தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வயிற்றில் இடது பக்கம் வலி!

எஸ். சுவாமிநாதன்

கடந்த 2005 - இல் எனது இடது பக்க விலாஎலும்பில் வீக்கம் ஏற்பட்டு வலி உள்ளது. மேலும் இடது சிறுநீரகக் கல், குடல் அடைப்பு, பரோட்டா, வெங்காயம், ஆட்டுக்கறி, கேரட் சாப்பிட்டால் ஜீரணமாகாமல் அப்படியே வாந்தி, இடது பக்கம் வயிற்றுவலி, வயிற்றில் சிறிய புழுக்கள் என நிறைய உபாதைகளால் அவதி. இவை அனைத்தும் குணமாக மருந்துகள் உள்ளனவா?

ஆர்.செல்வம், அரக்கோணம்.

தரமான ஆரோக்கியத்தை நாம் உணவு மற்றும் செயல்களின் வாயிலாகத்தான் பெற முடியும். நாக்கின் சபலத்தால் கபளீகரம் செய்யப்படும் பரோட்டா, ஆட்டுக்கறி போன்றவை வயிற்றில் ஒரு சேர அரைபடும்போது ஏற்படும் கெட்ட வாயுவானது, குடலில் நிரம்பத் தொடங்கினால் நீங்கள் குறிப்பிடும் உபாதைகள் ஏற்படத் தொடங்கும்.

செரிமான கேந்திரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தன்மையுடைய கண்ட கண்ட உணவுகளையும் செரிமானம் செய்ய முடியாமல், அவை குடலில் அழுகும் நிலைக்குத் தள்ளப்பட்டால், வாந்தி, வயிற்றுவலி, அடைப்பு, புழுக்கள் போன்றவை வரிசைகட்டிக் கொண்டு ஏற்படத் தொடங்கும்.

உணவு விஷயத்தில் நீங்கள் சற்று நிதானமற்றவராகத் தெரிகிறீர்கள். உணவையும் தண்ணீரையும் வெகுநேரத்துக்கு வயிற்றுக்குக் காண்பிக்காமல் பட்டினி போடுவதால், வயிறு சார்ந்த க்லேதககபம், பாசகபித்தம், சமான வாயு ஆகியவை ஒன்று சேர்ந்து அழுகி பதனிழந்து காணப்படும் உணவைச் செரிக்கச் செய்யும் கால அவகாசத்தை ஏற்படுத்துவதன் மூலம், வயிற்றிலுள்ள சீரணத்திற்கான நெருப்பை வளர்த்து குடல் அடைப்பு, புழுக்கள் ஆகியவற்றை அறவே நீக்கிவிடும்.

வாந்தியைத் தூண்டிவிடும் நரம்பு மண்டலம் வயிற்றில் நிதானம் அடைவதன் வாயிலாக, வாந்தியோ குமட்டலோ ஏற்படாமல் செய்துவிடலாம்.

நன்றாகப் பசி ஏற்பட்டாலும், செரிமானத்துக்கு எளிதானதும், குடலை வலுப்படுத்துவதுமாகிய நெல்பொரி, சுக்கு, தனியா மற்றும் கண்டந்திப்பிலி கொண்டு தயாரிக்கப்படும் கஞ்சி உணவே தங்களுக்கு ஏற்றது. 300 கிராம் நெல்பொறி, சுக்கு 5 கிராம், தனியா மற்றும் கண்டந் திப்பிலி வகைக்கு 3 கிராம் வீதம் சேர்த்து, ஒரு லிட்டர் தண்ணீருடன் வேக வைத்து, அரை லிட்டராகக் குறுகியதும் வடிகட்டி, தேவையான அளவு ருசிக்காக இந்துப்பு சேர்த்து, சுமார் 10 முதல் 14 நாட்கள் காலையில் பருகி வர, குமட்டல், வாந்தி, வயிற்றுவலி போன்றவை நீங்கும். இதே கஞ்சியை காய்ச்சும்போது, 3 கிராம் வாய்விடங்கம் சேர்த்தால், வயிற்றிலுள்ள புழுக்கள் எல்லாம் மலத்தில் வெளியேறிவிடும். புளிப்புச் சுவைக்காக மாதுளம் பழத் தோல் சேர்த்தால் (5 கிராம்) கஞ்சியின் சுவை கூடுவதுடன், வாந்தியையும் நன்கு கட்டுப்படுத்தலாம். மலம் சரியானபடி போகாமலிருந்தால், இந்த பழத்தோலுக்கு மாற்றாக, நெல்லி முள்ளி எனும் பாடம் செய்யப்பட்ட நெல்லிக்கனிகளை 5 கிராம் சேர்த்து வேக வைத்துச் சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்னையைத் தீர்க்கலாம்.

எதையும் செரித்து சத்தாக மாற்றும்நிலைக்கு பசித்தீ வளர்ந்துவிட்டால், நீர்க்காய்களான வெள்ளரிப் பிஞ்சு தயிர்ப்பச்சடி, புடலங்காய் அல்லது பீர்க்கங்காய் பொரித்த கூட்டு, தேங்காய்த் துவையல், பூசணிக்காய் மோர்க்குழம்பு அல்லது சாம்பார் என்ற வகையிலும், வாழைத்தண்டு பொரியல் என உணவில் சேர்க்கச் சேர்க்க, குடல் உட்புற அழுக்குகள் அனைத்தும் நீர்த்திரவமாக மலம் மற்றும் சிறுநீரின் வழியே வெளியேறும். தங்களுக்கு அது சிறந்தது. கல் அடைப்புகளை இதன் மூலம் வெளியேற்றலாம்.

கொள்ளுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்த நீர்த்த கஞ்சியை இந்துப்பு சேர்த்துச் சாப்பிட சிறுநீரகம், பித்தப்பை முதலான இடங்களில் ஏற்படும் கற்கள் கரைந்து வெளியாகும். பெருங்காயம், சுக்கு சேர்த்துச் சாப்பிட குன்மவலி எனும் வயிற்றுவலி நீங்கும். விலா வீக்கம் வலி நீங்கும்.

வில்வாதி லேகிய மருந்தை 5 கிராம் காலை, மாலை வெறும் வயிற்றில் குடலின் நன்மைக்காக சுமார் மூன்று வாரம் சாப்பிடலாம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT