாம் எங்க கொண்டு போய் வைக்கணுமோ அங்க கொண்டு போய் வை. எடு மொதல்ல... எடுங்கறேன்ல்ல'' இரண்டு கண்களையும் பெரியதாக்கி, முகத்தை இறுக்கிக்கொண்டு, மூக்கு புடைக்க அதட்டினாள்.
""அப்..பா... போட்டோ'' என்று முழுமையாகக்கூட சொல்லி முடிக்கவில்லை.
""ஒப்பன் போட்டோதான். யார் இல்லங்கறது. அதான் ஏன் இங்க கொண்டாந்து மாட்டி வச்சிருக்கன்னு கேக்கறேன்?''
மாமியாரின் கேள்வி, தொண்டையை நெரிப்பதுபோல் உணர்ந்தாள். பேச்சில் தன்னை மிஞ்சுவதற்கு ஆளில்லையென்கிற அகங்காரம். எல்லாம் தனக்குத் தெரியும் என்கிற ஆணவம். அது தலையின் உச்சிற்கு ஏறிவிட்டால் தலைகால் புரியாது, தன் நிலையறியாது.
""போற வர்றவங்க போட்டோவெல்லாம் கொண்டாந்து வைக்கறதுக்கு? இதென்ன சத்தரமா சாவடியா? ஊர் ஒலகத்துல இதுபோல அநியாயம் எங்கியாவது நடக்கும்மா? என்னதான் கேக்கறதுக்கு ஆளில்லன்னாலும், அதுக்குன்னு இப்படியா?'' என்று வாய்க்கு வந்தபடி பேசிய மாமியாரை நினைக்க நினைக்க லட்சுமிக்கு அழுகையும் ஆத்திரமும் பொங்கிக் கொண்டுதான் வந்தது.
""இங்கெல்லாம் வைக்காதம்மா? நமக்கு இதெல்லாம் பழக்கம் கெடையாது'' என்று நாகரீகமாக சொல்லியிருக்கலாம்.
அப்படிச்சொன்னால் அலட்சியமாக நினைத்துவிடுவாளென்றும், மறுபடியும் இதுபோல் எதுவும் செய்துவிடக் கூடாதென்றும் நினைத்துதான் கத்தியிருக்கின்றாள். அவள் நீட்டி முழக்கிய வார்த்தைகள் யாராக இருந்தாலும், அச்சப்படத்தான் வைக்கும். நடக்கவிருந்த ஒரு மாபெரும் தவறை, தனி ஓராளாக தடுத்து நிறுத்திவிட்ட
தற்பெருமையில், தலைகால் புரியாமல் குதித்திருக்கின்றாள் மாமியார் மங்கலம்.
ஒரு வாளித் தண்ணீரை உச்சந்தலையில் கொட்டியதுபோல், அப்படியே திணறிப்போயிருக்கின்றாள் மருமகள் லட்சுமி. மாமியாரிடமிருந்து இப்படி தடித்த வார்த்தைகள் வருமென்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. போட்டோவை வைப்பதா எடுப்பதா என்று புரியாமல் அப்படியே நின்றிருந்திருக்கின்றாள்.
இவள் பாவமாக நிற்பதைப்பார்த்து, "சரி போய்த்தொலை'யென்று சொல்லிவிட்டு போய்விடுவார்கள் என்றுதான் பொறுத்திருந்திருக்கின்றாள். அவள் நினைத்ததுபோல் எதுவும் நடக்கவில்லை. மாமியார் நடத்திய அதிரடி தாக்குதலில் எதிர்தாக்குதல் இல்லாது தலை தாழ்ந்துவிட்டது. தகப்பனை இழந்த லட்சுமிக்கு ஆதரவுகரம் நீட்டுவார்களென்று பார்த்தால், அடித்து விரட்டாத குறையாக இருக்கின்றதேயென்று மனம் நொந்து போனாள்.
அந்த நேரத்தில் கணவன்மட்டும் வீட்டில் இருந்திருந்தால் "தனக்காக பரிந்துபேசி எப்படியும் அந்த சூழ்நிலையிலிருந்து தன்னை மீட்டு வெளியே கொண்டு வந்திருப்பான்' என்று நினைத்துக்கொண்டாள். அதெப்படி அவர்களால் மட்டும், அப்படி பட்டென்று எடுத்தெறிந்து பேச முடிகிறது? இவர்களுக்கு ஒரு வேலை ஆகவேண்டுமென்றால், "அம்மா... லட்சுமி'யென்று நாக்கில் தேனை தடவிக் கொண்டு பேசுவார்கள். வேலை முடிந்ததும், வேதாளம் மறுபடியும் முருங்கைமரம் ஏறிவிடுகிறதே...
