தினமணி கதிர்

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 53 

12th Sep 2021 09:43 PM | கி. வைத்தியநாதன்

ADVERTISEMENT

 

பாபர் மசூதி கட்டடத்தைப் பாதுகாப்பதற்கான எல்லா முன்னேற்பாடுகளையும் செய்திருந்தும், கடைசி வரை ராணுவத்தை அழைக்கவோ, துப்பாக்கிச் சூடு நடத்தவோ பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் ஏன் அனுமதிக்கவில்லை என்பதுதான் அவர் மீது வைக்கப்பட்ட முக்கியமான குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டுக்கு நரசிம்ம ராவிடமிருந்து வந்த ஒரே பதில்: மெளனம்தான். தன்னிலை விளக்கம் அளிக்க அவர் முன்வரவில்லை என்பது மட்டுமல்ல, தேவையில்லாமல் அது குறித்த விவாதத்திற்கும் அவர் தயாராகவில்லை.

1992 டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு சம்பவம் குறித்து பி.வி. நரசிம்ம ராவ் எழுதிய "அயோத்தி, 6 டிசம்பர் 1992' என்கிற புத்தகம், அவரது விருப்பத்திற்கிணங்க, அவர் மறைந்து இரண்டாண்டுகளுக்குப் பிறகு வெளியானது. அயோத்தி ராமர் கோயில் தொடர்பான எல்லா தகவல்களையும் ஒன்றுவிடாமல் அதில் பதிவு செய்திருக்கிறார் நரசிம்ம ராவ். ஆனால், மேலே எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை. தன்னிலை விளக்கம் அளிக்க முயற்சிக்கவும் இல்லை.

"அயோத்தி, 6 டிசம்பர் 1992' புத்தகத்தில் ஒரு விஷயத்தை அவர் தெளிவுபடுத்துகிறார். "சட்டம் - ஒழுங்கு நிலைதடுமாறினாலும், நிலைமை எல்லை மீறிப் போனாலும் அது குறித்து மத்திய அரசுக்குத் தெரிவிப்பதும், மத்திய அரசின் தலையீட்டைத் கோருவதும் ஆளுநரின் தனி உரிமை' என்பதை நரசிம்ம ராவ் அந்தப் புத்தகத்தில் சுட்டிக்காட்டி இருக்கிறார். பாபர் மசூதி இடிப்பு நிகழ்வில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியலில் அன்றைய உத்தரபிரதேச ஆளுநர் சத்திய நாராயண ரெட்டி இல்லாமல் இருப்பது குறித்து யாரும் இதுவரை எதுவுமே கூறவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

ADVERTISEMENT

தேசிய முன்னணியில் அங்கம் வகித்த மாநிலக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சத்திய நாராயண ரெட்டிதான் அப்போதைய உத்தர பிரதேச ஆளுநர். அவர் வி.பி. சிங் அரசால் நியமிக்கப்பட்டவர் என்பது மட்டுமல்ல, அவருக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கருதப்படுபவரும் கூட. அவர் எடுத்த நிலைப்பாடுதான், பாபர் மசூதி இடிப்பில் மிகவும் கேள்விக்குறியானது என்பதை ஊடகங்களும், ஆய்வாளர்களும் குறிப்பிடுவதில்லை.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6-ஆம் தேதிக்கு ஐந்து நாள்களுக்கு முன்னர், உத்தரபிரதேச ஆளுநரிடமிருந்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஓர் அறிக்கை வந்தது. சட்டம் - ஒழுங்கு சரியாக இருப்பதாகவும், மாநிலத்தில் மதநல்லிணக்கம் நிலவுவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்ல, அயோத்தியில் அதிக அளவில் கரசேவகர்கள் வருகிறார்கள் என்றாலும், அவர்கள் அமைதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

அத்துடன் நின்றுவிடவில்லை, ஆளுநர் சத்திய நாராயண ரெட்டியின் அறிக்கை. "உத்தர பிரதேச அரசைக் கலைப்பது, சட்டப்பேரவையைக் கலைப்பது, ஆளுநர் ஆட்சியை அறிவிப்பது உள்ளிட்ட எந்தவிதக் கடுமையான நடவடிக்கையையும் எடுக்க வேண்டிய அவசியம் எதுவும் இப்போது இல்லை. குடியரசுத் தலைவர் ஆட்சியை அறிவித்து, கல்யாண் சிங் அரசை அகற்றினால் வகுப்புக் கலவரங்கள் ஏற்பட்டு பாபர் மசூதி கட்டடத்துக்கு சேதம் ஏற்படக்கூடும்' என்று ஆளுநர் சத்திய நாராயண ரெட்டி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

பி.வி. நரசிம்ம ராவ் மட்டுமல்ல, அவரது அமைச்சரவை சகாக்களும், காங்கிரஸ் தலைவர்களும் கூட பாபர் மசூதி இடிப்புப் பிரச்னையின் பின்னணியை எடுத்துக் கூறவோ, தன்னிலை விளக்கம் அளிக்கவோ முற்படாதது இன்று வரை ஆச்சரியமாக இருக்கிறது. சம்பவம் நடந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இதுகுறித்து நான் பி.வி. நரசிம்ம ராவிடம் கேட்டபோது, என்னை விழி இமைக்காமல் சற்று நேரம் கூர்ந்து பார்த்தார். முகம் சுழித்துக் கொண்டார். நாங்கள் சற்று நேரம் மெளனமாக இருந்தோம். அவரே அந்த மெளனத்தைக் கலைத்தபோது சொன்ன வார்த்தைகள் இவைதான்: "காலம் உண்மையை வெளிப்படுத்தும் (டைம் வில் எக்ஸ்போஸ் தி ட்ரூத்)'.

ஆளுநர் சத்திய நாராயண ரெட்டி மட்டுமல்ல, உச்சநீதிமன்றத்திற்கும் பாபர் மசூதி கட்டட இடிப்பில் பங்கு உண்டு. நீதிபதி வெங்கடாசலய்யா தலைமையிலான அமர்வு, மாநில அரசின், குறிப்பாக முதல்வர் கல்யாண்சிங்கின், வாக்குறுதியை நம்பி ஏற்றுக் கொண்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் எந்தவிதப் பண்டிகையும் இல்லாத நேரத்தில் காரணமில்லாமல் ஓரிடத்தில் குழுமும்போது விபரீதம் ஏற்படாதா என்கிற கேள்வியை எழுப்பியதுடன், அவர்கள் விபரீத முயற்சியில் இறங்கினால் ஏதும் நடக்காதா என்கிற அச்சத்தையும் அந்த அமர்வு முதலில் வெளிப்படுத்தியது.

"உயர்நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படும், எந்தவிதக் கட்டுமான நடவடிக்கையும் யாராக இருந்தாலும் அனுமதிக்கப்படாது' என்று உத்தரபிரதேச கல்யாண்சிங் அரசு அளித்த வாக்குறுதியை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, டிசம்பர் 6, 1992 கரசேவைக்கான அனுமதியை வழங்கியபோதே, மத்திய அரசின் கைகள் கட்டப்பட்டு விட்டன என்கிற உண்மையை யாரும் வெளிப்படுத்தவே இல்லை.

மோரதாபாத் மாவட்ட நீதிபதியான தேஜ் சங்கர் என்பவரைத் தனது பார்வையாளராக உச்சநீதிமன்றம் நியமித்து, நீதிமன்ற உத்தரவுகள் இம்மி பிசகாமல் நிறைவேற்றப்படுகிறதா என்பதை உடனுக்குடன் உச்சநீதிமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என்று பணித்திருக்கும்போது, அதையும் மீறி மத்திய அரசு செயல்படலாமா என்கிற கேள்வியையும் யாரும் எழுப்பவில்லை.

பி.வி. நரசிம்ம ராவுடனான எனது நேரடித் தொடர்பு 1997-இல்தான் தொடங்குகிறது. அதற்கு முன்பு அவரை சந்திக்கப் பல முயற்சிகளை நான் மேற்கொண்டிருக்கிறேன். சந்திப்பதற்கோ, பேட்டி எடுப்பதற்கோ அவர் அனுமதி அளிக்கவில்லை. 1991 தேர்தலுக்கு முன்பு, மூன்று, நான்கு தடவைகள் ஏனைய பத்திரிகையாளர்களுடன் அவரை அக்பர் சாலை காங்கிரஸ் அலுவலகத்தில் பார்த்திருக்கிறேன் என்றாலும், அறிமுகம் செய்து கொள்ளும் வாய்ப்பு கிட்டவில்லை.

பிரதமராக இருந்த நரசிம்ம ராவை நான் சந்திக்கவோ, பேசவோ வாய்ப்பே கிடைக்கவில்லை என்றாலும், பிரதமர் அலுவலகத்துடன் எனக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது. அதற்குக் காரணம் அவரது நம்பிக்கைக்குரிய உதவியாளர் ராம் காண்டேகர். இந்திரா காந்திக்கு ஆர்.கே. தவான், கருணாநிதிக்கு சண்முகநாதன், எம்ஜிஆருக்கு பிச்சாண்டிபோல பி.வி. நரசிம்ம ராவுக்கு ராம் காண்டேகர் என்று சொல்லலாம்.

பி.வி. நரசிம்ம ராவின் உதவியாளராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் ராம் காண்டேகர் உருவானதன் பின்னணி சுவாரஸ்யமானது.

முன்னாள் மகாராஷ்டிர முதல்வரும், மத்திய பாதுகாப்பு அமைச்சருமான யஷ்வந்த்ராவ் சவாணின் உதவியாளராக இருந்தவர் காண்டேகர். அதன் பிறகு, அவர் வசந்த் சாத்தேயின் உதவியாளரானார்.

1985-இல் மகாராஷ்டிர மாநிலம் விதர்பாவிலுள்ள ராம்டெக் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார் பி.வி. நரசிம்ம ராவ். அப்போது தனது தொகுதியை கவனித்துக் கொள்ளவும், உதவியாளராக இருப்பதற்கும் நம்பிக்கைக்குரிய ஒரு நபர் தேவை என்று வசந்த் சாத்தேயிடம் நரசிம்ம ராவ் கேட்டபோது அவரால் அனுப்பி வைக்கப்பட்டவர்தான் ராம் காண்டேகர். அப்போது முதல், நரசிம்ம ராவின் கடைசிக் காலம்வரை அவரைவிட்டுப் பிரியாமல் நிழலாகத் தொடர்ந்த ஒருவர் இருந்தார் என்றால் அது காண்டேகர் மட்டுமே. நரசிம்ம ராவ் பிரதமரானதும், அவரது அலுவலகத்தில் சிறப்பு அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டார்.

எனது பிரதமர் அலுவலகத் தொடர்புக்கு 1993-இல் பிரதமர் அலுவலக இணையமைச்சரான புவனேஷ் சதுர்வேதியும் இன்னொரு காரணம். 1993-இல் பிரதமர் அலுவலக இணையமைச்சராக நியமிக்கப்பட்ட புவனேஷ் சதுர்வேதியும் நரசிம்ம ராவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்.

பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கியவர் புவனேஷ் சதுர்வேதி. மாணவர் காங்கிரஸ் தலைவராக அரசியலில் ஈடுபட்ட புவனேஷ் சதுர்வேதி, 1972-இல் ராஜஸ்தான் சட்டப்பேரவை உறுப்பினரானார். அதன் பிறகு 80-களில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக நீண்டநாள் இருந்தவர்.

மோகன்லால் சுகாதியா தமிழக ஆளுநராக இருந்தபோது அவரை சந்திக்க சென்னை வந்திருந்தார் சதுர்வேதி. அப்போது தற்செயலாக அவருக்கும் எனக்கும் தொடர்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம், வேடந்தாங்கல், மகாபலிபுரம், திருக்கழுக்குன்றம் என்று சென்னையைச் சுற்றியுள்ள இடங்களுக்கு அவரை அழைத்துச் செல்லும் வாய்ப்பும் எனக்குக் கிட்டியது. அப்போது ஏற்பட்ட தொடர்பும், நெருக்கமும் அவரது கடைசிக் காலம் வரை தொடர்ந்தது.

ராம் காண்டேகர், புவனேஷ் சதுர்வேதி இருவர் மட்டுமல்லாமல், அன்றைய பிரதமர் நரசிம்ம ராவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த இன்னொருவர் வி.என். காட்கில் என்று பரவலாக அறியப்படும் விட்டல்ராவ் காட்கில். விடுதலைப் போராட்ட வீரரும், சுதந்திர இந்தியாவின் முதல் எரிசக்தித் துறை அமைச்சருமான என்.வி. காட்கிலின் புதல்வர். வி.என். காட்கிலும் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி அமைச்சரவைகளில் இடம் பெற்றவர். காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக நீண்டநாள் இருந்தவர்.

பிரணாப் முகர்ஜிக்கும், கே. கருணாகரனுக்கும் மிகவும் நெருக்கமானவர் என்பதால் நானும் வி.என். காட்கிலுடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. எனது "நியூஸ்கிரைப்' செய்தி நிறுவனத்துக்கு மாதம் இருமுறை அரசியல் கட்டுரை தந்து ஊக்கம் அளிக்கும் அளவுக்கு என்னிடம் அவர் அன்பு செலுத்தினார் என்பதை நினைவு கூறாமல் இருக்க முடியவில்லை.

அவரது ஷாஜஹான் சாலை வீட்டின் வரவேற்பறை, நான் உரிமையுடன் நுழையும் இடமாக இருந்தது. பத்திரிகையாளர் சந்திப்புக்கு முன்பு, அன்றைய கேள்விகள் என்னவாக இருக்கும் என்பதுவரை, அவரும் நானும் பலமுறை விவாதித்திருக்கிறோம் என்றால், எந்த அளவுக்கு அவர் என்மீது நம்பிக்கை வைத்திருந்தார் என்பதை நான் சொல்லத் தேவையில்லை.

புவனேஷ் சதுர்வேதி, வி.என். காட்கில் இருவரிடமிருந்தும் நான் கேட்டுத் தெரிந்து கொண்ட உண்மைகளின் அடிப்படையில்தான் அயோத்தி பாபர் மசூதி இடிப்புப் பின்னணி குறித்த எனது பார்வையை நான் அமைத்துக் கொண்டேன். "லட்சக்கணக்கில் கரசேவகர்கள் கூடுவதைக் காரணம் காட்டி, கல்யாண் சிங் அரசைக் கலைத்து மத்திய அரசு ஏன் பாபர் மசூதி தகர்ப்பைத் தடுக்கவில்லை?' என்கிற எனது கேள்விக்கு வி.என். காட்கில் தெரிவித்த தெளிவான பதில் இதுதான்.

""ஆளுநரின் பரிந்துரை இல்லாமல், உச்சநீதிமன்றத்தின் அனுமதி பெற்றிருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை, முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்கிற காரணத்துக்காக 356-ஆவது பிரிவின் கீழ் எப்படி ஆட்சியிலிருந்து அகற்றுவது? அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கை என்கிற குற்றச்சாட்டுக்கு அந்த நடவடிக்கை உள்ளாகாதா? விபரீதம் நடக்கும் என்று எதிர்பார்த்து நடவடிக்கை எடுத்தால் இடதுசாரிகள், ஜனதா தளம், மாநிலக் கட்சிகள் அனைத்தும் அதைக் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான நடவடிக்கை என்று காங்கிரஸூக்கு எதிரான கலகக்குரலை எழுப்பாதா?''

முந்தைய சந்திரசேகர் தலைமையிலான அரசு, ஆளுநரின் பரிந்துரை இல்லாமல் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் திமுக ஆட்சியைக் கலைத்திருந்தது. அது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி, உச்சநீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் இருந்த நேரம்.

""பாபர் மசூதி கட்டடத்துக்கு எந்தவிதச் சேதமும் ஏற்படாமல் பாதுகாப்போம் என்று பாஜக சொன்ன வாக்குறுதியை நம்புவதா, இல்லை எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்தாலும் அதற்கு ஆதரவாளிப்போம் என்கிற பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் ஆதரவை நம்புவதா என்கிற குழப்பத்தில் எதுவுமே செய்யாமல் இருந்து விட்டார் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ்'' என்று பின்னொரு சமயம் வசந்த் சாத்தே சொன்னது கூட உண்மையாக இருக்கலாம்.

அதெல்லாம் சரி. நிலைமை விபரீதமாகிறது என்று தெரிந்த பிறகும், பிரதமர் நரசிம்ம ராவ் ராணுவத்தை அழைக்காமல் இருந்தது ஏன்? அதற்குக் காரணம் இருக்கிறது.

(தொடரும்)

Tags : கி.வைத்தியநாதன் K Vaidiyanathan பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் pranab mukherjee
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT