தினமணி கதிர்

பேல்பூரி

DIN


கேட்டது

(சிதம்பரம் தெற்குவாணியத் தெருவில் ஒரு வீட்டில் கணவனும், மனைவியும்)

""என்னங்க க்ரீன் டீ, பிளாக் டீ,
சிஞ்சர் டீ இதுல இப்ப எந்த டீ போட?''
""எது வேணாலும் போடு''
""ஏங்க இப்படிச் சொல்றீங்க?''
""நீ எது போட்டாலும் அது தண்ணியாத்தான் இருக்கப் போவுது''

அ.ப.ஜெயபால்,
சிதம்பரம்.

(நாகர்கோவிலில் செல்போன் ரீசார்ஜ் கடையில், கடைக்காரரும் அவரது நண்பரும்)

""என்ன மாப்ள... புதுசா சாம்பிராணி புகை எல்லாம் போடுறே?''
""அட... ஆமாம் மச்சி, கடைக்குள் கெட்ட சக்தி ஏதாவது இருந்தால், ஓடி போகட்டுமேன்னுதான்''
""அப்ப, நாங்க "ரீசார்ஜ்' பண்றது "யார்'கிட்டயாம்?''

மகேஷ் அப்பாசுவாமி,
பனங்கொட்டான் விளை.

கண்டது

(சிதம்பரத்தில் ஓர் இருசக்கர வாகனத்தின்பின்புறத்தில்)

மகளிர் பயணம் செய்யகட்டணமில்லை.

பொ.பாலாஜிகணேஷ்,
கோவிலாம்பூண்டி.


(மதுரை- திருமங்கலம் சாலையில் ஒரு காலி மனையில்)


இந்த இடம் விற்பனைக்கு அல்ல;
இந்த இடத்தில் பங்காளி பிரச்சனை உள்ளது.

ந. பிரபுராஜா,
மதுரை -2.

(தென்காசியில் ஆட்டோ ஒன்றில்)

தோல்விக்கு பயந்தவனிடம் நெருங்க,
வெற்றிக்கு பயம்!

-கு.அருணாசலம்,
தென்காசி.

(சோளிங்கர் - அரக்கோணம் சாலையில் உள்ள ஒரு கோயிலின் பெயர்)


ஏழைப் பிள்ளையார் ஆலயம்

வி.கண்ணகி செயவேலன்,
அரக்கோணம்.

யோசிக்கிறாங்கப்பா!


பாதையிலே முள் கிடந்ததைப் பார்க்காமல் போகிறவருக்கு,
காலில் முள் குத்திய பிறகுதான் கண் தெரிகிறது.

மு.பெரியசாமி,
விட்டுக்கட்டி.

மைக்ரோ கதை

ஒரு நிறுவனம். "வேலைக்கு ஆட்கள் தேவை' என்று நிர்வாகம் அறிவித்தது. நிறைய நபர்கள் நேர்காணலுக்கு வந்திருந்தார்கள். அனைவரையும் ஓர் அரங்கத்தில் உட்கார வைத்தார்கள்.

அனைவருக்கும் வினாத்தாள் வழங்கப்பட்டது. அந்த நிறுவன மேலாளர் பேசினார்:

""இந்த வினாத்தாளில் பத்து கேள்விகள் உள்ளன. உங்களுக்கு ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்கப்படும். அதற்குள் இந்த வினாக்களுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். தகுதியுடைய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு வேலை வழங்கப்படும்'' என்றார்.

நேரம் குறைவாக உள்ளது என்று அனைவரும் வேகமாகப் பதில் எழுதினார்கள். 5 நிமிடம் முடிந்தபின், அனைவரிடமும் விடைத்தாளை வாங்கினார் மேலாளர்.
விடைத்தாளை வாங்கும் போது ஒவ்வொருவரும்,

""நேரம் குறைவாகக் கொடுத்து விட்டீர்கள், எங்களால் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் எழுத முடியவில்லை'' என்றனர்.

நேர்காணலுக்கு வந்தவர்களில் இருவர் மட்டும் எந்தப் பதிலும் எழுதவில்லை. வெற்றுத்தாளை மேலாளரிடம் கொடுத்தனர்.

சிறிது நேரம் கழித்து, நிறுவன மேலாளர் சொன்னார்:

""விடைத்தாளில் பதில் எழுதாத இவர்கள் இருவர் மட்டும் இந்த நிறுவனத்தில் வேலை செய்ய தகுதியானவர்கள். மற்றவர்கள் செல்லலாம்''

அனைவருக்கும் ஒரே ஆச்சரியம். அனைவரும் ஒரு சேர அந்த நிறுவனமேலாளரிடம் கேட்டனர்.

""வினாக்களுக்கு சரியான பதிலளித்த எங்களுக்கு வேலை இல்லை என்கிறீர்கள். எந்த வினாக்களுக்கும் பதில் அளிக்காத அந்த இருவருக்கு மட்டும் எப்படி வேலை கொடுக்கிறீர்கள்?''

அதற்கு அந்த மேலாளர் கேள்வித்தாளை அவர்களிடம் கொடுத்து, ""எல்லாரும் அந்த பத்தாவது கேள்வியை படித்துப் பாருங்கள்'' என்றார்.

படித்துப் பார்த்தனர்.

அந்த பத்தாவது கேள்வி இதுதான்...

10) மேற்கண்ட எந்த வினாக்களுக்கும் நீங்கள் பதில் அளிக்க வேண்டாம்.

கே.ரங்கராஜன்,
சென்னை-69.

எஸ்.எம்.எஸ்.


என்னால் முடியும் என்பது நம்பிக்கை...
நம்மால் முடியும் என்பது கூட்டு முயற்சி.

- பா.சக்திவேல்,
கோயம்புத்தூர்.

அப்படீங்களா!

கரோனா தொற்று ஏற்பட்டு நிறையப் பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகள் நிரம்பி வழிந்த காலத்தில் நாம் சந்தித்த மிக முக்கியமான பிரச்னை ஆக்சிஜன் பற்றாக்குறை. பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாததால் நோயாளிகளை அனுமதிக்காத நிலையும் இருந்தது.

ஐஐடி கான்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், "சுவாச ஆக்ஸிரைஸ்' என்கிற ஆக்சிஜன் பாட்டிலை உருவாக்கியிருக்கிறார்கள். இது மனித உடலுக்குள் ஆக்சிஜன் செல்வதை அதிகப்படுத்துகிறது. சிகிச்சையின்போது ஏற்படும் மருத்துவரீதியான நெருக்கடியைச் சமாளிக்க இந்த சுவாச ஆக்ஸிரைஸ் உதவுகிறது.

இதை மருத்துவ முதல் உதவிப் பெட்டியில் வைத்துக் கொண்டு, எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். 10 லிட்டர் ஆக்சிஜனை அமுக்கி 180 கிராம் ஆக்ஜிசன் பாட்டிலாக உருமாற்றம் செய்திருக்கிறார்கள்.

இதை இ-ஸ்பின் நானோடெக், ஜாசோலேப் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கிறார்கள்.

கரோனா நோயாளிகளுக்கு மட்டுமல்ல, ஆஸ்துமா நோயாளிகளுக்கும், மூச்சுத்
திணறல் பிரச்னை உள்ளவர்களுக்கும் இந்த சுவாச ஆக்ஸிரைஸ் உதவும்.

என்.ஜே.,
சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

SCROLL FOR NEXT