அடுத்தவர்களுக்கென்றால் ஆயிரம் யோசனை சொல்லும் நாம், நமக்கென்றால், அனைத்து யோசனைகளும் ஓரம்போய் கைகட்டி, வாய்பொத்தி நின்றுவிடும். அப்படித்தான் அவளும் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழித்து நின்றிருந்திருக்கின்றாள். அப்பாவிற்காக திட்டு வாங்கிக் கட்டிக் கொண்டதில் ஒன்றும் தப்பில்லை. ஆனால், நினைத்தது நடக்கவில்லையே என்கிற வருத்தம் அவளைக் குடைந்து கொண்டிருக்கின்றது. தன்னைப் பேசியிருந்தால் கூட தாங்கியிருப்பாள். "பெரிய பொக்கிஷம் இது! அதைக் கொண்டாந்து இங்க வச்சிட்டா?' என்று தன் தகப்பனை இழித்தும் பழித்தும் சொன்னதுதான் அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. கெளரவமாக வாழ்ந்தவருக்கு தன்னால் ஓர் இழுக்கு வந்துவிட்டதே, அதற்குத் தானும் ஒரு காரணமாகிவிட்டேனே என்று வருத்தப்பட்டாள் லட்சுமி.
மனம் ஆறாத மாமியார் மங்கலம், "எப்படி இங்கக் கொண்டாந்து வைக்கலாம்' என்று அந்தப் போட்டோவை அங்கிருந்து எடுத்துச்செல்லும் வரை, அதே கதையைத்தான் திரும்பத்திரும்ப பேசியிருக்கின்றாள்.
அம்மா பக்கத்திலிருந்திருந்தால் இன்னேரம் அழுது ஆர்ப்பரித்திருப்பாள். என்ன செய்வது "போன்' போட்டு அம்மாவிடமோ, இல்லை சகோதரிகளிடமோ, விஷயத்தைச் சொல்லி மனதை தேற்றிக் கொள்ளலாமென்று நினைத்து, கலைந்து போயிருந்த தலைமுடியை ஒன்றாக கோர்த்துப் பிடித்து, கொண்டைப் போட்டுக் கொண்டு, போனைக் கையில் எடுத்தாள். மாமியார் எங்கிருக்கின்றாளென்று தன் அறையிலிருந்து சாடையாக எட்டிப் பார்த்தாள்.
நடு வீட்டில் கொலு வைத்த பொம்மைபோல் அங்குமிங்கும் அசையாமல் காதை பெட்ரூம் பக்கமே வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கின்றாள். எலிக்காது. எப்படியும் ஒட்டுக் கேட்டு விடுவாள். கொஞ்ச நஞ்சம் விழுந்தாலே போதும், அடுத்தடுத்து என்னப் பேசியிருப்பாளென்று அவளே நிரப்பிக் கொள்வாள். வேறு எதாவது பேசியிருந்தால் கூட இப்போது நடந்து முடிந்த பிரச்னைக்கு தகுந்தாற்போல் அவர்களாக "இதுதான்...இப்படித்தான்' என்று தன்னுடைய கற்பனைக்கு உருவம் கொடுத்து அதற்கு தீனியும் போட்டு விடுவாள்.
"உடனே அம்மாவுக்கு போன் போட்டு சொல்லியாச்சா? இதான் ஒரு குடும்ப பொம்பள செய்யற விஷயமா? நாங்கெல்லாம் அந்த காலத்துல... எந்த பிரச்னையாயிருந்தாலும், நாலு செவுத்துக்குள்ளேதான் வச்சிருப்போம்! எல்லாம் அவன் குடுக்கற எடம். வரட்டும் இன்னிக்கு' என்று முன்னெப்போதோ பேசியப் பேச்சை, அவள் மனம் இப்போது மறுபதிவு செய்தது. மீண்டும் அவளுடைய வாய்க்கு வாய்ப்பளிக்க கூடாதென்று எடுத்த "போனை' அப்படியே வைத்துவிட்டாள்.
""நீ செஞ்ச காரியத்த யாருக்கிட்டயாவதுபோய் சொல்லிப் பாரு... ஓன் மூஞ்சியிலதான் காரித் துப்புவாங்க'' என்ற காட்டமான வார்த்தைகளெல்லாம் லட்சுமி மனதை அறுத்துக் கொண்டுதான் இருந்தன.
"இப்ப நான் என்ன செய்யக் கூடாததை செஞ்சிட்டேன்னு, கத்திக்கிட்டிருக்கிறீங்க?' என்று வார்த்தைக்கு வார்த்தை அவளால் பேசத் தெரியாமலில்லை. ஒரு பிரச்னையில் ஆரம்பித்து இன்னொரு பிரச்னையில் கொண்டுப் போய் விட்டுவிடுவாள். சம்பந்தம் சம்பந்தமேயில்லாமல் எதையாவது பேசி, கடைசியில் அவள் தந்தையை சந்திக்கு கொண்டு வந்து
விடுவாள்.
"என்ன பெரிய இவன் அவன்? அவன் போட்டோவ இங்க கொண்டாந்து வைக்கிற? அப்படியென்ன பெரிசா செஞ்சிட்டான்?' வார்த்தைக்கு வார்த்தை அவன் இவனென்று சொல்லி கேவலப்படுத்தி நோகடித்து விடுவாள். காதில் கேட்கவே கூசும். அப்பாவை திட்டுவதை தடுக்கக் கூட முடியவில்லையே என்று இன்னும் மனஉளைச்சல் அதிகமாகிவிடுமென்றுதான் இந்த விஷயத்தைப் பற்றி அதிகம் பேசாமல் அமைதியானாள்.
இந்தப் போட்டோவைக் கொடுக்கும்போதே அவளுடைய அண்ணன், ""ஒங்க மாமியார் ஏதாவது சொல்லப் போறாங்க பாப்பா'' என்று கேட்டுத்தான் கொடுத்தார்.
""இல்லண்ணா... அவுங்க அதெல்லாம் ஒன்னும் சொல்லமாட்டாங்க. நான் பாத்துக்கறேன்'' என்று பெருமையாகத்தான் சொல்லி வாங்கி வந்தாள்.
வானிலை அறிக்கைபோல் அவள் அண்ணனால் எப்படி, முன்பே இடி இடிக்கும் மழை வருமென்று கனித்தாரோ தெரியவில்லை. அவர் புரிந்து வைத்திருப்பது கூட நமக்கு தெரியாமல் போயிற்றே என்று வருந்தினாள்.
மறுபடியும் ஒரு முறை அந்தப் போட்டோவை பார்த்துக் கலங்கினாள். இந்தப் "போட்டோ' எடுக்கும்போது அப்பாவுக்கு எண்பது வயதிருக்கும். சதாபிஷேகத்தின்போது எடுத்த படம். வெள்ளிக் கம்பிகளை நெளி நெளியாக அடுக்கி வைத்திருப்பதுபோல், பளபளவென்று மின்னும் கேசம். நெற்றியில் நீண்டிருக்கும் விபூதிப் பட்டை. அதன் மத்தியில் செஞ்சாந்து நிறத்தில் குங்குமக் கீற்று, மின்னல்போல் மறைந்திருக்க, குழந்தையைப்போல் அந்த அழகுச் சிரிப்பு.
பார்வையிலே பாசத்தை தவிர வேறெதுவும் காட்டத் தெரியாத மனிதர். ஓடி ஓடி உழைத்த கால்கள். அன்றுதான் சம்மணம்போட்டு சுகாசனத்தில் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். இதுபோல் அவர் உட்கார்ந்துப் பார்ப்பதே அதிசயம்தான். அப்படியொரு காணக் கிடைக்காத அரிய புகைப்படம் அவர்களுக்கு. போட்டோ எடுக்கும்போதே, அன்று அந்த புகைப்படக்காரர் என்ன நினைத்து சொன்னாரோ தெரியவில்லை.
""ஐயா, நீங்கமட்டும் தனியா ஒரு போட்டோ எடுத்துக்கோங்களேன். பாக்கறதுக்கு பாகவாதர்போல ஜம்முன்னு அருமையாயிருக்கீங்க''என்று சொல்லி எடுத்துக் கொடுத்தார்.
"அவன் கண்பட்டுதான் இப்படியாயிடுச்சு' என்று லட்சுமியின் அம்மா திட்டிக் கொண்டிருப்பாள். அவர் சொல்லி மூன்றாண்டுகள் வரை நன்றாகத்தான் இருந்திருக்கிறார். திடீரென்று ஒரு நாள் லட்சுமியின் அப்பா இதயத்தை இறுக்கிக் கொண்டு அப்படியே சாய்ந்து விட்டார். அவருடைய இறப்பு இயற்கையாக இருந்தாலும், பழி அந்தப் புகைப்படக்காரர் மேல்தான் விழுந்தது. உண்மையிலே அந்தப் புகைப்படக்காரர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், எங்கப்பா அழகுதான், பேரழகு. "அம்மா...'என்கிற வார்த்தைக்கு மாறு வார்த்தை சொல்லத் தெரியாத வார்த்தையழகு என்று அவரைப்பற்றி நினைத்து நினைத்துப் பார்த்து பூரிப்படைகின்றாள்.
மற்றவர் கண்களுக்கு அது சாதாரணப் படமாகத்தான் தெரியும். அவர்களுக்கு இவரைப் பற்றி பெரிதாக ஒன்றும் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் இவளுக்கு அது, பொக்கிஷம், புதையல், ஆஸ்தி, அந்தஸ்து எல்லாமாகத்தான் அந்தப்படம் தெரிகின்றது. அதிலுள்ள ஜீவன் மற்றவர்
கண்களுக்கு தெரியாது. தெரியாதவர்கள் ஆயிரம் பேசலாம். நாம் எப்படி விட்டுத் தர முடியும் என்றுதான் கையிலே வைத்துக் கொண்டு தவிக்கிறாள். பிறந்த குழந்தையை அவ்வப்போது தொட்டுப் பார்த்து சிலாகிக்கும் தாயைப்போல் அப்புகைப்படத்தை தொட்டு தொட்டுப் பார்த்து கண் கலங்கிப் போகிறாள்.
நரம்புபோல் அப்பா நறங்கிப் போயிருந்தாலும், பிரம்புபோல் உடல் இறுகித்தான் போயிருப்பார். எண்பது வயதாகிவிட்டதென்று ஒரு நாளும் சோர்ந்து போனதேயில்லை. அவர் இறக்கும் வரைக்கும் தன்னுடைய நகைக் கடைக்கு ஓரெட்டு போய்த்தான் வருவார்.
""எதுக்கு இந்த வயசுல... இப்படி கஷ்டப்படுறீங்க! வீட்லே ஜம்முன்னு ராசா மாதிரி இருக்க வேண்டியதுதானே?'' என்று அவரிடம் யார் சொன்னாலும் கேட்கமாட்டார்.
""நான் வீட்லேயிருந்தாலும் என் நெனைப்பெல்லாம் இங்கதான் இருக்கும். இங்க வந்து, எந்த வேலையும் நான் செய்யலேன்னாலும், சும்மா வந்து ஒக்காந்திருந்தாலே போதும்! எனக்கும் ஒரு பொழுது போக்காயிருக்கும். அவனுக்கும் கொஞ்சம் சப்போட்டாயிருக்கும்! அதுக்குத்தான், எப்படியாவது தட்டுத் தடுமாறி கடைக்கு வந்துடுறேன்'' என்று சொல்வார்.
உழைப்பை அனுதினமும் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு மகாமனிதர். அவர்தான் எங்களுக்கு குரு! வழிகாட்டியென்று பெருமைப்பட்டுக்கொள்ளும் பிள்ளைகள். எல்லாருக்கும் அப்படிதான் என்றாலும் ""அஞ்சு பெத்தவன் அரசனாயிருந்தாலும், ஆண்டியாயிடுவான்'' என்று அப்பாவிடம் எவர் சொன்னாலும், ""அதுக்கு அர்த்தம் என்னான்னு தெரியாம பேசறீங்களடா'' என்று அதுக்கு விளக்கமும் கொடுப்பார். ""ஆடம்பரமாய் வாழும் தாய், பொறுப்பில்லாமல் வாழும் தந்தை, ஒழுக்கமற்ற தாய், தந்தையர், துரோகம் செய்யும் உடன்பிறந்தோர், சொல் பேச்சு கேளாத பிள்ளைகள் இந்த ஐந்தும் பெற்றவர்கள், பார் போற்றும் அரசனாக இருந்தாலும் அழிவை நோக்கித்தான் போவார்கள் என்பதைத்தான், தவறாகச் சிலர் புரிந்து கொண்டனர்'' என்பார். இருந்தாலும், மற்றவர்கள் கேலியாக சொன்னது அவர் மனதின் ஒரு மூலையில் மறையாத வடுவாகப் பதிந்துப்போயிருக்க வேண்டும்! அதுதான் அவரை வைராக்கிய மனிதராக மாற்றியதோ என்று கூட நினைக்கத்தோன்றும். அப்படியும் இருக்கலாம். ஏன் இருக்ககூடாது! ஒரு செயலுக்கு இன்னொரு செயல்தான் உந்துசக்கி. இது உலக நியதி.
அப்படிதான் லட்சுமியின் அப்பா கடலூருக்கு தன் ஆறு பிள்ளைகளோடு வந்து, தன் உறவினர் ஒருவர் மூலம், அனந்தராமர் நகைக்கடையில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அந்த காலத்தில் அனந்தராமரென்றால் அந்த வட்டாரத்தில் மிகவும் பிரபலம்.
அவரிடம் ஒருவர் வேலை செய்கிறாரென்றால் அதைவிட பெருமிதம் வேறென்றுமில்லை! தன்னிடம் வேலை பார்ப்பவர்களிடம் சுயக்கட்டுபாடு, ஒழுக்கம் இவற்றை பெரிதாக எதிர்பார்க்கக் கூடியவர். அப்படி அவருடைய நம்பிக்கையை பெற்றுதான் லட்சுமியின் அப்பா அந்த நகை வேலையை அவரிடமிருந்து முறையாகக் கற்று, அவற்றில் உள்ள நெளிவு சுளிவுகளை அறிந்து கொண்டு, இன்று அந்த மாவட்டத்திலே மிகவும் பிரபலமான "ஸ்ரீகமலம் சுப்ரமணியன் ஜுவல்லரி' என்ற கடையை ஆரம்பித்து "ஓகோ' வென்று வாழ்ந்து காட்டினார்;.
அவரைக் குறைத்து மதிப்பிட்டவர்கள் மத்தியில் தன்னுடைய ஐந்து பெண் பிள்ளைகளையும் அவரவர் விருப்பப்படி ஆடிட்டர், வக்கீல், ஆசிரியர், வங்கிப் பணி இப்படியாக படிக்க வைத்து, இந்த சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ வழி செய்தவர். நல்ல இடத்தில் கட்டிக்கொடுத்து அவர்களுடைய வாழ்வைக் கண்டு ரசித்தவர். லட்சுமியின் கணவர் பாலசுப்ரமணியனும் ஆடிட்டராகப் பணிபுரிந்து வருகிறார். அவரிடமே லட்சுமியும் வீட்டிலிருந்தே பயிற்சி பெற்று பணிபுரிந்தும் வருகிறாள். இன்று ஊரறியும் நல்ல ஆடிட்டராகத்தான் இருவரும் உள்ளார்கள். இதெற்கெல்லாம் ஆணிவேராக இருந்த அப்பாவின் போட்டோவை, இங்கு வைக்கக் கூடாதென்று சொல்வதற்கு வேண்டுமென்றால் மாமியாருக்கு உரிமையிருக்கலாம். அதற்காக, ""என்ன பெரிய அழகு போட்டோவா இது?''என்று வாய்க்கு வந்தபடி, எப்படி அவரைக் கண்டபடி பேசலாம்? அதுதான் அவளால் தாங்க முடியவில்லை.
"மனிதர்களின் அருமை தெரியாதவர்களிடம் நானும் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டேன். அந்தப் பேரழகை, அந்த பொக்கிஷத்தை வெளியில் வைக்க முற்பட்டது என்னுடைய தவறுதான்' என்று நினைத்தவள் கண்களில் வழிந்த கண்ணீரை கைவிரலால் தட்டிவிட்டு, தனது புடவையின் தலைப்பால் மீண்டுமொரு முறை அப்பா போட்டோவை துடைத்துப் பார்த்தாள். துடைக்க துடைக்க ஆத்திரம் தொண்டையை அடைத்தது.
""இதுக்குப்போய் ஏம்மா அழுதுக்கிட்டிருக்கற? அப்பா படத்தை வைக்க முடியலையேன்னு வருத்தப்படுறீயா? எந்தப் பிரச்னையாயிருந்தாலும், அதை எதிர்த்து இந்த பூமியில எப்படி வாழணும்னுதான் உனக்கு கத்துக்குடுத்திருக்கறேன்! அந்த தைரியத்துல, தன்னம்பிக்கை, ஆளுமை, அறிவுலதான், நான் இருக்கறேன்! அந்த அறிவுதான், ஒன்னை காக்குற கருவிம்மா' என்று சிரித்துக் கொண்டே சொல்லுவதுபோல் பார்க்கும் அப்பாவைப் பார்க்க பார்க்க, அவளால் வெடித்து அழாமல் இருக்க முடியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT