தினமணி கதிர்

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 54

19th Sep 2021 06:00 AM | கி. வைத்தியநாதன்

ADVERTISEMENT


டிசம்பர் 6, 1992 நண்பகலுக்குப் பிறகு நிலைமை கட்டுக்கடங்காமல்போய், கரசேவகர்கள் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி கட்டடத்தின் மீது ஏறி, அதைத் தகர்க்க முயற்சிக்கும்போது அதிகாரிகள், அமைச்சர்களுடன் கவலை தோய்ந்த முகத்துடன் பிரதமர் நரசிம்ம ராவ் தனது அலுவலகத்தில் அந்த நிகழ்வை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார் என்பதை நான் ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறேன்.

""பாபர் மசூதி தகர்ப்பு சம்பவத்தில் உண்மையான குற்றவாளி ஒருவர் இருந்தால் அது உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான்தான்'' என்பது வசந்த் சாத்தே உள்ளிட்ட சில காங்கிரஸ் தலைவர்களின் கருத்து. ஆனால், யாரும் அவரை நேரடியாகக் குற்றம் சுமத்தவே இல்லை. அவரும் சரி, அந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகினாரா என்றால் இல்லை. டிசம்பர் 5-ஆம் தேதி மாலையில், உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான் தனது நார்த் பிளாக் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குக் கிளம்பும் போது கொஞ்சம்கூடப் பதற்றமில்லாமல்தான் இருந்தார் என்பது அவரது அலுவலக அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகும்கூட, அத்தனை பழியையும் காங்கிரஸ்காரர்களும், எதிர்க்கட்சியினரும் நரசிம்ம ராவ் தலையில் சுமத்தினார்களே தவிர, உள்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. சவானுக்கு எதிராகக் கடுமையான கண்டனங்கள் எழவில்லை.

தன்னைப் பதவியிலிருந்து அகற்றினால் நரசிம்ம ராவ் பழியை ஏற்றுக்கொண்டதாகிவிடும் என்பதால் எதுவும் செய்துவிட மாட்டார் என்கிற தைரியத்தில் இருந்தார் எஸ்.பி. சவான். அவர் பதவி விலகவும் இல்லை, பிரதமராக இருந்த நரசிம்ம ராவ் அவரைப் பதவி விலகச் சொல்லவும் இல்லை.
முன்பே குறிப்பிட்டதுபோல, பி.வி. நரசிம்ம ராவ் தன்னிலை விளக்கம் எதுவும் கொடுக்கவில்லை என்றாலும், தனது கைகள் உச்சநீதிமன்றத்தாலும், அரசியல் சாசனத்தாலும் கட்டப்பட்டிருந்தன என்கிற விளக்கத்தைப் பலமுறை அவர் நாடாளுமன்றத்திலும், வெளியிலும் கூறி இருக்கிறார். அவருடைய நிலைப்பாட்டை நியாயப்படுத்திப் பேச காங்கிரஸ்காரர்கள் யாரும் தயாராக இருக்கவில்லை என்பதுதான் சோகம்.

ADVERTISEMENT

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இருந்த நிலையில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் தொடர வேண்டும் என்று சட்டம் இயற்றியது, பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து உத்தரபிரதேச அரசை மட்டுமல்ல, எல்லா பாஜக அரசுகளையும் பதவியிலிருந்து அகற்றியது என்று பல அதிரடி முடிவுகளை அவர் எடுத்தார். பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னால் சதி இருந்ததா என்பதை ஆராய லிபர்ஹான் கமிஷனை அமைத்ததும் நரசிம்ம ராவ் ஆட்சிதான்.

2004 முதல் அடுத்த பத்தாண்டுகளுக்கு மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சிதான் மத்தியில் அமைந்தது. அயோத்தி பிரச்னையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அரசியல்ரீதியாகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளக் காங்கிரஸ் விரும்பியதே தவிர, "அதே இடத்தில் மசூதி மீண்டும் கட்டப்படும்' என்று நரசிம்ம ராவ் கொடுத்த வாக்குறுதியை காங்கிரஸ் நிறைவேற்றவில்லை. 2009-இல் லிபர்ஹான் கமிஷன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது கூட வெறும் கண்துடைப்பாகத்தான் இருந்தது.

இத்தனை பின்னணியும் விமர்சிக்கப்படாமல் நரசிம்ம ராவ் மட்டும் விமர்சிக்கப்படுகிறார் என்பதை நினைத்தால் சற்று வேதனையாகத்தான் இருக்கிறது. பாபர் மசூதி இடிப்புக்கு ஒருசில மாதங்களுக்குப் பிறகு, முன்னாள் பிரதமர் சந்திரசேகரை சந்தித்தபோது, நான் நரசிம்ம ராவ் சார்பில் சில வாதங்களை முன்வைத்தேன். அவருக்குக் கோபம் வந்துவிட்டது.

""கல்யாண் சிங் ஆட்சியைக் கலைப்பதன் மூலமோ, ராணுவத்தை அழைத்து கரசேவை நடத்துபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதன் மூலமோ பாபர் மசூதி கட்டடம் இடிக்கப்படாமல் பாதுகாத்திருந்தால் அவரைப் பாராட்டலாம். அதனால் ஆட்சியை இழந்திருந்தாலும் அவர் கவலைப்பட்டிருக்கக் கூடாது. ஆட்சி போனால் போகட்டும் என்று சட்டம் - ஒழுங்கை அவர் நிலைநாட்டி இருக்க வேண்டும்'' என்பது சந்திரசேகர்ஜியின் வாதம்.

இதே வாதத்தைத்தான் அர்ஜுன் சிங்கும் முன்வைத்தார். அர்ஜுன் சிங்கைப் பொருத்தவரை, நரசிம்ம ராவ் பதவி விலக வேண்டும் என்று விரும்பியது பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்காக மட்டுமல்ல, தான் பிரதமராக வேண்டும் என்கிற உள்நோக்கமும் அதில் இருந்தது. நரசிம்ம ராவ் அரசு கவிழ வேண்டும் என்று பலர் ஆசைப்பட்ட அளவுக்கு, அவர்களுக்கு மதச்சார்பின்மை உணர்வு இருந்தது என்று சொல்லிவிட முடியாது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டு எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நரசிம்ம ராவின் 9, மோதிலால் நேரு மார்க் இல்லத்தில் ஒருமுறை அவரை சந்திக்கச் சென்றிருந்தேன். ஏற்கெனவே உதவியாளர் காண்டேகர் மூலம் அனுமதி பெற்றிருந்தேன். அவரை சந்திக்கச் செல்லும்போதெல்லாம், பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோயிலிருந்து பிரசாதமோ, திருப்பதியிலிருந்து லட்டோ கொண்டுபோய்க் கொடுப்பது வழக்கம். அதை வாங்கிக் கொள்ளும்போது அவரது முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சியும், சிரிப்பும் வித்தியாசமான நரசிம்ம ராவாக அவரை வெளிப்படுத்தும்.

சாதாரணமாக அயோத்தி பிரச்னை குறித்து அவரிடம் நானாக எதுவும் கேட்பதில்லை. அது அவருக்கு பிடிக்குமோ பிடிக்காதோ என்கிற அச்சம்தான் காரணம். அன்று அவரே அயோத்தி குறித்து ஏதோ சொன்னபோது, நான் இடைமறித்து ஒரு கேள்வி எழுப்பினேன். அதற்கு அவர் பதிலளித்தது என்னை ஆச்சரியப்படுத்தியது.

""சந்திரகேசர்ஜி, குஜ்ரால்ஜி எல்லோருமே, அயோத்தி சம்பவத்தைத் தொடர்ந்து நீங்கள் பதவி விலகி இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள்.''

நரசிம்ம ராவ் ஒன்றும் பேசவில்லை. சற்று தைரியம் வரவழைத்துக் கொண்டு நானே மீண்டும் பேசினேன்.

""நீங்கள் முதலிலேயே கல்யாண் சிங் ஆட்சியைக் கலைத்திருக்க வேண்டும் என்றும், ராணுவத்தைப் பயன்படுத்தி கரசேவகர்களின் கூட்டத்தைக் கலைத்திருக்க வேண்டும் என்றும் பாபர் மசூதி இடிப்பு குறித்து எனக்குப் பேட்டி அளித்த எல்லா தலைவர்களும் ஒரேமாதிரியாகக் கூறி இருக்கிறார்கள்.''

நரசிம்ம ராவ் பேசத் தொடங்கினார்.

""அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஏனென்றால் அப்போது அவர்கள் ஆட்சியில் இருக்கவில்லை. நான் பதவி விலகி இருக்க வேண்டும் என்று அவர்கள் சொல்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது. அதன் பின்விளைவுகள் அவர்கள் விரும்புவதுபோல இருந்திருக்காது.''

அதற்கு மேலே அவர் எதுவும் பேசவில்லை. அதற்குள் அவரை சந்திக்க இன்றைய தெலங்கானா வாராங்கல் நகரிலிருந்து அவரது கல்லூரி நண்பர் ஒருவர் வந்தார். நான் எழுந்திருக்க எத்தனித்தபோது என்னை "உட்காருங்கள்' என்று சைகை காட்டினார் நரசிம்ம ராவ். வந்திருந்த நண்பர் ஓர் இஸ்லாமியர். அவரும் நரசிம்ம ராவும் உருதில் பேசிக் கொண்டபோது நான் திகைத்தேன். என்னால்எனது காதுகளை நம்ப முடியவில்லை.

அவர்கள் பத்து நிமிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். நரசிம்ம ராவ் எழுந்து வீட்டுக்குள் போனார். அப்போது அந்த முஸ்லிம் நண்பர் சொன்ன தகவல்கள் என்னை ஆச்சரியப்படுத்தின.

""நரசிம்ம ராவின் பள்ளி, கல்லூரி நண்பர்கள் பலரும் முஸ்லிம்கள்தான். எங்கள் மத்தியில்தான் அவர் வளர்ந்தார். அவர் திருக்குரான் நன்றாகப் படிப்பார். படித்தவர். சம்ஸ்கிருதத்தைப் போலவே அவருக்கு உருதுவும், பாரசீகமும் நன்றாகத் தெரியும். அவரது மனது சுத்தமானது. அவரிடம் மதவெறி என்பது துளிக்கூடக் கிடையாது என்பது எங்களது அனுபவபூர்வ உண்மை. என்ன செய்வது, சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவரை முஸ்லிம்களின் எதிரியாகச் சித்தரித்துவிட்டன'' என்று அந்த நண்பர் சொன்னபோது நான் அடைந்த வேதனை கொஞ்சமல்ல.

அறைக்குத் திரும்பிவந்து அமர்ந்த பி.வி. நரசிம்ம ராவ் எனக்கு வித்தியாசமானவராகத் தெரிந்தார். நான் விடைபெற்றுக் கொண்டேன். அதற்குப் பிறகு அவரை நான் சந்தித்தபோது, அவர்மீதுஎனக்கு இனம்புரியாத பயபக்தி ஏற்பட்டது என்கிற உண்மையை நான் மறைக்க விரும்பவில்லை.

முன்பே நான் குறிப்பிட்டிருந்ததுபோல 1996 வரை, அதாவது அவர் பிரதமராக இருந்ததுவரை பி.வி. நரசிம்ம ராவுடன் எனக்குத் தொடர்பு இருக்கவில்லை. 1996 மக்களவைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து பதவி விலகி இருந்தார் நரசிம்ம ராவ். நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றி பெற எண்ணிக்கை பலம் இல்லை என்று உணர்ந்து 13-ஆவது நாளில் பதவி விலகினார் பிரதமர் வாஜ்பாய். காங்கிரஸ் ஆதரவுடன் தேவ கெளடா தலைமையில் ஐக்கிய முன்னணி அரசு அமைந்தது.

நரசிம்ம ராவுக்கு எதிராகப் பல வழக்குகள். நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றி பெறுவதற்காக எம்.பி.க்களுக்கு லஞ்சம் வழங்கப்பட்டது என்கிற குற்றச்சாட்டில் சிக்கினார் அவர். இக்கட்டான அந்த சூழலில், காங்கிரஸ் தலைவராகவும், நாடாளுமன்றக் கட்சித் தலைவராகவும் இருந்தார்.

ஜே.எம்.எம். லஞ்சம் வழங்கிய வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் நரசிம்ம ராவின் பெயரும் இணைக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து அவர் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று சோனியா காந்தி ஆதரவாளர்கள் குரலெழுப்பினர். ஊடகங்களும் அவர்களுக்கு ஆதரவாக இருந்ததில் வியப்பில்லை. தலைநகர் அரசியல் கொதிகலனில் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

தில்லி வந்திருந்தார் முன்னாள் கேரள முதல்வரும், நரசிம்ம ராவ் அமைச்சரவையில் தொழில் துறை அமைச்சராக இருந்தவருமான கே. கருணாகரன். அவர் அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். நான் தில்லியில் இருந்து, கருணாகரனும் தில்லியில் இருக்கிறார் என்றால் மாலையில் கட்டாயமாக அவரை சந்திப்பது வழக்கம். சில நாள்கள் மாலையில் நடைப்பயிற்சி செய்து கொண்டே பல அரசியல் நிகழ்வுகள் குறித்து கேட்டுத் தெரிந்து கொள்வேன்.

கருணாகரனின் சுநேரி பாக் வீட்டுக்குள் நான் நுழையும்போது, வெளியே அம்பாசிடர் கார் தயாராக இருந்தது. அவர் நரசிம்ம ராவை சந்திக்கக் கிளம்பிக் கொண்டிருக்கிறார் என்றுசொன்னார்கள். அதனால் வீட்டிற்குள் போகாமல் கார் நிறுத்தி இருந்த இடத்தின் அருகிலேயே நின்று கொண்டிருந்தேன். வெளியே வந்த கருணாகரன் என்னைப் பார்த்தார். காரில் ஏறிக் கொள்ளச் சொன்னபோது, எனக்கு ஒன்றும் புரியவில்லை. கார் கிளம்பியது.

""நரசிம்ம ராவ்ஜியைப் பார்க்கப் போய்க் கொண்டிருக்கிறேன். கூட வருவதற்கு யாரும் இல்லையே என்று நினைத்தேன். சரியான நேரத்தில் வந்திருக்கிறீர்கள். அதனால்தான் உங்களையும் காரில் ஏறிக் கொள்ளச் சொன்னேன்.''

கருணாகரனின் சுநேரி பாக் சாலை வீட்டுக்கும், நரசிம்ம ராவின் மோதிலால் நேரு மார்க் வீட்டுக்கும் அதிக தூரமொன்றும் இல்லை. பயணித்த சில நிமிடங்களில் கருணாகரன் சொல்லி நான்தெரிந்து கொண்டது, இதுதான்.

குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருக்கும் நிலையில், நாடாளுமன்றக் கட்சித் தலைவர் பதவியில் இருந்து நரசிம்ம ராவ் விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அது தவிர்க்க முடியாதது. ஆனால், நரசிம்ம ராவ் தனது கட்சித் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்யப் போவதாகக் கருணாகரனிடம் தெரிவித்திருந்தார். அதைத் தடுப்பதற்குத்தான் கருணாகரன் அவசர அவசரமாகப் போய்க்கொண்டிருந்தார்.

அங்கே போனபோது, தனி அறை ஒன்றில்இருந்த பி.வி. நரசிம்ம ராவை சந்தித்தார் கருணாகரன். அந்த அறைக்கு வெளியே நின்றுவிட்டேன் நான்.

கருணாகரனுக்கும், பி.வி. நரசிம்ம ராவுக்கும் இடையில் நடந்த காரசாரமான விவாதம் வெளியில் அமர்ந்திருந்த எனக்குத் தெளிவாகக் கேட்டது. கருணாகரனுக்கு முன்னால் பிரணாப் முகர்ஜி அங்கே வந்திருந்தார் என்பது அவர்களது பேச்சிலிருந்து தெரிந்தது. வழக்கம்போல, நரசிம்ம ராவ் அதிகம் பேசாமல் மெளனம் காத்தார். கருணாகரன்ஜிதான் அவசரப்பட்டு முடிவெடுக்கக் கூடாது என்று அவரை வற்புறுத்திக் கொண்டிருந்தார். இருவரும் அறையிலிருந்து வெளியே வந்தனர்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நான் கருணாகரனால் பி.வி. நரசிம்மராவுக்கு முதன்முறையாக நேரடியாக அறிமுகப்படுத்தப்பட்டேன்.

(தொடரும்)
 

Tags : கி.வைத்தியநாதன் K Vaidiyanathan பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் pranab mukherjee
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT