தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: குடலின் சக்தியை மீட்க...!

19th Sep 2021 06:00 AM

ADVERTISEMENT


25 வயது ஆகும் என் மகன் அலுவல் நிமித்தமாக ஸ்பெயின் நாட்டுக்குச் சென்று வந்தபின், அமீபியாஸிஸ், கிருமிகள், வயிற்றோட்டம், பேதி எனத் தொடர்ந்து ஏதேனும் அவனை வாட்டுகிறது. உடல் மெலிந்துவிட்டான். சிகிச்சைகள் அனைத்தும் தற்காலிகமாகத்தான் பயன்தருகின்றன. என்ன செய்ய?

கனகதுர்க்கா, சேலையூர்,
சென்னை.

ஸ்பெயினில் அவர் சாப்பிட்ட உணவு அவருக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. சத்துக் குறைந்த உணவு, சுகாதார முறைப்படி அவரவருக்கேற்ற உணவு தயாரிப்பதில் கவனக்குறைவு, வியாபார நோக்குடன் தயாரிக்கப்படும் உணவை ஏற்பது போன்ற முக்கிய காரணங்களால், நீங்கள் குறிப்பிடும் உபாதைகள் தோன்றக்கூடும்.

சிறுகுடலினுள் புல்தரை போன்ற நுண்ணியதும், நெய்ப்பும் கசிவும் கொண்டதும் சிறுவிரல் போன்ற தோற்றமுள்ள உட்பரப்பு கிரஹணி எனும் பேருடைய இருப்பிடமாகும். இந்தப் பரப்பு இரைப்பையில் கரைந்த உணவுச் சத்தை ஏற்கவும் மலத்தைப் பிரித்தகற்றவும் உதவுகிறது. மருந்தாலும் உணவாலும் இவற்றின் இயற்கைச் செழிப்பு வறண்டுவிடுகிறது. இப்பகுதியில் சீரான வேகத்துடன் நகரும் உணவு,  குமுறலுடன், படபடப்புடன், சத்தத்துடன், வேகமாக நகரும்போது உணவுச் சத்து முழு அளவு ஏற்கப்படுவதில்லை. பித்த வேகமும் சேர்ந்தால் குடல் அழற்சி ஏற்படும். மலம் பெரும் மலமாக பொதபொதவென வெளியேறும்போது, ஏதோ ஒரு சிரமம் நீங்கிய உணர்ச்சி ஒருபுறமும், மலத்துடன் சத்தம் வெளியேறுவதால் மல வெளியேற்றத்தைத் தொடர்ந்து களைப்பும் மாறிமாறி ஏற்படும். குடல் சவ்வு அதிகமாக வறண்டு விட்டால் பின்னர் பெருமலப்போக்கைத் தடுக்க முடியாதபடியாகும். குடல் மரத்து வறண்டு காய்ந்து தோல்குழாய் போல் உணரப்படும்.

ADVERTISEMENT

தனித்து நெய்யும் நல்லெண்ணெய்யும் சூடான சாதத்துடன் பிசைந்து முதலில் ஓரிரு கவளங்கள் ஏற்பது நல்லது. பருப்பு வகைகளை லேசாக வறுத்துத் துவையலாக்கி அல்லது வேக வைத்துச் சேர்க்கலாம். தயிரை விட, அதனைக் கடைந்த வெண்ணெய் எடுக்காத மோரும், வெண்ணெய் எடுத்த மோரும் நல்லதே. மோரையும் காய்ச்சிச் சேர்ப்பது நல்லது. மோரில் வேக வைத்த கறிகாய்கள் நல்லவை. கறிவேப்பிலை, புதினா, கொத்துமல்லி முதலியவற்றின் துவையல் நல்லது. குடஜாரிஷ்டம், குடஜகவையு, ஜீரகவில்வாதி லேகியம், அஷ்டசூர்ணம், தாடிமாஷ்டகம் சூர்ணம், வில்வாதி குளிகை, சந்த்ரசூராதி கஷாயம் முதலிய ஆயுர்வேத மருந்துகள் பலநிலைகளிலும் உதவக் கூடியவை. இந்த மருந்துகளை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம். மேல் குறிப்பிட்ட உணவு முறையும் மருந்தும் குடல் இழந்துள்ள சக்தியை மீட்டுத் தருபவை..

(தொடரும்)

Tags : kadhir Ayurveda
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT